கோளறு திருப்பதிகம் வரலாறு

பாண்டி நாடு சமணர்களால் நிலைகுலைந்திருந்த காலத்தில் அந்த நாட்டை ஆண்ட கூன் பாண்டியன் சமணர் சமயச் சார்பிலே நின்றான்.சமணர்கள் அரசனைக் கைவசப்படுத்தித் தங்கள் சமயத்தின் பெயரால் சைவ சமயத்தினருக்குத் துன்பத்தை உண்டாக்கி வந்தார்கள். கூன் பாண்டியனுடைய மனைவியாகிய மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும் ஞானசம்பந்தப் பெருமானைப் பாண்டி நாட்டுக்கு அழைத்து வர வேண்டுமென்று விரும்பினார்கள்.

திருமறைக்காட்டில் சம்பந்தப் பெருமான் எழுந்தருளியிருந்த போது தூதுவர்களை அனுப்பித் தம்முடைய விருப்பத்தைத் தெரிவித்தார்கள். ஞான சம்பந்தப் பெருமான் புறப்படலாம் என்று கிளம்பிய போது நாளும் கோளும் சரியாக இல்லை. அதனை அறிந்து உடன் இருந்த அப்பர் சுவாமிகள் இப்போது போவது நலம் அன்று என்று சொன்னார். “சமணர்கள் மிகப் பொல்லாதவர்கள். அவர்கள் செய்த வஞ்சனையை நான் அறிவேன். அவர்களிடத்தில் அகப்படக்கூடாது. நாளும் சரியாக இல்லை” என்று அவர் வற்புறுத்தினார். இறைவனுடைய திருவருளைப் பெற்ற ஞானசம்பந்தப் பெருமான் அதற்குச் சிறிதும் அஞ்சவில்லை.

“எம்பெருமானுடைய திருவருள் இருக்கும் போது நாள்களும் கோள்களும் நமக்குத் துணை செய்யும். அவற்றால் நமக்கு எத்தகைய துன்பமும் வராது” என்று ஒரு பதிகமே பாடினார். அதற்குக் கோளறு திருப்பதிகம் என்று பெயர்.

“வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே
ஆசறும் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே”

என்று பாடினார்.

“இறைவன் என்னுடைய உள்ளம் புகுந்த அதனால் எனக்குக் கோளினாலே எந்த விதத் துன்பமும் இல்லை” என்று சொன்னார். இத்தகைய நிலை அடியார்களுக்கு உண்டாகும்.

ஒம் நமசிவாய ஒம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *