
காவடி வரலாறு
காவடி எடுப்பதைப் பற்றி ஒரு வார்த்தை, இந்த வழக்கம் எபபடி வந்தது? இதற்கு ஒரு கதை.
சூரபதுமனைச் சேர்ந்த அசுரர்களில் ஒருவனான இடும்பன் போருக்கு அஞ்சி, புறமுதுகிட்டு ஓடி அகத்தியரைச் சரண் அடைகிறான். அகத்தியரும் தாம் சிவபெருமானிடம் பெற்று கேதாரத்தில் வைத்து விட்டு வந்திருந்த சிவகிரி, சக்தி கிரிகளை எடுத்து வருமாறு ஏவுகிறார். மலையை எடுப்பது, அதனைத் தூக்கிச் செல்வது என்பதெல்லாம் எளிதான காரியமா? அதற்காக ஒரு பெரிய கம்பை எடுத்து அதன் இரு நுனியிலும் கயிற்றைக் கட்டி அந்தக் கயிற்றால் மலைகளையும் பிணைத்து, அப்படிப் பிணைத்த காவுதடியை தோளில் வைத்து அநாயாசமாக வழி நடக்க ஆரம்பிக்கிறான். அப்படி நடக்கும் போது சிறிது இளைப்பாறும் பொருட்டு, பழநிமலைப் பக்கத்தில் அதனைக் கொஞ்சம் கீழே இறக்கி வைத்திருக்கிறான். பின்னர் சிறிது நேரம் கழித்து அக்காவுதடியை எடுக்க முயல்கிறான். அதனைத் துக்க முடியவில்லை. மலைத்து நின்று மலையைச் சுற்றிப் பார்த்தால் அங்கு குமரன் கௌபீனதாரியாய் நிற்பதைக் காண்கிறான். இந்தச் சிறுவனைத்தனக்கு ஒரு கை கொடுக்குமாறு அழைக்கிறான். அவனோ மலையை விட்டு இறங்குபவனாக இல்லை. உடனே கோபம் கொண்டு அவனோடு சண்டைக்கே போகிறான். அன்று எவனுக்குப் பயந்து ஓடி, அகத்தியரிடம் சென்று சேர்ந்தானோ அவனோடு இன்று போரே தொடுக்கிறான். போரின் முடிவு நமக்குத் தெரிந்ததுதான். சிறுவனாகிய பெருமான் அவனைக் கொன்று, மீண்டும் அவன் மேல் வைத்த கருணையால் அவனை உயிர்ப்பித்து தன் திருக்கோலம் காட்டுகிறான். அன்று முதல் இடும்பனைப் போல், தன்னிடம் காவடி துக்கி வரும் அன்பர்களுக்கு எல்லாம் அருள் புரிகிறான். இப்படி அன்று இடும்பன் சுமந்த காவுதடியே இன்று காவடியாக மாறியிருக்கிறது. காவடியில் இறைவன் திருமுருகனுக்கு வேண்டிய பொருள்களை கட்டி எடுத்துச் செல்லுவதே முறையானது, சரியானது. இந்தக் காவடியை அலங்காரப் பொருளாக்கி ஆட்ட பாட்டத்துடன் எடுத்துச் செல்லுதல் சரியன்று. முறையன்று.
காவடி மூலமாய் தனக்கு வேண்டிய அபிஷேகப் பொருள்களைப் பெறுபவன், தேனுக்கும், தினைமாவிற்கும் அதிக விருப்பம் காட்டுவது ஏன்? இரண்டும் மலையிலே கிடைக்கும் பொருள்கள். முதல் முதல் மலைமேல் வைத்து வணங்கிய மலைவாழ் மக்கள், மலையில் கிடைக்கும் பொருளகளைத தானே நிவேதித்து இருப்பார்கள். தினை உடலுக்கு உறுதி அளித்து, உடலை வளமாக்கும் தன்மை உடையது. தேனோ இதய நோய் போக்கி இரத்தத்தையே சுத்தம் செய்ய வல்லது. ஞாபக சக்தியைப் பெருக்கவும் தேன் உதவுதல் கூடும். இத்தகைய பொருள்களை நிவேதனப் பொருள்களாக நாம் கொடுப்பதிலும், அவன் ஏற்றுக் கொள்வதிலும் வியப்பில்லை தானே. தேனையும் தினை மாவையும் வள்ளி தெய்வானையுடன் சேர்ந்திருந்து அவன் உண்ணுகிறான் என்றால் நம்மை எல்லாம் உண்பிக்கத்தானே.
இப்படி வழிபாடு செய்யப்படும் முருகனை வழிபட்டு உய்ந்தவர்கள் வரலாறு எண்ணில் அடங்காது.
ஓம் சரவணபவ


