வில்லேந்திய வேலன் குகசுவாமிமூர்த்தி

கங்கையாற்றின் கரையிலே சிருங்கிபேரபுரம் என்று ஓர் ஊர். அங்குள்ள வேடர் தலைவன் – குகன். கங்கையிருகரையையும் கணக்கிறந்த நாவாய்களையும் உடையவன் அவன். அவனுக்கு சக்ரவர்த்தித் திருமகன் ராமனிடத்து அளவிடற்கரிய அன்பு, தாய் உரைசெய, தந்தை ஏவ கானாளப் புறப்படுகின்றான் ராமன், லக்ஷ்மணனும் சீதையும் உடன் வர கங்கைக்கரை வந்து சேர்கிறான். கங்கையைக் கடக்க ஓடம் விடுகிறான் குகன். ‘என் தம்பி, உன் தம்பி, இந் நங்கை நின் கொழுந்தி, நான் உன் தோழன் என்றெல்லாம் கூறி, குகனது அன்பைப் பாராட்டுகின்றான் ராமன். ராமனுடன் தானும் காட்டுக்கே வருவேன் என்று குகன் பிடிவாதம் செய்த போது, ராமன், தம்பி நீ இங்கேயே இரு. நான் நாடு திரும்புகிற போது உன்னிடம் வந்து தங்கி, உன்னையும் அழைத்துக் கொண்டே அயோத்தி செல்கிறேன் என்று சொல்லிப் பிரியா விடை பெறுகிறான். தெற்கே சென்றவர்கள் திரும்பவில்லை. குறித்த பதினான்கு வருஷமும் கழிந்ததா இல்லையா என்று கணக்கிட்டுத் தெரியவோ அறியான் குகன். ராமனோ, சீதாபஹரணத்தால் நேர்ந்த துயரில் மூழ்கிக் கிடக்கிறான். இலங்கை மீது படையெடுத்துப் போர் நடத்துகிறான். இதையெல்லாம் அறிய ஏது இல்லை குகனுக்கு. அதனால் உடல் மெலிகிறான் உள்ளம் நைகிறான். இந்த நிலையில் குகனது வழிபடு கடவுளான முருகன் அவன் துயர் தீர்க்க விரைகிறான். வள்ளியைச் சீதையாகவும், தேவகுஞ்சரியை வட்சுமணனாகவும் மாற்றி, தானும் ராமன் உருத்தாங்கி குகனது கனவில் தோன்றி தம்பி கவலைப்படாதே குறித்த தவணை முடிய இன்னும் சிறிது காலம் உண்டு. அப்போது வருகிறோம். கவலையை விடு’ என்று சொல்லி மறைகிறான். குகனும் அன்று முதல் தேறி வருகிறான். இப்படி அந்தக் குகனதுதுயர் துடைத்து அவனுக்கு ஆனந்தத்தைக் கொடுத்த அந்தக் குகன்தான். குகசுவாமிமூர்த்தி – ஆனந்த நாயகமூர்த்தி என்று பெயர் பெறுகிறான்.

இப்படி ஒரு கதை. புது ராமாயணம் ஆகத்தான் இதைக் கூறுகிறது திருச்செந்தூர்த் தலபுராணம்.

ஓம் சரவணபவ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *