தேவசேனை திருமணம்

எம்பெருமான் ஆறுமுகமும் பன்னிரு திருத்தோளும் உடையவன். அந்தப் பன்னிரண்டு திருத்தோளையும் ஒருபெருமாட்டி அணைகிறாள். அவள் யார்?

அமுதவல்லி, சுந்தரவல்லி என்ற இரண்டு மகளிரும் திரு மாலின் குழந்தைகள். திருமால் முருகனுக்கு மாமன். ‘நாம் நம் அத்தை மகன் முருகனை உரிமையோடு அடையலாம்’ என்ற அகங்கார நினைப்பு அவர்களுக்கு இல்லை. அத்தை மகளையோ, மாமன் மகளையோ உரிமையுடன் மணந்து கொள்வதானாலும் பெண்ணைக் கொடுத்தால் சீதனம் வேண்டும் என்று கேட்கிற துண்டு அல்லவா? உரிமையோடு பெறவேண்டும் என்று நினைக்காமல் உழைப்பினால் பெறவேண்டும் என்று நினைத்தார்கள் அந்த இரண்டு பெண்களும். தவத்தின் பெருமையினால் முருகனைத் திருமணம் பண்ணிக் கொண்டால் உண்மையான இன்பம் கிடைக்கும். உறவினால் திருமணம் பண்ணிக் கொண்டால் அந்தப் பெருமை பெற்றோர்களுக்கே போய்ச் சேரும். ஆகவே தமக்கே உரிய சிறப்பினால் அடையவேண்டும் என்று நினைத்தார்கள். “தான் தேடாப் பொன்னுக்கு மாற்றும் இல்லை; உரையும் இல்லை” என்று சொல்வார்கள் அல்லவா?

தவம் செய்தார்கள்.சுந்தரவல்லி மானின் வயிற்றிலே பிறந்து வேட அரசனிடம் வளர்ந்தாள். அமுதவல்லி இந்திரனுடய பெண்ணாக ஐராவதத்தினால் வளர்க்கப் பட்டாள்.

ஒரு மகா சக்ரவர்த்தியின் பெண் என்றால் குடிமக்கள் எல்லாம் அவளைத் தம் பெண்ணாக நினைத்துப் போற்றுவார்கள். தேவேந்திரனின் பெண்ணாகிய தேவசேனையை தேவர்கள் யாவரும் தங்கள் தங்கள் பெண்ணாகப் போற்றி வளர்த்தார்கள். தேவ லோகத்து அரம்பையர்கள் அவளைத் தம் கண்ணில் வைத்துக் காப்பாற்றினார்கள். இப்படி முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் ஒரு பெண்ணாக, இந்திரனின் பெண்ணாக, ஐராவதத்தினால் வளர்க்கப் பெற்ற பெருமாட்டி தேவசேனை.

இந்திரனோ தனக்கு வந்த பெருந் துன்பத்தினாலே அமராவதியை விட்டே ஓடிச் சீர்காழியில் ஒரு மூங்கிலுக்குள் ஒளித் திருந்தான். மாயையின் பிள்ளையாகிய சூரன் தன் தம்பிமார் களோடு அமராவதியைக் கைப்பற்றிக் கொண்டு தேவர்களைச் சிறையில் அடைத்தான். இந்திரனின் மகனாகிய சயந்தனையும் சிறையில் போட்டான். இந்திராணி அஞ்சி மகாமேரு மலைக்குச் சென்று ஒளிந்து கொண்டாள்.

உலகம் போற்றத் தேவர்களுக்கு விடுதலை அளித்து, மகிழ்ச்சி ஊட்ட ஆறுமுகநாதன் அவதாரம் பண்ணிச் சூரசங்காரம் செய்தான். தேவர்களுடைய சேனைகளுக்குத் தலைவனாக இருந்த ஆறுமுகநாதன், சூரசங்காரம் செய்து அமராவதியை மீட்டுத் தேவராஜனிடம் கொடுத்தான். காமதேனுவை மீட்டுக் கொடுத்தான். தேவசேனாபதி என்று தேவர்கள் அவனை வணங்கிப் பாராட்டினார்கள். தேவசேனாபதியாக, அமரர் படைக்குக் காவலனாக இருந்து அந்தப் பெரிய போரை நடத்தி வெற்றி பெற்றான் எம்பெருமான். திருச்செந்தூருக்கு வந்து, நான்முகன் முதலியவர்களுடைய பூசையை ஏற்றுக் கொண்டு, திருப்பரங் குன்றம் அடைந்தான்.

தன்னுடைய அரசை மீட்டும் வாங்கிக் கொடுத்த ஆறுமுகப் பெருமானுக்குத் தேவேந்திரன் தன் பெண் தேவசேனையை மணம் செய்து வைக்க நினைந்து, இந்திராணியையும் தேவ சேனையையும் மேருமலையிலிருந்து அழைத்து வரச் சொன்னான். எல்லாத் தேவருடனும் எம்பெருமானிடத்தில் சென்று ஒரு விண்ணப்பம் செய்து கொண்டான். ”எம்பெருமானே! போர் நடந்த காலத்து அமரர் சேனைக்குக் காவலனாக இருந்தாய்; தேவசேனாபதியாக இருந்தாய். இனிச் சண்டை இல்லை. என்றாலும் தேவசேனாபதி என்ற பட்டம் மாறக்கூடாது. சண்டை போடுகிற தேவசேனாதிபதியாக இல்லாவிட்டாலும், என் மகள் தேவசேனைக்குப் பதியாக இருந்து அருள் வழங்க வேண்டும்” என்று வேண்டிக் கொண்டான்.

”உலகம் எல்லாம் போற்றுகின்ற பெருமானே! உன் திருவருள் இல்லாவிட்டால் எங்களுக்கு வாழ்வு ஏது? அமராவதி ஏது? காமதேனு எது? சூரபன்மனை எதிர்க்கச் சக்தி இல்லாததனால் அவை எல்லாவற்றையும் நாங்கள் இழந்து நின்றோம். உன் திருவருளால் அவற்றையெல்லாம் மீட்டும் நாங்கள் பெறச் செய்தாய். இதற்கு நாங்கள் எங்களுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள வேண்டாமா? பலகாலம் உன் பெருமை விளங்கிக் கொண் டிருக்கும்படியான அடையாளப் பரிசு ஒன்று கொடுக்க வேண்டாமா?

“எங்களிடத்தில் உள்ள பொருள் எல்லாவற்றையும் தந்தவன் நீ. அசுரக் கூட்டங்களை ஒழித்துத் தேவர்களைச் சிறைமீட்ட உனக்கு செய்ந்நன்றி யறிவுக்கு அடையாளமாக இந்த ஏழை செய்யத்தக்கது உண்டா? என்னிடத்தில் ஒரு பெண் இருக்கிறாள். என் திருமகள் தேவசேனையை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று இந்திரன் பிரார்த்தித்தான்.

இதைக் கந்தபுராணம் அழகாகச் சொல்கிறது.

“கன்னின்ற மொய்ம்பின் அவுணக்களை கட்டல்
செய்தாய் இந்நின்ற தேவர் சிறைமீட்டனை
என்ற னக்கு முன்னின்ற தொல்சீர் புரிந்தாய்
அது முற்றும் நாடிச் செய்ந்நன்றி யாகச்
சிறியேன்செயத் தக்க துண்டோ?”

பெரும் கூட்டம்; திருமால் ஒருபால், பிரமன் ஒருபால், அக்கினி வருணன் ஆகிய முப்பத்து முக்கோடி தேவர்கள் ஒரு பால். எல்லாரும் மிக்க மகிழ்ச்சியோடு எம்பெருமானைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

முருகனுக்கு முன்னே இந்திரன் கையைக் கட்டி வாயைப் பொத்திக் கொண்டு நின்றான். “என்ன சமாசாரம்?” என்று எம் பெருமான் கேட்டவுடன் மெல்லச் சொல்லத் தொடங்கினான்.

‘அமராவதி, காமதேனு, கற்பக விருட்சம் இவற்றை யெல்லாம் வைத்துக் கொண்டு நாங்கள் தருக்கி இருந்தோம். அசுரக் களைகள் முளைத்தன. எங்கள் ஆனந்தப் பயிரை அந்த அசுரக் களைகள் அழித்துவிட்டன. அந்தச் சமயத்தில் நீ வந்து உன் தோள் வலிமையினால் அவுணக்களையைக் களைந்தாய்.’

“கன்னின்ற மொய்ம்பின் அவுணக்களை
கட்டல் செய்தாய்.”

‘இதோ நிற்கிறார்களே தேவர்கள். முன்பு இவர்கள் முகம் வாடித் தொங்கச் சூரனால் சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்டிருந் தார்கள். முகத்திலே இன்பம் பொங்க, தலையிலே மகுடம் ஒளி விட, மார்பிலே மாலை புரள இன்று விளங்கும்படி இவர்களை நீ சிறையிலிருந்து மீட்டாய்.

“இந் நின்ற தேவர் சிறைமீட்டனை.”

”அதுமாத்திரமா?என்னைத் தேவருலகுக்கு அரசன், தேவேந்திரன், அமராவதி காவலன் என்று சொன்னார்கள். இந்திர பதவி என்பதை மிக உயர்ந்த பதவிக்குப் பெரியவர்கள் உதாரணமாகச் சொல்வார்கள். அந்த இந்திர பதவி, இந்திர போகம் எல்லா வற்றையும் நான் இழந்து சூரனுக்குப் பயந்து ஓடினேன். அந்தப் பழைய பெருமையை உன் திருவருளினால் பெற்றிருக்கிறேன். நான் இழந்துவிட்ட பெருமைகளை நீ சூரனைச் சங்காரம் செய்து, எனக்குத் திரும்பவும் அளித்தாய்.

“என்றனக்கு
முன்னின்ற தொல்சீர் புரிந்தாய்”

“இவற்றை இப்போது நினைக்கத் தோன்றுகிறது. முன்பு உன் பெருமையை நினைக்கத் தெரியவில்லை. எங்களுக்குச் செய்ந்நன்றி யறிவு இருக்கிறது.எல்லா வகையிலும் எங்களுக்கு வாழ்வளித்த உனக்கு, நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்?

“இது முற்றும் நாடிச்
செய்ந்நன்றி யாகச் சிறியேன்செயத்தக்க துண்டோ?”

‘ஆனால் ஒரு விண்ணப்பம். பெரிய பெரிய காரியங்களைச் செய்து கீர்த்தியைச் சம்பாதித்துக் கொண்டிருக்கும் நீ, எங்களுடைய வேண்டுகோளுக்காக என் பெண்ணை ஏற்றருள வேண்டும். முன்பு அடியேன் பெற்ற மங்கை இந்தச் சபையில் வருவாள். அவளைத் திருமணம் புரிந்து கொண்டு, தூணைப் போன்ற வலிமையையுடைய உன் திருத்தோளில் அணைத்துக் கொள்ள வேண்டும்.

“முந்தே தமியேன் பெருமங்கைஇம் மொய்வ ரைக்கண்
வந்தே அமர்வாள் அவள்தன்னை வதுவை செய்து
கந்தே புரைநின் பெருந்தோளில் கலத்தி யாங்கள்
உய்ந்தே பிறவிப் பயன்பெற்றனம் ஓங்க என்றான்.”

“அப்போதுதான் நாங்கள் பிறவி எடுத்ததன் பயன் பெற்றவர்கள் ஆவாம்” என்ற இந்திரன் விண்ணப்பம் செய்து கொண்டான்.

அறிவுள்ள பெண்ணை, அழகான பெண்ணைப் பெற்று விடலாம். ஆனால் அவள் வளர்ந்து தளர்ந்து நிற்காமல் தனக்கு ஏற்ற நாயகனை அடையும்போதுதான் பெற்றவர்களுக்கு எல்லை இல்லா ஆனந்தம் உண்டாகும். பெண்ணுக்கு ஏற்ற தகுதி எதுவும் இல்லாத, முப்பது ரூபாய் சம்பளக்காரன் கையில் பிடித்துக் கொடுத்துவிட்டால் அது பின்னர்க் கண்ணைக் கசக்கிக் கொண்டு நிற்கும்போது, ”ஐயோ! இது ஏன் என் வயிற்றில் பெண்ணாகப் பிறந்தது?” என்று பெற்றோர்களின் உள்ளம் வேதனைப்படும்.

இந்திரனுடைய பெண் தேவசேனைக்கு முருகனைக் காட்டிலும் சிறந்த மணவாளன் வேறு கிடைப்பானா? முருகன் இந்திரனுடைய வேண்டுகோளைச் செவிமடுத்து, “அப்படியே ஆகுக” என்றான்.உடனே திருமணத்திற்கு ஏற்பாடாயிற்று.

இந்திரன் திருமணம் செய்தால் அந்தத் திருமண மண்டபம் எப்படி இருக்க வேண்டும்? உலகத்தில் பெரிய பணக்காரர்கள் கலைஞர்களை அழைத்துச் சிறந்த வேலைப்பாடுடைய கொட்டகை போடச் சொல்வார்கள். தேவேந்திரன் விசுவகர்மாவைக் கொண்டு பெரிய மண்டபம் அமைக்கச் செய்தான். சிவ பெருமானும், உமாதேவியும் தங்கத் தனியான இடம்; அந்தப் பெருமானோடு வருகின்ற தேவர்கள் தங்கத் தனி இடம்; பூத கணங்களுக்கு ஏற்றபடி தனியிடம். எல்லோருக்கும் ஏற்றபடி உணவு. இப்படி மிக விரிவான ஏற்பாடுகளை இந்திரன் செய்தான். விசுவகர்மா இரத்தினகசிதமான வதுவை மண்டபம், வந்தவர்கள் தங்கும் மண்டபம் முதலியவற்றையும் அமைத்தான். வேண்டிய பொருளை எல்லாம் காமதேனு கொண்டு வந்து கொட்டிவிட்டது. நினைத்த மாத்திரத்திலே வெகுதூரத்தில் உள்ள பொருள்களைச் சிந்தாமணி தந்தது. முப்பத்து முக்கோடி தேவர்கள் எம்பெருமானின் கல்யாணம் என்னும் உவகையினால் ஓடி ஓடி ஏற்பாடுகளைச் செய்தார்கள். வெறும் கல்யாணப் பத்திரிகையை மாத்திரம் இந்திரன் பல இடங்களுக்கு அனுப்பவில்லை.

பத்திரிகையோடு தூதுவர்களையும் ஒவ்வோர் ஊருக்கும் அனுப்பினான். தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் தூதுவர்களை அனுப்பி வைத்ததோடு முசுகுந்த சக்கரவர்த்தி முதலாகிய பூவுலக அரசர்களுக்கும் அனுப்பினான்.

முசுகுந்த சக்கரவர்த்தி கருவூரிலிருந்து சோழநாட்டை ஆண்டு வந்தான். அவன் இந்திரனுக்கு மிகவும் வேண்டியவன். ஒரு காலத்தில் வலம்புரி என்னும் அசுரன் இந்திரனைச் சண்டையில் தோல்வியுறச் செய்து அழிக்க இருந்தபோது முசுகுந்த சக்கரவர்த்தி தன் படைகளோடு சென்று அவனுக்குத் துணையாக இருந்து, வெற்றி வாங்கிக் கொடுத்தான். அந்தச் சமயத்தில்தான் தியாகராசப் பெருமானை அவன் இந்திரனிடத்திலிருந்து பெற்றான் என்று திருவாரூர்த் தல புராணம் சொல்கிறது. ”சண்டையில் நீ எனக்கு உதவி செய்தாய். இன்று நான் பூவுலகத்தில் என் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணுகிறேன். நீ வந்து உதவி செய்ய வேண்டும்” என்று இந்திரன் முசுகுந்த சக்கரவர்த்திக்கு ஓலை அனுப்பினான்.

நாம் மனித உடம்பும், குரங்கு மனமும் படைத்திருக்கிறோம். முசுகுந்த சக்கரவர்த்தி குரங்கு போன்ற முகத்தையும், மனிதர்களைப் போன்ற உடம்பையும் படைத்தவன்.

அப்படிப் படைத்ததற்கு ஒரு காரணம் உண்டு. கைலாசச் சோலையில் பரமேசுவரன் பார்வதியோடு பேசிக் கொண்டிருந்தான். அவர்கள் இருந்த இடத்தில் வில்வ மரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தின் மேல் குரங்கு ஒன்று விளையாடிக் கொண் டிருந்தது. சிவபெருமானும் அம்மையும் பேசிக் கொண்டிருப் பதைக் கண்டு அவர்களுக்குப் பூசை செய்வது போல அது வில்வத்தைப் பறித்து ஒவ்வொன்றாகப் போட்டது. அம்மைக்குச் சிறிது கோபம் வந்தாலும், சிவபெருமான் அதை அடக்கி, “பக்தியினாலே அந்தக் குரங்கு நமக்கு அர்ச்சனை செய்கிறது” என்று சொல்லி, வில்வத்தால் அர்ச்சனை செய்பவன் மகா சக்கரவர்த்தி யாவான் என்பற்கிணங்கப் பூலோகத்தில் பெரிய சக்கரவர்த்தியாக இருப்பாய் என்று அருள் செய்தான்.

சிவபெருமான் அருளியதைக் கேட்டு அந்தக் குரங்குக்கு மகிழ்ச்சி உண்டாகவில்லை. அம்மை அப்பனின் காலில் வீழ்ந்து வணங்கி, “எம்பெருமானே! நான் என்ன பிழை செய்தேன்? எதற்காக என்னை இப்படிச் சபித்தீர்கள்? இங்கே தினந்தோறும் தேவரீரைத் தரிசனம் பண்ணிக் கொண்டிருந்தேன். உங்களை விட்டு நீங்கி மனிதப் பிறவியா எடுக்கவேண்டும்? உலகத்துக்குப் போய்விட்டால் எனக்குப் பக்தி இருக்குமா? பணம் படைத்தால் கடவுளை நினைக்கத் தோன்றாதே! மகாசக்கரவர்த்தியாகும்படி சொல்லி விட்டீர்களே! நில உலகத்திற்குச் சென்று செல்வமாகிய வலைக்குள் அகப்பட்டால் நான் மீட்டும் எங்ஙனம் உய்வு பெறப் போகிறேன்?”

“நுங்களை வைகலும் நோக்கி உவப்பாய்
இங்குறை கின்ற திகந்து நிலம்போய் மங்குறு
செல்வ வலைப்படு வேனேல் எங்கள்
பிரான்பினை எங்ஙனம் உய்கேன்!”

என்று விண்ணப்பித்துக் கொண்டது.

”உனக்குப் பக்தி இருக்கும்; என்னை மறக்கமாட்டாய். நல்ல காரியங்களைச் செய்வாய். ‘குரங்கு வில்வத்தால் அர்ச்சனை பண்ணியது; மகா சக்கரவர்த்தி ஆயிற்று’ என்று உன்னால் மக்களுக்குப் பக்தியும், நம்பிக்கையும் உண்டாகும். அதனால் நீ அங்கே போய் வா என்று கட்டளையிட்டான் இறைவன்.

“தங்கள் உத்தரவுப்படியே அங்கே செல்கிறேன். என்றாலும் மானிடப் பிறப்பில் மயங்காவண்ணம் இந்த முசுவின் முகத் தோடேயே பிறக்க வேண்டும். என் உடம்பு சக்கரவர்த்தியின் உடம்பாக இருக்கட்டும். ஆனால் என்னுடைய முகம் மட்டும் குரங்காக இருக்க வேண்டும்” என்று அக்குரங்கு கேட்டுக் கொண்டது. அப்படியே ஆண்டவன் அருள் செய்தான். குரங்கு முகத்தோடும், நல்ல அழகான மனித உடம்போடும் முசுகுந்த சக்கரவர்த்தி சோழ வமிசத்தில் பிறந்தான். பிறந்து சக்கரவர்த்தி யாகிக் கருவூரில் இருந்து ஆண்டு வந்தான். அப்போதுதான் இந்திரனுக்கு உதவி செய்தான்.

ஆகவே பரமேசுவரனுக்கும் அவன் வேண்டியவன்; இந்திர னுக்கும் வேண்டியவன். இரண்டு பக்கத்திலும் தொடர்பு உடை யவன் அவன். அங்கிருந்தும் பத்திரிகை வரும்; இங்கிருந்தும் பத்திரிகை வரும். கல்யாணத்திற்குத் தன் சேனைகளோடும் உறவினர்களோடும் புறப்பட்டு வந்தான்.

தேவசேனையின் திருமணத்தை எண்ணித் தேவர்கள் யாவரும் திருப்பரங்குன்றத்திற்கு வந்து குழுமியிருந்தார்கள். பூலோகத்துச் சக்கரவர்த்திகள் பரிவாரங்களுடனும், உறவினர் களுடனும் வந்திருந்தார்கள். உமாதேவியும் சிவபெருமானும் பூதகணங்களுடனும் முனிபுங்கவர்களுடனும் வந்திருந்தார்கள். நன்றாக அலங்கரிக்கப்பெற்ற தேவசேனை வதுவை மண்டபத்திற்கு வந்து உமையையும் சிவபெருமானையும் வணங்கினாள். “ஆறுமுக நாதனின் பக்கத்தில் போய் அமர்ந்துகொள்” என்று இரண்டு பேரும் சொல்ல அவ்விதமே அவள் போய் உட்கார்ந்தாள்.

பிரமன் புரோகிதராக இருந்து நடத்த, வேதம் முழங்க, ஆகமங்கள் முழங்க, பற்பல வாத்தியங்கள் முழங்க, இந்திரன் தூய கங்கை நீரை முருகப் பெருமான் திருக்கையில் வார்த்து, ”இந்தப் பெண்ணை நான் உனக்குத் தாரைவார்த்துக் கொடுக்கிறேன்” என்று சொன்னான்.

“அன்னுழி இந்திரன் ஆறுமு கேசன் தன்னொரு
கையிடைத் தந்தியை நல்கி நின்னடி
யேன்இவண் நேர்ந்தனன் என்னாக் கன்னல்
உமிழ்ந்த கடிப்புனல் உய்த்தான்.”

முருகன் திருக்கரத்தில் இந்திரன் நீர்பெய்து தாரை வார்த்துத் தேவயானையை அளித்தான்.

முருகன் அந்த நீரை ஏற்றுத் தேவயானையையும் மனைவியாக ஏற்றுக் கொண்டான். தன்னை அடைகின்றவர்களுக்கு வேண்டிய வேண்டியாங்கு ஈயும் எம்பெருமான், விரும்பும் அன்பர்களுக்கு முத்தியும் ஆக்கமும் கொடுக்கும் பெருமான், தன் திருக்கரம் கீழாக இருக்க, இந்திரனுடைய கரம் மேலாக இருக்க, அவன் தாரைவார்க்க ஏற்றுக் கொண்டான். யாருடைய கையின் கீழே எல்லாரும் நிற்கிறார்களோ அவனுடைய கையில் தூய கங்கை நீரை வார்த்து, “என் பெண்ணைத் தங்களுக்குக் கொடுத்தேன்” என்றான் இந்திரன். ‘வாங்கிக் கொண்டேன்’ என்று முருகன் ஏற்றுக் கொண்டான்.

“மருத்துவன் மாமறை மந்திர நீரால்
ஒருத்தி பொருட்டினில் ஒண்புனல் உய்ப்பக்
கரத்திடை ஏற்றன னால்கழல் சேர்ந்தார்க்
கருத்திகொள் முத்தியும் ஆக்கமும் ஈவோன்.”

தவப்பெருமாட்டி தேவசேனை தன்னிடம் வந்து சேர வேண்டும் என்பதற்காக இந்திரன் வார்த்த நீரைத் தன்கையை நீட்டி வாங்கிக் கொண்டான் முருகன். கல்யாணம் மிக்க சிறப்பாக நடந்தது. எல்லோரும் ஆனந்தத்தை அடைந்தார்கள். திருமணம் ஆனவுடனே ஆறுமுகநாதன், தன் மனையாட்டியுடன் தன்னுடைய அம்மையையும் அப்பனையும் சென்று வணங்கினான். உலகுக்கு வழிகாட்டுகின்ற பரமேசுவரனும் பார்வதியும் தங்களுடைய திருவடியில் வந்து வீழ்ந்து வணங்கிய ஆறுமுகநாதனையும் தேவசேனையையும் களிப்போடு எடுத்து வாரி அணைத்து அருள் செய்து பக்கத்தில் உட்கார வைத்து உச்சிமோந்தார்கள். உலகத்தில் நடக்கிறதைப் போல ஒரு நாடகத்தை நடித்தார்கள் அவ்விருவரும்.

“அடித்த லத்தில்வீழ் மக்களை இருவரும் ஆர்வத்
தெடுத்த ணைத்தருள் செய்துதம் பாங்கரில் இருத்தி
முடித்த லத்தினில் உயிர்த்துமக் கெம்முறு
முதன்மை கொடுத்தும் என்றனர் உவகையால்
மீக்கொள்கொள் கையினார். “

“அப்பா, எங்களுக்கு வயசாகிவிட்டது. உலகினர் மாதா பிதா என்று இதுவரை எங்களுக்குத் தலைமை கொடுத்தார்கள். இனி நீங்களே அந்தத் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டு உலகிலுள்ள ஆருயிர்களுக்கு அம்மா அப்பாவாக இருந்து அருள் செய்து வருவீர்களாக! தலைமைப் பதவியை நீங்கள் எங்களிடமிருந்து வாங்கிக் கொண்டு எங்களுக்கு ஓய்வு கொடுங்கள்” என்று மகிழ்ச்சியோடு சொன்னார்களாம். “இனிமேல் எங்களுக்கு கவலை எதுவும் வேண்டாம். எங்களுடைய கவலையை எல்லாம் உங்களிடத்தில் தள்ளிவிட்டோம்” என்று சொன்னதோடு நில்லாமல், தலைமைப் பதவியையும் கொடுத்து ஆசீர்வாதம் செய்துவிட்டு அங்கிருந்து எழுந்து போனார்களாம்.

தம்முடைய குழந்தைக்குக் கல்யாணம் ஆகி, மனையாட்டி யோடு அவன் குடித்தனம் செய்ய ஆரம்பித்தவுடனே சிவ பெருமான் பார்வதியைப் போல வயசு வந்த பெற்றோர்கள் நடந்து கொண்டால் சண்டை வராது. இந்த உண்மையைத் தன் அருள் விளையாடலிலே வைத்துக் காட்டினான், சிவபெருமான். மயானம் போகுமட்டும் அதிகாரத்தைப் பிடித்துக் கொள்ள விரும்பினால் சண்டைதான்; துக்கந்தான். தங்கள் குழந்தைகளிடத்தில் மனப் பூர்வமாகத் தங்கள் அதிகாரத்தில் ஒரு பங்கைவிட்டுக் கொடுத்துவிட்டால் போதும்; அவர்கள் பன்மடங்கு அன்போடு பாதுகாப்பார்கள். பற்றைச் சிதறவிடாமல் பற்றிக் கொண்டிருந்தால் துன்பந்தான் வரும். இதை ஆண்டவன் நமக்கு நாடகமாகக் காட்டினான்.

உண்மையாகச் சொல்லுகின்ற நல்லவர்களுடைய வார்த்தை உடனே அமலுக்கு வந்துவிடும். சிவபெருமானும் அம்மையும்,

“முடித்த லத்தினில் உயிர்த்துமக் கெம்முறு முதன்மை
கொடுத்தும்”

என்று சொல்லிப் புறப்பட்டுப் போனவுடன் அவர்கள் எந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தார்களோ அந்த ஆசனத்தில் இவர்கள் இரண்டு பேரும் அமர்ந்தார்கள்.

‘என்ன பைத்தியக்காரத்தனம்!அப்பா,அம்மா சொன்னார்கள் என்றால் உடனே பிள்ளை அப்படிச் செய்யலாமா? அவர்கள் ஆசனத்தில் அமரலாமா?” என்று கேட்கத் தோன்றும். நம்முடைய அப்பா அம்மா அப்படி மனசாரச் சொல்கிறது இல்லை; பிள்ளையும் மனசார எடுத்துக் கொள்ளுவதும் இல்லை; எடுத்துக் கொள்ள அஞ்சுவான்.

இங்கே சிவபெருமான் உண்மையிலேயே சொல்லி விட்டுக் கைலாசம் புறப்பட்டுப் போனான். உடனே அவனுடைய கட்டளைப்படி இவர்கள் அவர்களுடைய ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டு ஆருயிர்களுக்கு அருள் பாலித்தார்கள்.

‘முருகப்பெருமான் சிவபெருமானின் பிள்ளை. தன் பிள்ளையை உலகம் எல்லாம் வணங்க வேண்டும் என்பதற்காகச் சிவபெருமான் அப்படிச் சொல்லித் தலைமைப் பதவியைக் கொடுத்துவிட்டுப் போனான்’ என்று நாம் நினைப்போம். முருகப் பெருமானைச் சிவபெருமான் சொல்வதற்கு முன்பே உலகம் போற்றித் துதிக்க ஆரம்பித்துவிட்டது. அவனுடைய தண்டைச் சிற்றடியைத் தேவர்கள் தம் தலையில் வைத்துக் கொண்டு சூரசங்காரம் ஆனது முதலே போற்ற ஆரம்பித்துவிட்டார்கள். அவனை மாத்திரம் போற்றினால் போதாது. தேவ சேனையையும் அவர்கள் போற்ற வேண்டும் என்கிற மேலான கருணையினாலே சிவனும் பார்வதியும் தங்கள் தலைமைப் பதவியைத் தந்து, முருகனையும் தேவசேனையையும் தாய் தந்தையாகப் போற்றி ஆருயிர்கள் உய்வு பெறட்டும் என்று அப்படிச் செய்தார்கள். முருகனுக்கு இங்கே புதிதாக முதன்மை வரவில்லை. தேவ சேனைக்குக்குத்தான் இதுவரையில் இல்லாத முதன்மை வந்தது. இது வரையிலும் அவள் இந்திரன் பெண். இனியும் இந்திரன் பொண்ணாக நினைக்கக்கூடாது. எல்லாரும் வணங்குகின்ற திருவடியை உடைய தெய்வமாகி விட்டாள். எந்தக் கணத்தில் முருகப் பெருமான் கட்டிய திருமாங்கல்யம் அந்தப் பெருமாட்டி கழுத்தில் ஏறிற்றோ அந்தக் கணம் முதலே அவள் திருவடி எல்லோராலும் வணங்கும் தெய்வத் திருவடியாகிவிட்டது. அதை எல்லோரும் அறிய வேண்டும் என்பதை நினைந்தே பரமேசுவரனும் உமையும் அவர்களுக்குத் தலைமைப் பதவி கொடுத்தோம் என்று சொல்லிப் போக, இரண்டு பேரும் அவர்கள் அமர்ந்திருந்த பீடத்தில் எழுந்தருளினார்கள்.

“உமையும் ஈசனும் இருந்திடு பீடிகை உம்பர்க்
குமர நாயகன் தெய்வதக் களிற்றொடுங் கூடி அமர,
அன்னது காண்டலும் மகிழ்சிறந் தன்னார்
கமல மெல்லடி தொழுதனர் வாழ்த்தினர் களிப்பால்,”

அதைப் பார்த்தவுடன் தேவர்கள் எல்லாரும் மிக்க ஆனந்தம் அடைந்தார்கள். ‘இந்திரன் இப்பெருமாட்டியைக் கன்னிகாதானம் செய்து கொடுத்தானே! ஆறுமுக நாதனும் இந்தத் தெய்வதக் களிற்றைத் திருமணம் செய்து கொண்டானே! இதைப் பார்க்க நாம் எத்தனை பாக்கியம் பண்ணினோம்!’ என்று எல்லாரும் மகிழ்ச்சி அடைந்தவர்களாய் அவர்களுடைய தாமரை போன்ற மென்மையான திருவடிகளைத் தொழுது வாழ்த்தி வணங்கினர். “ஆயிரம் கண் படைத்த பயன் இன்றுதான் எய்தப் பெற்றேன்” என்று இந்திரன் எல்லையில்லா மகிழ்வெய்தி அவர்களை வணங்கினான். பிரமன் திருமால் முதலாய தேவர்களும், பூவுலகச் சக்கரவர்த்திகளும் வணங்கினார்கள். முசுகுந்த சக்கரவர்த்தி இத்தகைய தெய்வத் திருமணத்தைக் காணும் பேறு கிடைத்ததே என்று மகிழ்வெய்தினான்.

ஓம் சரவணபவ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *