
சின் முத்திரையின் பொருள் என்ன?
தட்சிணாமூர்த்தி
அகப்பொருளில் ஒன்று சொல்வார்கள். தலைவனும் தலைவியும் எல்லாப் பண்புகளிலும் ஒத்திருக்க வேண்டும் என்பார்கள். இங்கே அம்பிகை தவம் செய்ய, பரமேசுவரனும் தவம் செய்யத் தொடங்கினானாம். சிவபெருமான் எதற்காகத் தவம் செய்தான்? சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நான்கு முனிவர்களும் பிரம்ம தேவனின் புதல்வர்கள். அவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள். எல்லா நூல்களையும் கற்றவர்கள். எல்லா வகையான கேள்வி ஞானமும் உடையவர்கள். அவர்கள் படிக்காத நூல் இல்லை. கேளாத கேள்வி இல்லை. சிந்திக்க வேண்டியவற்றை எல்லாம் சிந்தித்து அறிந்தவர்கள். அவர்களுக்கு ஒரு சந்தேகம் உண்டாயிற்று. நூல்களில் சந்தேகம் இல்லை. கேள்வியில் சந்தேகம் இல்லை. நூல்களுக்கும், கேள்விகளுக்கும் அப்பாலே அந்தச் சந்தேகம் இருந்தது. இறைவனிடம் சென்று, தெளிவித்தருள வேண்டும் என்று வேண்டினர். அவர்களுடைய ஐயத்தை நூல்களைக் கொண்டு தீர்க்க முடியாது. வாயினாலும் சொல்லித் தீர்க்க முடியாது. கல்வி கேள்விகளுக்கு அப்பாற்பட்ட ஐயம் அது. அதைத் தீர்க்க வேண்டுமானால் அந்த இரண்டுக்கும் அப்பாற்பட்ட முறையிலே தான் தீர்க்க வேண்டும்.
தட்சிணாமூர்த்தியாக எம்பெருமான் எழுந்தருளி அவ்வாறு தீர்த்தாராம். இதைப் பரஞ்சோதி முனிவர் சொல்கிறார்:
“கல்லாலின் புடைஅமர்ந்து நான்மறைஆ றங்கமுதற்
கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய்
மறைக்கப் பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி
இருந்து காட்டிச்
சொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைந்துபவத்
தொடக்கை வெல்வாம்.”
(திருவிளையாடற் புராணம்)
(ஆறு அங்கம் – ஆறு சாஸ்திரங்கள்.)
பரமேசுவரன் இமாசலத்தில் கல்லால மரத்தின் கீழே தென் முகமாக அமர்ந்திருந்தான். அவன் சின் முத்திரையினால் உபதேசம் செய்தான். வாக்குக்கு அப்பாற்பட்ட ஞானத்தைப் போதிக்கிற சின் முத்திரையை மேற்கொண்டான். அவன் கல்லால மரத்தின் நிழலில் இருந்ததாகப் பாட்டுச் சொல்கிறது. கல்லால மரம் என்பது இச்சி என்று சொல்கிறோமே அதுதான். பாறையின் மேலே முளைக்கிற சிறு ஆல் அது. அதனால் கல்லால் என்ற பெயர் வந்தது. நான்கு வேதங்களையும், ஆறு சாஸ்திரங்களையும், ஞானங்களையும் நன்கு கற்று, எல்லா வகையான கேள்விகளிலும் சிறந்த அந்தப் பெரு முனிவர்களுக்கு உண்டான ஐயத்தை வார்த்தையினால் நீக்க முடியாது; நூல்களை எடுத்துக் காட்டி நீக்க முடியாது. ஆகவே ஆண்டவன் மௌனத்தினால் அவர்களுடைய ஐயத்தைப் போக்கினானாம். இருந்தபடி இருந்து காட்டிச் சொல்லாமல் சொன்னானாம்.
“இருவரும் உணரா அண்ணல் ஏனவெள் ளெயிறு யாமை சிரநிரை அனந்த கோடி திளைத்திடும் உரத்திற் சீர்கொள் கரதலம் ஒன்று சேர்த்தி மோனமுத் திரையைக் காட்டி ஒருகணம் செயலொன் றின்றி யோகுசெய் வாரின் உற்றான்.”
(மேருப் படலம். 12.)
(ஏனவெள் எயிறு – பன்றியின் வெண் கொம்பு. யாமை – ஆமையோடு. சிரநிரை – கபால மாலை. உரத்தில் – மார்பில். மோன முத்திரை – சின் முத்திரை, யோகு – யோகம்.)
பிரமாவும், திருமாலும் அறியாத இறைவன் இப்போது சனகாதி முனிவர் நால்வருக்கு முன் யோகியாக அமர்ந்திருக்கிறான். தன்னுடைய மார்பில் பன்றிக் கொம்பு, ஆமை ஓடு, தலை மாலை ஆகியவற்றை அணிந்தவன். அந்தத் திருமார்பில் கையைச் சேர்த்து மோன முத்திரையைக் காட்டுகிறான். ஒரு கணம் எந்த விதமான செயலும் இல்லாமல் யோகம் செய்கின்ற யோகியைப் போல மௌனமாக இருந்தான்.
சின் முத்திரை
தட்சிணாமூர்த்தி தன்னுடைய கையினால் காட்டுவதைச் சின் முத்திரை என்று சொல்வார்கள். முத்திரை என்பது அடையாளம். முத்திரைகள் பல உண்டு. இரண்டு கையையும் சேர்த்துக் காட்டுகிற முத்திரையும், தனித்தனியாகக் காட்டுகிற முத்திரையும், ஒற்றைக் கையால் காட்டுகிற முத்திரையும் உண்டு. ஒற்றைக் கை, இரட்டைக் கை, இணையா இணைக் கை என்று நாட்டிய வகையில் முத்திரைகளுக்குத் தனித்தனிப் பெயர் உண்டு. மான் என்பதைக் குறிக்க ஒரு வகையில் விரல்களைக் காட்டுவார்கள். தாமரைப் பூவுக்கு ஒரு வகையான முத்திரை உண்டு. அபிநய நூல் இந்த முத்திரைகளைப் பற்றிய இலக்கணங்களை வகுக்கிறது. சிவபூசையில் சில முத்திரைகள் உண்டு.
தட்சிணாமூர்த்தி கையிலுள்ள முத்திரை சின் முத்திரை. சித் என்பது ஞானம். ஞானத்தின் அடையாளமாகக் காட்டுகிற குறி அது. தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்திருப்பார். ஒவ்வொரு கோவிலிலும் பிராகாரத்தைச் சுற்றி வந்தால் தெற்குத் திசை தெரிவு தற்குத் தட்சிணாமூர்த்தி ஓர் அடையாளம். கோவிலுக்கு உள்ளே வலம் வந்தாலும் திக்கை அறிந்து கொள்ளலாம். அங்கே நடராஜப் பெருமானும் தென்முகமாக இருப்பார்.
தெற்குத் திசை காலன் இருக்கும் திசை. காலனால் உண்டாகிற அச்சத்தைப் போக்குகின்ற வகையில் இந்த இரண்டு மூர்த்திகளும் தென் திசை நோக்கி எழுந்தருளியிருக்கிறார்கள். இருவருடைய காலின் கீழும் முயலகன் இருக்கிறான். முயலகன் என்பது நம் மனத்தின் உருவந்தான். முயலகனைப் பார்த்தால் அவனிடம் எத்தனை கோணல்கள் இருக்கின்றன என்பது தெரியும். விரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பக்கம் இருக்கும். ஒவ்வோர் அங்கமும் வெவ்வேறு வகையில் திரும்பி இருக்கும். இப்படிப் பல வகையில் கோணல்களைக் கொண்ட முயலகன் இறைவன் திருவடியின் கீழே செயலற்று இருந்து விடுகிறான். நம் மனம் ஒரே சமயத்தில் பல பல வகையில் அலைகிறது. முயலகனைப் போல் பல திசைகளில் திரும்பி நிற்கிறது. இறைவன் அதன் மேல் எழுந்தருளினால் மனம் நின்றுவிடும். இந்தக் குறிப்பை, தட்சிணா மூர்த்தி, நடராஜா ஆகிய இருவரின் உருவங்களும் உணர்த்துகின்றன. தட்சிணாமூர்த்தி அமைந்த சக்தி (Static Force) நடராஜா இயங்கும் சக்தி (Dynamic Force) எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும் பேராற்றல் நடராஜப் பெருமான். அமைந்திருக்கும் ஆற்றல் தட்சிணாமூர்த்தி. நடராஜப் பெருமான் தென்பால் உகந்து ஆடுகிறான். தட்சிணாமூர்த்தியும் தென்பால் உகந்து அமர்ந்திருக்கிறார். அவர் கையில் சின்முத்திரை இருக்கிறது. அதன் பொருள் என்ன?
நம் கைகளில் ஐந்து விரல்கள் இருக்கின்றன. கட்டை விரல் எந்தக் காரியம் செய்தாலும் உடன் வரும். என்றாலும் அது எப்போதும் தனித்தே இருக்கும். செயல் செய்யும் போது மாத்திரம் மற்ற நான்கு விரல்களோடு சேர்ந்து செயல்படும். அது இறைவனைக் காட்டுகிறது. ஆண்டவன் நம்மோடு ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கிறான். நாம் செய்கிற எல்லாக் காரியங்களுக்கும் அவன் துணை வேண்டியிருக்கிறது. ஆனாலும் நாம் அவனுடன் இன்னும் சேரவில்லை.
கட்டை விரலுக்கு அடுத்தது ஆள் காட்டி விரல். அதற்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? ஆள் காட்டி விரல் என்று சொல்கிறார்களே, அது எந்த ஆளைக் காட்டுகிறது? கழுதை போனால் அதையுந்தான் அது காட்டுகிறது. ஆளை மட்டுமா காட்டுகிறது? ஆள் என்பது உயிருக்கு, ஆத்மாவுக்குப் பெயர். பெரிய விரல் ஆண்டவனைக் காட்டுகிறது என்று சொன்னேன். அவன் தானே பெரிய பொருள்? பரமேசுவரனாகிய பெரிய பொருளைப் பெரு விரல் காட்டுகிறது. ஆளை, ஆத்மாவைக் காட்டுவது ஆள் காட்டி விரல்.
அதை அடுத்து இருப்பன மூன்று விரல்கள். அவை மூன்றும் மும்மலங்களைக் காட்டுகின்றன. ஆள்காட்டி விரலோடு ஒட்டியிருக்கிற நடு விரல் – பாம்பு விரல். உயிரோடு ஒட்டியிருக்கிற ஆணவத்தைக் காட்டும். அடுத்த விரல் – மோதிர விரல் – கன்மத்தைக் காட்டும். கடைசியில் உள்ள சுண்டு விரல் மாயையைக் காட்டும். ஆள் காட்டி விரல் எப்போதும் இந்த மூன்று விரல்களோடு சேர்ந்தே இருக்கும். கையை விரிக்கும் போது கட்டை விரல் தனியாகவும், மற்ற நான்கு விரல்களும் ஒன்றாகவும் இருப்பதைப் பார்க்கி றோம். ஆள் காட்டி விரல் மற்ற மூன்று விரல்களோடு சேர்ந்து ஒட்டி யிருப்பது, ஆன்மாவானது மூன்று மலங்களோடு எப்போதும் சேர்ந்தே இருக்கும் என்பதைக் காட்டுகிறது. சின் முத்திரையில் ஆள் காட்டி விரல் மூன்று விரல்களையும் விட்டு விட்டுக் கட்டை விரலோடு ஒட்டியிருக்கும். பசுவானது மும்மலங்களை விட்டு இறைவனோடு சேர்ந்திருந்தால் மோட்சம் அடையும்; அதைத் தெரிந்து கொள்வதே ஞானம். சின்முத்திரை இதைத்தான் காட்டுகிறது. ஆள் காட்டி விரல் பசுவைக் காட்ட, கட்டை விரல் பதியைக் காட்டும் என்று சொன்னேன். பசுவானது மூன்று மலங்களினின்று நீங்கி இறைவனோடு ஒன்றிவிட்டால் இரண்டறக் கலக்கும் இன் பத்தைப் பெறும். இந்த ஞானத்தைக் காட்டுகின்றது சின் முத்திரை.
“ஆணவத்தோ டத்துவித மானபடி மெய்ஞ்ஞானத்
தாணுவினோ
டத்துவிதம் சாரும்நாள் எந்நாளோ?”
என்று தாயுமானவர் கூறுவர். நடு விரலை ஒட்டியிருந்த சுட்டு விரம் பெரு விரலோடு ஒன்றுவது இந்த அத்துவித நிலையைக் காட்டும். தட்சிணாமூர்த்தி சனகாதி முனிவர்களுக்கு இந்த உண்மையைக் கையிலுள்ள விரல்களால், அமைந்த சின் முத்திரையினால் காட்டினார்.
மிகச் சிறந்த அறிவாளிகளாகிய நான்கு முனிவர்களுக்கும் சின்முத்திரையைக் காட்டியவுடனேயே உண்மை விளங்கிவிட்டது. சிலர் அந்தக் கையைப் பார்த்து, தட்சிணாமூர்த்தி பொடி போடுகிறாரோ என்று பரிகாசமாகக் கேட்பார்கள். அவரவர்களது பக்குவத்திற்கேற்ப இவைகளை உணர்கிற திறம் இருக்கிறது. மிக நுட்பமான விஷயங்களை மிக நுட்பமான அறிவு உடையவர்களால் தான் உணர்ந்து கொள்ள முடியும். நன்றாகக் காய்ந்து உலர்ந்த பட்டாசில் திரி இருக்கிறது. அதில் தீப் பிடித்தவுடன் பட்டாசு வெடித்து விடுகிறது. பட்டாசுக்குள் மண் இருந்தால் வெடிக்குமா? சனகாதி முனிவர்கள் உலர்ந்த பட்டாசைப் போன்ற பக்குவத்தில் இருந்தார்கள். இறைவன் சின்முத்திரையைக் காட்டியவுடன் அவர்களுக்கு எல்லாம் விளங்கி விட்டன.
ஓம் நமசிவாய ஓம்


