“சிறப்பு”
நான் சிறிய பிள்ளையாகப் படித்துக் கொண்டிருந்த போது, சென்னைக்கு அமெரிக்காவிலிருந்து ஒரு பத்திரிகை வந்தது. இரண்டு ரூபாய் விலை போட்டிருந்தான். அதைப் புரட்டிப் பார்த்தேன். “உலகத்திலே இதுவரையிலும் எந்தப் பேராசிரியரும் சொல்லியிராத புதுக்கருத்தைச் சொன்னார். அமெரிக்கப் பேராசிரியர் என்று எழுதியிருந்தான். மொச்சைக் கொட்டை எழுத்து, பலாக் கொட்டை எழுத்திலே! அவன் படம் வேறு போட்டிருந்தான். அதைப் பார்த்தேன். என் வயிறு பற்றி எரிந்தது. என்ன எழுதியிருந்தான்? “அமெரிக்கா தோன்றிய காலம் தொட்டு அமெரிக்க மக்கள் வெற்றியடைந்தவர்களை விடத் தோல்வியடைந்தவர்கள் மிகப் பெரிய அறிவாளிகள் ஆனால், அப்படிப்பட்ட உயர்ந்த அறிவாளிகளை அமெரிக்க மக்கள் வாழ்த்தத் தவறிவிட்டார்கள் என்பதுதான். அவன் படத்தைப் பிடித்துப் போட்டுத் தலைப்பிலே அவன் சொன்னதைக் கொட்டை எழுத்திலே வேறே போட்டிருந்தான். நான் பார்த்தேன். தப்பு யாருடையது? நம்முடையது தானே?
திருக்குறளை மொழி பெயர்த்து, அரை அணா விலையில் அமெரிக்க நாட்டிற்கு அனுப்பியிருந்தால், அவன் இந்தக் கருத்தை இரண்டு ரூபாய் விலை போட்டு இங்கே அனுப்பியிருப்பானா?
பெரியதில் குறிவை
இதைப் பாருங்கள். வள்ளுவர் சொல்லியிருக்கிறார். கல்வியறிவில்லாத குறக்குடி மக்கள் மலை உச்சியில் வாழுகிறார்களே, அந்த மக்களிடத்தில் இந்தக் கருத்தை ஏற்றிச் சொல்கிறார். வேடர் தலைவன் வயது சென்றவன், படுத்து விட்டான். அவனுக்கு இரண்டு மக்கள், “அப்பா! போய் வேட்டை ஆடிவிட்டு வாருங்கள்” என்று அனுப்புகிறான். மூத்த மகன் முயல் வேட்டைக்குப் போக எண்ணி, முயலை எய்ய அம்பும் வில்லும் கையிலெடுத்து, முயல் வாழும் காட்டுக்குச் சென்று, முயலையும் கண்டு, குறிபார்த்து எய்து, முயலையும் வீழ்த்தி, அதன் உடலையும் கைப்பற்றி, நீரிலோ புதரிலோ மறைந்து போகாமல், வழியிலும் பறிகொடுத்து விடாமல், தந்தை முன்னே கொண்டு வந்து வைத்து வீர வணக்கம் வணங்கினான். எவ்வளவு பெரிய வெற்றி? எண்ணத்திலே! துணிவிலே! குறியிலே! ஆற்றலிலே! அத்தனையும் வெற்றி! பார்த்தான் வேடர் தலைவன். எழுந்து வாழ்த்தினானா? இல்லை; திரும்பிப் படுத்துக் கொண்டான். இளைய மகன் யானை வேட்டைக்குப் போக எண்ணி, யானை எய்ய வேலைக் கையில் தாங்கி, யானை வாழும் காட்டுக்குச் சென்று, யானையையுங் கண்டு, குறி பார்த்து வேலை வீசி எறிந்து, குறி தவறி யானையும் பிழைத்தோடிப் போய், வேலையும் இழந்து விட்டு, வெறுங்கையோடு தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு தந்தை முன்னே வந்து வணங்கினான். வேடர் தலைவன் எழுந்து அவனை இறுகக் கட்டி நீதான் வீரன் என்று வாழ்த்தினான். எவ்வளவு உயர்ந்த கருத்து? பாருங்கள்!” என்ன ஐயா! எங்கே இருக்கிறது இந்தக் கதை. திருக்குறளிலே? திருக்குறளிலே கதை ஏது? என்றா கேட்கிறீர்கள்? ஒரு குறளிலே இவ்வளவு நீளமான கதை இருக்கிறது. குறள் வேண்டுமா?
“கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.”
அம்பைப் பற்றிச் சொல்லும் பொழுது முயல் எய்த அம்பு! வேலைப்பற்றி சொல்லும் பொழுது யானை பிழைத்த வேல்! இந்த அம்பாலே முயலைக் கொன்றேன்; இந்த அம்பாலே முயலைக் கொன்றேன் என்று தூக்கித் திரியாதே! அது உனக்குச் சிறப்பைத் தராது. இந்த வேலுக்கு யானை பிழைத்தோடிப் போயிற்று. இந்த வேலுக்கு யானை பிழைத்தோடிப் போயிற்று என்று சொல்லு! அது உனக்குப் பெருமை தரும்! இவை எல்லாம் பதவுரை, பொழிப்புரை, கருத்துரை என்ன தெரியுமா? சிறிய காரியங்களிலே முயன்று வெற்றிபெறுவதை விடப் பெரிய காரியங்களிலே முயன்று தோல்வி அடைவது சிறப்பு! இது வள்ளுவர் கருத்து. அமெரிக்கப் பேராசிரியர் என்ன புதுக் கருத்தைக் கண்டுபிடித்து விட்டார். இரண்டு ரூபாய்க்குப் புதுக் கருத்து! “கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது’ என்ன உயர்வு பாருங்கள்! இத்தகைய உயர்ந்த கருத்துக்களை நீங்கள் குறளிலே பார்க்கலாம்.
பொருளாதாரம்
இப்பொழுது மின்சாரம் கிடைப்பதில்லை. மில்களிலெல்லாம் வாரத்துக்கு மூன்று நாட்கள்தான் வேலை நடக்கிறது. முதலாளிகளுக்கும் வருமான மில்லை. இதற்கு என்ன வழியென்று குறளைப் புரட்டுங்கள். சங்கதி இருக்கிறது இதில் பொருளாதாரம் எப்படி? பெரிய பொருளாதார நிபுணர் வள்ளுவர். எந்தத் துறையிற் பார்த்தாலும் அந்தத் துறையிலே ‘துறைபோக அறிந்தவர். வள்ளுவர்’. உலகிலே வள்ளுவர் ஒரு தனிமனிதர். பொருளாதாரத்திற்கு என்ன வழி? குறளைப் புரட்டுங்கள். சொல்லுகிறார். என்ன சொல்லுகிறார்? வருமானம் குறைந்து போய் விட்டதா? கவலைப் படாதே என்கிறார். அவர் கொடுக்கிற ஊன்றுகோல் என்ன தெரியுமா? வருமானம் குறைந்து போனால் செலவு இனத்தைச் சுருக்கிக் கொள் என்பதுதான்.
“ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை”
வருமானம் குறைந்து போனாலும் கவலைப் படாதே; செலவினங்கள் விரியாமலிருந்தால் போதும். குளத்தின். வரத்துக் கால் அடைபட்டுப் போனாலும் பரவாயில்லை; வடிகாலை மட்டும் திறந்துவிடாதே.
வறுமை
வறுமை வந்துவிட்டால் கலங்காதே! போய்ப் பார் ஒவ்வொருவரையும் வறுமை வந்தால் தான் சுற்றத்தார்களை யெல்லாம் அளந்து பார்க்கிற ஒரு அளவுகோல் கிடைக்கும்!
“கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்”
சூதாடி வள்ளுவர்
முதல் நம்பர் சூதாடி வள்ளுவர். அவர் மாதிரி சூது அறிந்தவர் பிறரில்லை. எந்தத் தொழிலை எடுத்தாலும் அந்தத் தொழிலைத் துறைபோக அறிந்தவர் வள்ளுவர்.
அநேக பிள்ளைகள் அரை வருஷப் பரீட்சை முடித்த வுடனேயே சீட்டுக் கட்டை எடுத்துக் கொள்வார்கள். டப் டப் என்று அடித்து, சீட்டை, படிப்பை, பணத்தை, நாட்டை தொலைத்துப் பாழாக்கி விடுவார்கள். இது அமெரிக்காவுக்கும் நம் நாட்டுக்கும் ஒப்பந்தம் போலும். அது இந்தியாவைக் கைத்தொழிலிலே வளர்க்கிறது. மாதம் இரண்டு கப்பல் சீட்டுக் கட்டுகளை இங்கே இறக்குமதி செய்து (சிரிப்பு).
சூதாடாதே
ஏன் தம்பி சீட்டு? என்றால், இதனால் மூளை விரியுது என்கிறார்கள். மூளை விரியுதாம் அப்படியே (சிரிப்பு) இங்கே சூதாடிகள் பல துறையினர். சிலர் டபுள் 5, சிங்கில் 6 என்று சூட்டிங் அடிப்பார்கள். சிலர் ஆடுவார்கள். சீட்டாடும் சூதாடி தான் மாத்திரமல்ல, இன்னும் மூன்று பேர்களையும் இழுத்து வைத்து அவர் களையும் பாழாக்குகிறான், ‘வாங்க பிரதர் ! உட்காருங்கள்!’ என்று (சிரிப்பு) இவன் ஒருவனாகக் கெட்டுப் போகிறதில்லை பாருங்கள். இங்கே கொடிக்கால் தொழில் கெடுகிறது. கைத்தொழில் கெடுகிறது. ஆலைத் தொழில் கெடுகிறது. வர்த்தகம் கைத்தொழில் எல்லாம் இங்கே பாழாகின்றன. காலையிலிருந்து மாலை வரைக்கும், இன்னும் மூன்று ஆட்களைச் சேர்த்துக் கொண்டு, இங்கே நாடு பாழாகிறது. அமெரிக்காவில் என்ன வளர்கிறது? சீட்டுக் கப்பல்களை இரண்டு, இரண்டு ஆக அனுப்பி விட்டு, அட்டைக்கூழ் காய்ச்சுகிற கம்பெனி, சாயம் காய்ச்சுகிற கம்பெனி, அச்சு அடிக்கிற கம்பெனி, கப்பல் கட்டுகிற கம்பெனி எல்லாம் வளர்கின்றன! அங்கிருந்து யாவும் ஒழுங்காய் வந்து இறங்குகின்றன. நமக்கும் அமெரிக்காவுக்கும் நிரம்ப ஒற்றுமை. அவர்கள் இரண்டு இரண்டு கப்பல் சீட்டுக் கட்டுகளை அனுப்பிக் கொண்டே இருக்க வேண்டியது. இங்கே அவற்றைக் கொண்டு விளையாடி நாட்டுத்தொழில் எல்லாம் பாழாக வேண்டியது. இங்கே நடக்கிறது அப்படி! இதைப்பற்றி வள்ளுவரைப் போய்க் கேட்டால் ‘சூதாடாதே’ என்கிறார். அதற்கு ஒரு குறள் கூறுகிறார்.
“ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாம்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு”
என்று, இதற்குப் பரிமேலழகர் ஓர் உரை எழுதியிருக்கிறார். அவருக்குத் தெரிந்த வரையிலும் எழுதியிருக்கிறார். அவ்வளவு தானே! அந்த உரை தவறு. வள்ளுவர் கருத்து அதுவன்று. ஆனால் இருக்கின்ற உரைகளிலே பரிமேலழகர் உரைதான் பெரும்பாலும் நல்ல உரை. அதை நீங்கள் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.