அதிகாரிக்கு
மக்களிடத்திலே எப்படிப் பழகுகிறது? என்று அதிகாரிகளுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். ஒரு குறளிலே ஆசிரியர்களிடத்திலே சொல்லியிருக்கிறார். மாணாக்கர்களிடத்திலே எப்படிப் பழகுவது? என்று நான் பல கல்லூரிகளுக்குப் போயிருக்கிறேன். மாணவர்களிற் சிலர் கொஞ்சம் ஒழுக்கம் கெட்டு இருப்பார்கள். ஆசிரியரிடத்தில் போய் “என்ன ஐயா, பையன்களை இப்படி விட்டு விட்டீர்களே” என்று கேட்டால், “நான் என்ன பண்ணுகிறது சொல்லிப் பார்க்கலாம், கேட்கலே. அதன் தலைவிதி எந்தக் கதியாகிலும் போகுது. நான் என்ன பண்ணுகிறது?” இப்படிப் பொறுப்பைக் கைவிட்டு விடுகிறார்கள் சில ஆசிரியர்கள். இன்னும் சில மாணவர்கள் பள்ளிக்கூடத்திற்குப் போனால், அப்பா! வாத்தியார் அடித்து விட்டாரென்று அழுது கொண்டு வருகிறார்கள். இந்த ஆசிரியர்களுக்கு இரண்டு தான் தெரிகிறது ஒன்று பொறுப்பு இல்லாமல் விட்டு விடுகிறது! அல்லது தடிப்பிரம்பு வைத்து அடித்துக் கொண்டிருப்பது! எப்படி ஆசிரியர்கள் நடக்க வேண்டும்? அவர் குறளைப் படித்திருந்தால் தெரிந்திருக்கும். குறளை, முதலில் ஆசிரியர்கள் படிக்க வேண்டும். (சிரிப்பு)
எப்படி மாணாக்கர்களிடத்திலே பழகுவதென்று வள்ளுவர் காட்டுகிறார். எவனாவது தவறு செய்தால் சும்மா விட்டு விடாதே கூப்பிடு! ‘கண்டி. காரணம் கேள்!’ ‘ஏன் இப்படிச் செய்தாய்?’ என்று கேள்! அழுத்தமாக எழுந்து அவனைத் தொலைத்து விடுவேனென்று பேசு! ஓங்கு; கையைப் பலமாக ஓங்கு. ஆனால், அடி விழுவது மட்டும் மெதுவாய் இருக்க வேண்டும் என்கிறார்.
“கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர்”
என்ற செய்யுளைப் பாருங்கள் அதிகாரிகளுக்கு மக்களிடத்திலே கண்டிப்பு சொல்லளவிலே அதிகமாய் இருக்க வேண்டும். ஆனால், அடிமட்டும் பலமாய் விழக்கூடாது; மெது வாய் விழவேண்டும் எப்படி?
எச்சரிக்கை
எதைப் பார்த்தாலும் அவரவர்களுக்கு வேண்டியவைகளை ஆங்காங்கே சொல்லியிருக்கிறார். நாமெல்லாம் எத்தனையோ பொருளைப் பார்த்து ஏமாந்து விடுகிறோம். ஒரு பெரிய எச்சரிக்கை கொடுக்கிறார் வள்ளுவர். நமக்கு கொடுக்கும் ஓர் எச்சரிக்கை! “டேய், அழகாயிருக்கிறது பளபளப்பா யிருக்கிறது! நன்றாயிருக்கிறது என்று ஆசைப்பட்டு விடாதே! அபாயம்! கோணலாயிருக்கிறது! கறுப்பாயிருக்கிறது! வளைவாயிருக்கிறது’ என்று வெறுத்து விடாதே. இன்பத்தை இழந்து விடுவாய் என்று ஓர் எச்சரிக்கை கொடுக்கிறார். இப்படிச் சொன்னால் நமக்கு என்ன விளங்குகிறது? இதற்காக, நமக்கு இரண்டு பொருள்களைக் கொண்டுவந்து உவமையாகக் காட்டுகிறார். ஒரு பொருள் என்ன தெரியுமா? அம்பு. இன்னும் ஒரு பொருள் என்ன? யாழ். அம்பைக் கொண்டு வந்து காட்டுகிறார். பார்த்தாயா? 1 3/4 அடி நீளம். தகதகவென்று தங்கம் மாதிரி மின்னுகிறது. ஒழுங்காயிருக்கிறது. அழகாயிருக்கிறது ஆசைப்பட்டு நெஞ்சிலே வைத்துவிடாதே. கொன்று விடும். கோணலாயிருக்கிறது. வளைவாயிருக்கிறது. கறுப்பா யிருக்கிறது என்று வெறுத்துவிடாதே. யாழின் இசையின்பத்தை இழந்து விடுவாய் என்று எச்சரிக்கிறார்.
“கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கன்ன
வினைபடு பாலாற் கொளல்”
எவ்வளவு உயர்ந்த கருத்து. கண்ணுக்கு அழகா யிருக்கிறது என்ற காரணத்திற்காகக் கொள்ளாதே; அது கொலை செய்து விடும்! கண்ணுக்கு வெறுப்பா யிருக்கிறதென்று வெறுத்து விடாதே, இன்பத்தை இழந்துவிடுவாய் என்று காட்ட அவர் கையாண்ட முறையையும், உவமைக்குக் கொண்டு வந்த பொருள்களையும் எண்ணிப் பாருங்கள்’ எவ்வளவு உயர்வானவை!
அணிகலன்
நகை போடுகிறோம். வள்ளுவரிடம் போய் நகை போட்டுக் கொள்ளலாமா? என்று கேளுங்கள். போட்டுக் கொள்ளுங்கள்! போட்டுக் கொள்ளுங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள். ஆனால், புதிதாக ஒரு நகை போட்டுக் கொள்ள வேண்டும். ஆணும் பெண்ணும் எல்லாருமே போடவேண்டும் என்கிறார். எங்கே? கண்ணிலே போட வேண்டும்! ஐயோ; உறுத்துமே! உறுத்தாது! எதனாலே செய்து போடுகிறது முத்தாலே? முத்து வாங்கப் பணமில்லையா? இதை வாங்கப் பணம் தேவையில்லை. எல்லோரும் வாங்கிப் போடலாம் என்றார். “எப்படி” என்றால், “துன்பப்படுகிற மக்களைப் பார்த்துக் கண்ணீரை முத்து முத்தாகச் சொட்டு! அதுதான் கண்ணுக்கு நகை என்கிறார். அந்தச் சொற்களைப் பாருங்கள். கண்ணுக்கு அணிகலம்! கண்ணுக்கு நகை எது? கண்ணோட்டம் கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம். காலையிலே, மாலை நேரத்திலே, நள்ளிருளிலே மழையிலே 90 வயதுக் கிழவி, எந்தக் குலமோ? யாரோ? முழு ஆடையின்றி, குளிரில் நடுங்கி வெப்பு நோயால் வருந்துகிறாள் என்று வையுங்கள். அதைப் பார்த்து ஒருவன் மோட்டாரிலே போய்க் கொண்டிருந்தால் என்ன பயன்?
அவன் அழகாய்த்தானிருக்கின்றான்; மன்மதன் மாதிரி இருக்கிறான். அவன் முகத்தில் அழகு ஒளி வீசுமா? ஆனால், இந்தக் கொடுமையைப் பார்த்து ஒருவன் பல் நீண்டவன் கன்னங்கரேல் என்று இருக்கிறவன். இன்னொரு கந்தலை உடுத்திக் கொண்டு, “ஐயோ! யார் வீட்டுக் கிழவியோ? மழை தூறுதே வெப்பு நோய் வருத்துகிறதே! ஆடையில்லையே” என்று தன் துண்டை அவள் மேல் போர்த்தி கையில் தூக்கி, ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகலாமென்று பார்த்துக் கண்ணீர் விட்டான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவன் முகம் எப்படி இருக்கும். மைசூர் மகாராசாவைவிட அழகாகத் தோன்றும் (சிரிப்பு).
அவ்வளவு அழகு தருமே அது! கற்பனையா இது? உண்மை! மன்னாதி மன்னனெல்லாம் இவன் அழகுக்கு ‘முன்னாலே ஒளிகுன்றி நிற்பானே. அவனது உள்ளம் அந்த ஒளியை வீசுகிறது! அதையெண்ணி அவர் சொன்னார்.
“கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்”
இன்றேல் கண்ணா அது? அவர் கண்ட இலக்கணம் என்ன? கண் என்றால் அறியும்; புண் என்றால் அறியாது என்பதே கண்ணுக்கு அணிகலம் கண்ணோட்டம். அஃதின்றேல் புண் என்று உணரப்படும். பேனாக் கத்தியால் கன்னத்திலே கிழித்து விட்டுக் காட்டினால் பார்க்குமா? கண். மாதிரித்தானே இருக்கிறது! காட்டுங்கள் ஒரு கடிதத்தை. அது பார்க்குமா? படிக்குமா? முகத்திலே கிழித்து விட்டிருக்கிறது அவ்வளவுதான்! துன்பப்படுகிற மக்களைப் பார்க்காமல் விறைத்துக் கொண்டு போகிறது! அது நகை போடாத கண் எப்படி வள்ளுவர் போட்ட நகை. பார்த்துக் கொள்ளுங்கள்! இந்த நகையைப் போடுங்கள். நீங்கள் எந்த நகையில்லா விட்டாலும் இந்த நகை வேண்டும் உங்களுக்கு!
வள்ளுவர் உள்ளம்
வள்ளுவரை நினைக்கும் போதெல்லாம் என் உள்ளம் பெரிய உள்ளமாக விரிகிறது. காரணம் என்ன? மக்கள் சமுதாயத்தைத் தூக்கி இரண்டு கைகளாலும் அள்ளி, அள்ளி விட்டவர் வள்ளுவர். “உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்”. எண்ணு, நல்லதை எண்ணு! பெரியதை எண்ணு. ஏன்?
“அப்படியே நீ ஆவாய்”. இப்படித் தூக்கி விட்டவர் வள்ளுவர். இரண்டு கைகளாலும் தூக்கி இமயத்திற்கு மேலே அள்ளி விடுகிறார் அவர். எண்ணு! எண்ணு! நல்லதை எண்ணு! பெரியதை எண்ணு! உயர்வை எண்ணு! சிறப்பை எண்ணு! அழுத்தமாக எண்ணு! ஆழமாக எண்ணு! இப்படிச் சொல்லிவிட்டால் போதாதாம். இந்தக் கன்னத்திலே வேறு. திருப்பி அடிக்கிறார்.
“உள்ளற்க உள்ளம் சிறுகுவ“
என்று குறுகின புத்தியை ஒருநாளும் கொள்ளாதே என்று, இப்படி ஓர் அறை.
“உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து”
இப்படி ஒன்று; என்ன? அவருடைய உள்ளம் பாருங்கள்! இப்படிப் படைத்தலைவன் மக்களைத் தூக்கி விட்டிருக்கிறான். மன்னன் குடிகளைத் தூக்கி விட்டிருக்கிறான். அரசியல் தலைவர்கள் தங்கள் கட்சிக்காரர்களைத் தூக்கி விட்டிருக்கிறார்கள். ஆனால், மொழிப்புலவர்களில் வள்ளுவரைத் தவிர உலகத்தில் எவரும் இப்படி மக்கள் சமுதாயத்தைத் தூக்கி உயர்த்திவிடவில்லை. “உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்” என்று. அவருடைய உள்ளப் பண்பாட்டைப் பாருங்கள் ஏனென்றால், அப்படியே ஆவார்களாம். “எண்ணிய எண்ணியாங்கு எய்துப. எப்போது? ‘எண்ணியர் திண்ணிய ராகப் பெறின்” பள்ளிக் கூடத்துப் பிள்ளைகள் இங்கே இருப்பீர்கள். நீங்கள் தேர்வில் பாசாகி விடுவோம் என்று மட்டும் நினைக்காதீர்கள்; 90 மார்க்காவது வாங்குவேன் என்று நினைத்துக் கொள்ளுங்கள்; 36 மார்க்காவது வாங்கி விடுவீர்கள் என்கிறார். நீங்கள் இப்போது நடக்க வேண்டும். இரயிலுக்குப் போக வேண்டும். ஆனால், போகும் போது போத்தனூருக்குப் போகவேண்டும் என்று நடந்தால்- ரயில்வே ஸ்டேஷன் பக்கத்திலே வந்துவிடும் என்கிறார் வள்ளுவர். எண்ணத்தை எட்டிப் போடு; செயல் பக்கத்திலே இருக்கும் என்கிறார். பகையைப் பெரிதாக எண்ணு, அது சிறிதாக வரும்; வென்றிடுவாய் என்கிறார். ஊரான் வீட்டு மாமரமாயிருந்தாலும், “டேய்! இந்தக் கல்லால் ஒரு மாங்காய் உதிர்க்கிறேன் பார்! என்று அடிக்காதே இந்தக் கல்லால் பத்து மாங்காய் விழும் என்று அடி; ஒன்றாகிலும் விழும்” என்கிறார். பெரியதை எண்ணு வெற்றி சிறியதாகவாவது கிடைத்துவிடும் என்கிறார்; எப்படி அவரது உள்ளம்!