ஒன்றில் ஒன்பது
“ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இழிவு” வள்ளுவர் ஒன்று சொல்வார். சொல்லாதது ஒன்பது சுற்றிக் கட்டித் தொங்கும். இரப்பது நாவிற்கு இழிவு என்றால், அப்புறம் என்னென்ன தொக்கி நிற்கிறது? இரக்க எண்ணுவது மனத்திற்கு இழிவு! கேட்பது வாய்க்கு இழிவு! நீட்டிப் பெறுவது கைக்கு இழிவு! பெற்று உண்பது வாய்க்கு இழிவு! எல்லாம் தொங்கும் அதில்! ஒன்றைச் சொல்லி ஒன்பதைச் சொல்லாமற் சொன்னவர் திருவள்ளுவர், இது எவ்வளவு பெரிய சிறப்பு. எண்ணிப் பாருங்கள்.
ஒன்றே முக்கால் அடியில் உயர்ந்த ஒழுக்கம் குறள்.
ஒழுக்கத்தைப் பற்றி அவர், சொல்லி இருப்பது ஒரு
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்“
ஒரே குறள். ஒன்றே முக்கால் அடி. ஏழு சீர். இதிலே எவ்வளவு உயர்ந்த கருத்துக்கள்! இன்னும் ஒன்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
கடுகில் ஏழ்கடல்
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்” என்று ஒரு புலவர் பாடினார். முன்பு பாடியவர், “கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்” என்று பாடினார். என்ன இது? புளுகாகத் தெரிகிறதே! கடுகைத் துளைத்துக் கடலைப் புகுத்துவதாவது! அப்படித்தான் நமக்குத் தோன்றுகிறது. உண்மையை ஆராய்ந்தால் புலப்பட்டுவிடும். பொருள்களில் எல்லாம் சிறிது கடுகு பாவிலெல்லாம் சிறியது குறள். 32 அடி, 16 அடி; 8 அடி, 4 அடிப்பாக்கள் பல. குறள் ஒன்றே முக்கால் அடி; 2 அடிகூட இல்லை! மேலே நான்கு சீர்; கீழே மூன்று சீர். இதன் உள்ளே இவ்வளவு கருத்துக்களைப் புகுத்தி னால், அது ஒரு சிறு பொருளிலே நிறைந்த செய்தியைப் புகுத்துவதாகக் கருத்து. ஏழு கடல் என்பது எது? ஏழுசீர்தான். தனித்தனியாக உள்ள ஏழு சீர்களிலே இவ்வளவு பெரிய செய்திகளைப் புகுத்தியிருக்கிறாரே அதைத் தான் அவர் அப்படிக் குறிப்பிட்டார். ஏழு, கடலைப் புகுத்தியதென்று இப்படி ஒன்றே முக்கால் அடியிலே இவ்வளவு கருத்துக்கள்!
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்”
ஒழுக்கத்தைக் காப்பாற்று
இதற்கென்ன பொருள்? ஒழுக்கமாய் வாழ வேண்டும் அவ்வளவுதான் தெரியும். சொல்லெல்லாம் எழுத்தெல்லாம் துருவிப் பார்த்தால் அவர் எண்ணிய தெல்லாம் நமக்குப் படம் பிடித்துக் காட்டுவது போன்றிருக்கிறது. “காப்பாற்ற வேண்டிய பொருள்களிலே ஒழுக்கம் ஒன்று” என்று சொல்கிறார். “எப்படிக் காப்பாற்றுவது? ஏன் காப்பாற்ற வேண்டும்” என்று ஒருவன் கேட்கிறான்? பசு மாட்டுக்குப் புல்லைப் போட்டுக் காப்பாற்று. ஏன் காப்பாற்ற வேண்டும்? பால் தரும்; காப்பாற்று. அப்படியா சரி; மரம் வைத்துக் காப்பாற்று. ஏன் ஐயா காப்பாற்ற வேண்டும்? நிழல் தரும். அப்படியா? சரி. ஏதாகிலும் பலன் இருக்க வேண்டும். அவனுக்குப் பலனில்லாமல் அவன் காப்பாற்ற மாட்டான்.
பலன் உண்டா?
ஒழுக்கத்தைக் காப்பாற்றச் சொல்லுகிறீர்களே, அது ஏதாவது தருமா? ஊம், தரும் என்கிறார். என்ன? விழுப்பம்! விழுப்பமென்றால் சிறப்பு. ‘ஒழுக்கம் விழுப்பம் தரலான்…” சரிசரி. இப்பொழுது நமக்கு என்ன தெரிகிறது. சிறப்புத் தருவது ஒழுக்கம் ஒன்றுதான் என்று தெரிகிறது. இதிலிருந்து பாருங்கள். ஆடை அணிகள் சிறப்புத் தாரா; பட்டம் பதவிகள் சிறப்புத் தாரா; மோதிரங்கள் சிறப்புத் தாரா; மோட்டார் வைரங்களெல்லாம் வாகனங்கள், மாடி வீடுகள். பட்டு ஆடைகளெல்லாம் சிறப்புத் தாரா. மந்திரி பதவி முதலிய எந்தப் பதவியாயிருந்தாலும் சிறப்புத் தாரா என்கிறார் அவர்; ஏதாகிலும் சிறப்புத் தரவேண்டுமானால் அது ஒழுக்கம்’ என்று வரம்பு கட்டிச் சொல்லுகிறார். ‘ஒழுக்கம் விழுப்பம் தரலான்..” வேறு ஒன்றாலும் அதைப் பெற முடியாது.
கிடைத்தற்கரிய சிறப்பை நீ பெறவேண்டுமானால் ஒழுக்கத்தைக் காப்பாற்று. அதிலேயும் பலன் இருக்கிறதோ? அப்படியானால் காப்பாற்றுகிறேன். சரி! என்கிறான் காப்பாற்ற வேண்டிய பொருளில் ஒழுக்கம் ஒன்று. அது சிறப்புத் தருவதினாலே காப்பாற்ற வேண்டும். மிகவும் சரி. எம்மாதிரிக் காப்பாற்ற வேண்டும்? அடுத்த கேள்வி பொருளைக் காப்பாற்றுகிற மாதிரிக் காப்பாற்றட்டுமா? என்றான். போடா போ. பொருள் தோற்றுப் போனால் இன்னும் கொஞ்சம் சம்பாதித்துக் கொள்ளலாமே? சரி, பிள்ளையைக் காப்பாற்றுகிற மாதிரியா? என்றான். ஒரு பிள்ளை இறந்து போனால் இன்னொரு பிள்ளை பெற்றுக் கொள்ளலாமே? மனைவியைக் காப்பாற்றுகிற மாதிரியா என்றான். ஒரு தாரம் இறந்து போனால் மறுதாரம் கட்டிக் கொள்ளலாமே? வீட்டைக் காப்பாற்றுகிற மாதிரியா? இடிந்து போனால் இன்னொரு வீடு கட்டிக் கொள்ளலாமே? பின்பு எதைக் காப்பாற்றுகிற மாதிரியாக? என்றான்.அவனுக்கு ஓர் உவமை சொல்ல வேண்டுமே!
திரும்ப வராது
அவனை உட்காரவைத்து உலகமெல்லாம் போய்த் தேடுகிறார். தேடினால் இரண்டே பொருள். போனால் திரும்பி வராதவை கிடைத்தன. ஒன்று ஒழுக்கம்; மானம் இழந்தால் திரும்பி வராது. மற்றொன்று உயிர் போனால் திரும்பி வராதென்று கண்டுபிடித்தார். அவர் ஆக போனால் திரும்பி வராத ஒழுக்கத்திற்காக உவமை கூற, போனால் திரும்பி வராத உயிரை வைத்து, “உயிரைக் காப்பாற்றுகிற மாதிரி ஒழுக்கத்தைக் காப்பாற்று” என்று கூறினார். ‘சரி’ எனக் கேட்டுக் கொண்டு திரும்பிப் போனான். இவருக்கு ஐயப்பாடு வந்து விட்டது. “டேய் டேய் இங்க வா!” என்று கூப்பிட்டார் வந்தான். அவருக்கு வந்த சந்தேகம் என்ன; விஞ்ஞானம் வளர்கிறது. இன்றைக்கில்லா விட்டாலும் என்றாவது விஞ்ஞானியாவது செத்துப் போனவனைப் பிழைக்கவைக்கக் கண்டுபிடித்து விட்டால்! சந்தேகம் வந்துவிட்டது.
இப்பவே எழுந்திருக்கிறது; உட்காருது, 3 நிமிடம் பேசுது, 7 நிமிடம் பேசுது என்கிறானே! இனிமேல் எழுந்திருந்து நடக்க ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்து விட்டால்? ஆகையினாலே அவர் என்ன பண்ணினார்? இறந்து போன உயிரை மீண்டும் திரும்பக் கொண்டுவர எந்த விஞ்ஞானியாகிலும் கண்டுபிடித்து விடுவான். ஆனால், இழந்த மானத்தைத் திரும்பக் கொண்டுவர எந்த விஞ்ஞானியாலும் முடியாது என்று வள்ளுவர் கண்டுபிடித்தார்.
கண்டுபிடித்தார்
கண்டுபிடித்து என்ன சொன்னார்? உயிரைக் காப்பாற்றுவது போல் ஒழுக்கத்தைக் காப்பாற்று என்று சொன்னவர், அதை விட்டுவிட்டு உயிரைக் காப்பாற்றுவதை விட அதிகமாக ஒழுக்கத்தைக் காப்பாற்று என்று “ம்” மன்னா ஒன்று போட்டுச் சொல்லி விட்டார். “உயிரினும் ஓம்பப்படும்” என்று, இப்பொழுது தெரிகிறதா? உங்களுக்குக் குறள்! “ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” எவ்வளவு சிறந்த கருத்துக்களை எவ்வளவு உயர்ந்த சொற்களாலே, எவ்வளவு அழகாக அமைத்திருக்கிறார், பாருங்கள்!
மக்களுக்கு
இன்னும் உங்களுக்கு என்னென்ன வேண்டுமோ குறளைப் பார்த்தால் கிடைக்கும். அதில் அதிகாரிகளிடம் எப்படிப் பழகுவது? இப்பொழுது எத்தனை அதிகாரிகளிடம் பழகுகிற வேலை வந்திருக்கிறது. யாரையாகிலும் போய்க் கேளுங்கள். சொல்கிறார்களா? என்று. எந்த நாட்டு எந்த மொழிப் பேராசிரியரிடத்திலாவது போய்க் கேளுங்கள், “அதிகாரிகளிடம் எப்படிப் பழக வேண்டும்” என்று எங்கும் வரம்பு கட்டிச் சொல்லப் பட்டிருக்கிறதா? என்று பாருங்கள். இல்லை வள்ளுவரின் குறளைப் புரட்டுங்கள் காட்டுகிறார். அவர் கலெக்டர்களெல்லாம் மக்களிடத்தில் வருவார்கள். பொதுத் தொண்டு என்று பேசுவார்கள். கூட்டத்திலே இருக்கிறவன் அடுத்தநாள் போய்த் ‘தோளில் கையைப் போடுவான்.’ ‘எல்லோரும் ஒன்று என்கிறீர்களே’ என்று. மந்திரி வருவான்; அங்கே பேசுவார், சுதந்திரம் வந்துவிட்டது. ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’ என்று கூட்டத்தை விட்டுப் போகும் போது, நீயும் நானும் மன்னர்தாமே என்று தோள்களில் கையைப் போட ஆரம்பிக்கிறதா? இப்படி யெல்லாம் இல்லாவிடில், எல்லாரும் அடிமை என்று நினைக்கிறதா? எப்படி எண்ணுவது? எப்படிப் பழகுவது? என்று திருக்குறள் ஒன்றுதான் வழிகாட்டுகிறது.
அவர் என்ன சொன்னார் தெரியுமா? உங்களுடைய ஆசிரியர், அல்லது முதலாளி, அல்லது குடும்பப் பெரியவர்கள் அல்லது அரசாங்க அமைச்சர்கள், அதிகாரிகள் இவர்களிடம் எப்படிப் பழகுவது என்பதற்கு ஒரு சட்டம்! இதைச் சொல்லுவதற்குச் சும்மா சொன்னால் தெரியாதென்று ஓர் உவமையைத் தேடினார். எங்கேயோ ஒரு கிழவன் குளிர் காய்ந்து கொண்டிருந்தான். அக்காட்சியைக் கொண்டு வந்து நம் முன்னே வைக்கிறார். எப்படி? பார்! ஆமாம் குளிர் காய்கிறான். அந்த மாதிரிப் பழகச் சொன்னால் தெரியவில்லையே! ஏய், நெருங்கு! நெருங்கு! இன்னும் கொஞ்சம் நெருங்கியபின் குளிர் காய்கிறேன், என்கிறான். இன்னும் நெருங்கிப் பார்க்கிறான்; டேய் அதிகம் நெருங்காதே. எட்டு! என்கிறார். நெருங்க வேண்டாமா, பிறகு எட்டி விலகிப் போகிறான். டேய் போகாதே. உனக்கு நெருப்பின் பயன் வேண்டுமானால் கொஞ்சம் நெருங்கு; ஆனால், அதிகமாக நெருங்கி விடாதே!
” அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்”
என்று உவமை காட்டிக் கூறுகிறார். அதிகமாக எட்டிப் போய் விடாதே அதிகமாக நெருங்கிவிடாதே. நிரம்ப எட்டிப் போய் விட்டால் பலனை இழந்துவிடுவாய்; நிரம்ப நெருங்கி விட்டால் கட்டாயம் சுட்டுவிடும். எச்சரிக்கையாயிரு. இது எவ்வளவு பெரிய கருத்து; நீங்கள் எந்தப் பேராசிரியரிடம் இந்தக் கருத்தைக் கற்றுக் கொள்ளப் போகிறீர்கள்? இத்தகைய சிறந்த கருத்துக்களை நீங்கள் குறளிலே பார்க்கலாம்.