ஊன்றுகோல்
உங்களுடைய வாழ்க்கை செம்மைப்பட வேண்டு மானால், வாழ்க்கையிலே வழுக்கலில்லாமல் இருக்க வேண்டுமானால், சேற்று நிலத்திலேயுங் கூட நீங்கள் நடக்க வேண்டுமானால், திருக்குறளை ஒரு ஊன்று கோலாக வைத்து நடந்தால், கட்டாயம் உங்கள் வாழ்வில் ஒளிவீசும்! வாழ்க்கை வெற்றி பெறும்! அது உண்மை. அதற்காக நீங்கள் படிக்க வேண்டும். அதிலே என்ன இல்லை! எல்லாம் இருக்கிறது. எதைத் தேடினாலும் திருக்குறளில் அகப்படும். ஒரு குறளில் பல கருத்துக்கள். வள்ளுவர் ஒன்றைச் சொல்லுவார். சொல்லாத ஒன்பது அதில் கட்டித் தொங்கும்.
எது இழிவு
எது இழிவு என்று வள்ளுவர் சொல்லுவதற்கு முன்பு அவன் சொன்னதைச் ஒரு புலவன் சொன்னான் அவன் சொல்லிச் சொன்னால் தான் ‘உங்களுக்குச் சுவைக்கும். எது இழிவு? எது இழிவு? என்று எதை எதையோ இழிவு என எவனெவனோ சொன்னான். பிரித்தானியன் (British) சொன்னான். ‘எங்களுடைய கொடியிலே இருள் பட்டால் இழிவு’ என்று. செருமானியன் (German) சொன்னான், ‘காலனியில்லாமல் வாழுகிறது செர்மனிக்கு இழிவு என்று.’ உருசியக்காரன் (Russian) சொன்னான். ‘உழைக்கிறவன் உழைக்காதவனுக்குக் கீழேயிருந்து வரி செலுத்திக் கொண்டு வாழ்வது மிகவும் இழிவு’ என்று. ஜப்பான்காரன் (Japanese) கூறினான்; உலகத்திலே வணிகத்திலும் கைத் தொழிலிலும் சிறந்திருப்பது ஜப்பான். அது செய்த பொருளை உலகத்திலே விற்பதற்குச் சந்தையில்லால் இருக்கிறதே? அது உலகத்தாருக்கு இழிவு’ என்று சொன்னான். தனக்கு இழிவு என்று சொல்லவில்லை அவன்.
“உலகத்திலே வணிகத்திலும் கைத்தொழிலிலும் சிறந்த நாடு என்று ஒப்புக்கொள்ளப் பட்ட ஜப்பான், அது செய்த பொருளை உலகத்திலே விற்கக் கூடாதென்று சொன்னாலே, அது உலகத்தானுக்கு இழிவு. எங்களுக்கு என்ன?” என்று கூறிப்போனான் அவன். சீனாக்காரன் (Chinese) நண்டு, நத்தை, பாம்பு முதலியன தின்று, உலகத்திலே இழிவு என்று ஒன்றுமே இல்லை எனக் கூறி, எல்லாம் தின்னத் தொடங்கினான்.
பழந்தமிழன்
நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். கொல்லை அள்ளுவதும் சாக்கடை தள்ளுவதும்தான் இழிவு என்று. பழம் தமிழ்ப் புலவனை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே ‘எது இழிவு?’ என்று கேட்டால், ஒன்றுதான் இழிவு என்றான். உழைக்காமல், வாழாமல், பொருள் தேடாமல், தன்னைப் போன்ற ஒரு மனிதனிடம் சென்று கையை நீட்டி, “ஐயா! ஒரு காசு கொடு” என்று கேட்பது இருக்கிறதே அதுதான் இழிவு என்றான். இவனும் மனிதன், அவனும் மனிதன், அவன் உழைப்பான், சேமிப்பான், தானும் உண்பான், மீத்தும் வைத்திருப்பான்; நமக்குக் கூட அளிப்பதற்கு வைத்திருப்பான் என் எண்ணிக் கை நீட்டுகிறானே. அப்போதும் கூட இவன் அவனைப் போல உழைக்காமல், முயற்சியை இழந்து விட்டுப் பிச்சைகேட்டு வாழுகிறானே, அதுதான் இழிவு! என்றான். இதைவிட இழிவு இல்லையா? என்றான் ஒருவன். இல்லை இல்லை என்றான். நன்றாய் எண்ணிப் பார் என்றான். எண்ணிப் பார்த்து இன்னும் ஒன்று இருக்கிறது என்றான்; அது என்ன? என்று கேட்டான். இப்படி மானங்கெட்டுப் பல்லைக் காட்டி, கையை நீட்டி “ஐயா காசு” என்று கூறுகிறவனிடம் போய் “இல்லை” என்கிறானே, அதுதான் அதைவிட இழிவு (சிரிப்பு).
இரும்புக் கடலை
புறநானூற்றிலே ஒரு பாடல் இது. “ஈ என இரத்தல் இழிந்தன்று; அதனெதிர் ஈயேன் என்றால் அதனினும் இழிந்தன்றே.” கன்னத்திலே அறைந்தது போலக் கூறியிருக்கிறார். இந்த நடை என்ன? உங்களுக்கு இரும்புக்கடலை நடையாயிருக்கிறதா! அந்தப் பாட்டினுடைய கருத்து. “ஈ என இரத்தல் இழிந்தது; ஈயேன் என்றல் அதனினும் இழிந்தது” இது அந்தப் புறநானூற்றுப் பாடலின் ஆசிரியருடைய கருத்து.
வள்ளுவர் அறைந்தார்
வள்ளுவர் கருத்து அதற்கு மேலே சென்று விட்டது. இவர் என்ன சொன்னார் தெரியுமா? தனக்கு என்று இதைச் சொல்லவில்லை.
பாதையிலே ஒருவன் போகிறான். பசுமாடு ஒன்று சாகப் போகிறது. நாக்கை இழுத்துக் கொண்டு தண்ணீர் வறட்சியாலே சாகக் கிடக்கிறது. இவன் சென்று வேடிக்கை பார்க்கிறான். ஒரு பெரியவர் போய், “அட பாவிப் பயலே; வேடிக்கைப் பார்க்கிறாயே! கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து பசுமாட்டுக்கு ஊற்றடா” என்கிறார். இவன் போய், “அம்மா” என்று ஒரு வீட்டின் கதவைத் தட்டி, “பசுமாடு சாகப் போகிறது, கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்” என்கிறான். அங்கே போய்க் கன்னத்தில் அறைகிறார் வள்ளுவர்.
“ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு இரவின் இளிவந்தது இல்”
என்று அறைகிறார். “உனக்கு என்றில்லை, சாகப் போகிற பசுமாட்டுக்குக் கூட தண்ணீர் வேண்டுமென்று பிறர் கதவைத் தட்டிப் பிச்சை கேட்காதே! அதைவிட நாவிற்கு வேறு என்ன இழிவு இருக்கிறது” என்கிறார். அந்த நிலையிலும் கூட, “எழு! வாளியை எடு! கயிற்றை எடு! கிணறு எங்கே இருக்கிறது? குழாய் எங்கேயிருக்கிறது? தொட்டி எங்கே இருக்கிறது? போ! எடுத்துக் கொண்டு வந்து ஊற்று! பிச்சை எடுத்து அறம் செய்யாதே! முயற்சி செய்” என்று கூறுகிறார்.