தமிழர் பண்பு

அடுத்தது தமிழர் பண்பு. தமிழ்நாட்டுக்கு என்றே ஒரு சிறந்த பண்பு அந்தக் காலம் தொட்டு இந்தக் காலம் வரையிலும் இருந்து வருகிறது.

மண் தோன்றாக் காலம்

அந்தக் காலமென்றால் கல்தோன்றி மண் தோன்றாக் காலம். சேர, சோழ, பாண்டியர்கள் எந்தக் காலத்தில் தோன்றினார்களென்று ஆராயலாம். சூரியன் தோன்றிய காலத்திலிருந்து நான் தோன்றினேன் என்று சூரியவட்டக் குடையைப் பிடித்து சோழனும், சந்திரன் தோன்றிய காலத்திலிருந்து நான் தோன்றினேன் என்று சந்திர வட்டக் குடையைப் பிடித்துப் பாண்டியனும் போட்டிப் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்களின் மரபு சூரிய சந்திரர்கள் தோன்றிய காலத்திலேயிருந்து தோன்றிவிட்டனவா? என்ற ஐயம் வந்த பிறகு, இந்தப் புலவர்கள் ‘அல்ல’ என்று கூறி, இவர்கள் தோன்றிய காலத்தைக் கணக்கிட்டு வைத்தார்கள் எப்போது உலகம் தோன்றி, மலைகள் தோன்றி, பாறை கல்லாயிருந்து, மழை பெய்து பெய்து, கற்கள் கரைந்து மணல் ஆன காலம்; கல் தோன்றியதற்குப் பின்னும் மண் தோன்றுவதற்கு முன்னும் மணல் ஆன காலம்; கல் தோன்றியதற்குப் பின்னும் மண் தோன்றுவதற்கு முன்னும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தார்களென்று கண்டுபிடித்து விட்டார்கள்.

மூத்த குடியினர்

கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடியினர் என்பது சேர சோழ பாண்டியர்களுக்கு இலக்கியச் சான்றாகும். இலக்கியம் நமக்குத் தருகின்ற உண்மை அது.

அந்தக் காலத்திலிருந்து தமிழர்களுக்கு உள்ள பண்பு என்ன என்றால், அதை எண்ணும்போதே உங்கள் உள்ளம் விரிந்து பெருகத் தொடங்கிவிடும்.

உலகமும் தமிழரும்

என்ன? தமிழ்நாடு மிகவும் குறுகிய நாடு! வரவர தெற்கே குறைந்திருக்கிறது. வட நாடு அகன்ற நாடு. இந்தக் குறுகிய நாட்டில் அவன் இருக்கிறான். இருந்தும் அவன் உலகத்தை எண்ணித்தான் நூல் செய்திருக்கிறான். எந்த நூலை எடுத்தாலும் உலகம், சைவ சமய நூல் எனப்படும் பெரிய புராணத்தைச் சேக்கிழார் சொல்லத் தொடங்கினார். முதல் பாட்டிலே, முதலடியிலே முதற் சொல்லாக உலகத்தை வைத்தார். “உலகு எலாம் உணர்ந்து ஓதற்கரியவன்” என்று. இது ஒரு பண்பு அடுத்து வைணவ நூல்களை எடுத்துப் பாருங்கள் கம்பராமாயணம் பாடியவர் கம்பர். பன்னீராயிரம் பாட்டுகள், முதல் பாட்டிலே, முதல் அடியிலே முதற்சொல்லாக, “உலகம் யாவையும் தாமுள வாக்கலும்..” என்பதில் உலகத்தை முன் வைத்துச் சொல்லப்பட்டுள்ளது. இந்த இரண்டும் புராண நூல்கள் இலக்கண நூல்களைப் பாருங்கள். நம்பியகப் பொருள் முதல் பாட்டிலே, முதல் அடியிலே “மலர் உலகத்து” என்று எடுத்த உடனே முதலடியிலே உலகம் இது இலக்கணம். இலக்கியத்தை எடுங்கள். சங்க நூல்களிலே பத்துப்பாட்டு, திருமுருகாற்றுப்படை, முதற்பாட்டிலே, முதலடியிலே முதற்பாட்டு முதற் சொல், “உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு என்று உலகத்தை முன்னே வைத்துக் கூறப்பட்டுள்ளது.

உலகத்திற்கே இலக்கியம்

இனி, ஐம்பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம் முதற் பாட்டிலே, முதல் அடியிலே, ‘அங்கண் உலகளித்தலான் திங்களைப் போற்றதும்” என்று உலகத்தை முன்னே வைத்துக் கூறினார் இளங்கோவடிகள். வள்ளுவரோடு பிறந்தவர் என்று கருதப்படுகிற ஒளவை, “ஆண்டாண்டுதோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ?” தமிழ் நாட்டீர் என்று இல்லை, இந்திய நாட்டீர் என்று இல்லை. “மாநிலத்தீர்” என்றே கூறினார். கபிலர் தாம் செய்த அகவலுக்கு முதற் பாட்டிலே முதல் அடியிலே “உலகத்தீரே உலகத்தீரே! மனிதர்க்கு வயது நூறல்லது இல்லை”. எடுத்தவுடனே உலகம்; அதுவும் இருமுறை உலகம் இந்த முறையிலே வள்ளுவரும் அந்தப் பண்பை விடாமல் திருக்குறளிலே, முதற்பாடலிலே முதல் அதிகாரத்திலே முதற் குறளிலே, “ஆதிபகவன் முதற்றே” என்று உலகத்தை முன் வைத்துக் குறள் செய்யத் தொடங்கியிருக்கிறார். அந்த வழியிலே வந்ததினாலேதான், தன்னையும் அதிலே ஒரு கூட்டாளியாக்கிக் கவிஞன் சுப்பிரமணிய பாரதி, “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று உலகத்தை வைத்து ஒன்றை அளித்தருளினார் போலும். இது தமிழ்ப்பண்பு; தமிழருடைய பண்பு ஆகும். தமிழ்ப்புலவர்கள் குறுகிய நாட்டிலிருந்தாலும், அவர்கள் செய்த இலக்கிய, இலக்கண நூல்களெல்லாம் உலக மக்களை நோக்கிச் செய்தவை என்று அறிகிறோம். இதுவும் ஒரு சிறப்பு திருக்குறளுக்கு. பொதுநோக்காகத் திருக்குறளைப் பற்றி அறிய இந்த அளவு போதும் என்று நினைக்கிறேன்.

குறளின் எளிமை

இனி அடுத்தது, குறளின் உள்ளே சென்று சில கருத்துக்களை எடுத்துச் சொல்லுவதுதான். திருக்குறளின் உள்ளே செல்வது எல்லோருக்கும் மிக எளிது. அது ஒரு இரும்புக் கடலை நடை உடையதன்று. அது யாருக்கும். எளிதில் விளங்கும். என்னுடைய சிறுபிள்ளை ஐந்து வயதுப் பெண் 30 குறட்பாக் களை மனப்பாடம் பண்ணியிருக்கிறது. இந்தப் பொங்கல் விழாவிலே நகரம் முழுவதும் சுற்றிப்பேசி பத்துப் பன்னிரண்டு திருக்குறளைப் பரிசு வாங்கி வந்து வீட்டிலே குவித்திருக்கிறது. ஐந்து வயதுப் பெண் இன்னும் முதல் வகுப்பு முடியவில்லை. அரையாண்டுத் தேர்வுதான் எழுதியிருக்கிறது. 30 குறள் பாடம் பண்ணியிருக்கிறது. தெளிவாகப் பேசுகிறது. பச்சைக் குழந்தைகளெல்லாம் அதைப் பாடம் பண்ணும் போது, நாமெல்லாம் 40 வயது 50 வயது ஆளெல்லாம் என்று நினைத்துக் அதைக் கொஞ்சம் கடினம் கொண்டிருந்தால், நம்முடைய கருத்துத் தவறானது என்றே கொள்ள வேண்டும்.

நீங்கள் புலவனாகலாம்

நீங்கள் எளிதிற் பார்க்கலாம்; படிக்கலாம்; மனப்பாடம் பண்ணலாம். ஆனால், ஒன்று அதைப் படித்து நீங்கள் புலவனாக வேண்டும் என்று எண்ணிப் படிக்கிறதாகவிருந்தால் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அது உங்களுக்கு வேண்டியதில்லை. புலவனாக ஆகலாம் என்றும் ஒருவர் சொல்லி யிருக்கிறான். ஒருவன் புலவனாக வேண்டுமானால் வேறு நூல்களைப் படிக்க வேண்டியதில்லை. திருக்குறளை மட்டும் படித்தாலே அவன் புலவனாகி விடலாம் என்பது அவரது முடிவு.

ஆயிரத்து முந்நூற்று முப்பத்து அருங்குறளும்
பாயிரத்தி னோடு பயின்றதன்பின் – போயொருத்தர் வாய்க்கேட்க
நூலுளவோ மன்னு தமிழ்ப்புலவ ராய்க்கேட்க வீற்றிருக்க லாம்”

-நத்தத்தனார்

என்று பாடினார் அவர். அதற்காக மட்டும் நீங்கள் படிப்பதாயிருந்தால் படிக்க வேண்டா.

எப்படி வாழ்வது?

மனிதன் மனிதத் தன்மையோடு எப்படி இந்த நிலத்திலே வாழ்வது? நண்பர்களிடத்திலே எப்படிப் பழகுவது? அரசாங்கத்திடம் எப்படி நடந்து கொள்வது? பொது மக்களிடத்திலே எப்படி நடப்பது? மனைவியை எப்படி நடத்துவது? பிள்ளைகளை எப்படிப் பழக்குவது? நம்முடைய கடமை என்ன? என்றறிந்து நடக்கப் படிக்கிறதாகவிருந்தால் திருக்குறளைப் படியுங்கள். உங்களுடைய வாழ்க்கை யில் அதனால் ஒரு ஒளி வீசும். கலங்கரை விளக்கமாக அமைந்து கப்பலுக்கு வழி காட்டுவதுபோல் அது மக்களுடைய வாழ்க்கைக்கு வழி காட்டும். அவரே ஒரு குறளில் இந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார்.

வழிகாட்டி

சேற்றுநிலம், காலை வைக்கிறான். வழுக்குகிறது. நடந்தால் தான் போய்த் தண்ணீர் பாய்ச்ச முடியும். உழவன் வரப்பிலே கால் வைக்கிறான். வழுக்கி வழுக்கி விடுகிறது. அப்போது ஒரு வயது சென்ற கிழவன் ஒரு தடியைக் கொடுத்து, ‘அடேய், ஊன்றிக் கொண்டு போ’ என்றான். தடியை வாங்கிக் கொண்டு ஊன்றினான்; நடந்துவிட்டான். சேற்றுநிலத்திலே வழுக்கி வழுக்கி நடக்கிறவனுக்கு ஊன்றுகோல் துணை செய்வது போல் வாழ்க்கையிலே வழுக்கி வழுக்கி நடக்கிற ஆணுக்கும் பெண்ணுக்கும் குடும்பம் எப்படி? மாமியார் எப்படி? மாமனார் எப்படி? பொதுமக்கள் எப்படி? குடும்பம் நடத்துவது என்று தெரியாத இளைஞர்கள், இளம் கன்னிகைகள், புதிதாக வாழ்க்கைத் துறையிலே புகுந்திருப்பவர்களுக்கு எப்படி வாழ்க்கை நடத்துவதென்ற ஐயப்பாடு வந்தால் ஒழுக்கமுள்ளவர்களுடைய வாய்ச்சொல் போதுமானது. சேற்று நிலத்திலே வழுக்கி நடக்கிறவனுக்கு ஊன்றுகோல் துணை செய்வது போல. வாழ்க்கையிலே வழுக்கி நடக்கும் மக்களுக்குப் பெரியோர் ‘வாய்ச்சொல்’ துணை செய்யு மென்று அவரே சொல்லியிருக்கிறார்.

இது அகச் சான்று

“இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்”

என்பது குறள்.