திருவள்ளுவர் சமயம்

அடுத்தது திருவள்ளுவர் சமயம் என்ன? அது ஒரு போராட்டம். நான் சிறுபிள்ளையாக இருக்கும் பொழுது “செந்தமிழ்ச் செல்வி” பத்திரிகை வரும். முதல் இதழில் திருவள்ளுவர் சைவ சமயியே என்று இருக்கும். அடுத்த இதழில் இன்னொரு புலவர் திருவள்ளுவர் வைணவ சமயியே என்று எழுதியனுப்புவார். அடுத்த இதழ் புத்த சமயியே என்று வரும். அடுத்த இதழ் அருக சமயியே என்று வரும். இப்போராட்டம் இந்த நான்கு திங்களோடு நின்று விடாது, ஐந்தாவது திங்கள் ‘திருவள்ளுவர் சைவ சமயியே என்ற வாய்க்கு ஆப்பு’ என்று வரும். ‘திருவள்ளுவர் வைணவ சமயியே என்ற வாய்க்கு ஆப்பு!’ பிறகு ஆப்புக்கு ஆப்பு; ஆப்புக்கு மறுப்பு! மறுப்புக்கு ஆப்பு; மறுப்புக்கு மறுப்பு என்பவைகளே! அன்றைக்குத் தமிழகத்திலே இருந்த புலவர்கள் திருவள்ளுவரது சமயத்தைக் காணத் தங்களது அறிவைத் தீட்டினார்களே தவிர திருவள்ளுவரைக் காணத் தீட்டவில்லை. தீட்டியிருந்தால் அன்றைக்கே பொதுவுடைமை யாயிருந்திருக்கும் திருக்குறள்.

கிறிஸ்தவரா?

திருவள்ளுவர் சமயம் அந்தக் காலத்திலே இத்தனை பேருடைய சண்டையாக மட்டும் இருந்தது. இப்பொழுது வந்திருக்கும் ஆபத்து மிகப் பெரியது. இப்பொழுது திருவள்ளுவர் கிறிஸ்தவ சமயியே என்று வந்திருக்கிறது இந்த விபத்து முன்னே வரவில்லை. அவர்கள் இரண்டு பேரும் ஒரே நூற்றாண்டில் 31 ஆண்டுகளுக்குள் முன்பின்னாகத் தோன்றியவர்கள். இயேசுநாதருடைய போதனையும் திருவள்ளுவருடைய போதனையும் ஒன்றாகவே இருக்கிறது. இரண்டு பேர்களும் குற்றம் செய்தவர்களை மன்னித்துத் திரும்பவும் உதவி செய்யுங்கள் என்றே கூறி இருக்கிறார்கள். பிற போதனைகளும் ஒன்றாகவே தோன்றுகின்றன. இரண்டு பேர்களும் ஒரே கண்டத்தில் பிறந்தவர்கள் என்றெல்லாம் காரணம் காட்டுகிறார்கள். அந்த அளவோடும் போராட்டம் நின்றுவிடவில்லை.

இஸ்லாமியரா?

இப்பொழுது எங்கள் ஊரில் ஒரு இஸ்லாமியப் புலவர் இருக்கிறார். அவர் திருவள்ளுவர் இஸ்லாம் சமயியே என்ற போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார் (சிரிப்பு). மற்ற ஆட்களெல்லாம் சும்மா பேசுவார்கள். இவர் சட்டையைத் தூக்கிக் கொண்டு சண்டைக்கு வருவது போலவே பேசுவார். ஏய்யா, இந்த “ன்னன்னா’ என்ன செய்தது? உங்களை ஒன்றும் செய்யவில்லையே. பின்பு ஏன் அழித்தீர்கள்? நாங்கள் அழிக்க வில்லையே. பின்னே எப்படி வந்தது திருக்குறள்? என்னையா சொல்லுகிறது ஒன்றும் தெரியவில்லை என்போம். ‘ன்னன்னா’ என்னய்யா செய்தது? அந்த “ன்னன்னா”விலே நடுவிலே இருக்கிறது. சுழி உங்களை என்ன பண்ணிற்று? என்று கேட்பார், “பாய்! நீங்கள் சொல்லுகிறது ஒன்றும் விளங்கவில்லை” என்போம். திருக்குரான் என்று இருந்தது. அந்த ன்னன்னா விலுள்ள சுழியை அழித்துவிட்டுத் திருக்குறள் என்று வைத்துக் கொண்டீர்களே என்று சண்டைக்கு வருவார். (சிரிப்பு)

என்ன சமயம்?

திருவள்ளுவருடைய சமயப் போராட்டம் இந்த அளவிற்கு வந்திருக்கிறது. இப்பொழுது உங்களுக்குத் திருவள்ளுவருடைய சமயம் விளங்கியிருக்குமே நான் சொல்லியதிலிருந்து. என்ன சமயம் அது? எல்லாச் சமயத்தாரும் தங்கள் சமயத்தார் என்று கருதக்கூடிய ஒரு சமரச சமயத்தார் திருவள்ளுவர் என்பது. இந்த அளவு போதும் அவரது சமயத்தைக் கூற.

அவரது கொள்கை

அவருடைய கொள்கை என்ன? எண்ணி அவருடைய வைத்திடலாம். “இறைவன் என்று ஒன்று உண்டு என்று நம்பு. அதை வணங்கா விட்டால் கற்றும் பயனில்லை மழையானது மக்கள் போற்ற வேண்டிய ஒன்று. ஏனெனில் அது உண்ணும் பொருள்களை உண்டாக்கிக் கொடுத்துத் தானும் உணவாக மாறுகிறது. பெரியோர்களைப் போற்றுங்கள். மனைவி மக்களோடு வாழுங்கள். விருப்பு, வெறுப்பு அற்று வாழுங்கள். இது தொகுப்பு.

“சூதாடாதே! பொய் சொல்லாதே! புலால் உண்ணாதே! கள் குடியாதே! களவு செய்யாதே! வஞ்சகம் கொள்ளாதே! தீயன எண்ணாதே!” இது ஒரு தொகுப்பு.

“நட்புத் தேவை; அதை ஆராய்ந்து கொள்! தீயவர் உறவை நோயென விலக்கு! பெரியோரைத் துணைக்கொள்! பிறரோடும் அன்பாயிரு! மனைவியை மதி! மக்களைப் பெறு! அறிவை அடை!

சொல்வதெல்லாம் நல்லதாக இருக்கட்டும்! செய்வ தெல்லாம் திறமையாக இருக்கட்டும்! அறத்தின் வழி நின்று பொருளைத் தேடி இன்பத்தைப் பெறு! வீடு உண்டானால் அது உன்னைத் தேடி வரும்” இவைதாம் வள்ளுவருடைய கொள்கை. அதைத்தான் நீங்கள் திருக்குறளில் பார்க்க முடியும். இது எந்த நாட்டிற்கு, எந்த மக்களுக்கு, எந்த நிறத்தினருக்கு, எந்த மொழியினருக்கு, எந்தச் சமயத்தினருக்கு வேறுபாடு உடையது? இராது! அவ்வளவு பெரிய உயர்ந்த கருத்துக்களைக் கொண்டவர் வள்ளுவர். திருவள்ளுவரைப் பற்றி இதுவரை சொல்லியது போதும் என் நினைக்கிறேன்; விட்டுவிடுகிறேன்.

திருக்குறளின் சிறப்பு

அடுத்து திருக்குறள். பொது நோக்காகத் திருக்குறளுக்கு ஒரு சிறப்பு உண்டு. என்ன சிறப்பு? உலகில் தோன்றிய நூல்களில் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டவை மூன்று நூல்கள்தாம். முதல் வரிசையில் இருப்பது பைபிள். ஏறக்குறைய 500க்கு மேற்பட்ட மொழிகளிலே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அடுத்த வரிசையிலே இருப்பது இஸ்லாமிய வேதம் குரான். 200க்கு மேற்பட்ட மொழிகளிலே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. மூன்றாவது வரிசையிலே இருப்பது திருக்குறள். 80-க்கு மேற்பட்ட மொழிகளிலே மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது. முதல் இரண்டும் சமய நூல் என்று ஒதுக்கி வைத்துவிட்டால், உலகிலேயே அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட இலக்கியங் களில் தலைமை வகித்து நிற்பது திருக்குறள் ஒன்றுதான். இந்தச் சிறப்பு தமிழுக்குப் பெருமை யளிப்பதாகும். இது ஒரு சிறப்பு!

மனிதன் மனிதனாவதற்கு

அடுத்த சிறப்பு, மனிதன் மனிதனாய்ப் பிறந்தும் பறவையைப் போல ஆகாயத்தில் பறக்கக் கற்றுக் கொண்டிருக்கிறான் இன்று வான ஊர்தியில்! மனிதன் மனிதனாய்ப் பிறந்தும் மீனைப் போலத் தண்ணீரில் நீந்தக் கற்றுக் கொண்டிருக்கிறான்; பார்க்கிறோம். இன்று நீர்மூழ்கிக் கப்பல் முதலியவைகளிலே மனிதன் மனிதனாய்ப் பிறந்தும், பாம்பைப் போல ஊர்ந்து செல்லக் கற்றுக் கொண்டிருக்கிறான்; பார்க்கிறோம். இன்று வஞ்ச மனம் கொண்ட மக்களிடத்திலே! மனிதன் மனிதனாய்ப் பிறந்தும் விலங்கைப் போல் வண்டியிழுக்கக் கற்றுக் கொண்டிருக்கிறான். பார்க்கிறோம். இன்று நடுத் தெருவிலே! ஆனால், மனிதன் மனிதனாய்ப் பிறந்தும் மனிதனைப் போல வாழ்வது எப்படி? என்பதைக் கற்றுக் கொள்ளவில்லை. அதைக் கற்றுக் கொடுப்பது திருக்குறள் இது திருக்குறளுக்கு உள்ள அடுத்த சிறப்பு,

இருளை ஓட்ட

மூன்றாவது சிறப்பு என்ன? திருக்குறளைப் படியா விட்டால் அவன் வாழ்விலே ஒரு சிறப்பும் இராது. அவனது அறிவிலே ஓர் ஒளி இராது. அறிவாளிகளது கூட்டத்திலே அவன் அறிவிலே ஒருபக்கம் இருள் அடிக்கும். வைரப் பரீட்சைகள் பார்க்கிறோம். நல்ல வைரங்கள் தாமா என்பதற்கு. அப்படித்தான் அறிவுப் பரீட்சையும். போலி வைரத்தில் ஒருபக்கம் இருள் அடிக்கும்; அடித்தால் அது நல்ல வைரமாகாது. ஒருவன் பி.ஏ. பட்டம் பெற்றாலும் சரி, பி.ஏ. பி.எல் என்று சட்டப்பட்டம் பெற்றிருந்தாலும் சரி, பி.எஸ்.சி. என்று விஞ்ஞானியாக இருந்தாலும் சரி. அரசியல் நிபுணராகவிருந்தாலும் சரி, வரலாற்றுப் பேராசிரியனாக இருந்தாலும் சரியே, அவன் திருக்குறளைப் படித்திராவிட்டால் அவனது அறிவிலே ஒரு பக்கம் இருள் அடிக்கும். அதையும் படித்து விட்டால் ஏற்கெனவே உள்ள அறிவுக்கு ஒரு புது மெருகு உண்டாகும் என்று முடிவு கட்டி விடலாம். இது திருக் குறளுக்கு உள்ள தனிச்சிறப்பு.

இவ்வளவு போதும் திருக்குறளைப் பற்றி.

ஆசிரியரும் ஐயமும்

திருவள்ளுவர் திருக்குறள் ஒன்றைத்தான் செய்தாரா? என்ற ஐயமும் இப்பொழுது நம்மிலே பலருக்கு வந்திருக்கிறது. சில புலவர்கள் இப்பொழுது ஆராய்ந்து எழுதியிருக்கிறார்கள். திருவள்ளுவர் இரண்டு நூல்களைச் செய்தாரென்று. அவர்களும் புலவர்கள்தாம்.

அவர் செய்த மற்றொரு நூல், ஞான வெட்டியான் என்று கூறுகிறார்கள். ஞானத்தை அப்படியே இரண்டாக வெட்டிவிட்டதாக எழுதி வைத்திருக்கிறார்கள். அதைப் பார்ப்போம். இன்று நான் ஞானவெட்டி திருவள்ளுவர் செய்தது அன்று என்று உங்களிடத்தில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை. ஒருகுறளைப் படித்தவர்கள் கூட ஞான வெட்டியைப் புரட்டிப் பார்த்தால் இது திருவள்ளுவர் வாக்கு அல்ல என்று முடிவுக்கு வந்துவிடுவார்கள். அவ்வளவு எளிது. அது நான்தான் இப்பொழுது சொல்கிறேனே ஒரு அடி ஞான வெட்டியிலே! குறள் நடைதான் உங்களுக்குத் தெரியும். கூற வேண்டியதில்லை. ஞான வெட்டியின் நடையைப் பாருங்கள்! “பாரப்பா இந் நூலைப் பாரு! பாரு! பகர்கின்றேன் இதன் கருத்தைக் கேளு! கேளு” என்று இருக்கும் இதன் நடை! இதைப் படிக்கும்போதே நமக்கு, “யாரப்பா இந்நூலைச் செய்த ஆளு? ஆளு?” என்ற ஐயம் வந்துவிடும்.(சிரிப்பு) ஆகையினாலே, அவர் செய்த நூல் திருக்குறள் ஒன்றே என்று துணிந்து கூறலாம். அவர்

ஒன்றே செய்தார். அதுவும் நன்றே செய்தார்
அதையும் அன்றே செய்தார்.