வரலாறு

“வள்ளுவர் வரலாறு ஏன்?” என்று அறியப் புலவர்கள் அனைவரும் கூடினார்கள். கூடிய நகரம் சென்னை; கூடிய இடம் பச்சையப்பன் கல்லூரி; கூடிய நாள் 1939, மார்ச் 31. தலைமை வகித்தவர் மகாமகோ பாத்தியாய உ.வே. சாமிநாதய்யர். வந்திருந்த புலவர்கள் 530-க்கு மேற் பட்டவர்கள். பேசியவர் 11 பேர். 10 பேர் பேசியும் கூட எவரும் சரி என்று ஒப்பவில்லை.

பதினொன்றாவதாகப் பேசியவருடைய பேச்சு தான் வள்ளுவருடைய உண்மையான வரலாறாக இருக்க வேண்டுமென்று கூட்டத்தினர் ஒப்பினர். கூட்டத்தினர் என்ன? தலைமை வகித்திருந்த உ.வே.சாமிநாதய்யர் அவர்களே எழுந்திருந்து, “இது தான் சரி” என்று பேசியவரை நெஞ்சோடு நெஞ்சம் இறுகக் தழுவிக் கட்டிக் கொண்டு மக்களுக்கு அறிவித்தார். அப்புறம் வசிஷ்டரே பிரம்மரிஷி என்று ஒப்புக் கொண்ட பிறகு உங்களுக்கும் நமக்கும் அதிலே கருத்து வேறுபாடு எதுவும் இருக்க முடியுமா? ஒப்ப வேண்டியது தான். அப்படிப் பேசிய பெருமகன் பசுமலைப் பேராசிரியர் சோமசுந்தர பாரதி. அந்தப் பேச்சினை, உடனே மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் குறித்துக் கொண்டு, மதுரைக்குச் சென்று அச்சடித்து வழங்கினார்கள். உரிமையைப் பெற்றுக் கொண்டு விட்டார்கள். விலை நான்கணா விதிக்கப் பெற்ற, இப்படிச் சொன்னதனாலேயே நீங்கள் ஒரு கடிதம் எழுதிப் போட்டு விடாதீர்கள், புத்தகம் வேண்டுமென்று. பதிலே வராது. நேரிலே போய்க் கேட்கலாம் என்று துணிந்து போனால் புத்தகம் அங்கு இருக்காது. நாங்கள் அச்சடிக்கிறோம் என்று கேட்டாலும் அச்சடிக்கிற உரிமையும் கொடுக்கமாட் டார்கள். இது இன்று அவர்கள் செய்யும் நல்ல தமிழ்த் தொண்டு!

அவ் வரலாற்றினுடைய தொகுப்பு இதுதான். “வள்ளுவர் ஒரு சிறந்த தமிழ் மகன். நல்ல வேளாண்குடி மரபினர். அவர் பிறந்தது, வாழ்ந்தது, இறந்தது அனைத்தும் மதுரை. அவர் பாண்டிய மன்னனுக்கு உள்படு கருமத் தலைவராக (Private Secretary) இருந்தவர். அதாவது, அரசனது கருத்தை மக்களுக்கு அறிவிக்கும் தொழிலைப் பெற்றிருந்தவர். இந்தத் தொழில் காரணமாகவே ‘வள்ளுவர்’ என்ற பட்டத்தைப் பாண்டியனால் பெற்றவர். ‘நல்ல வேளாண்குடி மக மனைவியாகப் பெற்றவர். உலகத்தை நோக்கி ஒரே நூல நன்றாகச் செய்து கொடுத்து நம்மை விட்டு மறைந்தவர். இதுதான் அந்நூலின் தொகுப்புக் கருத்து. வள்ளுவரைப் பற்றி அறிவிக்க இதுபோதும்.

பொய்யும் மெய்யும்

வள்ளுவர் ஆதியென்ற புலைக்குடி மகளுக்கும் பகவன் என்ற உயர்குடி மகனுக்கும் பிறந்தார் என்று எழுதிய கதை பொய் என்பதற்கு எனக்குக் கிடைத்த சான்று ஒன்றுண்டு. அதாவது திருக்குறளை முதன் முதலில் ஓலைச்சுவடியிலிருந்து அச்சேற்றியவர்கள் இரண்டு பெரும் பேராசிரியர்கள். முதற் பேராசிரியர் திருத்தணிகை விசாகப் பெருமாளையர். அடுத்தவர் யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலர். இருவரும் சுவடிகளில் இருந்து ஒப்பு நோக்கித்தான் ஓர் எழுத்தும் விடாமல் திருக்குறளை அச்சியற்றி நமக்குக் கொடுத்தார்கள் அந்தத் தொண்டினை அவர்கள் செய்திராவிடில், பல தமிழ்ச் சுவடிகள் அழிந்தது போல இதுவும் அழிந்திருக்கச் கூடும். அவர்கள் வள்ளுவர் வரலாற்றை ஒப்பவில்லை அத்தனை கதைகள் இருந்தன. சரியான சான்றோடு கிடைத்திருந்தால் எந்த ஒரு வரலாற்றையாகிலும் அந்த நூலிலே அவர்கள் அச்சடித்திருப்பார்கள். சான்று இல்லை. வெறுத்து ஒதுக்கிவிட்டார்கள் அத்தனையும் பொய்யென்று. அது நமக்குக் கிடைத்த ஒரு சான்று மற்றொரு சான்று என்னுடைய ஆராய்ச்சியிலே கிடைத்தது. அது என்னவென்றால், தமிழ்நாட்டிலே கடந்த 35 ஆண்டுகளாகச் சேரிகள் தோறும் சென்று கொண்டிருக்கிறேன். ஒரு சேரியிலாவது ஒரு புலைக்குடி மகளுக்காவது ஆதி என்ற பெயர் இல்லை; அதுதான் போகட்டும்; பகவன் என்ற பெயரைப் பெற்றவராவது இருக்கவேண்டாமா; எந்த அக்கிரகாரத்திலும் பகவன் அய்யர், பகவன் சர்மா, பகவன் சாஸ்திரி, பகவன் ராவ், பகவன் அய்யங்கார் என்று ஒருவராவது இல்லை. ஆகவே உயர்குடிக் கூட்டத்திலும் புலைக்குடிக் கூட்டத்திலும் காண முடியாத பெயரைக் கொண்ட தாய் தந்தையர்களுக்கு அவர் பிறந்தார் என்று கதை கட்டியது ஒரு கற்பனை. இந்தக் கற்பனை எங்கிருந்து வந்தது? “ஆதி பகவன் முதற்றே உலகு” என்ற முதற் குறளிலிருந்து அவர் தாய் தந்தையர்க்கு வணக்கம் செலுத்தினார் எனக் கொண்டு அக்கற்பனையை அவர்கள் புகுத்தினார்கள். இக்கற்பனைக் கதை, அறிஞர்களாலே கொள்ளத்தக்க தன்று! தள்ளத்தக்கதே!

அடுத்து, திருவள்ளுவர் எப்படிப் பட்டவர் என்று நான் உங்களுக்குக் காட்டலாம் சினிமாப்படம் போல, அவரை உங்கள் கண் முன்னே நிறுத்த நான் இப்பொழுது ஆசைப்படுகிறேன். வள்ளுவர் தமிழகத்தில் தமிழ்நாட்டின் சொந்தச் சொத்திலிருந்து ஓர் உயர்ந்த கருவூலத்தை தந்து மறைந்த உலகப் பேரறிஞர். அந்த அளவு போதும் திருவள்ளுவருக்கு.

வள்ளுவர் யார்?

இன்னும் ஒன்று உண்டு. திருவள்ளுவரைப் பற்றிச் சொல்வதற்கு, திருவள்ளுவர் பிறந்திராவிட்டால் தமிழன் என்று ஒரு இனம் உண்டு என்று உலக மக்கள் அறியார்கள். திருக்குறள் என்று ஒரு நூல் தோன்றியிராவிட்டால் தமிழ்மொழி என்று ஒரு மொழியுண்டு என்று உலக மொழியாளர் அறியார்கள். திருக்குறளும் திருவள்ளுவரும் தோன்றியிராவிட்டால் தமிழ்நாடு என்று ஒருநாடு உண்டென்று உலக நாட்டார் அறியார் என்று சொல்லி முடித்துவிடலாம்.

எது அறிவு?

திருவள்ளுவரை உங்களுக்குக் காட்டுவதற்கு ஒரு கருவியுண்டு. அதாவது, “அறிவில்லாதவன், அறிவில்லாதவன்” என்று பலர் சொல்லுகிறார்களே, நீங்களும் கேட்கிறீர்களே அதை இனி நீங்கள் ஒப்பக்கூடாது ஏனென்றால், என் ஆராய்ச்சியிலே அறிவு இல்லாதவன் என்று ஒருவனை நான் பார்த்ததேயில்லை எல்லோருக்குமே அறிவு இருக்கிறது. அதற்கு ஓர் உவமை வேண்டுமென்றால், ஒவ்வொருவர் மண்டையிலும் மூளை இருக்கிறதே! அதைத் ‘தலம்’ போன்ற பட்டை போடார் மாணிக்கக்கல் என்று நீங்கள் வைத்துக் கொள்ள எவன் எந்தெந்தத் துறையில் வேண்டும். எவன் தீட்டுகிறானோ அந்தந்தத் துறையிலே ஒளி வீசும். ஒருவன் வியாபாரத் துறையிலே தீட்டினால் அந்தப் பக்கம் அவன் ஒளி வீசுவான் மற்றொருவன் கைத் தொழிலிலே தீட்டுவான் இன்னொருவன் நூல் ஆசிரியனாகத் தீட்டிக் கொள்வான். இன்னொருவன், மேடைப் பேச்சாளியாகத் தீட்டிக் கொள்வான். ஒருவர் வக்கீல் துறையில் தீட்டிக் கொள்வார். ஒருவர் டாக்டர் துறையில் தீட்டிக் கொள்வார். ஒருவர் விஞ்ஞானியாகத் தீட்டிக் கொள்வார். எந்தெந்தப் பக்கம் எவரெவர் தீட்டுகிறார்களோ அந்தந்தப் பக்கம் அவரவர் அறிவு ஒளி வீசும். அவ்வளவுதான் இதிலே யார் அறிவுள்ளவர்? யார் அறிவில்லாதவர்?

ஒரு நிகழ்ச்சி

எங்களூரில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. கவர்னர் சர். ஆர்தர் ஹோப் வந்திருந்தார். நாங்கள் போர்ப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தோம். கலெக்டரும் நானும் பின்னாலே காரில் போனோம். கவர்னர் முதல் வண்டியிலே போனார். 18-ஆவது மைலிலே கவர்னரின் கார் நின்றுபோய்விட்டது. கலெக்டருக்குப் பீதி; பயந்து விட்டார். அவர் கார் பழுதாகிவிட்டதோ என்னவோ இறங்கினார். கவர்னரும் இறங்கி விட்டார். நாங்களும் இறங்கினோம்.

இறங்கினவுடனே அவர் என்ன செய்தார்? ஏதோ ஒன்றினை உற்று நோக்கிக் கொண்டிருந்தார். அதைக் கண்ணுற்ற நான் “கவர்னர் எதை உற்று நோக்குகிறார்?” என்று கலெக்டரைக் கேட்டேன். அவர் சாலையில் காரை விட்டிறங்கி, அருகிலுள்ள சோளத் தோட்டத்திலே ஒரு குயவன் சக்கரத்தைச் சுற்றிவிட்டுக் கொண்டு மண்ணைப் பிசைந்து கலயம் செய்து கொண்டிருப்பதைக் கண்டார்.

சற்று நேரம் அதைப் பார்த்தபின் கையை இடுப்பில் வைத்துக் கொண்டு மேலே பார்த்தார். கலெக்டர் விழிக்கிறார். நான் மெதுவாகச் சொன்னேன். ‘சக்கரம் சுற்றுகிறதே, மின்சாரம் எங்கிருந்து வருகிறது. மரம் கம்பி காணோமே என்று மேலே பார்க்கிறார்’ என்றேன். ‘என்னடா! ஒரு சுற்றுச் சுற்றுகிறான் முந்நூறு, நானூறு சுற்றுகள் சுற்றுகின்றன.

மின் ஆற்றல் ஒன்றையும் காணோம். மண்ணைப் பிசைந்து வைக்கிறான். இப்படியும் அப்படியும் கைகளை மாற்றுகிறான். கூஜாவாகிறது. மறுபடி அழுத்துகிறான். மேலே விரிகிறது. நகத்தை வைக்கிறான். இப்படியும் அப்படியும் கைகளை மாற்றுகிறான். கோடு விழுகிறது என்ன பெரிய வேலையாக இருக்கிறதே!’ என்று கவர்னர் ஆச்சரியப்பட்டார்.

அப்பொழுதுதான் எனக்குத் தெரிந்தது. கவர்னருக்கு இருக்கிற அறிவு குயவனுக் கில்லை, குயவனுக்கிருக்கிற அறிவு கவர்னருக்கில்லை என்று. அது வரைக்கும் அந்த அறிவு எனக்கு இல்லாமல் இருந்தது.

யார்க்கு அறிவு இல்லை?

இப்பொழுது நான் தான் கேட்கிறேன். இதில் அறிவு உள்ளவர் யார்? இல்லாதவர் யார்? இவர் இந்தத் துறையில் தீட்டியிருக்கிறார். ஆலையிலே இருக்கிற தொழிலாளி நூல் அறுந்து போனால் எப்படி இணைக்கிறது என்ற அறிவைத் தீட்டியிருக்கிறான். இதில் அறிவுள்ளவர் யார்? அறிவில்லாதவர் யார்?

ஆனால், ஒன்று. ஒரே ஆள் இரண்டு பட்டையும், மூன்று பட்டையும், நான்கு பட்டையும், ஐந்து பட்டையும் தங்கள் அறிவுக் கல்லுக்குப் போட்டிருப்பார்கள். அத்தகைய ஆட்களையும் நான் பார்த்திருக்கிறேன். ஆங்கிலத்திலும் புலமையிருக்கலாம், தமிழிலும் புலவராயிருக்கலாம். வழக்கறிஞர் தொழிலிலேயும் இருக்கலாம். இப்படி ஏழெட்டுப் பட்டைகளை ஒரு ஆள் போட்டிருக்கலாம், முயற்சி காரணமாக. எனவே, அதிகப் பட்டை போட்டுக் கொண்டவர்கள் குறைந்த பட்டை போட்டுக் கொண்டவர்கள் என்று இருக்கலாமே தவிர, அறிவு இல்லாதவர்கள் என்று எவருமே இருக்க முடியாது. இப்போது காட்டுகிறேன் பாருங்கள் திருவள்ளுவரை உங்கள் முன்னே வைத்து.

பலதுறை அறிவு

திருவள்ளுவர் எப்படிப்பட்டவர் தெரியுமா? தன் அறிவுக் கல்லுக்கு 133 துறைகளிலும் பட்டை போட்டுக் கொண்ட ஒரு ஆள். இப்பொழுது தெரியும் உங்களுக்குத் திருவள்ளுவர் யார் என்று. அவரது அறிவிலே 133 பட்டைகள் ஒளி வீசுகின்றன. அரசன் என்றால் அரசன்; ஆண்டி என்றால் ஆண்டி; மந்திரி என்றால் மந்திரி; பிச்சைக்காரன் என்றால் பிச்சைக்காரன்; சூதாடி என்றால் பக்கா சூதாடி; குடிகாரன் என்றால் அசல் குடிகாரன்; ஆண் என்றால் ஆண், பெண் என்றால் பெண். எந்தத் துறையில் பார்த்தாலும் துறைபோக ஆராய்ந்து முடிவு கட்டிக் கூறிய ஒரு பேரறிஞர். இந்த முடிவு இப்பொழுது என்ன ஆயிற்று தெரியுமா? விஞ்ஞானிகள் எதை எதையோ கண்டுபிடிக்கிற மாதிரி ‘திருவள்ளுவர் யார்? என்று மேல்நாட்டு மொழிப் புலவர்கள் இப்பொழுது கண்டுபிடித்து விட்டார்கள். அந்த முடிவு தெரியுமா? திருவள்ளுவர் ஒருவரல்லர். பலர் என்பதே (சிரிப்பு) இந்த முடிவுக்குக் காரணம் என்ன? ஒரு ஆளுக்கு இத்தனை துறையிலும் அறிவு இருந்திருக்க முடியாது; ஆகையினாலே பலபேர் சேர்ந்து திருவள்ளுவரானார்கள் என்று. இது கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்த மாதிரி கண்டுபிடித்தது போலும்! அப்படிப்பட்ட சிறப்புடையவர் வள்ளுவர். திருவள்ளுவரைப் பற்றி இவ்வளவு போதும் என்று நினைக்கிறேன்.