எண்ணம்

நான் அறிந்தமட்டில் சில ஆண்டுகள் ஆராய்ந்து கண்டுபிடித்த சில செய்திகளைக் கொண்டு எனது கருத்தை உங்கள் முன்பு கொட்டிக் குவிக்கலாம் என்று பேச்சாளர் பலரைப் எண்ணுகிறேன். இங்குப் போடவில்லை. “பலரைப் போட்டால் ஒருவரிடமும் ஒன்றாவது சரியாகக் கேட்க முடிவதில்லை. ஆகவே, ஒருவர்தான் பேசவேண்டும்” என்று படிப்பகத்தின் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். தலைவர் அதன்படியே பேச ஒப்புகிறேன். பேச்சு முடிகிற நேரம் எதுவென்று எனக்குத் தெரியாது. யாராகிலும் ஒருவர் இருவர் அப்படி எழுந்திருந்து போகத் தலைகாட்டுவது தான் நான் பேச்சை நிறுத்தும் நேரம் என்று முன்னதாகலே இப்பொழுது உங்களிடம் சொல்லிக் கொள்ளுகிறேன்.

தலைப்பு

பேச்சின் தலைப்பு “வள்ளுவரும் குறளும்” என்பது பேச்சின் குறிக்கோள் “நீங்கள் அனைவரும் திருக்குறளைப் படிக்க வேண்டுமென்பது. பேசுவதின் கருத்து ‘வள்ளுவர் உயர்ந்தவர், குறள் சிறந்தது’ என்பது. பேச்சினுடைய பலன் இனிமேல் உங்களிடத்திலே நாங்களெல்லாம் கண்டு மகிழப் போவது.

முதலில் பேசவேண்டுவது வள்ளுவரைப் பற்றி, அவரைப் பற்றிச் சொல்லவேண்டியன சில சொற்கள்தாம்.

திருவள்ளுவர்

வள்ளுவர் பலர். திரு சேர்ந்த வள்ளுவர் ஒருவர். குறள் பல; ஆனால், திரு சேர்ந்த குறள் ஒன்றுதான் உண்டு. திரு அடைமொழியாகச் சேர்ந்து தனிச்சிறப்பை அளிக்கின்ற பெயர்கள் தமிழ்நாட்டிலே பல உள. பல கோவை உண்டு நூல்களிலே திரு சேர்ந்த கோவை ஒன்றே ஒன்றுதான். அது திருக்கோவை. பதிகள் பலவுண்டு தமிழ்நாட்டிலே; ஆனால் திரு சேர்ந்த பதி. திருப்பதி ஒன்றுதான். வாசகம் பல; ஆனால் திரு சேர்ந்த வாசகம் ஒன்றே ஒன்று அது திருவாசகம். வள்ளுவர் என்று சாதியாலும் பெயராலும் பலர் இருந்தார்கள். வள்ளுவர் என்றால் பலரைக் குறிக்கும். திரு சேர்ந்த அந்தப் பெயருக்கு உரியவர் ஒருவர் தாம். ‘திரு’ தனிச் சிறப்பு. அதைப் பெற்ற வள்ளுவர் திருவள்ளுவர்.

வள்ளுவர் காலம்

அவர் நமது நாட்டிலே கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகட்கு முன்பு பிறந்தவர். இன்று ( 15.2.53) கிறிஸ்து பிறந்து ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்து மூன்று ஆண்டுகளாயின. அதற்கு முன்னே பிறந்தவர் வள்ளுவர். அவர் பிறந்து 1984 ஆண்டுகளாயின.

கதைகள்

அவரைப் பற்றிய கதைகள் தமிழ்நாட்டிலே பல. அவையனைத்தும் அறிஞர்களாலே வெறுத்து ஒதுக்கப் பெற்றவை. திருவள்ளுவரைப் பற்றி தமிழ்நாட்டில் வழங்குகின்ற கதைகள் கணக்கற்றவை. மயிலாப்பூரில் பிறந்தார் என்பது ஒரு கதை; ஆதி என்ற புலைக்குடி மகளுக்கும் பகவன் என்ற உயர்குடி மகனுக்கும் பிறந்தார் என்பது மற்றொரு கதை. ஏலேலசிங்கனாலே எடுத்து வளர்க்கப் பெற்றார் என்பது இன்னொரு கதை. அவர் மயிலாப்பூரில் கோயில் கொண்டார் என்பது வேறொரு கதை. அவர் வாசுகி என்ற ஒரு பெண்ணை மணந்தார்; அந்த அம்மாள் கிணற்றிலே தண்ணீரை இறைப்பார்கள்: ‘அடி!’ என்பார்; குடத்தை விட்டு விட்டு ஓடி வருவார்கள். திரும்பிப் போய்த் தான் பாதியில் தொங்கும் குடத்தை இழுப்பார்கள் என்பது இன்னொரு கதை. எத்தனையோ கதைகளைத் தமிழ்நாட்டில் புகுத்தி வைத்தார்கள். இந்தக் கதைகளால் நமக்கும் ஆவதென்ன? “உண்மையான வரலாறு எது?” என்ற ஐயப்பாடு தமிழ்நாட்டிலே உள்ள புலவர் பெருமக்களுக்குத் தோன்றியது.