உயிர் பெறுங்கள்
எங்கள் வீட்டிற்குத் திருக்குறள் அவதானி வந்திருந்தார் சுப்பிரமணியதாஸ் – உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார் மணி 11.30 ஆயிற்று. என் மகள் அங்கேயிருந்து வந்தாள். “அப்பா! இன்றைக்கு ஒன்பதா?” என்று கேட்டாள். எனக்கே தூக்கிப் போட்டது.
கொஞ்சநேரம் யோசித்து “ஆமாம்மா” என்றேன். அவள் போய்விட்டாள் இவர் யோசித்தார் என்னடா ஒன்பதாயென்று கேட்கிறாள் யோசித்து “ஆமாம்’ என்று சொல்லுகிறார் என்று உடனே என் மகளை “இங்கே வா அம்மா!” என்றார் வந்ததும். “ஒன்பது இல்லையம்மா; நான் 95லே இருக்கிறேன்! வேண்டா” என்றார். அப்படியே வெட்கிப் போய் விட்டது பிள்ளை; என்ன பொருள்? “அங்கே வந்து உட்கார்ந்திருக்கிறாரே, புதிதாகப் பேசிக்கொண்டிருக் கிறாரே, இன்றைக்கு அவருக்கு உணவு தயாராக வேண்டுமா?” என்று கேட்டாள். 9 ஆம் அதிகாரம் விருந்து ‘ஆமாம்மா” என்றேன். போனாள் இதை அவர் கண்டுபிடித்துவிட்டார். அவர் அவதானி அல்லவா? அம்மா வா என்றார். வந்தவுடன் நான் 95இல் இருக்கிறேன் என்றால் 95 என்றால் மருந்து “நான் மருந்து சாப்பிடுகிறேன்; இன்றைக்கு விருந்து வேண்டா என்றார்” (சிரிப்பு) திருக்குறள் தலைப்பு 133ம் படித்து விட்டீர்களானால் அவ்வளவும் பேசலாம். பேசுவது மட்டுமல்ல; உங்களுக்கு உலக அனுபவம் முழுவதும் வந்துவிடும் வாழ்வும் சிறக்கும். வாழ்வு எல்லாம் வாழ்வாகாது. வாழ்வில் உயிர் பெறுவதே வாழ்வு. வாழ்விற்கு உயிர் தரும் வலிமை திருக்குறள் ஒன்றுக்கு மட்டுமே உண்டு.
வணக்கம்
நண்பர்களே! ஒன்றரை மணி நேரமாக ‘வள்ளுவரும் குறளும்’ என்ற தலைப்பில் சொல்ல வேண்டியவைகளை ஒருவாறு சொல்லிவிட்டேன் என்று கருதுகிறேன்.
சொல்லிய வரையில் திருவள்ளுவர் யார்? அவர் செய்த குறள் எப்படி? அதிலுள்ள கருத்துக்கள் எவ்வளவு? மக்கள் கைக்கொள்ள வேண்டியவைகள் என்னென்ன? என்பபைகளை ஒருவாறு உங்களுக்கு விளக்கினேன். கோவை நகரப் பெருமக்களாகிய நீங்கள், இந்தத் திருவள்ளுவர் கழகத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்து, குறள் வகுப்பிலும் பங்குபெற்று திருக்குறளையும் நன்கு படித்து வாழ்க்கைக்குப் பயன்படுத்திக்கொண்டு, தமிழ் நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் நற்றொண்டு செய்து சிறப்பெய்தி வாழவேண்டுமெனக் கேட்டுக் கொள்வதோடு, என் சொற்பொழிவை முடிக்கிறேன்.
எல்லோருக்கும் வணக்கம்.
★ ★ ★