முடிவில் ஒரு குறள்
கடைசியாக ஒரு குறள். அது மயில் தோகையைக் கொண்டு இரும்புத் தூணை முறிப்பது. முறிப்பீர்களா? நீங்கள் முயன்றால் முறிக்க முடியுமா? வள்ளுவர் முறித்துக் காட்டுகிறார்! சாலையிலே போகிறார். வண்டி நிற்கிறது. மயில் தோகைகள் கட்டுக்கட்டாகப் போட்டிருக்கின்றன. வண்டிக்காரர் 200 கட்டுகளை வண்டியிலே ஏற்றிவிட்டார். இன்னும் 200 கட்டுகள் இருக்கின்றன. ஒருவன் தலையிலே தூக்கிக் கொண்டு போகிறான். வள்ளுவர் – என்ன அது? என்றார்- மயில் தோகை; வண்டியிலே ஏற்றப் போகிறேன் என்றான்.
“அப்பா! மயில் தோகையாயிருந்தாலும் அளவுக்கு மீறி வண்டியிலே ஏற்றாதே! ஏற்றினால் அச்சு முறிந்து விடும்” என்று சொல்லிப் போய்விட்டார். எப்படி? வள்ளுவர்! மயில் தோகையைக் கொண்டு வண்டியின் அச்சை முறித்துக் காட்டினாரா? இல்லையா?
“பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்”
இந்தக் கருத்து மயில் தோகையையும் வண்டி அச்சையும் மட்டும் பொறுத்ததாக இல்லை. உலகத்தில் உள்ள அத்தனையும் இதில் இருக்கிறது. உணவு உயர்ந்ததாக இருந்தாலும், அளவோடு சாப்பிடு! இல்லையானால் அது உடம்பை முறித்துவிடும் என்கிற கருத்தும் இருக்கிறதா? இல்லையா? அரசாங்க மாயிருந்தாலும் சரி, குடிகளை நடத்துவதற்கு ஓர் அளவு இருக்கவேண்டும். இல்லையானால் ஜார் ஆட்சியானாலும் முறிந்துவிடும் என்ற கருத்தும் இருக்கிறதா, இல்லையா? எவ்வளவு பெரிய முதலாளி யாயிருந்தாலும் தொழிலாளிகளை வேலை வாங்குவதற்கு ஒரு அளவு இருக்க வேண்டும். இல்லையானால் முதலாளித்துவ மெல்லாம் முறிந்துவிடும் என்கிற கருத்தும் இருக்கிறதா? இல்லையா? வீடு கட்டினாலும் கூட தூண் தாங்குகிற அளவுதான் மாடியைக் கட்டவேண்டும். இல்லை யானால் தூண் முறிந்து போய்விடும் என்ற கருத்தும் இதில் இருக்கிறதா இல்லையா? என்ன இல்லை? நல்ல கட்டுரைதான் சிறந்த கருத்துள்ளதுதான். எழுதுகிற எழுத்தாளன் நான்கு ஐந்து பக்கங்களுக்குள், எடுத்துக் கொண்ட தலைப்பைவிட்டு விலகாமல் சுருக்கமாக எழுதினால், படிக்கிறவனுக்கு நன்றாயிருக்கும். நீண்டு எழுதிக்கொண்டே போனால், படிக்கிறவனுள்ளத்தை அக்கட்டுரை முறித்துவிடும் என்கிற கருத்தும் இதில் இருக்கிறதா, இல்லையா? பாருங்கள்.
குறித்த காலம்
நல்ல பேச்சாக இருந்தாலும் குறித்த காலத்தில் சுருக்கமாகச் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடிக்க வேண்டும். நீண்டு கொண்டே போனால் கேட்கிறவர்கள் உள்ளத்தை அப்பேச்சு முறித்துவிடும் என்ற கருத்தும் இதில் இருக்கிறதா, இல்லையா? (சிரிப்பும், கைதட்டலும்) நான் கேட்கிறேன். என்ன இல்லை? ஒவ்வொரு குறளிலும் இவ்வாறு ஒவ்வொரு புதை பொருளைக் காணலாம். நீங்கள் குறளைப் படியுங்கள். இவ்வளவு போதும் குறளைப் பற்றி என்று நினைக்கிறேன்.
படிக்கும் முறை
குறளைப் படியுங்கள் என்று நான் சொன்னதும் நீங்கள் கேட்டுக்கொண்டு கையைத் தட்டிவிட்டு எழுந்திருந்து போய் விடுவதனால் என்ன பயன்? அவ்வளவுதானா உங்கள் கடமை? அப்படியிருத்தல் கூடாது. திருவள்ளுவர் படிப்பகத்தினர் திருக்குறள் வகுப்பு நடத்துகிறார்கள். அதிலே நீங்கள் பங்கு பெற வேண்டும். மற்றவர்களையும் படிக்க வைக்க வேண்டும். எதற்காக? புலவராக அல்ல. மக்கள் மக்களாக வாழ்வதற்கு அது துணை செய்யும். ஏனென்றால் குறள், ஒரு வாழ்வு நூல். குறளைப் படிக்க நான் ஒரு சாவி கொடுத்து விட்டுப் போகிறேன். திருக்குறளைப் படிப்பதற்கு ஒரு குறுக்கு வழி. குறளில் 133 தலைப்புகள்; அதைப் பாடம் பண்ணிக் கொள்ளுங்கள். 13 நாள் போதும்; நாள் 1-க்கு 10 ஆக அதைப் பாடம் பண்ணுவதற்கு, 13 நாளும் மணிநேரமல்ல நாள் ஒன்றுக்கு 10 நிமிடம் போதுமானது. இன்றைக்கு ஒரு திட்டம் போட்டுக் கொள்ளுங்கள். குறளைப் படிப்பதற்கு நாள் 1-க்கு 10 நிமிடமென்று 13 நாட்களில் திருக்குறள் உங்களுக்கு பூராவும் பாடமாகிவிடும். எது? தலைப்பு மட்டும். 133 தலைப்புகள் மனைவி, மக்கள், அன்பு, இன்சொல், அறிவு, அமைச்சு, நட்பு, குடி, சூது, பெரியாரைத் துணைக்கொள் என்றெல்லாமிருக்கும் அறிவைப் பற்றி என்ன சொல்லப் பெற்றிருக்கிறது? என்று பிறகு நீங்கள் அதிலே பார்க்க வேண்டும். அது சொல்லும் அறிவு எது? என்று தலைப்புகளைப் பாடம் பண்ணிக் கொண்டு எதைப் பற்றி அறிய வேண்டுமோ அதைத் திருப்புங்கள். பத்து அடி. சாட்டை அடி போல ஒரே கருத்தைப் பத்துக் குறள்களிலே திருப்பித் திருப்பிக் கூறியிருப்பதைக் காணலாம். ஒரு ரூபா விலையிலே இவ்வளவு கருத்துக்களை நீங்கள் பெறலாம் பேராசிரியர்களெல்லாம் இன்றும் கண்டுபிடிக்காத உயர்ந்த கருத்துக்கள் பலவற்றை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தமிழ்நாட்டில், தமிழ்ப் பேரறிஞராகிய வள்ளுவர் அறிந்து சொல்லி வைத்துப் போயிருக்கிறார். அது ஒரு பொதுமறை; பெருஞ் செல்வம்! நாம் அதைப் படிக்கவில்லை யானால், நாம் தமிழரா? நம்முடைய வாழ்வு தமிழ் வாழ்வு ஆகுமா? எண்ணிப் பாருங்கள்! இது ஒரு வழி.
மறைமொழி
இன்னும் ஒன்று, இந்தத் தலைப்புகளைப் பாடம் பண்ணிக் கொண்ட பிறகு இது ஒரு பரிபாஷைக்கு உதவும். இங்கே வைரக் கடைக்காரனிருக்கிறான். சாவட்டைத் தங்கமென்பான். புலவ னென்றால் அறிஞன் என்று பெயர் நமது புலவர் சுந்தரராசனைப் போன்ற இங்கேயிருக்கின்ற புலவர்களெல்லாம் பே! பே! என்று விழிப்பார்கள். மாட்டுச் சந்தைக்காரன் ஏமாற்றுகிறானே, ‘கவட்டை’ என்கிறான். ‘சூலம்’ என்கிறான். கவட்டை என்றால் இரண்டு ரூபாய்; சூலம் என்றால் மூன்று ரூபாய்! இவர் புலவர் என்ன செய்வார்? பலசரக்குக் கடையில் “குணவில்லை” என்பான். குணவில்லையென்றால் தொல்காப்பியத்திலா பொருளிருக்கும்? சும்மா விழிப்பார் இவர். அவன் புலவர்களையெல்லாம் ஏமாற்றி விடுகிறான். நீங்கள் திருக்குறளைப் பாடம் பண்ணிக்கொண்டு, 133 தலைப்புகளையும் அறிந்து கொண்டால், உலகத்திலே உள்ள எல்லாச் சங்கதிகளையும் அதில் வைத்துக் கொண்டே பேசிவிடலாம். அவ்வளவு பெரிய உயர்ந்த மறைமொழி அது.
ரொம்பப் பேர்கள் நம் நாட்டில் நல்லவர்களிருக்கிறார்கள். எங்களிடம் யாராகிலும் வந்து இவர் ரொம்ப நல்லவருங்க என்றால் – அப்படியா? ஐயோ! பாவமே! இப்படி ஓர் உருவம் இருக்கிறதே உடம்பைத் தூக்கிக் கொண்டு என்று நினைத்துக் கொள்ளுவதுண்டு. அவர் நல்லவர்தான். எப்படி? என் வீடு உண்டு, கடை உண்டு, நான் ஒன்றுக்கும் போகிறதில்லீங்க அவ்வளவுதான் (சிரிப்பு) மிகவும் நல்ல மனிதர் அவர் – என்று சொல்லுகிறது நாங்கள். இப்போது ஒரு பையனின் படிப்பைப் பற்றிக் கேட்க வேண்டுமானால், பையன் நாற்பதில் எப்படி? என்று கேட்கிறது. 40-ல் எப்படி என்றால், பையன் படித்திருக்கிறானா? என்று பொருள். 40- ஆம் அதிகாரம் கல்வி அவர்; ஓ 40 அவனுக்கு உண்டு என்பார். “என்ன?-அவன் நாற்பத்து ஒன்று மாதிரி தெரிகிறானே.” “அதுங்களா” அவனுக்கு 42 இல்லை; அதனாலே 41 மாதிரித் தெரிகிறானுங்கோ” என்பார். பொருள் என்ன? “படித்திருக்கிறான். படித்தவர் களிடத்தில் கேள்வி ஞானமில்லை.
அதனாலே படிக்காதது மாதிரித் தெரிகிறான்” என்பார். 41 கல்லாமை; (42 கேள்வி) இவன் என்னாங்க என்பான் – நீ போப்பா நாங்கள் திருக்குறள் படிக்கிறோம் என்று அனுப்பி விடுவது அவனை ஏனைய்யா, உனக்கும் அருணாசலத்திற்கும் இப்ப 79 இல்லை. என்ன 79 இல்லை? நீங்கள் என்ன கண்டீர்கள்? 79-ஆம் அதிகாரம் நட்பு! ஏன் இப்போது நட்பு இல்லை-? “அதுங்களா, அவன் திடீரென்று இருந்தாற் போல் இருந்து, 93,94-க்குப் போய் விட்டான்.” (சிரிப்பு) என்ன 93,94, 93 குடி. 94 சூது (சிரிப்பு) அதனாலே? “82” என்று நினைத்துச் சும்மாயிருந்து விட்டேன்” 82 என்ன? “தீ நட்பு” இருந்தாலும் இப்படிச் செய்யலாமா ஐயா – ‘போம் ஐயா! இல்லாவிட்டால் என் 97 போய் விடாதா? என்ன 97? மானம். மானம் போய்விடுமே (சிரிப்பு) அவன் என்ன ஐயா? என்பான். நீங்கள் போங்க, நாங்கள் திருக்குறள் படித்துக் கொண்டிருக்கிறோம் என்போம். “ஏன் உங்கள் மருமகள் 8-ல் எப்படி?” “என் மருமகளுக்கு 8 இருந்தால்’ ஏனையா என் மகனுக்கு 31 வருகிறது?” 8 என்றால் என்ன? அன்புடமை “மருமகள் கொண்டு வந்திருக்கிறாயே அன்பாயிருக்கிறாளா?” என்றான்.
‘அவள் அப்படியிருந்தால் என் மகனுக்கு ஏன் கோபம் வருகிறது” என்றான். 31-அதிகாரம் சினம். ‘ஏன் உங்கள் பையனுக்கு 6 ஆகி விட்டதா? என்கிறது. “ஆயிற்று” என்றால் என்ன? திருமணம் பண்ணியாயிற்று. “6 ஆயிற்று என்றால் 7 – எத்தனை? மக்கட்பேறு 6 ஆனால் 7 எத்தனை? என்று கேட்கவேண்டியது தானே (சிரிப்பு) உலகத்திலேயுள்ள அத்தனையும் பேசித் தீர்த்து விடலாம் பிறர் அறியாமல். இது குறள் படித்த கூட்டத்துக்கு மட்டும் ஒரு பெரிய மறைமொழியாகவும் இருக்கும்.