எங்கள் குடும்பம்
வெளியில் உள்ள தாய்மார்கள் என்ன? கல்லூரிகள் என்ன? எங்கள் குடும்பத்திலிருந்து பார்த்துச் சொல்லுகிறேன். மனம் கொதித்து, எங்கள் குடும்பம் மிகவும் பெரியது திருச்சிராப்பள்ளியிலே, சென்னை மாகாணத்திலேயே பெரிய குடும்பம் இவ்வளவு பெரிய எண்ணிக்கையுள்ள குடும்பம் இந்தியாவிலேயே எங்கும் இல்லையென்று சொல்லலாம். ஏழெட்டுப் பேர் வெளி நாட்டுக்காரர்கள் கூட எழுதிவைத்துப் போயிருக்கிறார்கள். கதை அதிகமாய்ச் சொல்லக் கூடாது. எங்கள் அப்பாவுக்கு பதினாறு பிள்ளைகள். நான்தான் பதினாறாவது ஆள் (சிரிப்பு) எனக்குப் பதினான்கு குழந்தைகள் ( சிரிப்பு ) எனக்கு அண்ணா எட்டுப் பேர். அக்காள் ஏழு பேர். ஒவ்வொருவருக்கும் குழந்தைகள் நிறைய இருக்கின்றன. எங்கள் அண்ணன் ஒருவருக்குப் பதின்மூன்று குழந்தைகள். கதை வேண்டாம். எங்கள் நகராட்சியிலே எங்கள் பிரிவிலே அதிக வாக்குரிமைகள் எங்கள் இல்லிற்குள்ளேயே இருக்கின்றன. இது ஒன்றும் பொய்யல்ல. அவ்வளவு பெரிய குடும்பம் இதிலே ஐந்து தலைமுறைக் கதை சொல்லுகிறேன் பாருங்கள்.
காலக் கொடுமையா?
எங்கள் பாட்டி உலக்கை எடுத்து ஒரு கலம் நெல் குத்துவாள்; தனியாக! எங்கள் ஐயா காலையில் இட்டிலி சாப்பிட்டுவிட்டுக் கடைக்குப் போய் விட்டுத் திரும்பி வருகிறதற்குள்ளே குத்தி வைத்து விடுவார்கள். மத்தியானம் போனவுடனே புடைத்து எடுத்து ஒரு ரூபாய் கூலிவாங்கி விடுவார்கள். எங்கள் பாட்டியிடம் நான் மிரட்டிக் காசு வாங்குவேன். பாட்டி காசு இல்லையென்றால், அப்பாவிடம் சொல்லிவிடுவேன் நீ நெல்லுக் குத்துகிறாயென்று என ஏமாற்றிக் காசு வாங்கின ஆள் நான். ஒரு மூட்டை நெல்லை எங்கள் பாட்டி குத்தி விடுவார்கள். எங்கள் அம்மாவால் முடியவில்லை. அடுத்த தலைமுறை; நெல்லுக் குத்த முடியாது அவர்களால். அவர்கள் உட்கார்ந்து கொண்டு காலை நீட்டிக் கொண்டே எங்க வீட்டு இட்டிலிக்கு அரிசி மாவும், உளுந்து மாவும் ஆட்டி விடுவார்கள். அடுத்த தலைமுறை எங்கள் அக்காளாலே முடியவே முடியாது. நின்று கொண்டே அம்மியைப் பிடித்து இரண்டு, மூன்று தடவை அரைப்படி மிளகாயை அப்படியே அரைத்து விடுவார்கள்.
அடுத்த தலைமுறை என் மனைவி நெல்லுக்குத்த, மாவாட்ட முடியாது. இதற்கெல்லாம் ஆள் வைத்தாக வேண்டும். ஊதாங்குழலை எடுத்துக்கொண்டு, அடுப்பு அருகில் போய், பூ பூ! வென்று ஊதி (சிரிப்பு) சமைத்து வைத்துவிட்டுப் பேசாமலிருக்கிறது. அவ்வளவுதான். இப்போது என் மகள் இதுவுமில்லை; சமையல் கூடச் செய்யாமல் நூலை எடுத்துப் பின்னிக் கொண்டு, கழுத்தை ஆட்டி நெட்டி எடுத்துக் கொண்டே இருக்கிறது. (சிரிப்பு) இதிலிருந்து உங்களுக்கு என்ன தெரிகிறது. எங்கள் பாட்டி உலக்கையைத் தூக்கிக் காலம் தள்ளினாள். எங்கள் அம்மா, ஆட்டுக்கல் குழவியைத் தூக்கிக் காலம் தள்ளினாள். என் அக்காள் அம்மிக்கல் குழவியைத் தூக்கிக் காலம் தள்ளினாள். என் மனைவி ஊதாங்குழலைத் தூக்கிக் காலம் தள்ளினாள். என் மகள் ஊசியைத் தூக்கிக் காலம் தள்ளுகிறாள். (சிரிப்பு) என் பேத்தி எதைத் தூக்கிக் காலம் தள்ளப் போகிறாளோ? தெரியவில்லை. (சிரிப்பு)
தாய்க்குலம்
வீரர்களைப் பெற்றுக் கொடுக்கின்ற தாய்மார்கள் இருக்கின்ற நிலை இது. எவ்வளவு பெரிய விபத்து தமிழ்நாட்டைக் கவ்விக் கொண்டிருக்கிறதென்று தமிழகத்துத் தலைவர்கள் இன்றைக்கே எண்ணவேண்டும். எண்ணி, இதனுடைய கீழ் நிலைக்கு எது, எது காரணம்? எனக் கண்டுபிடித்து, அத்தவறுகளைத் திருத்தியாக வேண்டும். பாழ்பட்டுப் போகிற பாதையை அடைத்தாகவேண்டும். இல்லையானால் தமிழகத்திலே நாட்டைக் காப்பாற்றுகின்ற வீரர் காளைகள் தோன்ற முடியாது. நாட்டைப் பாதுகாக்கவும் முடியாது. ஆண்களே! உங்களுக்காகத்தான் சொல்லுகிறேன்; தாய்மார்களைப் போற்றுங்கள் தாயில்லையானால் தமக்கை. தங்கைகளைப் பாதுகாக்க. மனைவிகளைப் பாதுகாக்க, பிள்ளைகளைப் பாதுகாக்க. இது உங்களுடைய நீங்காத கடமை. தாய்க்குலம் அது! பல குடும்பங்களில் ஆண் பிள்ளை சோறு சாப்பிடாமல் இருந்தால் பெண்பிள்ளை சாப்பிடுகிறதில்லை. அது வேறு இருக்கிறது. ஒருவன் ஐந்து மணிக்கு வருவான்; அதுவரைக்கும் அவன் மனைவி சாப்பிடமாட்டாள். இதை ஒரு அம்மாளிடம் கேட்டேன். எங்கள் வீட்டுக்காரருக்கு நான் சாப்பிட்டு விட்டுச் சோற்றைப் போட்டால் அடியில் உள்ள சோற்றில் கல்லிருக்கும். அவர் சண்டைக்கு வருவார். அவருக்கு ஒத்துக் கொள்ளாது. அதற்காக மேல் சோற்றை அவருக்குப் போட்டு விட்டு, அடிச்சோற்றை நான் சாப்பிடுவது என்றார்கள். அதுவும் ஒரு காரணம். ஏனென்றால், ஆண்பிள்ளைக்கு இந்தக் கல்லுச் சோறு உதவாது. பிள்ளை பெறுகிற வயிறு பாருங்கள்; பெண்களுக்கு ஒத்துக்கொள்ளுமா? (சிரிப்பு) இவைகளையெல்லாம் எண்ணிப் பார்த்தாக வேண்டும்.
கற்பு
வள்ளுவர் பெண்மையை எவ்வளவு சிறப்பாகக் கண்டு அந்தக் குலம் வளரவேண்டும் என்று சொல்லுகிறார். கற்பைப் பற்றிச் சொல்ல வரும்போது உலகத்திலேயே பெருமையுடையது ஒன்றுதான் என்று சொன்னார்- எது? பெண்.
‘பெண்ணில் பெருந்தக்கயாவுள?” ஒரே கேள்வி பெண்ணைவிடப் பெருமையுடையது இந்த உலகத்திலே எது? என்று கேட்கிறார் எப்போது?
“பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை யுண்டாகப் பெறின்.”
ஒரே அடி அடித்தார்; பெண்ணுக்கு மட்டுமா கற்புச் சொன்னார். ஆணுக்கு? ‘டேய்! பெருமை உனக்கு எப்போது?’ என்று கேட்டார். “பிறர் மனைவியை நோக்காத பேராண்மை!” ஆண்மை, பேராண்மை ! போர்க்களத்திலிருந்து வருவதைவிடப் பெரிய ஆண்மையாம் – எது? பிறர்மனை நோக்காத பேராண்மை. ஆணுக்குச் கற்பைச் சொல்ல வந்த வள்ளுவர் பெண்மை உவமை காட்டுவது வியக்கக் கூடிய ஒன்று. “ஒருமை மகளிரே போல” எப்படி ஒரு கற்புடைய பெண் தன்னைக் காத்துக் கொள்ளுகிறாளோ, அதைப்போல நீயும் உன்னையே காத்துக் கொண்டாலன்றி, உனக்கு ஏது பெருமை? என்று கேட்கிறார்.
“ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு.”
உள்ளதும் இல்லதும்
ஒன்று ஏழைக் குடிசை வீடு. ஒன்று அடுக்குமாடி வீடு. இந்த இரண்டு வீடுகளில் ஏழைக் குடிசை வீட்டான் வள்ளுவரைப் பார்த்து, “ஐயா வாங்க எங்கள் வீட்டிற்கு வாங்க!” என்று கூப்பிட்டான். சென்றார். ‘ஒன்றுமில்லை. அங்கே ஓட்டைக் குடிசை. மழை பெய்தால் ஒழுகும் சாப்பாட்டிற்கு ஒன்றுமில்லை. ஓட்டைச் சட்டி கிழிந்த பாய், வேறு ஒன்றுமில்லை’ என்றான். ஆனால் கற்புடைய மனைவியைப் பெற்றிருந்தான். வள்ளுவர் அவனைத் தட்டிக் கொடுத்து, ‘டேய்! உனக்கு என்னடா இல்லை?’ என்று கேட்டார்.
அவ்வளவுதான் அவர் கேட்டது. கற்புள்ள மனைவி இருந்தாளாம். அதனால் உனக்கு என்னடா இல்லை – எல்லாம் இருக்கிறது அவர் கேட்ட கேள்வி இதுதான். “இல்லதென்?’ ஒரே கேள்வி. பிறகு பக்கத்து மாடி வீட்டுக்காரன் வள்ளுவரைக் கூப்பிட்டான். “எங்கள் வீட்டைப் பாருங்கள்” என்று எல்லாம் காட்டினான். ஏழு மாடியிருக்கிறது. தந்தக் கட்டிலிருக்கிறது. பட்டுக் கம்பளம் இருக்கிறது. வெள்ளிக் கொப்பரை இருக்கிறது. தங்கத் தாம்பாளம் இருக்கிறது. யானைத் தந்தமிருக்கிறது. வரிசையாகக் காட்டினான். எல்லாம் பார்த்தார். பாவம் அவனுக்கு ஒரு கற்புடைய மனைவி வாய்க்கவில்லை. அதை வள்ளுவர் கண்டுவிட்டார். இங்கே பாருங்கள். எனக்கு எல்லாமிருக்கிறது என்றவனை நோக்கி, ‘பாவிப்பயலே! உனக்கு என்னடா இருக்கிறது?’ என்று கேட்டுவிட்டுப் போய் விட்டார். இந்தக் கேள்வியைப் பாருங்கள். நான்கு சொற்கள்; அவனிடம் “இல்லதென்” என்றார்; இவனிடம் “உள்ளதென்?” என்றார்.
“இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை”
இதென்ன கற்பனையா? உண்மையும் கூடப் பாருங்கள். நல்ல மனைவி வாய்க்கப் பெறாதவன் பன்னிரண்டு அடுக்கு மாளிகையிலே இருந்தாலும் இரும்புப் பெட்டியிலே ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அடுக்கி இருந்தாலும் அவன் என்ன பண்ணுவான். நெறி தவறிய மனைவி பால் கொடுத்தாலும் கூட விஷம் கொடுத்திருப்பாளோ என்று ஐயப்பட்டுக் குடிக்கக்கூட மாட்டானே! அவனுக்கு ஏது நலம்? ஏது வாழ்வு? அவனுக்கு என்னதான் இருக்கும்? இருந்தும் என்ன பயன்? கற்புடைய மனைவி வாய்க்கப் பெறவில்லை யானால், அந்தச் சொல்லுக்கு அவ்வளவு பொருள் உண்டு. “உள்ளதென்?” இங்கே! “இல்லதென்?” அங்கே! நான்கு சொற்களிலே இவ்வளவு பெரிய கருத்தை வைத்துச் சொல்வது குறளுக்குள்ள ஒரு தனிப் பெருஞ் சிறப்பு! அதனால்தான் அதற்குச் சிறப்புக் கூற வந்த புலவர், “கடலைக் கடுகிலே புகட்டிய மாதிரி இருக்கிறது” என்று கூறினார் போலும்!
செல்வம்
பணக்காரனுக்குச் செல்வம் எப்படி வரும், எப்படிப் போகும்? என்று உங்களை ஒரு கேள்வி கேட்டுவிட்டுப் போனால், பத்தாண்டானாலும் நீங்கள் பதில் எழுத முடியாது.வள்ளுவர் சொல்லுகிறார், பணக்காரனுக்கு எப்படி வரும் போகுமென்று என்ன தெரியுமா? இந்தக் கொட்டகைக்குக் கும்பல் வரும்போது எப்படி ஒவ்வொரு ஆளாக வந்ததோ, அப்படிப் பணக்காரனுக்குச் செல்வம். கொஞ்சம் கொஞ்சமாக வந்துகொண்டேயிருக்குமாம் போகும் போது திடீர் என்று போய்விடுமாம், எல்லாம் ஒரே நேரத்திலே (சிரிப்பு)
“கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று”
நாடகக் கொட்டகைக்கு 5 மணி முதல் ஒவ்வொரு ஆளாக எப்படி வந்துகொண்டேயிருக்கிறார்களோ அப்படியே செல்வம் கொஞ்சம் கொஞ்சமாக வந்து கொண்டேயிருக்கும். போகிறது மட்டும் அப்படிக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் போகாது. திடீரென்று கொட்டகை காலியாய்ப் போகிறது போல ஒரே அடியாய் தொலைந்து போய்விடும் என்பது வள்ளுவர் கண்ட உண்மையாகும்.