வள்ளுவர் கண்ட பெண்

ஆனால், வள்ளுவர் கண்ட பெண் இருக்கிறாளே அவள் ஒரு படி உயர்வு. ‘நான் அரசனுடைய காரணமாகத் தூது போய்விட்டு வருகிறேன்’ என்று புறப்படுகிறான். “சென்று விரைவினில் வந்து விடுகிறேன்” என்று கூறுகிறான். ‘என்னிடம் சொல்லாதே’ என்கிறாள் என்ன? “செல்லாமலிருந்தால் என்னிடம் சொல்லு! சென்று விரைவாக வந்து விடுகிறேன் என்பதானால், அதைக் கேட்டும் உயிரோடு இருக்கிறவளைப் பார்த்துச் சொல்லு!” என்றாளாம்.

“செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை”

“நான் சென்று திரும்பி வருகின்றேன் என்பாயானால், அச்சொல்லைக் கேட்டதும் என் உயிர் போய்விடும். நீ போகாமலிருப்பதாய் இருந்தால் சொல்லு, என் உயிரும் போகாமலிருந்து கேட்டுக் கொண்டிருக்கும்” என்றாளாம். எவ்வாறோ ஆறுதல் கூறி, சென்று, திரும்பி வந்துவிட்டான். வந்த பிறகு இவள் பேசவில்லை. ஏன் பேசவில்லை என்றான். அப்போதும் பேசவில்லை. “பெண்ணே” சென்றிருந்த வேலை மன்னனுடையது. என்றாலும் நான் உன்னையே நினைத்துக் கொண்டிருந்தேன். என் கூட ஏன் பேசவில்லை?” என்றான்.

அதற்கவள், “என்னையா நினைத்துக் கொண்டிருந்தீர்கள்?” என்றாள். “ஆம்” என்றான். ஐயோ! ஐயோ! வென்று அழுகிறாள். என்னையேதானா நினைத்துக் கொண்டிருந்தீர்கள் என்று கேட்டு, அவன் ஆம் என்றதும் ஐயோ! ஐயோ!! என்று அழுகிறாள். ஏன்? சும்மா நான் பேசுவதை நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தால் எப்படி? கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுங்கள். என்னவாயிருக்கும்? இவள் கருத்து என்ன? “ஏன் என்னை நினைத்தாய்? அதற்கு முன்னே என்னை நினைத்தாய்? அதற்கு முன்னே என்னை மறந்திருக்க வேண்டுமே. மறந்திருந்தால்தானே நினைப்பு வரும்? மறந்து விடுவது, பிறகு என்னை நினைத்துக் கொள்வது அப்படித்தானே?’ என்று கேட்டுக் கண்கலங்குகிறாள்.

உள்ளினேன் என்றேன்மற் றேன்மறந்தீர்
புல்லாள் புலத்தக் கனள்.” [என்றென்னைப்

என்பதே அக்குறள். என்ன உயர்ந்த பண்பு பாருங்கள்! அப்புறம் அவன் ஆண்பிள்ளையல்லவா? “சரி பெண்ணே! நான் ஒன்றுதான் இனிமேல் சொல்லுவேன்- என்ன சொல்லுகிறாய்; இந்த உயிர் சுடுகாட்டிற்குப் போகிற வரைக்கும் உன்னைவிட்டு இனிப் பிரியமாட்டேன். நீ நம்பு என்னை” என்றான். “அப்படியா” என்றாள்.“ஆம்” என்றான். ஐயோ! ஐயோ! என்று அழுகிறாள். அந்தக் குறள் கூட இதுதான் பாருங்கள்.

“இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர் கொண்டனள்”

இந்தப் பிறவியிலே நான் உன்னைவிட்டுப் பிரிவதில்லை என்று சொன்னான். சொன்னவுடனே அவள் அழுகிறாள். ஏன் அழுகிறாள்? அப்படியானால் என்னை அடுத்த பிறவியிலே கைவிட்டு விடுவாய் போலும்! என்று சொல்லி அழுகிறாளாம். அவர்கள் வாழ்வு எவ்வளவு உயர்ந்தது பாருங்கள்!

மனைவிக்கு இடம்

மனைவியிடத்திலே கணவன் கொண்டிருக்கின்ற அன்புக்கு ஒரு சொற்றொடர் காட்டுகிறார். என்ன பொருள் பாருங்கள். உலகமெல்லாம் பார்த்துத்தான் மனைவிக்கு இடம் தேடுகிறான். ஒரு கணவன். உள்ளம் நெஞ்சம் எல்லாம் பார்த்து, கண்ணைத் தேடி எடுத்து, கண்ணிலே வெள்ளை விழியை நீக்கிக் கறுப்பு விழியை எடுத்து, கறுப்பு விழியிலே உள்ள ஒரு புள்ளியிலே ஒரு பாவை ஓடுகிறது பாருங்கள். அதைப்பார்த்து,

“கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற் கில்லை இடம்”

“என் மனைவியை வைப்பதற்கு வேறு இடமில்லை நீ போய்விடு! அவளை வைக்கவேண்டும் அந்தவிடத்தில்” என்று கூறுகின்றான். என்னே தமிழனுடைய பண்பு! என்னே தமிழ் கூறும் மேலான காதல்! பாருங்கள். கண்ணிற் கருமணியுட் பாவாய் நீ போய்விடு, இதைவிட என் திருநுதற்கு வேறு இடம் இல்லை. எவ்வளவு பெரிய பண்பு! வள்ளுவர் தம் குறட்பாக்களில் எப்படிக் காட்டியிருக்கின்றார்? என்பதைப் பாருங்கள்.

பஞ்சம்

நான் இப்பொழுது காதல் எது? என்பதை விளக்கச் சிலவற்றைக் கூறினேன்- கம்பர் கண்ட பெண், வள்ளுவர் கண்ட பெண் என்று, நான் கண்ட பெண்ணைப் பற்றியும் சொன்னால் தான் இந்தக் கதை முடியும். (சிரிப்பு) நமது தமிழ்நாட்டுத் தலைவர்கள் ஆர்.கே.சண்முகம் போல உள்ளவர்களெல்லாம் தமிழ்நாட்டுக்கு இப்போது ஓர் இது வந்திருக்கிற தென்று எண்ணி விரைவாக வேலை செய்யவேண்டு மென்று நினைக்கிறேன். தமிழ்நாட்டில் 56 துறைகள் உள்ளன. அந்த 56 துறைகளும் பாழாய்க் கிடக்கின்றன. கல்வித்துறை, கைத்தொழில் துறை, செல்வம், வெளிநாட்டு வாணிகம், அரசியல், சமூகம், பாதுகாப்பு, சட்டம், நிர்வாகம், ஒழுங்கு, ஒழுக்கம் அனைத்தும் பாழ்பட்டுக் கிடக்கின்றன. நாணயமான அரசியல் தலைவர்களுக்குப் பஞ்சம் வந்துவிட்டது. நேர்மைக்குக் கூடப் பஞ்சம் ஏற்பட்டுவிட்டது. எதற்கும் பஞ்சம்.

பேச்சாளிகள்

தமிழ்நாட்டு வடக்கெல்லையெல்லாம் பார்க்கப் போன போது கடப்பை, கர்நூல், அனந்தப்பூர், பெல்லாரி யெல்லாம் போய்ப் பார்த்தேன். அங்கு அதிகமாக விளைந்திருக்கும் பொருள் கூழாங்கல் ஒன்றுதான். அதுபோலத் தமிழ் நாட்டிலே ஒன்று, பேச்சாளிகள்தான் – விளைகிறார்கள்; செயலாளி களைக் காணோம். பேச்சு இவ்வளவு மலிந்து வேறு எங்கும் இருக்காது. அதுவும் செயல் திட்டமில்லாத வெறும் பேச்சாக இருக்கும். பேச்சும் தேவை என்கிறான் பிற நாட்டான். பேச்சே தேவை என்கிறான் தமிழ்நாட்டான். அவ்வளவுதான்!

பெரும் வேலை

இன்றைக்குத் தமிழகத்திலே உள்ள பெரிய தலைவர்களெல்லாம் ஒன்றுகூடிப் பன்னிரண்டு வட்டங்களும் தெற்கே மூன்று – மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி; கிழக்கே மூன்று – திருச்சி, தஞ்சை, தென் ஆர்க்காடு; மேற்கே மூன்று – சேலம், கோயமுத்தூர், நீலகிரி, வடக்கே மூன்று – வட ஆர்க்காடு, செங்கற்பட்டு, சென்னை இந்தப் பன்னிரண்டு வட்டத்திற்கும் நல்ல பெரிய அறிஞர்களாகப் பார்த்துப் பத்துப் பத்துப் பேரைத் தேடியெடுத்து நூற்றிருபது பேர் ஒன்று சேர்ந்து அதற்குத் தமிழர் பேரவையென்று பெயரிட்டு, 56 துறைகளுக்கும் 56 அமைச்சர்களைப் போட்டு ஆக்க வேலைகளை இன்றைக்குத் தொடங்கினால், இன்னும் அறுபது ஆண்டுகளிலாவது, மூன்று தலைமுறை களிலாவது தமிழ் மக்கள் தம் முன்னேற்றப் பாதையிலே வலக்காலை முதற்படியிலாவது எடுத்து வைப்பார்கள். இல்லாவிட்டால் தமிழ்நாடும் அழியும்; தமிழ் மொழியும், தமிழ் மக்களும் அழிந்தே போய் விடுவார்கள். அத்தோற்றம் எனக்கும் காட்சி யளிக்கின்றது. இத்துணைத் துறைகளிலும் எனக்கு 55 துறைகளைப் பற்றிக் கூடக் கவலையில்லை. இந்த 56வது துறை இருக்கிறதே அது எனக்குப் பெரும் கவலையாய் இருக்கிறது.

பெண்மைத் துறை

அது தமிழ்நாட்டுத் தாய்மார்களைக் கொண்ட பெண்மைத் துறையாகும். அது மிகவும் பாழ்பட்டிருக்கிறது. முதலில் உடலில் வலிவு இல்லை. சென்னை மாகாணத்திலே உள்ள பெண்கள் கல்லூரிகள் பலவற்றிலிருந்து எனக்குப் பேசும் படி அழைப்பு வரும். ஆண்டுக்கு ஒருமுறை இருமுறை பல பெண்கள் கல்லூரிகளுக்குப் போய் வருகிறவன் நான். நல்ல உடல் நலமுள்ள பெண்கள் இரண்டு மூன்று பேரைக் கூட அங்கு பார்க்க முடியவில்லை. எல்லாம் பி.ஏ, எம்.ஏ படிக்கின்ற மாணவிகள்தாம். படிக்கும் பொழுதே அங்கு இருமுவதற்கு ஆரம்பித்து விடுகிறார்கள். இன்னும் திருமணம் செய்தால் என்ன ஆவது? (சிரிப்பு) அப்பெண்கள் ஒரு குழந்தை, இரண்டு குழந்தைகளைப் பெற்றால் என்ன ஆகுமோ என்றும் தெரியவில்லை (சிரிப்பு).

திருநெல்வேலியிலிருந்தும், கோயமுத்தூரிலிருந்தும் சென்னை வரைக்கும் சென்று பெண்கள் கல்லூரிகளைப் பார்த்திருக்கிறேன். நூற்றுக் கணக்கான பெண்கள் தமிழை விரும்பிப் படிக்கிறார்கள். ஒரு கல்லூரியில் பெயருக்குமுன் தமிழிலேயே தலைப்பெழுத்தும் போட வேண்டும் என்று சொன்னேன். அடுத்த வருடம் அங்கு சென்றதும் தமிழில் தலைப்பெழுத்துக்கு ஆங்கில எழுத்தைத் தமிழ்ப் பண்ணிவிட்டோமென்று “தா’ னாவுக்கு ‘கூ’ என்று போடாமல் ‘கூாய’ போட்டு, கூரிய பார்வதியென்று கூப்பிடச் செய்திருப்பதைக் கண்டேன். பள்ளிப் பெயர்ப் பதிவுக் கணக்கில் கூட அப்படியே! அவ்வளவு தமிழ் உணர்ச்சி இப்போது பெண்களுக்கு வந்திருக்கின்றது. ஆனால், பாவம், எல்லாம் தட்டைக் குச்சிகளாய், எலிக்குஞ்சுகளாய் உடல் மெலிந்துபோயிருக்கின்றன.

உடல்நலம் குறைவது ஏன்?

தமிழ்நாட்டுத் தலைவர்களே! உடனடியாக ஒரு குழு நியமித்து நன்கு ஆய்தல் வேண்டும். இந்த இளம் பெண்கள் இவ்வளவு உடல்நலம் குன்றுவது ஏன்? படிப்பினாலேயே குன்றுகிறதா? சமுதாயத்தினாலேயே? அல்லது இந்தப் பவுடர் முதலிய மேல்நாட்டுப் பூச்சுகள் காரணமா? மஞ்சள் பூசாத காரணமா? சோப்பு நாகரிகமா? உடல் உழைப்பு இல்லாமையா? படிக்கின்ற ஆண் பிள்ளைகளைப் போல வெளியில் சென்று உலவி நல்ல காற்றில் தோய்ந்து கதிரவன் ஒளிக் கதிர்களில் மூழ்காததனாலா? சாணியைத் தொட்டு, பிசைந்து, கரைத்து, காலையிலே போடாமலிருக்கிற காரணமா? படுக்கை விட்டெழுந்தவுடன் பல் துலக்காமல் கூடக் காப்பி குடிக்கின்ற காரணமா? உணவு மாற்றமா? படிப்புத் தான் உடம்பை உருக்குகிறதா? கண்டுபிடிக்க வேண்டும். எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. விரைவினில் ஒரு குழு நியமித்து எத்தனை நூறாயிரம் ரூபாய்களையாவது செலவு செய்து, இதை ஆராய்ந்து உண்மையைக் கண்டுபிடித்து அந்த வடிகாலை அடைக்காவிட்டால், இன்னும் இருபது முப்பது ஆண்டுகளுக்குள் வீரர்களைப் பெற்றெடுக்கின்ற தாய்மார்களே, மறக்குடி மங்கையரே இல்லாது அழிந்து போய் விடுவார்களென்று நான் அஞ்சுகிறேன். அவ்வளவு பெரிய ஆபத்து இன்று தமிழகத்தைச் சூழ்ந்திருக்கின்றது.