ஒற்றுமை
அதிலே இல்லாதது ஒன்றுமில்லை. ஒரே மேடையில் அரசியல் தலைவர்களெல்லாம் உட்கார்ந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள், திராவிடச் கழகக்காரர்கள், சோஷிய லிஸ்ட்காரர்கள், பொது வுடைமைக்காரர்கள் எல்லாரும் சில சமயங்களில் ஒன்றாக உட்கார்ந்திருப்பார்கள். எல்லோரும் ஒன்றாகி விட்டார்களென்று நீங்கள் நினைப்பீர்கள். இல்லையென்று சொல்லுகிறார் அவர். பங்காளிகளெல்லாம் சேர்ந்து காது குத்துகிறதற்கு மாமன் மைத்துனன் முன்னாலே ஆண்டவனுக்குப் பூசை போடும் போது எல்லோரும் ஒன்றாக இருப்பார்கள். ஆனால், உள்ளத்தே ஒற்றுமையிராது. வஞ்சினம் குடிகொண்டிருக்கும். ‘இந்தப் பயல்களை நம்பாதே’ என்கிறார் வள்ளுவர். எல்லாரும் கூடியிருக்கிறார்களா? ஆமாம் எங்கே கூடியிருக்கிறார்கள்? இல்லை என்கிறார்- என்னய்யா இவ்வளவு பேர் ஒன்றாகக் கூடியிருக்கிறார்களே என்றால், எனக்குச் சொன்னால் தெரியாது என்று குயவனிடத்திலே போய் ஒரு பானையையும் ஒரு மூடியையும் எடுத்துக்கொண்டு வந்து அதன்மேல் மூடிக் காட்டுகிறார். சேர்ந்து இருக்கிறதா? ஆமாம், எங்கே சேர்ந்திருக்கிறது?” என்று பிரித்துக் காட்டுகிறார்.
“செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி”
உள்ளத்திலே பகை இருக்கிறது. உதட்டிலே உறவு இருக்கிறது. இரண்டும் சுட்டது. சுட்ட சட்டி எப்படி ஒட்டும்; ஈரமண்ணாயிருந்தால் தான் ஒட்டும் “செப்பின் புணர்ச்சி போல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி” என்ன அழகாய் அவர் கண்டு பிடித்து உவமை சொல்லியிருக்கிறார் பாருங்கள். எதை எடுத்தாலும் இப்படித்தான்.
விருந்து
விருந்தினரைப் பற்றி வள்ளுவர் சொல்லுகிறார். ஐந்தாம் ஜார்ஜ் அரசருக்குப் பட்டம் சூட்டும்பொழுது, தமிழ் நாட்டிலே ஒரு மரம் வைத்திருந்தார்கள், வெயில் அடிக்கிற வரைக்கும் தழைகளை விரித்துக் கொண்டிருக்கும். மாலை நேரம். ஆனால் இலைகள் ஒட்டிக் கொள்ளும் மரம் அது. இருளுக்குச் சிணுங்கும் மரம் அது. மரம் என்ன? செடி ஒன்றிருக்கிறது. ஆள் சென்று தொட்டால் சுருங்கிவிடும். விரலை எடுத்தால் விரியும். தொட்டாற் சிணுங்கிச் செடி அது. பூவில் ஒன்றிருக்கிறது. அப்பூவில் கைபட வேண்டியதில்லை. கிள்ள வேண்டியதில்லை. கசக்க வேண்டியதில்லை. அருகில் போய் மோந்தால் குழைந்து விடும் அது அனிச்சப் பூ. அனிச்சம் அது. மோந்தாலே அந்தப் பூ குழைந்து கசங்கித் தண்ணீராய்ப் போய்விடும். விருந்தாளிகளுடைய முகம் இருக்கிறதே அது இதைவிட அனிச்சமென்கிறார் அவர். வெயில் போனால் காய்ந்து போய் ஒட்டுகிற இலையை விட, தொட்டால் சிணுங்குகிற செடியை விட, மோந்தால் குழையும் பூவைவிட, விருந்தாளி வந்தவுடனே அவனை, வெயிலில் போட வேண்டியதில்லையாம். தொட வேண்டிய தில்லையாம். முகக்க வேண்டியதில்லையாம். “பாவிப்பயல் வந்து சேர்ந்தாண்டா சோத்துக்கு இந்த நேரத்திலே” என்று மனத்தில் நினைத்தாலே, விருந்தாளியின் முகம் குழைந்துவிடுமாம்.
“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து”
எப்படி? இக்குறள் பாருங்கள்! அனிச்சப் பூ மோந்தால் தான் குழையுமாம்; விருந்தாளியின் முகம், வேறுபட்ட முகத்தை அப்படிக் காட்டினாலே குழைந்து போய்விடுமாம். “சரிங்க, நான் வருகிறேனுங்க” என்று பெட்டியை எடுத்துக் கொண்டு போய் விடுவானாம். “ஏன் சாப்பிட்டு விட்டுப் போகலாமே?” என்றால் – “இல்லை இல்லை, எனக்குப் பசியே இல்லை” என்று போய் விடுவானாம். எப்படி விருந்து?
பணிவு யாருக்கு?
இன்னும் ஒன்று பெரிய கேள்வி, விறைப்பா யிருக்கிறது நல்லதா? பணிவாயிருக்கிறது நல்லதா? ஆராய்ந்து பாருங்கள். நான் மிகவும் பணிவாயிருக்கிறது நல்லது என்று படித்தவன். அப்படி இருக்காதே என்று கூறுகின்றார் வள்ளுவர்.
விறைக்கலாமா? என்றால் அப்படியும் இருக்காதே என்கிறார். பணிவாயிருக்கிறது எல்லோருக்கும் நல்லது என்று பல புலவர்கள் சொன்னார்கள். எவனுக்கும் தலைவணங்கா திருப்பது தான் சிறப்பு என்று சில புலவர்கள் சொன்னார்கள். வள்ளுவரைப் போய்க் கேட்டால், “நீ யார்? துப்புடையவனா? அற்றவனா?” என்று கேட்கிறார். “துப்பு துப்பு” என்றால் பணம் படைத்தவன் துப்புடையவன்; புலமையுடையவன் துப்புடையவன்; பத்து ஆளுடையவன் துப்புடையவன்; பலம் உடையவன் துப்புடையவன்; ஆடு, மாடு, நிலம், நீர்,நெல் முதலியவைகளை வைத்திருக்கிறவன் துப்புடையவன். இவைகளில் ஒன்றுமில்லாதவனைத்தான் “துப்பற்ற பயல்” என்று குறிப்பிடுவதுண்டு. நீ துப்புடையவனா? அற்றவனா? என்கிறார் – நான் துப்புடையவன் என்றால் பணிகிறது நல்லது என்கிறார். எனக்கு ஒன்றும் இல்லை ஏழை என்றால், விறைப்பாயிருக்கிறது நல்லது என்று கூறுகிறார். கேள்வி கேட்டுக் கொண்டு பதில். இத்தகைய உயர்ந்த எழில் மிகுந்த கருத்தை எவர் சொல்வார்? கடுமையாகவா இருக்கிறது குறளைப் பாருங்கள்.
“பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு”
உயர்வும் பணிவும்
சாப்பிடக் கூப்பிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். நீங்கள் பெரிய பணக்காரராக இருந்தால்; கூறுங்கள். அப்போதுதான் அவனுக்கு மகிழ்ச்சி. உங்களை வாழ்த்துவான், பாதையில் போகும்போதுகூட, “அவரா எங்கள் வீட்டிலே சாப்பிட்டுவிட்டு, இப்பொழுதுதால் வண்டி ஏறிக் கொண்டு வீட்டுக்குப் போகிறாங்கோ’ என்றெல்லாம் சொல்லிக் கொள்வான். ஆனால், நீ ஒன்றும் இல்லாதவனாயிருந்தால், எவரும் “சாப்பிடு” என்றால், உட்கார்ந்து விடாதே. அது உனக்கு உயர்வு தராது என்கிறார் வள்ளுவர். மறுத்துச் சொல்லிப் போனால்தான் இன்னொரு நாளைக்கும் கூப்பிடுவானாம். சாப்பிடுங் களென்று. இந்த நான்கு அணாவை வைத்துக் கொள்ளுங்கள் என்றால், “இல்லை வேண்டாம்” என்று போய்விடவேண்டும். இல்லாதவன் உயர்ந்து காட்ட வேண்டுமாம். இருக்கின்றவன் பணிந்து காட்ட வேண்டுமாம்.
“பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு”
எப்படி! வள்ளுவர் வாழ்க்கைக்கு வேண்டிய திட்டங்கள் எல்லாம் எப்படிப் போட்டுக் கொடுத்திருக்கிறார்? பாருங்கள்!
காதல்
தாய்மார்கள் சிலர் வந்திருக்கிறார்கள். அவர்களுக்காக இரண்டு சொல்ல வேண்டும் அல்லவா? முதலிலே வள்ளுவர் கண்ட பெண்ணைவிடக் கம்பர் கண்ட பெண்ணை உங்களுக்குச் சொன்னால் நன்றாயிருக்கும்.
கம்பர் கண்ட பெண்
கம்பர் ஒரு பெண்ணைக் கண்டார் (சிரிப்பு). அறம் சொல்லி ஆயிற்று; பொருளும் சொல்லி ஆயிற்று. இன்பத்தையும் சொன்னால்தானே குறள் முடியும்? அதற்காகச் சொல்லுகிறேன்.
கணவன் சோறு கொண்டுவரச் சொல்லிவிட்டுப் போய் நிலத்தை உழுகின்றானாம். பஞ்சைவிட மெல்லியதாய் அவன் உழுது விட்டானாம். அவன் மனைவி சோறு கொண்டு போனவள், உழுதுகொண்டு போகிற தன் கணவன் அறியாமல் பஞ்சின் மெல்லடிப்பாவை, பஞ்சைவிட மெல்லிதாக உழுத அந்த மண்ணிலே தான் வருகின்ற ஓசை தெரியாமல் காலை வைத்துப் போய், சோற்றைக் கீழே வைத்து விட்டு, அவன் கண்ணைப் பொத்தினாளாம். அவன் ஏரை விட்டு விட்டு “யார்?” என்றானாம். இவள் கண்ணை விட்டு விட்டு அழுகிறாளாம். குய்யோ முறையோ! என்று. இவ்வளவுதான் பாட்டு! எதற்காக? என்ன செய்தான்? ஏன் அழுகிறாள்? ஏன் கண்ணைப் பொத்தினாய்? என்று திட்டவில்லை. வேலை செய்கிறது தெரியவில்லையா? என்று அடிக்கவில்லை. கையை இழுத்து எடுத்துவிடவில்லை. நகம் ஏதும் பட்டுவிடவில்லை. ஒன்றுமே இல்லை. அவன் கேட்ட அதெல்லாம் “யார்?” என்பதுதான். அவ்வளவுதான்! அவள் அழுகிறாள்! பாட்டு வேண்டுமா?
“ஆரென்னலோடும் அனலென்ன வெய்து உயிர்த்தாள். “யார்” என்றானாம். அனல் மாதிரிக் கண்ணீர் உகுத்து அழுது அலறுகிறாளாம். என்ன கருத்து. “ஐயோ பாவி! நீ வீட்டிலிருந்து இங்கே வந்து நிலம் உழுகிறாய் என்றல்லவா நான், இவ்வளவு நாட்களாய் நினைத்துக் கொண்டிருந்தேன். கண்ணைப் பொத்தினவுடனே மனைவிதான் கண்களைப் பொத்த உரிமையுடையவளென்று நினைத்து, ‘ஏண்டி கமலம்’ என்று என் பெயரைச் சொல்லிக் ‘கையை எடு’ என்று ஏன் சொல்லவில்லை? ‘யார்’ என்று கேட்கக் காரணம் என்ன? இங்கே பல பெண்கள் வந்து உன் கண்ணைப் பொத்துவார்கள் போலிருக்கிறது (சிரிப்பு). நீ. யார்? யார் யார்? என்பாய் போலிருக்கிறது. அவள் ஒவ்வொருத்தியும் மீனாட்சி, காமாட்சியென்பாள் போலிருக்கிறது அப்படியென்றால் கண்ணை விடு என்று சொல்லிக் கொண்டிருப்பாய் போலிருக்கிறது. இந்தத் திருவிளையாடல் இங்கு நடைபெறுகிறதோ? ஐயோ! ஐயோ!! என்று அழுகிறாளாம் (சிரிப்பு). இப்படிப்பட்ட பெண்ணும், அப்படிப்பட்ட ஆணும் கூடி வாழுகிற நாடு அயோத்தி என்று அந்த நாட்டுச் சிறப்பிலே சொல்லிக் கொண்டு போகிறார் கம்பர்.