வணிகரும் வள்ளுவரும்

“நீங்கள் முன்னமேயே குறளைப் படித்திருந்தால் இதுவெல்லாம் நடந்திருக்காதே” என்றேன் – ஏன்?” என்றார். ‘இந்தக் கதையெல்லாம் திருக்குறளில் இருக்கிறதே” என்றேன். “அந்த முதல் ஆள் கதையா?” என்றார். “முதல் ஆளாவது இரண்டாவது ஆளாவது? முதல் ஆள் கதை, இரண்டாவது ஆள் கதை, உங்கள் கதை எல்லாம் இருக்கிறது குறளில்!” என்றேன்- அப்போது, “ஐந்து, ஆறு அதிகாரத்திலா” என்றார். “இல்லை, இல்லை, ஒரே குறளில் இருக்கிறது” என்றேன்- “எங்கே?” என்றார் – பாருங்கள்.

“தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்”

“தேரான் தெளிவும்”, நம்பிக்கை வைக்கத் தகாதவன் மீது நம்பிக்கை வைத்தலும், “தெளிந்தான் கண் ஐயுறவும்” அப்படி நம்பிக்கை வைத்த பிறகு அடிக்கடி அவன் மீது சந்தேகப்படுதலும், “தீரா ஒழுங்காய் இடும்பை தரும்” கடையே மூடப்படும் என்று இருக்கிறது (சிரிப்பு). அப்படியே இருக்கிறது அந்தக் குறளில் (சிரிப்பு). அந்தக் கடை மூடிகிறதில்கூட மூடிவிட்டால் திருப்பித் திறக்க முடியாதபடி மூடப்படும் என்றிருக்கிறது என்றேன். இப்போது அவர் குறளை வாங்கிப் படிக்கிறார்.

குறள் கடல்!

குறளில் இல்லாதது ஒன்றுமில்லை. எல்லாம் இருக்கிறது. நீங்கள் எதுவேண்டுமோ, அதைத் திருக்குறளிலே பார்க் கலாம். அது ஒரு பெரிய செல்வம்! ஒரு கடல்! முத்துக் குளிக்கிற ஒருவன் தன்னுடைய வலிமைக்குத் தகுந்த அளவிற்கு இவன் ஆழமாக மூழ்கி நிறைய முத்துகளை அள்ளி அள்ளிக் கொண்டுவந்து குவிப்பது போல, நீங்களும் குறளில் முழுகி, செல்வங்களைப் பெற்றுப் பயன்படுத்தி, பிறருக்கும் அள்ளி அள்ளி வழங்கலாம்.

மாணவர்கள்

“திருக்குறளிலே இல்லாதது ஒன்றுமில்லையா?” என்று கேட்பார்கள். அந்தக் காலத்திலேயே நான் சிறு பிள்ளையாயிருந்து படிக்கும் பொழுது ஓர் ஆசிரியர் திருக்குறளில் எல்லாம் இருக்கிறது என்றார். துப்பாக்கி இருக்கிறதா? என்றான் ஒருவன்- ஓ ! இருக்கிறதே என்றார். (சிரிப்பு)

துப்பாக்கி குறள்

“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை”

என்பார் ‘ஓ! ஐந்து, ஆறு துப்பாக்கி இருக்கிறதா? சரிதான்’ என்பான். (சிரிப்பு)

குறளும் கிராப்பும்

என்னுடன் ஒரு பையன் படித்துக் கொண்டிருந்தான். அவன் இந்த கிராப் செய்கிறதற்குத் திருக்குறளில் ஏதாவது இருக்குங்களா? என்றான் – (சிரிப்பு) ஓ! இருக்கிறதே!

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்”

என்று துறவிகள் இரண்டு பிரிவு. “ஏ” ஒன்று “பி” ஒன்று. இந்த ‘ஏ’ பிரிவு. அடியோடு மழுங்க மொட்டை யடித்துக் கொள்வார்கள் (சிரிப்பு) ‘பி’ பிரிவு நீளமாய்ச் சடையை வளர்த்துப் பிரிமணை மாதிரித் தலையிற் சுற்றி, அதன்மீது காவித் துணியைக் கட்டிக் கொண்டிருப்பார்கள்.

வள்ளுவர் சொல்லுகிறார். உண்மையான துறவிகளுக்கு இந்த இரண்டு வேடமும் தேவையில்லை. உலகம் பழிக்கின்ற தவறான செயல்களை ஒழித்து விடுவது ஒன்றே துறவிகளுக்கு வேண்டுவது’ என்று கூறுகிறார். “மழித்தலும் நீட்டலும் வேண்டாம்’ எப்போது? “உலகம் பழித்தது ஒழித்துவிடின்” மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என்று துறவிக்குச் சொன்னார். இப்போது நான் உங்களைக் கேட்கிறேன் – “மிகவும் நீளமாக வளர்க்காதே. மொட்டையும் அடித்துக் கொள்ளாதே” என்றால், கிராப் பண்ணிக்கொள் என்று தானே பொருள்! (சிரிப்பு) இம்மாதிரியான குறள்கள் மாணவர்களுக்குப் பொருட் செறிவோடு நகைச்சுவையும் அளிப்பதாக இருக்கும்.

திருடர்கள்

இரயில் நிலையத்தில் ஒருவன், “நாலணா கொடுங்கள் ஐயா! நாலணா கொடுங்கள்” என்றான். ‘ஏன்?’ என்றேன். என்ன சொன்னான் தெரியுமா?

“மணிபர்ஸ் எவனோ பிக்பாக்கட்காரன் அடிச்சிட்டுப் போயிட்டாங்க! போயிடுச்சிங்க. இப்ப இரயில் சார்ஜுக்குப் பணம் இல்லீங்க. கொஞ்சம் கொடுங்க!” என்றான். “சரிதான்! அவன் குறள் படித்திருக்கிறவன் போல் இருக்கிறது” என்றேன். ‘பிக்பாக்கட்காரன் கூடவா குறள் படிக்கணும்? படித்திருப்பான்?” என வியப்போடு கேட்டான். ஆம். அவனுக்குக் கூட அதில் செய்தி இருக்கிறது என்றேன்.

திருடர்க்குச் செய்தி

“கொக்கொக்க கூம்பும் பருவத்து” கொக்கு எப்படி இருக்கிறதோ அம்மாதிரி காலம், நேரம், இடம், வாய்ப்பு ஏற்படுகிற வரை பொறுமையாகப் பார்த்திருந்து, ‘கொக் கொக்க’ அப்படிக் கொக்கின் வாய் மாதிரி இரண்டு விரலைக் கூட நீட்டிக்கொண்டிருந்து, வாய்ப்பு ஏற்பட்டதும் அடித்துக் கொண்டு போய்விடுவதாகும்.

“கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து.”

இக்குறளை அவர் மன்னர்களுக்குச் சொல்லி யிருக்கிறார். மன்னர் காலம் நேரம், இடமெல்லாம் பார்க்கிறபோது கொக்கு மாதிரிப் பொறுமையாயிருக்க வேண்டும். படையெடுக்கும் காலம் வந்துவிட்டால், ‘குத்தொக்க சீர்த்த இடத்து’ அதேமாதிரி தான் ஜேப்படித் திருடர்களும் கையை வைத்துக் கொண்டே, எப்படி? எந்தவிடத்தில்? எந்த விதத்தில் முண்டா கொடுக்கலாம்? என்று எண்ணி – ‘கொக்கொக்க’ இருந்து, ‘குத்தொக்க அடித்துக் கொண்டு போய்விடுகிறார்கள் என்றேன். (சிரிப்பு).

நீங்கள் சொல்லும் பொழுது என்னய்யா பிக்பாக்கெட்காரனுக்கு, மணிபர்ஸ் அடிக்கவா வள்ளுவர் குறள் எழுதினார்? என்று கேட்டுக்கொண்டு போகாதீர்கள். இங்கேயே கேட்டுவிடுங்கள். அவனுக்கு மட்டும் சொல்லவில்லை. நமக்கும்தான். நாம் திருக்குறளைப் படித்திருந்தால் எந்தப் பயலாவது திருட வந்தால் சட்டைப் பையில் விரலை மாட்டிக்கொள் என்கிறார். அவனைப் பார்த்து “எங்கேடா?” “கொக்கொக்க” “எங்கே கொக்கொக்க? (சிரிப்பு சட்டைப் பையில் விரலை மாட்டிக் கொண்டு, எங்கே கொக்கொக்க?” என்றால் என்ன செய்வான்? சரி இந்தப் பயலும் திருக்குறளைப் படித்திருக்கிறான் போலிருக்கிறது படிக்காதவனைப் பார்க்கலாமென்று போய் விடுவான் அவன் (சிரிப்பு). இவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவாவது நாம் திருக்குறளைப் படிக்க வேண்டும். அவ்வளவுதான். யாருக்கு, என்ன இல்லை திருக்குறளிலே? எல்லாம் இருக்கிறது குறளில்.