தவறான கருத்து

ஆனால் அந்த நல்ல உரையிலும் பல குறள்களுக்குத் தவறான கருத்துக்களை அவர் கூறியிருக்கிறார். அதுவும் சொல்லித் தானே தீர வேண்டும். அதிலே இந்தக் கருத்தும் ஒரு தவறான கருத்து. அவர் சொல்கிறார் சூதாடுகிறவனிடத்தில் போய்ச் சூதாடாதே என்று ஏன் சொன்னார். சூதாடுகிறவன் இன்றைக்கு ஒரு ரூபாய் ஜெயிப்பானாம் அந்த ஆசையாலே நாளைக்கு நூறு ரூபாய்களைத் தோற்று விடுவானாம். “ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்” என்று சொல்லுகிறார். இது சரிதான். ஓர் அளவுரை மேற்போக்காகப் பார்த்தால்! கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் தப்பு என்று படுகிறது. இப்பொழுது நானும் நமது தலைவரும் சீட்டு ஆடுகிறோம் என்று வையுங்கள். நான் இன்றைக்கு ஒரு ரூபாய் ஜெயித்து, நாளைக்கு நூறு ரூபாய் தோற்றுவிடுகிறேன். எனக்குப் பொருந்துகிறது கருத்து. அவர் ஒரு ரூபாய் தோற்று நூறு ரூபாய் ஜெயித்தவராகி விட்டாரே. அவருக்கு எப்படி பொருந்தும் இந்தக் குறள்? வள்ளுவர் அவ்வளவு மோசமான ஆளா? ஒருதலைச் சார்பாக இருக்காதே அவர் நீதி. எனக்கும் அவருக்கும் பொருந்துகிற மாதிரி யல்லவா ஒரு பொருள் இருக்க வேண்டும். அதில் பரிமேலழகர் பொருளைக் கொண்டால் ஒரு ரூபாயை ஜெயித்து நூறு ரூபாயைத் தோற்கிறவனுக்கு மட்டும் சொல்லியிருக்கிறதே தவிர, அவனோடு விளையாடி ஒரு ரூபாயைத் தோற்றுவிட்டு நூறு ரூபாயை ஜெயிக்கிறவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை என்றே கொள்ள வேண்டியிருக்கும். அப்போது உண்மையான பொருள் எனன? துருவிப் பார்த்தால் அறிவுக்குத் தீனி கிடைக்கிறது. என்ன தீனி? பணத்தின் எண்ணிக் கையிலே போய்விட்டார் பரிமேலழகர். அவ்வளவுதான். வள்ளுவர் பணத்தின் மேற் போகவில்லை.

எல்லாம் இழக்கும் சூதாடி

சூதாடிப் பயல் நூறை இழந்து விடுவானாம். நூறு என்றால் ரூபாயல்ல; மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், முயற்சி, தாளாண்மை, இன்பம், பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர், நாட்டார், ஆடு, மாடு, வண்டி, வாகனம், நீர், நிலம், பொன், பொருள், போகம், ஆடை, அணி அத்தனையும் இழந்து விடுவானாம் சூதாடி; எல்லாவற்றையும் இழந்துவிட்டு, ஒன்றே ஒன்றைமட்டும் பெறுவானாம். என்ன அது? “சூதாடிப் பயல்” என்ற பெயரைத்தான் பெறுவானாம். இவ்வளவும் குறளிலேயே இருக்கிறது. திரும்பி இப்பொழுது படியுங்கள். பொருள் விளங்கும். ஒன்று பெறுவான் என்பதை முன்னமே சொல்லி விட்டார். “ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்” அவன் எய்திய பட்டம் அதுதான். ஒன்றை எய்தி நூறு இழக்கும் சூதர். ஒன்றுக்கு வந்துவிட்டது சூதர் என்று, இழக்கிற நூறை எப்படிச் சொல்லுகிறார். வாழ்க்கைக்கு வேண்டியது அத்தனையும் சூதாடிப் பயல் இழந்துவிடுவான். இழந்து விட்டதனாலே அவனுக்கு நல்ல வாழ்க்கை ஏது? என்று கேட்கிறார் பாருங்கள். “ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல், நன்றெய்தி வாழ்வதோர் ஆறு?” ஒன்றைப் பெற்று நூறை இழக்கின்ற சூதாடிகளுக்கு நல்லவைகளை எய்தி வாழ்கின்ற வாழ்க்கை ஏது? என்றே நம்மைக் கேட்கிறார். எவ்வளவு பெரிய உயர்ந்த கருத்துப் பாருங்கள்!

குடி

எல்லோருக்கும் நீதி சொன்ன வள்ளுவர் ‘கள்’ குடிக்கிறவனுக்கு மட்டும் ஒன்றும் சொல்ல மாட்டேன் என்கிறார். இப்போது கள் ஒழிந்து போய் விட்டது. நடைமுறையிலே? பழக்கத்திலே…? (சிரிப்பு) இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள் ‘குடி தீமை தரும்’ என்று. வள்ளுவர் அந்தக் காலத்திலேயே கண்டுபிடித்து ஒழித் திருக்கிறார். இப்போது சேலத்திலே ஒரு கூட்டமே இத் தொழிலை நடத்துகிறது. முன்பு வரி கொடுத்துக் கள் விற்றுக் கொண்டிருந்தது ஒழிந்து இப்போ வரி கொடுக்காமல் கள் விற்கிற வேலை நடந்து கொண்டிருக்கிறது. ஒசூரில் ஒரு கூட்டத்தார் 90 பேர் சேர்ந்திருக்கிறார்கள். என்னமோ அதிகமாகத் தண்டித்தால் மூன்று மாதம் தண்டிப்பார்களாம். 90 பேர் மனைவி மக்களோடு இந்தக் கம்பெனியிலே சேர்ந்திருக்கிறார்கள். விற்கிறவனைப் பிடித்துக் கொண்டு போய்ப் போலீசார் அடைத்து விடுகிறார்கள். மூன்று மாதம் தண்டனை கிடைக்கிறது. போய் விடுகிறார்கள். அடுத்த நாள் இன்னொருவன் வந்து விடுகிறான். அந்த இடத்துக்கு வரிசைக் கிரமமாக இருக்கிறார்கள். அந்த 90 பேரும்.

இரண்டாவது ஒருவன் வருகிறான். அவனைப் பிடித்துக் கொள்ளுகிறார்கள். மூன்றாவது ஒருவன் 88வது ஆளும் போயிடுவான். 90 வது ஆளையும் 90ஆம் நாள் பிடித்து விடுவார்கள்.

91ஆம் நாளில் முதலில் சிறைக்குக் சென்றானே அவன் வந்திடுவான் காய்ச்சுகிறதுக்கு. அப்படி அந்தச் சக்கரம் சுற்றுகிறது (சிரிப்பு) கம்பெனி ஒழுங்காய் வேலை செய்கிறது. காய்ச்சுகிறது. விற்கிறது. பணம் வருகிறது. எந்தக் கம்பெனி ஐ.பி. கொடுத்தாலும் இந்தக் கம்பெனி கொடுக்காது. ஒழுங்காக நடக்கிறது. அந்தத் தொழில்கள் ஒழிந்து போய்விட்டது என்கிறார்கள். ஆனால் இருக்கிறது.

குடிகாரன்

வள்ளுவர் அந்தக் காலத்திலேயே கள் குடிக்கிறவனுக்கு மாத்திரம் நான் புத்தி சொல்ல மாட்டேன் என்றார். ஏன் ஐயா! கொஞ்சம் சொல்லுங்களேன் என்றால், சொல்ல மாட்டேன் என்று கூறுகிறார். காரணம் கேட்டால், “எப்படிப் பட்டவனுக்கும் புத்தி சொல்லி அவனைத் திருத்திவிடலாம். குடிகாரனுக்கு மட்டும் புத்தி சொல்லி அவனைத் திருத்த முடியாது” என்று கூறுகிறார். அப்படிச் சொன்னால் நமக்கும் தெரியாதாம். அதற்கு ஓர் உவமையும் சொல்லுகிறார். குடிகாரனுக்குப் புத்தி சொல்லி அவனைத் திருத்துகிற வேலை பயனற்றது. தண்ணீரில் முழுகினவனைத் தீவட்டி பிடித்து தேடுகிற மாதிரி அந்த வேலை என்கிறார். குடிகாரனுக்குப் புத்தி சொல்லித் திருத்துகிற வேலை தண்ணீரில் மூழ்கிப் போனவனை எங்கே அவன் உடல் இருக்கிறது? என்று தீவட்டி பிடித்துத் தேடுகிற மாதிரியாம். விளக்கைப் பிடித்து அவனைத் தேடுவது வீண் முயற்சி என்று சொல்கிறார். இதிலே ஒரு என்ன தெரியுமா?

விளக்கெண்ணெய் ஊற்றிப் பந்தம் சுற்றி எரிகிற தீவட்டி தண்ணீரிலே நுழையும் போதே “சொய்” என்று அணைந்து போகுமாம். குடிகாரனுக்குச் சொல்லுகிற புத்தியும் அப்படியே காதிலே “சொய்” என்று அணைந்து போகுமாம்; உள்ளே போகாதாம். அங்கே கற்பனை வேறு ஓர் அழகு (சிரிப்பு) நான் சொல்ல மாட்டேன் என்கிறார். ஐயா! இப்படிச் சொல்லிவிட்டுப் போகலாமா? ஏதாகிலும் சொல்லுங்கள் என்று ஒருவன் கேட்கிறான். வள்ளுவர் அவனை விட்டுவிட்டு நம்மைக் கேட்கிறார். இந்தக் குடிகாரன் குடிப்பான் அல்லவா? குடிப்பான். என்றைக்காவது ஒருநாள் குடிக்காமல் இருப்பானல்லவா? இருப்பான். அப்போது, குடித்த ஒருவனைப் பார்க்க மாட்டானா? பார்ப்பான்! ஏன், பாதையில் அவன் கால் மாறி மாறி மாறு நடை போடுகிறது? நடை போடுகிற அழகு. அவன் வாயில் ஊறி நெஞ்சில் வழிகிற எச்சில், போகிற போக்கு! ‘ஏய் யார்ரா அவன் என்னைப் பார்க்காமல் போர்ரவன்?” என்று அவன் பேசுகிற பேச்சு! வாய் குழறுதல்! இக்காட்சிகளைப் பார்க்க மாட்டானா? பார்ப்பான். ‘பார்த்தால் குடிக்க மாட்டானே’ என்று சொல்லுகிறார். குடிக்கிற ஒருவன் குடியாதபோது குடித்தவனைப் பார்த்தால் நாமும் குடித்திருக்கிறபோது இப்படித்தானே பிறரால் இகழப் படுவோம் என்று எண்ணுவானே! எண்ணியபின் குடிக்க மாட்டானே? என்று நம்மைக் கேட்கிறார்.

“கள்ளுண்ணாப் போழ்தில் களித்தானைக்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு?”

என்ன கேள்வி பாருங்கள்! கள் உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால் உள்ளான் கொல். நினைக்க மாட்டானோ, உண்டதன் சோர்வு? “நாமும் குடித்தால் இப்படித்தானே சீரழிவோம் மக்கள் முன்னே! என்று எண்ணமாட்டானா? எண்ணுவான்! எண்ணினால் கள் குடிக்க மாட்டானே!” என்கிறார்.

தாயும் சான்றோரும்

பெற்ற தாயையும், சான்றோரையும் கொண்டு வந்து நம் முன்னே நிறுத்துகிறார் வள்ளுவர். இரண்டு பேருக்கும் இலக்கணம் சொல்லுகிறார். பெற்ற தாய் என்ன குற்றம் செய்தாலும் பொறுப்பாளாம். சான்றோர் ஒரு சிறு குற்றம் செய்தாலும் பொறுக்க மாட்டார்களாம்.

இது இருவருக்கும் இலக்கணம். அம்மா! உன் மகன் சூதாடிக் கொண்டிருக்கிறான் என்று ஒருவன் போய்ச் சொல்வானாம். போடா! ஆடமாட்டானே வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான் என்பாளாம். அந்தத் தாய் உள்ளத்தை அப்படிப் படம் பிடித்துக் காட்டுகிறார். அம்மா! உன் மகன் திருடிவிட்டான் என்று போலீஸ்காரன் பிடித்துக் கொண்டு போகிறான் என்று ஒருவன் சொல்லுவானாம். “ஐயோ! என் மகன் திருட மாட்டானே; எந்தத் திருட்டுப்பய பிள்ளையோ என் பிள்ளையைக் கூட்டிக் கொண்டு போயிருக்கும்” என்று ஓடுவாளாம். எந்தத் திருட்டுப் பய பிள்ளையோ இவள் பிள்ளையை கூட்டிக் கொண்டு போய்விட்டதாம். திருடமாட்டானே என்று ஓடுவாள். சூதாடப் பணம் கேட்பானாம். “ஏண்டா கெட்டுப் போகிறே!” என்று கூறிப்பணமும் கொடுப்பாளாம் (சிரிப்பு) என்றைக்காவது ஒரு நாள் திருந்திவிடுவான் என்கிற அந்த ஆசை! பத்துத்தடவை கொடுப்பாளாம். பதினோராவது தடவை இல்லையென்று கூறிக் கடன் வாங்கி கொடுப்பாளாம். பன்னிரண்டாம் தடவை கேட்பானாம்

“இல்லை” யென்பாளாம். – ஓங்கி அறைவானாம் – அறைந்தவுடனே இரண்டு பற்கள் விழுமாம். இரத்தம் கொட்டுமாம்.

“பாவிப் பயலே! ஏண்டா அடிக்கிறே?” என்னுமாம் அவள் வாய் அவள் உள்ளம் நினைக்குமாம்? ‘நான் பெற்ற பிள்ளைக்கு எவ்வளவு வலுவு இருக்கிறது’ அடித்தா பல் விழுகிறதே’ என்று மகிழுமாம் (சிரிப்பு). இவ்வளவு வலுவு இருக்கிறதே’ அடியே காமாட்சி! கமலம், இங்கே பிள்ளை சாண் இருந்தான். முழம் இருந்தான். இப்போது உன் உயரம் இருக்கிறான். அடித்தா பல்லு உதிர்கிறது கமலம்! அவ்வளவு வலுவு இருக்குது அவனுக்கு ( சிரிப்பு ).

பெற்ற வயிறு! எந்தக் குற்றம் செய்தாலும் தாய் பொறுப் பாளாம். சான்றோர் சிறு குற்றம் செய்தாலும் பொறுக்க மாட்டாராம். இப்படி இலக்கணம் கூறிக் காட்டுகிறார்.

தாயும் பொறுக்க மாட்டாள்

எந்தக் குற்றம் செய்தாலும் பொறுக்கின்ற தாய் கூட தன் மகன் குடித்திருக்கிறானென்றால், “தூ” என்று துப்பி வெறுத்து விடுவாளாம். ஏன்? மற்றக் குற்றமெல்லாம் கேட்டுப் பார்ப்பது. நம்புவது; இது கண்ணிற்கு முன்னே தெரிவது, ஐயோ! என் மகன் குடித்து விட்டானோ அறிவு இழந்து விடுவானே! குடிப்பெருமை போச்சே! நாட்டுக்கு உதவானே! பாழ்பட்டுப் போனானே! அவனைப் பெற்ற வயிறு பற்றி எரியுதே; என்று கூறி நீ என் பிள்ளையா? நான் உன்னைப் பெற்ற தாயா? ‘போ’ என்று வெறுத்து விடுவாளாம். இப்போது கேட்கின்றார் கேள்வி வள்ளுவர் நம்மிடத்தில் வந்து. எந்தக் குற்றம் செய்தாலும் பொறுக்கின்ற தாய் முன்பு கூடக் குடி வெறுக்கப் படுமானால் ஒரு சிறு குற்றங்கூடப் பொறுக்க மாட்டாத அறிவாளிகள் முன்னே குடிகாரன் என்ன ஆவான்? என்று கேட்கிறார். நீங்கள்தான் சொல்லுங்களேன் பதில்.

குறள் வேண்டுமா?

“ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி?”

பெற்ற தாயின் முன்கூடக் குடி வெறுக்கப் படுமானால், மற்று என்ன ஆகும். சான்றோர் முகத்துக் களி! அறிவாளிகள் முன்னே இவன் என்ன ஆவான்?

எவ்வளவு பெரிய கருத்து? பாருங்கள். இவைகளையெல்லாம் நீங்கள் படித்து அறிய வேண்டும்.

வாணிகர்கள்

வியாபாரிகள் சிலரிருக்கிறார்களென்று தெரிகிறது. அவர்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டாமா? எங்கள் ஊரிலே சுப்பிரமணிய செட்டியார் என்று ஒருவர் இருந்தார். அவரிடம் “குறளைப் படியுங்கள்” என்றேன். “என்னத்துக்காக படிக்கணும்?”- “ஐயா! நான் படிக்கிறேன்”. “நீங்கள் எங்கேயாவது பேசுகிறதற்குப் படிப்பீர்கள் நான் என்னத்துக்காகப் படிக்கவேண்டும்” என்றார். “போ, ஐயா” என்றேன் – இப்போது 20 நாட்களுக்கு முன்பு வந்து, “என்னாங்க அன்றைக்கு என்னமோ ஒரு நூலைப் படிக்க வேண்டுமென்று சொன்னீர்களே, என்ன பேருங்க? என்ன விலை? எங்கே விற்கும்?” என்றார். “ போய்யா, நீதான் வியாபாரியாச்சே. உனக்கு வேண்டியதில்லையே” என்றேன். “உங்களுக்குச் சங்கதி தெரியாதுங்களா, இப்பத்தான் நான் கடையை எடுத்திட்டேனே” என்றார் (சிரிப்பு) அவர் கருத்து, ‘கடையிருந்தால் குறள் படிக்க முடியாது’ என்பது போலும்! “ஏன் கடையை எடுத்து விட்டீர்கள்?” என்றேன் “உங்களுக்குச் சங்கதி தெரியாதுங்களா. எங்கள் அக்காள் மகன் ஒரு பையன் இருந்தான். இருபதினாயிரம் ரூபாய் மூலதனம் வைத்துக் கடை வைத்துக் கொடுத்தேன் அவனுக்காக. இந்தப் போக்கிரிப் பயல் பாருங்கள். பதினாலாயிரம் ரூபாய் மோசம் பண்ணி விட்டான். ஆறாயிரம் ரூபாய்தான் மீதமிருந்தது. கண்டுபிடித்தேன். உடனே அவனை நிறுத்திவிட்டான். இந்த ஆறாயிரம் ரூபாய் வியாபாரத்திற்கு இன்னொரு ஆளை நம்பிக்கை யுள்ளவன் என்று தேடிப் பிடித்து அவனைக் கொண்டு வந்து வைத்தேன். அப்புறம் எனக்கு இரவிலே தூக்கம் வருகிறதில்லை. அந்த முதற் பயல் மாதிரி, அயோக்கியப் பயலாய் இந்தப் பயலும் மாறி, ஆறாயிரத்தையும் சாப்பிட்டு விட்டுப் போய்விடுவானோ’ என்கிற சந்தேகம் எனக்கு வந்து கொண்டே இருந்தது.

அவன் யோக்கியன்தான் என்றாலும், இதற்காக அவனை அடிக்கடி கொஞ்சம் கவனித்துக் கொண்டே வந்தேன். நான் சந்தேகப் படுகிறேன் என்பதை இந்தப் பயல் கண்டுபிடித்து விட்டான். கண்டு பிடித்ததும் இவன் வேறு வேலை செய்தான். இவன் நல்லவன் அல்லவா? அவனைப் போல் எடுத்துக் கொண்டு ஓடிப்போகாமல் என்ன செய்தான் தெரியுமா? பணம் வராத ஆசாமிகளாகப் பார்த்துக் கடன் கொடுத்துக் கணக்கில் பற்று எழுதி வைத்து, அந்த ஆறாயிரத்தையும் ஒழித்து விட்டுப் போய் விட்டான். நான் என்ன செய்வேன்? கடையை மூடி விட்டேன்” என்றார்.