கல்லா நெஞ்சு
திருவள்ளுவருக்குக் கல்வியினிடத்தும் கற்றாரிடத்தும் மிக்க அன்பு உண்டு. கல்வி வேண்டுமென்று ஓர் அதிகாரத்தாற் சொன்னது போதாதென்று, கல்லாமை கூடாது என்று மற்றோர் அதிகாரத்தால் சொல்கிறார். கல்லாதவரைக் கண் இல்லாதவ ரென்றும், அவர்களுடைய கண்கள் புண்களுக்கு ஒப்பானவை என்றும், அவர்கள் அவையேறத் தகுதியில்லாதவரென்றும், பயவாத களர்நிலம் போன்றவரென்றும், அவர்கள் அழகு மண்பொம்மையின் அழகுக்குச் சமானம் என்றும், அவர்கள்பால் செல்வமிருந்தும் பயனில்லையென்றும் அவர்களை விலங்கோடு சேர்த்து எண்ண வேண்டுமென்றும் சொல்கிறார். உண்மையாகக் கற்றதன் பயன் வாலறிவனாகிய இறைவனுடைய தாளைத் தொழுதல் என்று தம் நூலின் தொடக்கத்திலே அறிவுறுத்துகிறார்.
கல்லாதாருடைய நெஞ்சம் நல்ல நெஞ்சம் அன்று. மனத்தை நடுநிலைமையில் வைத்து, விருப்பு வெறுப்பு இன்றிக் கற்பதுதான் கல்வி. அத்தகைய கல்வியினால் அறிவு மிகும்; உள்ளம் திருந்தும்.
பள்ளிக்கூடத்தில் கற்பதுதான் கல்வி என்று பலர் எண்ணுகின்றனர். மெய்யறிவு மிகுவதற்கு ஏதுவாகவும், நடு நிலைமையை உண்டாக்குவதுமாகிய கல்வியே கல்வியாகும்.
“தொட்டனைத் தூறும் மணற்கேணி; மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு“
என்று திருக்குறளும்,
……..நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையாற்
கல்வி அழகே அழகு“
என்று நாலடியாரும் கூறுபவற்றைக் காண்க.
அறிவுடையார் இறைவனை எண்ணி அவனுடைய திருவருளை அடைய வேண்டும் என்ற ஆர்வம் மிகப் பெறுவார்கள். தம் உள்ளத்திலுள்ள மாசைக் களைவார்கள். அப்படிச் செய்யாதார் கல்வி கற்றாரேனும் அவர் கல்வி போலிக் கல்வியாகும்.
கல்வியினால் அறிவு விளக்கம் பெற்ற நெஞ்சில் இறைவன் எழுந்தருளியிருப்பான். எல்லோருடைய உள்ளத்திலும் அவன் இருந்தாலும், இருட்டறையிலே இருப்பவனை அவன் அருகில் நிற்பவனும் காணமுடியாதது போலக் கல்வியில்லாதாருடைய உள்ளத்தே அறியாமை இருளில் அவனைக் காண ஒண்ணாது. கல்வியின் துணைகொண்டு அறிவாகிய விளக்கை ஏற்றிவைத்த நெஞ்சத்தில் இறைவன் தன் அருள் வெளிப்படுமாறு இலங்குவான்.
“எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்
கல்லாதார் நெஞ்சத்துக் காணஒண்ணாதே“
என்பார் திருமூலர்.
கல்லாதவர்களுடைய நெஞ்சம் மரக்கட்டை போன்றது. மின்சாரம் எவ்விடத்தும் இறைவனுடைய அருளாகிய பாய்ந்தாலும் அதனைத் தன்பால் ஏற்றுக்கொள்ளும் இயல்பு மரக்கட்டைக்கு இல்லை. இறைவன் இந்தா இந்தா என்று கொடுத்தாலும் அப்படிக் கொடுப்பதைக் காணாத கண்ணும் வாங்கிக்கொள்ள இயலாத கையும் உடையாரைப் போன்றவர்கள், உண்மைக் கல்வியைக் கல்லாதவர்கள். ஆதலின் ஞான சம்பந்தரும் திருமூலரோடு சேர்ந்து கொண்டு,
“கல்லா நெஞ்சில் நில்லான் ஈசன்“
என்று சொல்கிறார்.
இறைவனைப்பற்றி எண்ணும் நெஞ்சமே கல்லாதவருக்கு இல்லையென்றால் அவர்கள் எங்கே அவன் திருநாமத்தையும் திருப்புகழையும் சொல்லப்போகிறார்கள்? அவன் திருநாமத்தைச் சொல்வோர் ஆயிரமாயிரம் பேர் இருந்தாலும் அவர்களோடு பயிலும் பாக்கியம் அவர்களுக்கு இல்லை. அவர்கள் தம்மைப் போன்றவர்களோடு பயின்று அவர்களையே நல்லவர்களாகக் காணும் இயல்புடையவர்கள். அதனால் திருமூலர் மிக்க சினத்தோடு பின்வருமாறு சொல்கிறார்:
“கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொற் கேட்கக் கடன் அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்தறி யாரே.”
ஞானசம்பந்தப் பெருமான் ஈசனது தொடர்புடைய பொருள்களையே நாடுபவர். உலகில் எத்தனையோ சிறந்த இடங்கள் இருந்தாலும் இறைவனுடைய ஆலயங்கள் உள்ள தலங்களையே நாடிச் சென்றார். எத்தனையோ மக்கள் வாழ்ந்தாலும் இறைவன் அடியார்களையே தமர்களாகக் கொண்டு ஒழுகினார். கல்வியினாலும் கேள்வியினாலும் அறிவு விளக்கம் பெற்று இறைவனடி பேணினவர்களைப் பெரியோராக எண்ணி மதித்தார்.
“கற்றல் கேட்டலுடை யார்பெரி யார்அவர் கையால் தொழுதேத்தப்
பெற்றம் ஊர்ந்தபிர மாபுரம் மேவிய
பெம்மான் இவன் அன்றே“
என்று தாம் பாடிய முதல் திருப்பதிகத்திலே கற்றல் கேட்டல் உடையாரைப் பெரியார் என்று பாடினார்.
அவருக்கு ஈசன் நில்லாத; கல்லாத நெஞ்சுடையாரோடு பழகப் பிடிக்குமா? எப்போதும் இறைவனை எண்ணுவாரோடும், சேர்ந்து வாழும் பெரியார் அவர். அடியார் கூட்டத்தில் இருப்பதையே சிவலோகத்தில் வாழும் வாழ்வாகக் கருதுபவர்.
ஆகவே, கல்லாத நெஞ்சத்தை உடையவரும், இறைவன் புகழைச் சொல்லாதாரும் இருக்கும் இடத்தில் சம்பந்தருக்கு என்ன வேலை? அடியாரோடு நல்லவராக இருக்கும் அப் பெருமான் இறைவன் பேர் சொல்லாதவரோடு அல்லவராகத் தான் இருப்பார்.
‘அடியாருக்கு வேண்டியவர்; அல்லாதாருக்கு வேண்டாதவர்’ என்று சொல்வதில் ஒரு பெருமை உண்டு. அல்லாதவரை வெறுப்பவர் அல்ல; அவரை விரும்புவரும் அல்ல. “இறைவன் திருநாமத்தைச் சொல்லாதாரோடு நாம் இனம் அல்லோம்” என்று திருஞான சம்பந்தர் பாடுகிறார்.
“கல்லா நெஞ்சில்
நில்லான் ஈசன்;
சொல்லா தாரோடு
அல்லோம் யாமே.”
[கல்லாத நெஞ்சில் ஈசன் நிற்கமாட்டான். (அத்தகைய நெஞ்சுடையவராகி அவனுடைய திருநாமத்தைச்) சொல்லாதாரோடு யாம் ஒன்றுபடும் இனம் அல்லோம். அல்லோம்- இனம் அல்லோம்.]
‘கற்ற நெஞ்சம் படைத்தவர், இறைவன் எழுந்தருளும் நெஞ்சம் படைத்தவர், இறைவன் திருநாமத்தைச் சொல்பவர் ஆகிய அடியாரோடு நாம் சேர்ந்திருப்போம். கல்லாத நெஞ்சமும் இறைவன் நில்லாத நெஞ்சமும் படைத்து அவன் திருநாமத்தைச் சொல்லாதவரோடு நாம் அவரல்லாதாராவோம்; அவரோடு ஒரு சேரவைக்கும் இனம் அல்லோம் ஆவோம்’ என்கிறார் ஆளுடைய பிள்ளையார்.
அடியார் அனைவருக்கும் இதுவே இயல்பாதலின் அவர்களையும் சேர்த்தே ‘யாம்’ என்று பன்மையால் சொன்னார்.
இந்தத் திருப்பாட்டையுடைய திருப்பதிகம் எந்தத் தலத்தையும் சார்த்திப் பாடாத பொதுப்பதிகம். இப்பாட்டின் அடி ஒவ்வொன்றிலும் இரண்டே சீர்கள் உள்ளன. இரண்டு சீருள்ள இடிக்குக் குறளடி என்று பெயர். இந்தப் பாட்டைப் போல வேறு பல பாடல்கள் ஞானசம்பந்தர் தேவாரத்தில் உள்ளன. மந்திரத்தைப் போலச் சுருங்கிய உருவத்தில் அமைந்தமையால் இதனையே மந்திரம் என்று சொல்லி விடலாம். திருமந்திரம் என்ற நூல் அத்தகைய பெருமை உடைமையால்தான் அப்பெயர் பெற்றது.
நிறைமொழி மாந்தராகிய சம்பந்தர் ஆணையினாற் கிளந்த மறைமொழி யாதலின் மந்திரம் என்று கூறுதல் மிகவும் பொருந்தும். மந்திரத்துக்கு இருக்கு என்று ஒரு பெயர் உண்டு. இத்தகைய பாடல்கள் மந்திரமாக மதித்தற்குரியன ஆதலின் திரு இருக்கு என்றும் குறளடியால் அமைந்தமையின் குறள் என்றும் பெயர்கள் வந்தன இரண்டையும் சேர்த்துத் திரு இருக்குக் குறள் என்று இத்தகைய பாடல்களை வழங்குவர்.