இணையடி

குறிஞ்சி நிலம்; அதிலும் மலையடிவாரம். அங்கே அழகிய திருக்கோயில்; அதன்கீழ் அழகிய ஆறு எல்லாம் சேர்ந்து பார்க்கும்போது எத்தனை அழகிய காட்சியைத் தருகின்றன! மலையே அழகு. இறைவன் இயற்கையிலே படைத்த அழகெலாம் ஒருங்கே திரண்ட இடம் அது. மேகம் வந்து தங்கி மழை பொழிவதும், பிற இடங்களெல்லாம் வறண்டு போனாலும் அந்த மழையால் வளம் பெற்று விளங்குவதும் மலை அல்லவா?

காளத்தி மலை மிகப் பெரிய மலை அன்று; ஆனாலும் அழகிய மலை. அதன் அடியில்தான் திருக்காளத்திநாதர் கோயில் இருக்கிறது. மலையின்மேல் மலைக் கொழுந்தாக எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுக்குத் தம் கண்ணை இடந்து அப்பிய கண்ணப்பர் பெருமை பல நூல்களில் பரவியிருக்கிறது.

கோயில் பொன்முகலிக் கரையிலே விளங்குகிறது. சுவர்ணமுகி என்று வடமொழியில் அந்த ஆற்றின் பெயரை வழங்குகிறார்கள். பொன்னை முகந்துகொண்டு வருவதனால் பொன்முகலி என்று பெயர் வந்தது போலும். அந்தப் பெயர் முகலி என்றும் சுருக்கமாக வழங்கும். பொன்முகலியின் கரையினில் சிவபிரான் உமாதேவியாரோடும் எழுந்தருளி யிருக்கிறான்.

நல்ல மழை பெய்து பொன்முகலியில் வெள்ளம் வரும்போது பார்த்தால் எவ்வளவோ அழகாக இருக்கும். அந்த அழகில் கண்ணுடையவரெல்லாம் சொக்கி நிற்பார்கள். கவிக் கண்ணுடையவர்களோ அந்த வெள்ளத்தின் ஓட்டத்தோடு தம்மிடம் கவிதை யூற்றும் பெருகநிற்பார்கள். சம்பந்தப் பெருமான் கவிக்கண்ணோடு பொன்முகலியைக் கண்டார்.

மலைப் பகுதிகளிலிருந்து வரும் ஆறாதலின் மலைமேல் வளரும் மரங்களை வேர் பறித்து அடித்துக்கொண்டு வருகிறது. சந்தன மரத்தை உந்தி வருகிறது. மிகவும் அரிதாகக் காணப்படும் அகிலை அகழ்ந்துகொண்டு வருகிறது. சாதி மரத்தைப் பறித்துக்கொண்டு வருகிறது. இதன் காயைத்தான் நாம் சாதிக்காய் என்று சொல்லுகிறோம். நாம் சாதிக்காயைப் பார்க்கிறோம்; சாதி மரத்தைப் பார்த்ததில்லை. அதனால் சாதிக்காய் மரம் என்று சொன்னால் நமக்கு விளங்குகிறது. தேக்கு மரத்தையும் பொன்முகலியாறு அடித்து வருகிறது.

இயற்கையிலே இது சிறிய ஆறாக இருந்தாலும் வெள்ளம் வரும்போது சந்தனம் முதலிய மரங்களை அடித்துக் கொண்டு வருவதனால் பெரிய ஆற்றைப் போலத் தோற்றுகிறது; மா முகலி என்று சொல்லும்படி அதன் தோற்றம் அமைந்திருக்கிறது.

ஆற்றங்கரையில் பொழில்கள் வளருகின்றன. மலையிலுள்ள காட்டு மரங்களை வேர் பறித்துக்கொண்டு வரும் ஆறு அதற்குப் பரிகாரமாகத் தன் கரையில் சோலைகளை வளரும்படி செய்கிறது. இறைவனுடைய தொடர்பு இல்லாத இடங்களில் தன் மனம் போனபடி செய்துவிட்டு அவனுடைய திருக் கோயிலுக்கு அருகில் நல்ல காரியத்தைச் செய்கிறது போலும்! மனிதனுடைய மனமே இப்படித்தான் இருக்கிறது. அது தன் போக்கில் நெடுநெறியிலே போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் நல்லோருடைய கூட்டுறவினால் அது நல்ல எண்ணங்களைக் கொள்கிறது.

பொன்முகலி யாற்றங்கரையில் பொழில்கள் நன்றாக வளர்கின்றன. அவற்றில் மந்தமாருதம் மெல்லென வீசுகிறது. அழகிய ஆறும் வளமுடைய பூம்பொழிலும் இனிய தென்றலும் இருக்கும் இடத்தில் நம்முடைய தந்தையாகிய இறைவன் வீற்றிருக்கிறான். தன்னைக் கண்டு வழிபட வருகிறவர்கள் இளைப்பாறி இன்புறுவதற்கு ஏற்ற வகையில் இந்த அருமையான இடத்தில் திருக்கோயில் கொண்டிருக்கிறான். உமாதேவியாகிய நம் அன்னையுடன் இங்கே அவன் எழுந்தருளி யிருக்கும்போது இந்தத் தலத்தின் பெருமை மேன்மேலும் வளர்வது ஆச்சரியம் அன்றே? வளங்கள் மல்கிய காளத்தி என்ற புகழ் இத்தலத்துக்கு உண்டாகிவிடுகிறது.

இந்த அழகிய நிலைக்களத்தில் இறைவனைக் கண்டு விட்டால் அவனுடைய திருக்கோலம் அடியார்கள் உள்ளத்தில் நன்றாகப் பதிந்துவிடும். அவனுடைய திருவுருவத்தில் அடியார்களுக்குப் பற்றுக்கோடாக இருப்பவை அவனுடைய இரண்டு திருவடிகள். ஆதலின் மற்ற உறுப்புக்களை விடத் திருவடிகளே அடியார்களுக்குச் சிறந்தவை. இறைவனுடைய திருக்கோலத்தை உள்ளத்தே பதித்துக் கொண்ட அடியார்கள் அவன் திருவடிகளை என்றும் மறக்கமாட்டார்கள். ஓர் ஊருக்குச் அன்று அங்குள்ள பல காட்சிகளைக் கண்டு நினைவில் வைத்திருந்தாலும் தாம் நல்ல விருந்துண்ட இடத்தைப் பின்னும் அழுத்தமாக உள்ளத்தில் நினைப்பது மக்கள் இயல்பு. மற்றக் காட்சிகள் மெல்ல மெல்ல மறந்து போனாலும் தாம் இன்பம் பெற்ற இடத்தை எளிதில் மறக்க வொண்ணாது.

இறைவனுடைய திருக்கோலத்தில் என்றும் மறக்க ஒண்ணாதவை அவனுடைய திருவடிகளே; பலபல திருவுருவங்களை உடைய கடவுளுக்கு வெவ்வேறு கோலங்கள் உண்டு. முகங்கள் பல இருக்கும். திருக்கரங்கள் பல இருக்கும். ஆனால் எந்தத் திருக்கோலத்திலும் மாறாமல் இருப்பவை இரண்டு திருவடிகளே. அவற்றைப் பற்றிக்கொண்டவர்கள் ஏமாந்து போக மாட்டார்கள். இறைவன் எந்த வேடம் போட்டாலும் அந்த வேடத்தை மாத்திரம் கண்டு மயங்குபவர்களுக்கு விருப்பு வெறுப்பு உண்டாகலாம். தம் வணக்கத்துக்குரிய கடவுளே வேறு உருவத்தில் இருக்கிறான் என்ற உண்மை தெரியாமற் போகலாம். ஆனால் அடியைப் பற்றிய அன்பர்களுக்கு இந்த வேறுபாடே தோன்றாது. அடி பற்றினால் உண்மை வெளிப்பட்டுவிடும்.

இறைவனுடைய திருவுருவம் அனைத்தையும் நினைந்து வழிபடுவது எளிதன்று. அவற்றைக் கண்டு களித்தாலும் நாளடைவில் மறந்து போகும். ஆனால் அவன் திருவடிகளைப் பற்றிக்கொண்டால் அவை உள்ளத்திலே ஆழப் பதியும். அவற்றை எளிதில் மறக்க வொண்ணாது.

இந்த விரகறிந்தே அன்பர்கள் இறைவனுடைய அடிகளைப் பற்றி அடியார்கள் ஆயினர். யாவருக்கும் பொதுவாகிய மறையை உணர்த்தவந்த திருவள்ளுவரும், கடவுள் வாழ்த்தில் ஏழு பாடல்களில் இறைவன் அடியைப் பற்றுதலை வற்புறுத்திச் சொன்னார். அவன் திருக்கோலத்தைச் சொல்லாமல், “வாலறிவன் நற்றாள்”, “மலர்மிசை ஏகினான் மாணடி”, “வேண்டுதல் வேண்டாமை யிலான் அடி”, “தனக்குவமை இல்லாதான் தாள்”, “அறவாழியந்தணன் தாள்’, ‘எண்குணத் தான் தாள்’, ‘இறைவன் அடி” என்று திருவடியையே எடுத்துரைத்தார். அடிபற்றுதல் எல்லாச் சமயத்தினருக்கும் பொதுவான நெறி; பக்தர்கள் உண்மையான பயனை அடையும் நெறி.

திருக்காளத்தி மலையின் அடிவாரத்தில் நறுமலர் மணக்கும் பொழிலினிடையே முகலி யாற்றங்கரையில் உமாதேவியாரோடு எந்தையாகிய இறைவன் அழகொழுக வீற்றிருக்கும் திருக்கோலம் மிக அழகியதுதான். இவற்றைக் கண்ணாரக் காணும்போது உள்ளத்தில் மலையும் கோயிலும் பொழிலும் ஆறும் அம்மையும் அப்பனும் ஒன்றிய காட்சி படமாகப் படிகிறது. நாளடைவில் மலை மறைகிறது; பொழில் மறைகிறது; ஆறும் கோயிலும் மறைகின்றன; தேவியின் கோலமும் இறைவன் திருக்கோலமும் மறந்து போகின்றன. ஆனால் அவனுடைய இணையடிகள் மாத்திரம் மறவாமல் மனதில் நிற்கின்றன. மற்றவற்றை நினைக்கும் போது படலம் போர்த்தவை போலத் தோன்றுகின்றன. ஆனால் இறைவன் இணையடிகளோ மனத்திலே முளைத்தவைபோல மங்காமல் பொலிவுடன் இருக்கின்றன.

இந்த நிலையைச் சம்பந்தர் சொல்கிறார்.

சந்தமார் அகிலொடு சாதிதேக் கம்மரம்
உந்துமா முகலியின் கரையினில் உமையொடும்
மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி
எந்தையார் இணையடி என்மனத்து உள்ளவே.

(சந்தனம், கிடைத்தற்தரிய அகிலோடு சாதி மரம், தேக்குரம் ஆகியவற்றைப் பறித்துத் தள்ளிக் கொண்டு வரும் பொன் முகலியின் கரையினில் (அமைந்த திருக்கோயிலில்) உமாதேவியோடும் (அமர்ந்தருளிய) மந்த மாருதம் நிரம்பிய பொழில் வளர்வதும் வளம் மல்குவதுமாகிய காளத்தியப்பருடைய இரண்டு திருவடிகள் என் மனத்தில் என்றும் மறவாதவண்ணம் உள்ளன.

சந்தனம் – சந்தன மரம். ஆரகில் – அரு அகில்; கிடைத்தற்கரிய அகில்; நிரம்பிய அகில் என்பதும் பொருந்தும். சாதி – சாதி மரம். தேக்கம்மரம்: விரித்தல் விகாரம். உந்தும் தள்ளும். வெள்ளம் வந்தபோது பெரிதாகத் தோற்றுதலின் ‘மாமுகலி’ என்றார்; மா- பெரிய. முகலி- பொன் முகலியாறு. உமையொடும் எழுந்தருளியுள்ள எந்தையார், காளத்தி எந்தையார். என்று கூட்டுக. மந்தம்-மந்த மாருதம். ஆர்-பொருந்திய. பொழில் வளர் காளத்தி, மல்குவண் காளத்தி என்று கூட்ட வேண்டும். மல்குவண் காளத்தி- பெருகிய வளத்தையுடைய திருக்காளத்தி. எந்தையார் – எம் தந்தையார். காளத்தியப்பன் என்று இறைவனைச் சொல்லும் வழக்கு இருப்பதனால் காளத்தி எந்தையார் என்றார். இணையடி- இரண்டு திருவடிகள். உள்ள – உள்ளன; இருக்கின்றன. ஏ: அசை நிலை.]