அரற்றுங்கள்
மதுரைக்கு வடக்கே உள்ளது திருவேடகம் என்னும் திருத்தலம். வையைக் கரையில் அமைந்திருப்பது அது. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் சமணரோடு வாது செய்தபோது, ‘வாழ்க வந்தணர்” என்று தொடங்கும் திருப்பாசுரத்தை எழுதியிட்ட ஏடு வையையில் எதிரேறிச் சென்றது. அதனைத் தொடர்ந்து பாண்டியனுக்கு மந்திரியாக இருந்த குலச்சிறையார் குதிரையின் மீது ஏறிச் சென்றார்.
அப்போது சம்பந்தர், “வன்னியும் மத்தமும்” என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடியருள, ஆற்றிலே சென்ற ஏடு இந்தத் தலத்துக்கு அருகில் ஒதுங்கியது. அதனைக் குலச்சிறையார் எடுத்து வந்து யாவருக்கும் காட்டினார். ஏடு சென்று அணைந்ததாதலின் ஏடகம் ஆயிற்று. இந்தத் தலப்பதிகத்தின் திருக்கடைக்காப்பில்,
கோடுசந் தனம் அகில் கொண்டிழி வைகை நீர்
ஏடுசென் றணைதரும் ஏடகத் தொருவனை
நாடுதென் புகலியுள் ஞானசம் பந்தன்
பாடல்பத் திவைவல்லார்க்கு இல்லையாம் பாவமே
என்று ஆளுடைய பிள்ளையார் பாடுகிறார்.
இப் பதிகத்தின் ஏழாம் பாடல் இப்போது கிடைக்கவில்லை. இங்கே விளக்கத்துக்கு வருவது ஆறாம் பாடல்.
திருவேடகம் வையை யாற்றின் கரையில் இருப்பது ஆதலால் நீர்வளமும் நிலவளமும் நிரம்பியது. ஆற்றினால் அழகுபெற்ற இந்தத் திருப்பதிக்கு வேறு அழகுகளும் உண்டு. ஏடகத்தில் அழகிய பொய்கைகள் இருக்கின்றன. நீர் நிரம்பிய பொய்கைகள் அவை. அங்கங்கே பூம்பொழில்கள் வானளாவ ஓங்கி வளர்கின்றன. மலர்களில் ஒவ்வொரு பருவத்திலும் மலர்பவை உண்டு. அப்படியே ஒவ்வொரு போதிலும் மலர்வன உண்டு. இந்தப் பொழில்களில் எல்லா வகையான மரஞ் செடி கொடிகளும் இருப்பதனால் எந்தப் பருவமானாலும் எந்த நேரமானாலும் அப்போது மலருகின்ற புது மலர்கள் பல அங்கே இருக்கின்றன. எனவே புதிய மலர்களை எப்போதும் அந்தப் பொழிலில் காணலாம்.
தென்றற் காற்று வீசும்போது பொய்கையில் வீசித் தண்மை அளாவிவரும். அப்பொய்கையில் மலர்ந்த மலர்களின் மேல் வீசிவரும். பொழிலிலே புகுந்து வரும். அங்கே மலர்ந்த புது மலர்களிலே அணைந்து வரும். இயல்பாகவே மென்மையை உடைய தென்றல், பொய்கையிலும் பொழிலிலும் பூக்களிலும் புகுந்து வருதலால் தண்மையும் மணமும் பெற்று மெல்ல வீசுகிறது. அப்படி வீசுகிற இடம் ஏடகம். வைகையின் வடகரை மருவியது அத்தலம்.
திருவேடகத்திலே எழுந்தருளியிருக்கிறான் இறைவன். நமக்கு ஏதேனும் துன்பம் வரும்போது அது சிறிதானால் பொறுத்துக் கொள்கிறோம்; பெரிதானால் வருந்துகிறோம். அதன் அளவு மிகுதியாக ஆக ஆக அதை வெளிப்படுத்தும் வகையும் மிகுதியாகிறது. முகம் சிணுங்குகிறோம். பிறகு உடம்பு துடிக்கிறது. அப்பால் முணுமுணுக்கிறோம். பின்பு அழுகிறோம். அதற்குமேல் அரற்றுகிறோம். அந்தத் துன்பத்தை யாரர்வது நீக்குவார் என்ற எண்ணம் உண்டானால் அவரிடம் போய் அரற்றுகிறோம். அவர் காலில் விழுந்து அரற்றுகிறோம்.
உலகில் மக்கள் தமக்கு அல்லல் உண்டாகும் காலத்தில் மற்ற மக்களை நாடிப் பரிதவித்துக் கெஞ்சி உள்ளம் நைந்து புலம்பி முறையிடும் வகைக்கும் ஓர் எல்லை இல்லை. ஏழை பணக்காரன் காலில் விழுகிறான். நோயாளி வைத்தியன் காலில் விழுகிறான். பலமற்றவன் பலசாலி காலில் விழுகிறான். பணக்காரன் மருத்துவனாக இருப்பதில்லை, பலசாலியாகவும் இருப்பதில்லை. அதனால் பணக்காரனே மருத்துவன் காலிலும் பலசாலி காலிலும் அறிவுடையோன் காலிலும் விழும் காலம் உண்டு.
எல்லாக் குறைகளையும் போக்கும் மனிதன் யாரும் இல்லை. சில குறைகளைப் போக்கும் மனிதர்கள்கூடத் தம்முடைய ஆற்றலால் போக்குவதில்லை. இறைவன் திருவருள் இயக்குவதால்தான் அவ்வாறு செய்கிறார்கள். எல்லாப் பணக்காரரும் ஏழைகளுக்கு உதவி செய்கிறதில்லை. இறைவன் திருவருள் எங்கே இருக்கிறதோ அங்கேதான் ஈகை இருக்கிறது. மருத்துவன் தன்பால் வரும் எல்லா நோயாளிகளின் நோய்களையும் தீர்த்துவிட முடிகிறதில்லை. அவனால் தீர்க்க முடியாத வலிய பிணிகளும் உண்டு. மக்களால் துன்பம் நீங்குமென்பது உறுதியானால் எல்லாத் துன்பங்களும் அல்லவா நீங்க வேண்டும்? நம்முடைய கண்ணுக்குத் தெரியாமல், அங்கங்கே இறைவன் திருவருள் இருந்து இயங்குகிறது. மக்கள் அந்தத் திருவருளின் கருவிகளாக இருந்து உதவி புரிகிறார்கள்.
ஆதலின் துன்பங்களை நீக்கும் மூலஉபகாரியாக இருக்கிறவன் இறைவன்தான். அவனிடத்தில் நேரே போய்க் காலில் விழுந்தால் அவன் அருள்சுரந்து நல்லது செய்வான்.
சாது ஒருவன் தன்னைத் தேடி வருகிறவர்களை வரவேற்று உபசரிப்பது வழக்கம். அவர்களுக்கு ஏற்றபடி உபசாரம் செய்யப் பொருள் இல்லாமையால் அரசனிடம் போய்ப் பொருள் கேட்டு வாங்கி வரலாம் என்று போனான். அவன் போனபொழுது அரசன் ஆண்டவனைத் தொழுது கொண்டிருந்தான்; “கடவுளே! நான் ஏழை. நீ திருவருள் பாலித்து எனக்கு வேண்டிய செல்வத்தைக் கொடு” என்று அரசன் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தான். அந்தப் பிரார்த்தனை சாதுவின் காதில் விழுந்தது. ‘இது என்ன ஆச்சரியமாக இருக்கிறது! நமக்குத்தான் பணம் இல்லை. இவனிடம் யாசிக்கலாமென்று வந்தால் இவனும் பிச்சைக்காரனாக அல்லவா இருக்கிறான்? இவனும் ஆண்டவனிடத்தில் யாசகம் செய்துதானே பொருள் பெற்று மற்றவர்களுக்குத் தருகிறான்? அந்தப் பொருளை இவனிடம் பெறுவதைவிட நேரே அந்த ஆண்டவன் காலில் விழுந்தே பெறலாமே’ என்று அவன் எண்ணம் ஓடியது. அரசனை ஒன்றும் கேட்காமல் போய்விட்டான்.
இராமகிருஷ்ண பரமஹம்சர் இந்தக் கதையைச் சொல்கிறார். இறைவனே எல்லாவற்றிற்கும் மூல காரணம் என்று உறுதியாக நம்பினவர்கள் அவனிடம் தம் குறைகளை முறையிட்டால் நன்மை உண்டாகும். மக்களை நம்பிக் காலில் விழுவதைவிடக் கடவுள் காலில் விழுந்து அரற்றுவது நல்லது. கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
“நீங்கள் உங்கள் வெம்மையான வலிய பிணி கெட வேண்டுமானால் ஏடகத்து ஐயனிடம் சென்று அவன் காலில் விழுந்து அரற்றுங்கள். உங்கள் பிணி கெடுவது மாத்திர மன்று; மக்களால் கிடைத்தற்கரிய பெரிய ஊதியம் ஒன்றும் கிடைக்கும்; மோட்சம் எளிதிலே கிடைக்கும்” என்று ஞானசம்பந்தப் பிள்ளையார் உபதேசம் செய்கிறார்.
பொய்கைஇன் பொழில் உறு புதுமலர்த்
தென்றல்ஆர் வைகையின் வடகரை மருவிய ஏடகத்து
ஐயனை அடிபணிந்து அரற்றுமின்; அடர்தரும்
வெய்யவன் பிணிகெட, வீடெளிது ஆகும்.
[பொய்கையிலும் இனிய பொழிலிலும் அவ்விரண்டினிலும் உற்ற புதிய மலர்களிலும் புகுந்து வரும் தென்றல் நிரம்பியதும், வைகையாற்றின் வடகரையில் மருவியதுமாகிய திருவேடகத்தில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானைத் திருவடிக்கண் வீழ்ந்து பணிந்து உங்கள் குறைகளைச் சொல்லிக் கதறுங்கள்; அவ்வாறு செய்தால் உங்கள்பால் மேன்மேல் வந்து தாக்குகின்ற வெய்யனவாகிய வலிய நோய்கள் கெட, (இவ்வாழ்விலே இன்பம் பெறுவதோடன்றி மறுமையில்) வீடு எளிதாகக் கிடைக்கும்.
பொய்கை – மானிடர் ஆக்காத நீர்நிலை. பொய்கையிலும் பொழிலிலும் புதுமலரினும் சார்ந்துவந்த தென்றல். ஆர்-நிரம்பிய தென்றலார் ஏடகம், மருவிய ஏடகம் என்று கூட்டுக. அடர்தரும்-மோதும். வெய்ய பிணி வன்பிணி. இம்மையில் துன்பந்தரும் உடல் நோய்களும் மறுமையில் துன்பந்தரும் காமம் முதலிய மனநோய்களும் தீர்வதனால் இம்மையில் அறம் பொருள் இன்பமும் மறுமையில் வீடும் எளிதிற் கிடைக்கும் என்றபடி. வீடு எளிது ஆகும் அரிதின் முயன்று பெறும் வீடு கிடைப்பதற்கு எளிதாகிவிடும்.].
இறைவனுடைய திருப்பதி, ஆற்றங்கரையில் பொய்கையும் பொழிலும் சூழத் தென்றல் வீச இருப்பதால் அந்தச் சூழ்நிலையே நோயை நீக்கும் வகையில் அமைந்திருக்கிறது. அதற்குமேல் இறைவன் அருளும் கிடைக்குமாயின் வன்பிணியும் கெடும்; வீடும் எளிதாகும்.