ஞான மலர்

என்ன அதிசயம்! இவ்வளவு பெரிய யானை கையிலே ஏதோ தழைக் கொத்தை எடுத்துப் பெருக்குகிறது. பெண்யானை யென்று தெரிகிறது. கீழே கிடக்கும் கல் முதலியவற்றைப் பொறுக்கி எறிகிறது. எங்கும் நீரைத் தெளித்துச் சுத்தம் செய்கிறது. அறிவுடைய மக்கள்கூட இவ்வளவு நன்றாக நிலத்தைப் பெருக்கிச் சுத்தஞ் செய்ய மாட்டார்களே!

இந்த மடப்பிடி தன் வலிய கையினால் இவ்வாறு அலகிடக் காரணம் என்ன? இதோ பெரிய களிறு வருகிறதே! காட்டிலே வாழும் யானைகளில் இவ்வளவு பெரியதை எங்கும் காண முடியாது. மனிதர்கள் ஏவாமலே மிக அமைதியாக வருகிறது. ஒரு பெரிய சிவலிங்கம் போன்ற கல்லைக் கொணர்ந்து வைக்கிறது. தன் துதிக்கையினால் நீர் கொணர்ந்து அபிஷேகம் செய்கிறது. இந்தக் களிறும் பிடியும் சிவபூசை செய்ய எங்கே கற்றுக் கொண்டன? தம் மனைவி பூசைக்கு இடம் பண்ண, அங்கே இருந்து சிவபக்தர் ஒருவர் சிவ பூசை செய்வது போல் அல்லவா இருக்கிறது இந்தக் காட்சி?

காட்டிலே வாழும் யானை; மதம் பிடிக்கும் யானையாகிய இது வழிபடுகிறதற்கு இந்தக் கரியின் இயல்பு காரணமா? அல்லது இந்த இடத்தின் சிறப்புக் காரணமா? இரண்டும் இருக்கலாம். இந்த இடம் சிறப்புடையது என்பதில் தடையே இல்லை. திருக்கானப்பேர் என்னும் தலம் இது. இங்குள்ள ஆலயத்தில் அறிவுடைய மக்கள் பூசை புரிகின்றனர். வெளியே கடகரி வழிபடுகிறது. எங்கும் பக்தியின் மணம் வீசுகிறது.

மானமா மடப்பிடி வன்கையால் அலகிடக்
கானம்ஆர் கடகரி வழிபடும் கானப்பேர்

[பெருமைமிக்க மென்மையுடைய பிடி தன் வலிய கையினால் அலகிட்டுப் பெருக்க, அவ்விடத்தில் காட்டில் வாழும் மதத்தையுடைய ஆண் யானை இறைவனை எண்ணிப் பூசித்து வழிபடும் திருக்கானப்போர்.

மானம் – பெருமை. மா – பெரிய; மிகப் பெரிய என்றபடி. அலகிடுதல் – பெருக்குதல். கடகரி – மதத்தையுடைய களிறு. கடம் – மதம். கானப்பேர் – காளையார் கோயில் என வழங்கும் தலம்.]

திருஞானசம்பந்தர் பாண்டி நாட்டில் உள்ள தலங்களுக்குச் சென்று வழிபட்டபோது திருக்கானப் பேருக்கும் வந்தார். இத்தலம் இப்போது காளையார் கோயில் [சுந்தரமூர்த்தி நாயனார் திருச்சுழியலுக்கு வந்திருந்தபோது அவருடைய கனவில் இறைவன் கட்டிளங்காளை போலத் தோன்றி, “யாம் இருப்பது கானப்பேர்” என்று அருளியமையால் இறைவனுக்குக் காளையென ஒரு திருநாமமும், இத்தலத்துக்குக் காளையார் கோயில் என்ற திருநாமமும் உண்டாயின (பெரிய புராணம், கழிறிற்றறிவார். 112, 113); “கண்டு தொழப் பெறுவ தென்றுகொலோ அடியேன் கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.” (சுந்தரர் தேவாரம்.) ]என வழங்குகிறது.

இங்கே வந்தபோது தலத்தைப் பற்றிய செய்திகளை விசாரித்தார். “இந்திரனுடைய யானையாகிய ஐராவதம், ஒரு சாபத்தால் காட்டானையாகி இங்கே வந்து பூசித்துத் தன் முன்னை நிலையைப் பெற்றதென்பது தல வரலாறு” என்ற செய்தியைக் கேள்வியுற்றார். சிறிது கற்பனைக் கண்ணைக் கொண்டு பார்த்தார். ஐராவதம் இங்கே காட்டானையாக வந்தால், அதனுடைய மனைவியாகிய பிடியும் உடன்வருவது இயற்கைதானே? தேவேந்திரனுக்கு வாகனமாகும் புண்ணியமும் அறிவும் உடையது ஐராவதம். அது காட்டானையாக வந்தாலும் அறிவுடன் இருப்பது. அதன்பால் ஆராத காதலுடைய பிடியும் உடன் வந்திருக்கிறது. இறைவனைப் பூசித்துச் சாபநீக்கம் பெறலாம் என்ற அறிவு பிடிக்கும் களிற்றுக்கும் இருக்கிறது. ஆதலால் அந்த ஆண் யானை, பூசை புரிவதற்கு வேண்டிய காரியங்களைப் பிடி செய்து கொடுக்க, அது வழிபடத் தொடங்குகிறது. இதனைத் திருஞானசம்பந்தர் தம் கற்பனையாற்கண்டு அக் காட்சியையே மேலே கண்டவாறு பாடினார்.

புராண வரலாற்றை நினைந்து ஞானசம்பந்தப் பெருமான் இப்படிப் பாடினார் என்று கொள்வது ஒரு முறை. அப்படியின்றி, இத் தலத்தின் சூழ்நிலையில் விலங்குகளும் அன்பர்கள் செய்வது கண்டு தாமும் தம் விலங்கியல்பை ஓரளவு நீத்து அன்பர்களைப்போல வழிபடும் என்று கூறியதாகவும் கொள்ளலாம். விலங்கினங்களும் நல்லோர் வாழும் இடங்களில் அவர்களுக்குக் குற்றேவல் புரிதலும் நிலத்தைப் பெருக்குதல் முதலியவற்றைச் செய்தலும் உண்டென்பதைச் சங்க காலத்து நூல்களினால் உணரலாம். சங்கப் புலவர்கள் பெரும்பாலும் இயற்கையிலே நிகழும் நிகழ்ச்சிகளை உள்ளது உள்ளவாறே கூறும் இயல்புடையவர்கள். சூழ்நிலையின் சிறப்பால் விலங்குகள் மக்கள் செய்யும் செயல்களைச் இயற்கைக்கு முரணானது அன்று.

மஞ்ஞை ஆலும் மரம்பயில் இறும்பின்
கலைப்பாய்ந்து உதிர்த்த மலர்வீழ் புறவின்
மந்தி சீக்கும் மாதுஞ்சு முன்றில்
செந்தீப் பேணிய முனிவர் வெண்கோட்டுக்
களிறுதரு விறகின் வேட்கும்
ஒளிறிலங் கருவிய மலை

என்பது பெரும்பாணாற்றுப்படை.

மந்தியும் களிறும் தீவேட்கும் முனிவர்களுக்கு ஆவன புரிதலைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர் இவ்வாறு பாடுகிறார். இதற்கு உரை எழுதிய நச்சினார்க் கினியர், ‘மந்தி சீத்தலும் மா துஞ்சலும் களிறு விறகு தருதலும் இருடிகளாணையால் நிகழ்ந்தனவென்று உணர்க’ என்று இங்கே காரணத்தைப் புலப்படுத்தினார்.

கான யானை தந்த விறகிற்
கடுந்தெறற் செந்நீ வேட்டு

என்பது மாற்பித்தியார் என்பவர் பாடியது. இதன் உரையாசிரியர், ‘கான யானை தந்த விறகென்றது இவன் தவமிகுதியான் அதுவும் ஏவல் செய்தல்” என்று எழுதினார்.

எனவே மானமா மடப்பிடி வன்கையால் அலகிடுதலும், கானமார் கடகரி வழிபடுதலும் இயற்கைக்கு முரண்பாடான செயல் அல்ல. பண்டைப் புலவர்களும் இத்தகைய காட்சிகளைப் பாடியிருப்பதனால் இது புலனாகிறது.

வேறு ஒரு வகையிலும் இந்தப் பாட்டுக்குப் பொருள் கொள்ள வழி உண்டு. பெரியோர்கள் சில செய்திகளைக் குறிப்பு வகையால் கூறுவது வழக்கம். மனத்தை வண்டாக வைத்து வண்டைப் பார்த்துச் சொல்வது போல மனத்துக்கு அறிவுரை கூறுவார்கள். மனத்தைக் குரங்காக வைத்துப் பேசுவார்கள். மக்கள் செய்யும் செயலை விலங்குகளின்மேல் வைத்துச் சொல்வார்கள்.

காதலைப்பற்றிப் பலபடியாக விரித்துரைக்கும் சங்கப் பாடல்களில் மக்களிடையே நிகழும் காதல் நிகழ்ச்சிகளைப் பல்வேறு வகையிலே புலவர்கள் பாடியிருக்கிறார்கள். அன்றியும் விலங்கினங்களும் பறவைகளும் காதல் செய்யும் காட்சிகளையும் எடுத்துச் சொல்வார்கள். அந்தப் பாடற் பகுதிகளுக்கு உள்ளுறை ஒன்று இருக்கும். விலங்கினங் களின்மேல் ஏற்றிச் சொன்னாலும் காதலன் காதலியர் செய்கையைக் குறிக்கும் உட்கருத்து ஒன்று அதனாற் புலப்படும். இறைச்சியென்றும் உள்ளுறையென்றும் இந்தக் குறிப்புநெறி இரண்டு வகைப்படும்.

அந்த முறையில் பக்தித் தமிழிலும் உள்ளுறை அமையும்படி பாடும் வழக்கம் உண்டு.

இங்கே சம்பந்தப் பெருமான், மடப்பிடி அலகிடக் களிறு வழிபடுவதாக அமைத்த காட்சிக்கும் உள்ளுறை காணலாம். யானையை ஆணவத்துக்கு அறிகுறியாகச் சொல்வது வழக்கம். மதத்தினாற் சிறப்பது யானை; மதம், செருக்கு, ஆணவம் எல்லாம் ஒன்றுக்கு ஒன்று இனமானவையே. செருக்கு மிக்க மனிதன் யாருக்கும் தலைவணங்காமல் தருக்குற்றுத் திரிவான். அப்படி உள்ளவனை மதயானை என்று சொல்லலாம். பிற இடங்களில் செருக்கு மிகுதியால் தலைவணங்காமல் நடந்து, தனக்கு ஏற்பத் தருக்கி நிற்கும் மனைவியுடன் வாழும் மனிதனும் திருக்கானப் பேருக்கு வந்தால் இறைவன் திருவருளால் தன் செருக்கு ஒழிந்து வழிபடுகிறான்; அவன் செய்யும் வழிபாட்டுக்கு அவன் மனையாட்டி துணைபுரிகிறாள். முன்பு செருக்குடையவர்கள் இப்போது செருக்கழிந்து இறைவனை வழிபடும் காட்சியையே குறிப்பு வகையால் மடப்பிடியின் மேலும் கடகரியின் மேலும் வைத்துத் திருஞான சம்பந்தப் பெருமான் பாடினார் என்று கொள்ளுவதும் பொருத்தமாக இருக்கும்.

இவ்வாறு அமைந்துள்ள திருக்கானப்பேருக்கு அன்பர்கள் செல்கிறார்கள்; வழிபடுகிறார்கள். அவர்கள் பெறும் பயன் கண்கூடாக இருக்கிறது. குறைபாடுகள் நிறைந்தது உடம்பு; நினைத்த காரியங்களை நினைத்த படியே செய்ய அது இடம் கொடுப்பதில்லை. ஊனம் ஆம் உடம்பு இது. ஆயினும் இதை வைத்துக் கொண்டுதான் நாம் கரையேற வேண்டும். இதற்கும் பிணி வந்துவிட்டால் ஒன்றுமே செய்ய முடியாது. திருக்கானப்பேருக்கு வருகிற அடியார்கள் தம்பால் உறுகின்ற பிணிகளெல்லாம் நீங்க, மேன்மேலும் அன்பிற் சிறந்து விளங்குகிறார்கள்.

யார் போனாலும் தமக்கு உறுபிணியைப் போக்கிக் கொள்ள முடியுமா? அது நடவாது. போகிற முறையிலே போனால்தான் பயன் உண்டாகும். கிணற்றில் நீர் இருக்கிறது. அதன் அருகில் போய் நின்று எட்டிப் பார்த்தால் நீர் நம் வாயில் வந்து விழுந்துவிடுமா? கிணற்றிலிருந்து நீரைக் குடத்தினாலோ செம்பினாலோ இழுக்க வேண்டும். திருக்கானப்பேருக்குச் சென்று உறுபிணி கெடவேண்டும் என்ற விருப்பம் இருந்தால், அங்கே நண்ணுவதற்குமுன் ஒன்று செய்யவேண்டும். யானை கூடத் தன் பிடியைக் கொண்டு முன்னாலே அலகிடச் செய்து அப்பால் வந்து வழிபடும் இடம் அது. ஆகவே நாமும் முன்னால் வேண்டிய கருவிகளைக் கைக்கொள்ள வேண்டும்.

இறைவனை நணுகுவார் அவனை வழிபடுவதற்கு மலரைக் கொண்டு செல்வது வழக்கம். வெறும் மலர்களைக் கொண்டு போய்ப் பூசித்தால் போதாது. இறைவனிடம் உண்மையான அன்பு வைத்துப் பூசிக்க வேண்டும். கையிலே உள்ள மலர் வெறும் அடையாள மாத்திரமாக இருப்பதுதான். மனம் பொருந்திப் பூசிக்கும் பூசைக்குத்தான் பயன் உண்டு. மனம் பொருந்த வேண்டுமானால், இறைவனே நமக்கு எல்லாம் தருபவன் என்ற ஞானம் வேண்டும்.

மனம் என்பது ஒரு மலர்க்கொடி. அதில் மணமற்ற மலரும் பூக்கும்; மணமுள்ள மலரும் மலரும். பக்தி, ஞானம், வைராக்கியம், கருணை என்பவை போன்ற மலர்களும் அந்த மனத்தில் மலரும் மலர். நல்ல மலர்கள் மலர்கின்ற மனத்தோடு சென்றால்தான் இறைவன் அருள் கிடைக்கும். திருக்கானப் பேர் இறைவன் இந்த உடம்பைத் தரும் பிறவி நோயையே போக்குபவன் என்ற ஞானம் வேண்டும். பிறவிப் பெரு நோயையே நீக்கும் இறைவன் ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெடும்படி செய்வான் என்ற அறிவு வேண்டும். இந்த ஞானமாகிய பெரிய மலர் மனத்திலே பூத்தால் அந்த மலரோடு செல்லுவாருக்கு நிச்சயமாக நற்பயன் உண்டாகும்.

ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெடஎண்ணின்
ஞானமாம் மலர்கொடு நணுகுதல் நன்மையே.

[குறைகள் நிரம்பிய உடம்பினில் அடைகின்ற நோய்கள் கெடும்படி நினைத்தால், அவ்வாறு நினைப்பவர்கள் ஞானமாகிய மலரைக் கொண்டு (கானப்பேரை) அடைதல் நன்மையாகும்.

ஊனம் – குறை; ஊன் என்பது அம்முச் சாரியை பெற்றது என்று கொண்டு, ‘ஊன் குவையாகிய உடம்பு’ என்றும் பொருள் கொள்ளலாம். உறுபிணி – அடையும் நோய்; மிக்க நோய் என்றும் சொல்லலாம். ஞானம் ஆம் மலர்; ஞானமாகிய மாமலர் என்றும் கொள்ளலாம். மனத்திலே தோன்றுவனவற்றுள் சிறந்ததாதலின் மாமலர் என்று சொல்வதும் பொருந்தும். நணுகுதல் – அடைதல். கானப்பேர் நணுகுதல் என்று கூட்டவேண்டும். கானப்பேர் நணுகுதல் என்று சொன்னாலும் அங்கு எழுந்தருளியுள்ள இறைவன்பாற் சென்று வழிபடுவதையே நினைந்தார். மலர் -கொண்டு செல்லுதல் வழிபாட்டிற்காகத்தானே?]

களிறு மலர் கொண்டு சென்று பூசிக்கும் இடத்தில் ஆறறிவுடைய மனிதன் அந்த யானையைப் போல வெறும் மலரை மாத்திரம் கொண்டு சென்றால் போதுமா? தங்கள் தங்கள் தகுதிக்கு ஏற்ப வழிபடுவதுதான் முறை. ஆகவே அறிவுடைய மனிதன் தன் அறிவுச் சிறப்புக்கு ஏற்ப மற்ற மலர்களோடு ஞானமென்னும் மலரையும் கொண்டு செல்ல வேண்டும். உடம்பில் ஊனம் இருந்தாலும் உள்ளத்தில் ஞானம் இருக்கலாம். இறைவன் உடம்பு ஊனத்தைப் பாராமல் ஞானத்தைத்தான் பார்த்து அருள் புரிவான். அவனை வணங்கினால் இம்மையிலே கைமேற்பயன் பெறலாம்; உறுபிணி கெட நன்மை பெற்று வாழலாம்.

சம்பந்தப் பெருமான். பல இடங்களில் இறைவன்பால் அன்பு செய்வாருக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் கிடைக்கும் என்பதை வற்புறுத்துவார். இந்தப் பாசுரத்தில் இம்மை வாழ்வில் இன்பம் பெறுதலைத் தனியே எடுத்துச் சொன்னார். உலகத்தில் நன்மையுடன் வாழ்வதற்கும் இறைவனுடைய அன்பு பயன்படும் என்னும் உண்மையை இதனால் தெரிந்து கொள்கிறோம்.

மானமா மடப்பிடி வன்கையால் அலகிடக் கானமார் கடகரி வழிபடும் கானப்பேர் ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெட்எண்ணின் ஞானமா மலர்கொடு நணுகுதல் நன்மையே.