இங்கும் அங்கும்
சீகாழியில் திருத்தோணியில் எழுந்தருளியிருந்த இறைவன் இன்று திருக்கோயிலில் ஒரு கட்டு மலைமேல் பெரிய திருவுருவத்துடன் வீற்றிருக்கிறான். அருகில் உமா தேவியார் எழுத்தருளியிருப்பதால் உமாபாகன் என்ற திருநாமமும் இப்பெருமானுக்கு வழங்குகிறது. இறைவன் உமாதேவியாரோடு எழுந்தருளியிருக்கும் இந்த அழகிய திருக்கோலத்தைக் கண்டு களித்த திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், அவ்வாறு இறைவன் உலகமுய்யப் பெண்ணின் நல்லாளொடும் இருந்த பெருந் தகைமையை நினைந்து உருகினார். அவர் உள்ளம் இறைவனுடைய கருணைப் பெருக்கின் நினைவிலே ஊறி இன்புறும் பொழுதெல்லாம் அதன் விளைவாகத் திருப்பாட்டு எழும். ஆகவே இப்போதும் ஒரு திருப்பதிகம் எழுந்தது.
‘பெருந்தகையாகிய எம்பெருமான் பெண்ணினல்லாளாகிய எம்பிராட்டியோடு கழுமலவள நகராகிய சீகாழியில் எழுந்தருளியிருக்கும் கருணைதான் என்னே!’ என்ற வியப்பு அவர்பால் உண்டாயிற்று.
அதில் என்ன வியப்பு?
இறைவன், குணம் குறி கடந்தவன்; பிறப்பு இறப்பு இல்லாதவன். அவனுடைய நிலை இன்னதென்று வரையறுத்துக் கூறுவார் யாரும் இலர். வேதமும் கூறவில்லை. அவ்வாறு யாவும் கடந்த பொருளாகிய அவன், அருளே கண்ணாகக் காணும் அன்பர்களுக்குத் தன்னுடைய அடையாளமாகிய திருவுருவங்களைக் காட்டினான். அவன் அருளிய அக்காட்சியினால் இன்புற்ற அருட்பெருஞ் செல்வர்கள் தாம் கண்ட திறத்தை உலகினருக்கு உணர்த்தினர். அவர் காட்டிய நெறிப்படியே இறைவனுக்குப் பல வகையான திருவுருவங்களும் திருநாமங்களும் அமைந்தன. பொறியடங்கத் தவம் மேற்கொண்டு இறைவனைக் காண இயலாதவர்களும் அவனுடைய திருவுருவங்களைக் கண்டும் திருநாமங்களைச் சொல்லியும் இன்புற வகை பிறந்தது. பக்குவ ஆன்மாக்கள் முறுகிய அன்பினாலே இறைவனுடைய அருளைப் பெற முடியும். அவ்வாறு இல்லாதவர்களும் சூழ்நிலையின் ஆற்றலினாலே இறைவனுடைய நினைவு உள்ளத்திலே ஊன்றி வளர்வதற்கு இறைவனுடைய திருவுருவங்களும் அவற்றை நிறுவி வழிபடும் கோயில்களும் பயன்படுகின்றன. மடைப் பள்ளிக்குட் புகுந்தபோதே உணவு நினைவு வந்து நாவில் நீர் சுரப்பது போலத் திருக்கோயிற்கண் புகும்போது இறைவனுடைய நினைவு உண்டாகி உள்ளத்தில் அன்பு ஊற்றெழும்.
திருக்கோயில்களில் எழுந்தருளியிருக்கும் இறைவனுடைய திருவுருவங்கள் அவனுடைய இயல்புகளையும் அருள் திறத்தையும் வெளிப்படுத்துவன. ஆதலின் அவற்றை முதலிலே புறக்கண்ணால் பார்த்து இன்புறும் அன்பர்கள் அப்பால் அவற்றின் உள்ளுறையைச் சிந்தித்து ஈடுபட்டு அகக்கண்ணால் பரம்பொருட் காட்சி பெற்று ஆனந்தமடையும் நிலையைப் பெறுவர்.
உமாபாகன், அருளே திருமேனியாகக் கொண்ட அம்பிகையை உடனிருக்கச் செய்து எழுந்தருளியிருக்கிறான். உலகமே ஆணும் பெண்ணுமாக இயங்குவது. உலகம் ஆண்மையும் பெண்மையும் ஒன்றுபடுவதனால் வளர்கிறது; வாழ்கிறது. தனியாணும் தனிப்பெண்ணும் உலகில் இருந்தால் அவர்களோடு உலகம் அழிந்தொழியும். உலகில் மக்கள் தொடர்ந்து வாழவேண்டுமானால் ஆணும் பெண்ணும் வாழவேண்டும்; அவர்கள் இணைந்து வாழவேண்டும். உலகம் இவ்வாறு இயங்கவேண்டுமென்று இறைவன் தன் திருக்கோலத்தாலும் அறிவுறுத்துகிறான். ஆணும் பெண்ணுமாக உலகம் வாழ்ந்து வளரவேண்டும் என்பதைத் தானும் ஆணும் பெண்ணுமாக இருந்து காட்டுகிறான். ஆணும் பெண்ணுமாக வாழும் உலகத்தில் தான் ஆணும் பெண்ணுமாக இருந்து காக்கிறான். அவன் அவ்வாறு இருப்பதனால்தான் உலகம் ஆணும் பெண்ணும் கலந்த உலகமாக இருக்கிறது. அவன் தனியே யோகியாக அமர்ந்தால் உலகம் முழுவதும் வாழ் விழந்து வீணாகி விடும். [‘காரண முதல்வன் மோனக் காட்சியால் அமரரெல்லாம், சூரர மகளிர் தங்கள் துணைமுலைப் போகம் இன்றி, ஆரிடர் நிலைமை தன்னை அடைந்தனர் அளக்கர் சூழ்ந்த, பாரிடை உயிருங் காமப் பற்றுவிட்டிருந்ததன்றே,” “சாலிகள் வளரு மெல்லை தடம்புனல் வறுமைத் தாக, வாலிது குரல்வாங்காது வருத்தொடு மாய்வதேபோல், மேலவ னருளாற் போகம் வெறுத்தலிற் கருமல் கின்றி, ஞாலமன் னுயிர்கள் முற்றும் நாடொறுங் குறைந்த வன்றே.” (கந்தபுராணம், மேருப்படலம், 7,28.) ]
இதனை மணிவாசகப் பெருமான் ஒரு பாட்டில் சொல்கின்றார்.
“தென்பால் உகந்தாடும் தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடி!
பெண்பால் உலகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர் விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ!”
இறைவன் பெண்களுக்குள்ளே நல்லாளாகிய உமா தேவியுடன் சீகாழியில் இருக்கிறான். சீகாழி நீர்வளம், நிலவளம், பொருள் வளம், அன்பு வளம் மிக்க நகரம்; வளநகர். அந்த நகரில் எங்கே பார்த்தாலும் நல்ல காட்சி களையே காணலாம். கண்ணில் விழுவன எல்லாம் நல்லன வாகவே இருக்கும். இயற்கை அழகும் செயற்கை யழகும் மலிந்த வளநகரம் அது. கோயிலும் குளமும் மாடமும் மாளிகையும் காண்பதற்கு அழகிய பொருள்கள் அல்லவா? பார்க்கின்ற மக்களும் சிவபிரான் அடியார்களாதலின் சைவத் திருக்கோலம் பூண்டு விளங்குகிறார்கள்.
எங்கே பார்த்தாலும் கண்ணில் நல்லதே உறுகின்ற கழுமல வளநகரத்தில் பெருந்தகையாகிய இறைவன் பெண்ணின் நல்லாளொடும் இருந்த சிறப்பு எத்தகையது! அதை வார்த்தைகளால் எடுத்துச் சொல்லமுடியுமா? மற்ற இடங்களெல்லாம் பிரளயகாலத்தில் அழிந்து ஒழியவும் இத்தலம் அழியாது மிதக்க, இறைவனும் இறைவியும் அதில் இருந்த தோற்றத்தை நினைப்பூட்டும் அதிசயத்தைச் சொல்வதா? வாக்கு மனம் கடந்த பெருமான் எல்லா மக்களும் கண்டு தரிசித்து இன்புறும் பொருட்டு அம்மையும் அப்பனுமாகி எழுந்தருளிய கருணையைச் சொல்வதா? அப்படி எழுந்தருளிய நிலையை விக்கிரக உருவத்தில் அடியார்கள் வழிபட ஏற்றுக்கொண்ட எளிமையைச் சொல்வதா? அந்தத் திருவுருவங்கள் கண்ணாற் காணும் போதும் பேரளவினை உடையனவாய் இருக்கும் பெருமையைச் சொல்வதா? அந்த உருவங்களில் அமைந்துள்ள எழிலைச் சொல்வதா? அன்பர்களுடைய உள்ளத்தே அன்பு ஊற்றெழச் செய்யும் கவர்ச்சியை சொல்வதா? எதைச் சொன்னாலும் சொல்லி முடித்ததாகாது. ஆகவே ஞானசம்பந்தர், “இரந்தவாறு என்னே!” என்று பொருள் படும்படி, “பெருந்தகை இருந்ததே!” என்று பாடுகிறார். தாம் கண்ட காட்சியும், பெற்ற அநுபவமும் இன்னவாறு இருந்தன என்று சொற்களால் சொல்லி அளவுபடாமையை எண்ணியே இப்படிச் சொன்னார். தமிழ் விரகராகிய அப் பெருமானுக்கே இயம்ப அரிதெனின் ஏனையோர் எவ்வாறு சொல்ல இயலும்?
கண்ணின்நல் லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே!
[கண்ணில் நல்ல காட்சியே படும் கழுமல வளநகரில் பெண்களுக்குள் நல்லாளாகிய உமாதேவியோடும் பெருந்தகைமையுடைய இறைவன் இருந்தவாறு என்னே!
நல்லது என்பது செய்யுளை நோக்கி நல்லஃது என்று விரிந்தது; விரித்தல் விகாரம். இருந்ததே; இருந்தது. என்னே என்னும் பொருளினையுடையது. என் என்பது அவாய் நிலையால் வருவித்து முடித்தற்குரியது.]
பெருந்தகை இன்னவாறு இருந்தான் என்று சொல்ல இயலாவிட்டாலும் அவ்வாறு இருப்பதனால் உண்டாகும் பயன் இன்னதென்று தெரியும். அருள் திருமேனி தாங்கி அம்மையுடன் எழுந்தருளியிருப்பதற்குக் காரணம் அவன் தன்னை யாவரும் எளிதில் வணங்கி நற்பயன் அடைய வேண்டும் என்னும் கருணைதான். இறைவனை வணங்குவதனால் இம்மைப் பயனும் மறுமைப் பயனும் ஒருங்கே உண்டாகும். பெண்ணினல்லா ளொடும் அமர்ந்திருக்கும் பெருந்தகையை அம்மையும் அப்பனுமாக வணங்குவது அன்பர்கள் இயல்பு. உயிர்களுக் கெல்லாம் எக்காலத்தும் எவ்விடத்தும் தொடர்ந்து நின்று தனுகரண புவன போகங்களை வழங்கியருளும் அம்மையும் அப்பனுமாக இருப்பவர்கள் அவர்களே. அவர்களே அம்மையப்பர் என்பதை உணர்ந்து கொண்டவர்களுக்கு உலகத்து ஆருயிர்கள் அனைத்தும் அவர்களுடைய மக்கள் என்ற உணர்வு தலைப்படும். அந்த உணர்வு முறுக ஜீவதயையும், பகையின்மையும், தன்னல மறுப்பும் தியாக புத்தியும் உண்டாகும். அதனால் உலகத்து உயிர்கள் இனிது வாழ வகை உண்டாகும். எல்லா உயிர்களிடத்தும் தயை உடையராக வாழ்வாரிடம் எல்லா உயிரும் அன்பு செய்யும். அதனால் இம்மையில் யாவரும் போற்ற வாழும் வாழ்வு உண்டாகும்.
ஆணும் பெண்ணுமாக எழுந்தருளியிருக்கும் இறைவன், மனித வாழ்வில் ஆணும் பெண்ணும் ஒன்றி வாழ்ந்து அறம் செய்யும் வகையை நினைப்பூட்டுகிறான். ஆணும் பெண்ணுமாக இல்லறம் நடத்தும் மக்கள் அப் பெருந்தகையை வணங்கினால் நல்ல வண்ணம் வாழலாம். தினந்தோறும் இடையூறின்றி இறைவன் திருவருளால் நல்வாழ்வு அமையும். இம்மை வாழ்விலே நன்மை உறுவதோடு அம்மையிலும் நல்ல கதி உண்டாகும். அதற்குச் சிறிதேனும் குறைவு இராது. “இந்த உலகில் இன்பங்களைத் துய்த்தான்; ஆதலின் மறுமையில் கொஞ்சம் குறைவாக இன்பம் அருள்வோம்” என்ற கணக்கு இராது. இங்கும் நல்ல வண்ணம் வாழலாம்; அங்கும் குறைவிலா இன்பம் துய்க்கலாம்.
மண்ணில்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின் நல் லகதிக்கு யாதுமோர் குறைவிலை.
[பூவுலகில் நல்லபடி நாள்தோறும் நல்வாழ்வு வாழலாம். ஆராய்ந்து பார்த்தால் மறுமையில் நல்ல கதிக்குச் சிறிதளவும் குறைவு இல்லை.
மண் – நிலவுலகம். நல்ல வண்ணம் வாழ்வது, இடையூறின்றி இன்ப வாழ்வு பெறுவது. வைகலும்-நாள்தோறும். வைகலும் வாழலாம் என்று கூட்டுக. நல்ல கதி-முத்தி. யாதும்-சிறிதும்.]
இறைவனை வழிபடுவோர் பெண்ணைத் துறந்து துறவு பூண்டு உலக வாழ்வில் வரும் இன்பங்களை அடையாமல் தான் வாழவேண்டும் என்ற நியதி இல்லை. இறைவன் பெண்ணினல்லாளோடு எழுந்தருளி யிருத்தலின் நாமும் பெண்ணோடும் அறநெறியில் அப் பிரானை வழிபட்டு வாழலாம். அந்த வாழ்க்கையில் குறைவு நேராது. நல்ல வண்ணம் வாழலாம். வையத்துள் வாழ்வாங்கு வாழலாம். இம்மையின்பம் குறைவின்றிக் கிடைப்பதோடு மறுமையின்பமும் கிடைக்கும்.
இவ்வாறு ஆளுடைய பிள்ளையார் உபதேசம் செய்கிறார்.
மண்ணில்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்;
எண்ணின், நல் லகதிக்கு யாதும்ஓர் குறைவுஇலை; கண்ணில்நல் லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணினல் லாளொடும் பெருந்தகை இருந்ததே!
(பிரிக்காமல் சொன்னால், “நல்லகதிக்கியாதுமோர் குறைவிலை” என்று வரும். கி என்பதில் உள்ள இகரம் குற்றிய லிகரம். பெருந்தகை இருந்தவாறு என்னே! இவனை வழிபட்டால் மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்; நல்ல கதிக்கும் குறைவு. இலை.)