அதுவோ அருள்?

திருஞான சம்பந்தப் பெருமான் திருவாவடுதுறையென்னும் திருத்தலத்துக்கு வந்து சில காலம் தங்கினார். அத்தலம் சோழ நாட்டில் காவிரிக்குத் தென் கரையில் உள்ளது. உமாதேவியார் பசுவின் திருவுருவம் எடுத்து இறைவனைப் பூசிக்கப் பெருமான் எழுந்தருளி அத்தேவியின் பசுவுருவத்தை நீக்கி அணைத்துக் கொண்டு நின்றான். ஆவின் திருவுருவத்தை மாற்றிய தலமாதலின் ஆவடுதுறை என்ற திருநாமம் உண்டாயிற்று.

இந்தத் தலத்தில் ஞானசம்பந்தர் தங்கியிருந்த போது அவருடைய தந்தையார் தம் மரபுக்கு ஏற்பச் செய்ய வேண்டிய வேள்வியைப் புரிய எண்ணினார். தம்முடைய ஊராகிய சீகாழிக்குச் சென்று பிற அந்தணர்களுடன் சேர்ந்து வேள்வி செய்யப் பொருள் வேண்டியிருந்தது. இச் செய்தியை அவர் ஆளுடைய பிள்ளையாரிடம் தெரிவித்தார். தமக்கு என்றும் குறைவிலாத நிதியாக இருப்பவன் சிவபெருமானே என்று நம்பி வாழும் திருவருட் செல்வராகிய சம்பந்தர் திருவாவடுதுறை ஆலயத்திற்குட் சென்று, “தாம் வேள்வி செய்வதற்குரிய பொருள் வேண்டும் என்று எந்தையார் கேட்டார். என் கையிலே பொருள் இல்லை. கேட்பாருக்குக் கொடுக்க இயலாமல் எம்மை வைப்பதுதான் திருவருளுக்கு அழகோ?” என்ற கருத்தோடு ஒரு திருப்பதிகத்தைப் பாடினார்.

அப்போது இறைவன் திருவருளால் ஒரு பூதம் அங்கே வந்து ஆயிரம் பொன்னையுடைய கிழி ஒன்றை முன்னே இருந்த பீடத்தில் வைத்துச் சென்றது. அதைக் கண்டு இறைவன் அருளை எண்ணி வியந்து பாராட்டி உருகிய பிள்ளையார் அதனைத் தம் தந்தையாரிடம் கொடுத்தார். அப்பெரியார் அக்கிழியைப் பெற்றுச் சென்று சீகாழியில் தாம் செய்ய வேண்டிய வேள்வியைச் செய்து நிறைவேற்றினார்.

இறைவன் திருஞான சம்பந்தருக்கு ஆயிரம் பொன் அளித்த இந்த அருட்செயலைத் திருநாவுக்கரசு நாயனார்,

மாயிரு ஞால மெல்லாம் மலரடி வணங்கும் போலும் பாயிருங் கங்கை யாளைப் படர்சடை வைப்பர் போலும் காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க் கம்பொன் ஆயிரங் கொடுப்பர் போலும் ஆவடு துறைய னாரே”

என்று பாராட்டியிருக்கிறார்.

சம்பந்தர் தமக்கு வேண்டிய பொருளை வேறு யாரிடத்திலும் சென்று இரக்கும் தன்மை இல்லாதவர். அவருக்கு வேண்டிய பண்டங்கள் அவ்வப்போது இறைவன் திருவருளால் கிடைத்துக் கொண்டே இருந்தன. அதனால் தமக்கு ஒன்றும் குறைவில்லாமல் இறைவன் எழுந்தருளியிருக்கும் தலங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தார். இப்போது தந்தையார் பொருள் வேண்டுமென்று கேட்டபோதுதான் தம் கையிலே பொருள் ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்தார் சம்பந்தர். அதுகாறும் பொருள் இல்லாத குறையை உணரும் வாய்ப்பு வரவில்லை. பண்டங்கள் யாவும் கிடைத்துக் கொண்டே இருந்தன. அப்பண்டங்களை அடியார்களுக்கெல்லாம் பயன்படுத்தி இன்புற்றார். தனியே பணம் என்ற ஒன்று அவசியம் இல்லாமலே இருந்தது. நாணயம் அதிகமாக வழங்காத காலம் இது. நெல் இருந்தாற் போதும்; எல்லாப் பொருள்களையும் பெறலாம்.

இப்போது தந்தையார் பொருள் வேண்டும் என்று கேட்டபோது தான் சம்பந்தப் பெருமானுக்குப் பொன் என்ற ஒன்று இருப்பது நினைவுக்கு வந்தது. தந்தையாருக்கு வேண்டிய பொன்னை அளிக்க முடியாத நிலை தமக்கு இருப்பதை அவர் உணர்ந்தார். அவர் மனம் சிறிது தளர்ச்சி அடைந்தது. உடனே அது நீங்கியது. “அந்த மில்பொருள் ஆவன ஆவடு துறையுள் எந்தையார் அடித்தலங்கள் அன்றோ?” என எண்ணினார்; உள்ளத்தே ஓர் எழுச்சி உண்டாயிற்று.

எத்தகைய இடர்ப்பாடு வந்தாலும், எத்தகைய குறைவு நேர்ந்தாலும், எத்தகைய துயரம் புகுந்தாலும் அவற்றை நீக்கி இன்பந் தருவது இறைவன் திருவடியே என்ற உறுதிப்பாடு உடையவர் அவர். ஆகவே இப்போது இறைவனுடைய திருக்கழலைத் தொழுதால் வாட்டம் நீங்கி எழலாம் என்று உணர்ந்தார்.

மனிதருக்கு வரும் துன்பங்கள் மூன்று வகை. அவற்றைத் தாபத்திரயம் என்று சொல்லுவார். அவை ஆதிதை விகம், ஆதி பௌதிகம், ஆத்தியாத்மிகம் என்பவை. மக்களாகப் பிறந்தார் இம் மூவகைத் துன்பங்களையும் அடைவர். [‘பிறவித் துன்பங்களாவன தன்னைப்பற்றி வருவனவும், பிற உயிர்களைப் பற்றி வருவனவும், தெய்வத்தைப்பற்றி வருவனவும் என மூவகையான வருந்துன்பங்கள்’ (திருக்குறள், 4-பரிமேலழகர் உரை.)]

மழை, காற்று, இடி, வெப்பம், கால மாறுபாடு, பூகம்பம் முதலியவற்றால் வரும் இடர்களை ஆதிபௌதிகம் என்று சொல்வர். பிறக்கும்போது உண்டாகும் துன்பம் நரை, திரை, மூப்பு, சாக்காடு என்பவற்றை ஆதிதைவிகத்தின்பாற் படுத்துவர். மெய்யிலும் மனத்திலும் வரும் நோய்கள், மக்களாலும் விலங்குகளாலும் பறவைகளாலும் வரும் துன்பங்கள் முதலியன ஆத்தியாத்மிகம் என்னும் வகையில் அடங்கும்.

இந்த மூன்று வகையான துன்பங்கள் வந்தாலும் இறைவனுடைய கழலே துணையென்று தொழுபவர் ஆளுடைய பிள்ளையார். “மழை முதலியவற்றால் இடர் உண்டானாலும், உடம்பு தளர்ந்தாலும் நோய் வந்து தொடர்ந்தாலும் உன்னுடைய திருவடிகளையே தொழுது நான் பெற்ற துன்பத்திற் கிடத்தலொழிந்து எழுச்சி பெறுவேன்” என்று திருப்பதிகத்தைத் தொடங்குகிறார்.

இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதுஎழுவேன்.

[இடர் வந்த காலத்திலும் தளர்ந்தாலும் எனது மிக்க நோய் வந்து தொடர்ந்தாலும் உன்னுடைய திருவடிகளையே தொழுது எழுச்சி பெறுவேன்.

இடரினும் – துன்பத்திலும். தளரினும் – தளர்ந்தாலும். தளர் என்பதை முதல்நிலைத் தொழிற்பெயராக்கித் தளர்விலும் என்று பொருள் கொள்வதும் பொருந்தும்; இடர் என்னும் பெயருக்கு ஏற்ப இதனையும் பெயராக்கும் வழி இது. எனது நோய், உறுநோய் என்று கூட்டவேண்டும். அவரவர்களின் வினைப் பயத்தால் அவரவரை நாடி வருவனவாதலின் எனது நோய் என்றார். உன: அகரம், பன்மை உருபு; கழல் என்பது கழல்கள் என்னும் பொருளையுடையது. கழல் என்பது வீரத்தைப் புலப்படுத்த ஒற்றைக்காலில் அணியும் மணி கட்டிய ஒருவகை அணி; வீர கண்டை அல்லது வீர வெண்டயம் என்றும் சொல்வது உண்டு. அது இங்கே அதனை அணிந்த திருவடிகளுக்காயிற்று. தொழுது எழுவேன் – தொழுது எழுவேன் – தொழுது அப்படித் தொழுததன் விளைவாக என் மனத் தளர்ச்சி நீங்கி எழுவேன்; எழுதல் இங்கே மனத்தின் செயல். உன்னைத் தொழுது பாயலினின்றும் எழுவேன் என்று பொருள் உரைப்பது இங்கே சிறப்பன்று.]

இடர் என்றது காலநிலை முதலியவற்றால் தடுப்பதற்கு அரியனவாகி வரும் துன்பங்கள். இவை ஆதிபௌதிகத் தின்பாற் பட்டவை. தளரினும் என்பதனால் சுட்டப் பெறும் தளர்ச்சி ஆதிதைவிகத்தின் பாற்படும். நோய்கள் ஆத்தியாத்மிகத்தின் பாற்படும்.

மூவகைத் துன்பம் வந்தாலும் அவற்றை நீக்குவார் வேறு இருப்பதாக எண்ணி அலையாமல் இறைவனே நமக்கு உற்ற பாதுகாப்பு என்று கடைப்பிடித்து அவனுடைய திருவடிகளைப் பற்றிக்கொள்வதே அன்பர்களின் இயல்பு.

இவ்வாறு இடர் வரினும் தளர்ச்சி வரினும் நோய் வரினும் இறைவனுடைய கழலைத் தொழும் துணிவு எல்லோருக்கும் வராது. “எத்தைத் தின்றால் பித்தம் தீரும்?” என்றபடி தம்முடைய ஆற்றலாலும் அறிவாலும், துணையாக இருப்பாருடைய ஆற்றலாலும் அறிவாலும் அவற்றைப் போக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணமே பலருக்கு உண்டாகும். இறைவனையன்றி வேறு துணையில்லாத அன்பர்கள் எது வரினும் அவனை நாடும் ஒருமைப்பாடு உடையவர்களாக இருப்பார்கள்.

சிற்றறிவும் குறுகிய ஆற்றலும் உடையவர்களாகிய மக்களுக்கு வரும் இடர்ப்பாடுகளை இறைவன் நீக்கியருள்வது பெரிதன்று. பேரறிவும் பேராற்றலும் உடைய அமரர்களுக்கு வந்த இடரைப் போக்கினவன் அவன். அது அவர்கள் தங்களுடைய ஆற்றலால் நீக்க முடியாத இடராக இருந்தது; அவர்களுடைய உயிருக்கே முடிவாக வந்தது. பாற்கடலைக் கடைந்தபோது அமுதம் வருமென்று அமரர் எதிர்பார்த்தார்கள். ஆனால் அது தோன்றுவதற்கு முன் ஆலகால விடம் தோற்றியது. அந்த நஞ்சை மாற்ற அவர்களால் இயலவில்லை. கடல்தனில் இனி வரவிருந்த அமுதத்தோடு கலக்க இருந்தது அந்த நஞ்சு. ஆனால், இறைவன் அமரர் வேண்ட அதனை எடுத்துத் தன் திருமிடற்றினில் அடக்கினான். உண்ட நஞ்சு மீண்டும் வெளிவந்தால் முன்நின்றாருக்கு அழிவு நேரும். திருவயிற்றுக்குட் போனால் அங்குள்ள உயிர்களுக்கு அழிவு உண்டாகும். அதனால் அந்த நஞ்சுக்கு வேலையே இல்லாதபடி தன்னுடைய கழுத்தில் அடக்கிக் கொண்டான் இறைவன்.

“இடரினும் தளரினும் நோய் தொடரினும் உன் கழல் தொழுவேன்; இடர் முதலியவை உன் திருவருளால் நீங்கிவிடும் என்ற உறுதி எனக்கு உண்டு. தேவர்களின் உயிருக்கே இறுதியாக வந்த பேரிடரை நீக்கினவன் நீ அல்லவா?” என்று நினைக்கும்படி ஞானசம்பந்தர் தம்செயலையும் பண்டை வரலாற்றையும் இணைத்துப் பாடுகிறார்.

கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!

[திருப்பாற் கடலில் அமரர் அமுது கடைந்த காலத்தில் அதனோடு கலந்து இனமாகவந்த நஞ்சைத் திருக்கழுத்தில் அடக்கியருளிய வேதப் பொருளானவனே!

கலந்த என்றது ஓரிடத்தில் தோன்றியதை நினைந்தது. அமுது வரும் வரும் என்று எதிர்பார்த்தனர் அமரர்; அப்போது வந்ததாதலின் அமுதொடு கலந்த நஞ்சு என்றார். வேதியன் வேதப் பொருளானவன்; வேதம் ஓதுபவன். இறைவன் எப்போதும் வேதத்தை ஓதிக்கொண்டே இருப்பவன்.]

ஞான சம்பந்தர் இப்போது தமக்குள்ள நிலையை மேலே சொல்கிறார். அதைச் சொல்லத் தொடங்கும் போதே, ‘இறைவன் நம்மை ஆட்கொண்டான். அவனால் ஆட்கொள்ளப் பெற்றவர்களுக்கு எதனாலும் குறையில்லை என்று நினைத்திருந்தோமே! இப்போது அல்லவா நம் குறை தெரிகிறது? குறைவிலா நிறைவாகிய சிவபெருமானுக்கு ஆளாகப் புக்கபிறகு பிறரிடம் போய் ஒன்று தா என்று கேட்காமல் இருக்கும் நிலை வந்தது. அதுவே பெரிய நிலை என்று எண்ணியிருந்தோமே! இப்போது அதற்கு மேலும் ஒரு நிலை இருக்கிறது தெரிகிறதே! அதை நோக்கும்போது நாம் குறையுடையோம் என்றல்லவா தோன்றுகிறது? இறைவன் நம்மை ஆண்ட வண்ணம் இதுதானா?’ என்று ஒரு வகையான வருத்தம் தோன்றுகிறது.

இதுவோ எமை ஆளுமாறு?

என்று இறைவனையே கேட்கிறார்.

எல்லாப் பொருளையும் தரும் வள்ளல் இறைவன். வள்ளன்மைக்கு இலக்கணம் தன் கைப் பொருளைப் பிறர் குறையறிந்து ஈவது. ஆனால் இறைவனுடைய வள்ளன்மை அதனோடு நின்றுவிடுவதன்று; தன்னை வழிபட்டவருக்கு வேண்டியவற்றைத் தருவதோடு, அவர்களையே வள்ளல்கள் ஆக்கி விடுவான். தம்பால் வந்து இரந்தவர்களுக்கு வேண்டும் பொருளை வரையறையின்றி ஈயும் நிலையை அவர்களுக்கு உண்டாக்கி விடுவான். “அந்த வள்ளன்மையை என்னிடம் காட்டாமல் இதுகாறும் இருந்தாயே!” என்று குறையுறுகிறார் சம்பந்தர்.

“எனக்கு வேண்டியனவற்றை நான் வேண்டாமலே பாலித்தருளும் பிரான் நீ. இப்போது நான் எந்தையாருக்குப் பொருள் வழங்க வேண்டும். அவருக்கு அதனை வழங்கும் ஆற்றல் எனக்கு இல்லை. உன் அடியான் இப்படித் தன்பால் ஒன்றை வேண்டினார்க்கு அதனை அளிக்க முடியாமல் நைந்து வாடுதல் நின் அருளுக்கு அழகோ? உலகில் உள்ள வள்ளல்களின் அருள்போல, என்னளவில் வேண்டிய பொருள் கிடைக்கச் செய்தது போதுமா? உன் அருள் பிறர் செய்யும் அருளினும் இனியது அல்லவா? உத்தம வள்ளல் ஒருவன் கேளாத முன்பே குறிப்பறிந்து அவனுக்கு வேண்டியவற்றைக் கொடுப்பான். உத்தமோத்தம வள்ளலாகிய நீ நான் கேளாத முன்பே குறிப்பறிந்து, என்பால் வேண்டினாருக்கு நான் உடனே ஈயும் வண்ணம் அருள் செய்யவில்லையே! இதுதானா நினது இன்னருள்? ஆவடுதுறையில் எழுந்தருளியிருக்கிற சிவபெருமானே!”

இதுவோஎமை ஆளுமாறு?
ஈவதுஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோஉனது இன்னருள்
ஆவடுதுறை அரனே!

[இதுதானா நீ அடியார்களாகிய எங்களை ஆளும் வகை? எங்கள்பால் வந்து இரந்தாருக்குக் கொடுப்பதற்கு ஏற்ற பொருள் ஒன்றும் எம்மிடம் இல்லையானால், அந்த நிலையை எங்களுக்கு அளிப்பதுதானா நின்னுடைய இனிய அருள்? திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே!

இது என்றது தம் நிலையை; ஈவது ஒன்று – பிறருக்குக் கொடுக்கும் ஒரு பொருள். அது என்றது தம்மை அந்த நிலையில் நிறுத்தியதைச் சுட்டியது. அருளென்றது பிறர்பாற் செல்லாமல் வேண்டியவற்றை அடியார்களுக்குத் தருவது; இன்னருள் என்றது தம்பால் வந்தாருக்கு வேண்டியவற்றைத் தரும் நிலையை அடியார்களுக்குத் தருவது.]

“இடரினும் தளரினும் நோய் தொடரினும் உன் கழலே தொழும் எனக்கு அருளுமாற்றில் குறை வைக்கலாமா? நஞ்சை மிடற்றினில் அடக்கிய நீ உன் அருளிற் குறை காட்டலாமா?” என்பது குறிப்பால் தோன்றப் பாடினார்.

இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்;
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!

இதுவோஎமை ஆளுமாறு? ஈவதொன்று எமக்கு இல்லையேல், அதுவோஉனது இன்னருள்? ஆவடு துறைஅரனே!

இந்தத் திருப்பதிகம் பாடியதைப் பற்றிச் சேக்கிழார் பெருமான்,

சென்று தேவர்தம் பிரான்மகிழ் கோயில்முன் பெய்தி
நின்று போற்றுவார், ‘நீள்நிதி வேண்டினார்க்கு ஈவது
ஒன்றும் மற்றிலேன்உன் அடி அல்லதொன்று அறியேன், என்று பேரருள் வினவிய செந்தமிழ் எடுத்தார்”

என்று பாடுகிறார். ஞானசம்பந்தர் திருவாக்கில் வரும், ‘ஈவதொன்று எமக்கு இல்லையேல்’ என்ற பகுதிக்கு, “நீள்நிதி வேண்டினார்க்கு ஈவது ஒன்றும் மற்றிலேன்” என்று பொருள் விரிக்கிறார் சேக்கிழார்.

இரப்பவருக்குத் தான் ஈதலோடன்றி, தன் அடியார்கள் தம்பால் இரப்பவருக்கு ஈயும்படியாக அவர்களை வைக்கும் இன்னருள் உடையோன் இறைவன் என்பதை அப்பரும்,

இரப்பவர்க்கு ஈய வைத்தார்?

என்று பாடினார்.

பிறர்பால் இரவாமல் இருத்தல் உயர்ந்த நிலை. தம்பால் வேண்டினாருக்கு இல்லையென்னாமல் ஈதல் அதனினும் உயர்ந்த நிலை. அந்த நிலை இன்மையையே சம்பந்தப் பெருமான் நினைந்து இறைவனை வினவினார்.

பிறர் தம்மை இரக்கும்போது தாம் பிறர்பால் அதனை அப்போது வேண்டி ஈதல் அத்துணைச் சிறப்புடையதன்று. இராமன் முடி சூடினால் கைகேயி இழிநிலை அடைவாள் என்பதை அறிவுறுத்த வந்த கூனி இந்தக் கருத்தை நினைப்பூட்டுகிறாள்.

தூண்டும் இன்னலும் வறுமையும் தொடர்தரத் துயரால் ஈண்டு வந்துனை இரந்தவர்க்கு இருநிதி அவளை
வேண்டி ஈதியோ? வெள்குதி யோ?விம்மல் நோயால்
மாண்டு போதியோ? மறுத்தியோ? எங்ஙனம் வாழ்தி?”

என்னும் கம்பநாடர் வாக்கு இங்கே ஓரளவுக்கு நினைக்கத் தக்கது.

இந்தத் திருப்பதிகத்தின் பத்துப்பாட்டிலும் முதல் நான்கு அடிகள் வெவ்வேறாக அமைய, அவற்றின் பின், “இதுவோ எமை…… ஆவடுதுறை யரனே” என வரும் இரண்டடிகளும் ஒவ்வொரு பாட்டிலும் வந்துள்ளன. நான்கு அடிகளளுக்கு மேல் பல்லவியைப் போல வரும்படி இந்த இரண்டடிகளை வைத்ததனால் இப்பதிகம், “நாலடி மேல் வைப்பு” என்ற வகையைச் சார்ந்தது.

இப்பதிகத்தின் திருக்கடைக் காப்பில்,

நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்.

என்று வருகிறது. ‘விலையுடை அருந்தமிழ்’ என்பது, ‘மதிப்பையுடைய பிறராற் பாடற்கரிய தமிழ்’ என்று பொருள் படுவதாகக் கொள்ளலாம். அப்படியின்றி ஆயிரம் பொன் பெற்றதை நினைந்து இப்படிப் பாடியதாகக் கொண்டு, ‘பொருளை விலையாகப் பெற்ற அருந்தமிழ்’ என்று பொருள் உரைக்கவும் இடம் உண்டு. [“தோணிபுரத்து, இறையவனார் சொன்ன செந்தமிழ்க்காக இனிதளித்த, நிறையுல வாக்கிழிச் செம்பொற்றனம்” (திருவாவடுதுறைக் கோவை, 153) என்பதில் சம்பந்தர் பெற்ற பொருள் பாட்டுக்குரிய பரிசென்பது குறிப்பாகத் தெரிகின்றது. ]