சிற்றம்பலம்

சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் தலங்கள் பல. சிவபெருமானுடைய வழிபாடு எந்தக் காலத்தில் உண்டாயிற் றென்று இன்னும் வரையறுக்க முடியவில்லை. சிந்து வெளியில் மொகெஞ்சதரோவில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்கள் சிவலிங்கப் பெருமானை வழிபட்டு வந்தார்கள் என்ற செய்தி அந்தப் பகுதியில் அகழ்ந்தெடுத்த பழம்பொருட் சிதைவுகளால் தெரியவருகிறது. [ “Among the revelations that Mohenjadaro and Harappa had in store for us none perhaps is more remarkable than this discovery that Saivism has a history going back to the chalcolithic age or perhaps even further still and that it thus takes place as the most ancient living faith in the world.” -Sir John Marshall. ] பாரதநாட்டில் சிவ வழிபாடு இருந்ததோடன்றி, ஜாவா முதலிய நாடுகளிலும் [Relation of Indian Art with Java by Dr.J.Ph. Vogel, pp.17.1 ] இருந்தது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உரைக்கின்றனர்.

இவ்வாறு உலகில், பல இடங்களிலே பரவியிருந்த சிவழிபாடு தமிழ்நாட்டில் சிறப்பாக நிலவுகிறது. சிவ பெருமானுக்குரிய கோயில்கள் இந்த நாட்டில் இருப்பது போல வேறு எங்கும் இல்லை. ஊர்தோறும் கோயில்கள் பல இன்றும் இருக்கின்றன.

கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்

என்பதும், “ஊரானோர் தேவகுலம்” என்ற மேற்கோளும் தெய்வத் திருக்கோயில்களின் அவசியத்தை உணர்த்துகின்றன.

திருக்கோயில் இல்லாத ஊர் திருவில்லாத ஊரென்றும், மக்கள் வாழாமல் விலங்கினங்கள் வாழும் காட்டுக்கு ஒப்பான தென்றும் அப்பர் சுவாமிகள் அருளுகிறார்.

“திருக்கோயில் இல்லாத திருவில் ஊரும்
அவையெல்லாம் ஊரல்ல; அடவி காடே.”

அந்த அந்த ஊரில் உள்ள மக்கள் தங்கள் ஊரில் உள்ள திருக்கோயில்களில் நாள்தோறும் வழிபட்டார்கள். சில சிறப்பான நாட்களில் வேறு தலங்களுக்கும் சென்று இறைவனைத் தரிசித்து வந்தார்கள். சில தலங்கள் தம்பால் வந்து வழிபட்டுப் பேறுபெற்ற பெரியோர்களால் மிக்க சிறப்பைப் பெற்றிருக்கின்றன. இறைவனுடைய கருணைத் திருவிளையாடல்கள் பல நிகழ்ந்தமையால் பல தலங்கள் பெருமை பெற்றன. இறைவன் அறுபத்து நான்கு திருவிளையாடல்களை இயற்றிய மதுரை மிகப் பெரிய தலம் என்பதைத் தமிழ்நாட்டார் நன்கு அறிவார்கள்.

இவ்வாறு சிறப்புப் பெற்ற தலங்கள் பல இருந்தாலும் சைவர்கள் எல்லாத் தலங்களிலும் முதலில் வைத்து எண்ணும் சிறப்பை உடையது சிதம்பரம். அது கோயில்கள் யாவற்றினும் சிறப்புடையது; ஆதலால் வேறு அடை ஒன்றும் இன்றிக் கோயில் என்று வழங்கும் தனிப்பெருமை அதற்கு அமைந்தது. பட்டினத்துப் பிள்ளையார் சிதம்பரத்தைப் பற்றிப் பாடிய நூல் ஒன்றுக்கு, ‘கோயில் நான்மணிமாலை’ என்ற பெயர் அமைந்திருக்கிறது. [சிதம்பரத்திற்குரிய புராணங்களில் உமாபதி சிவாசாரியார் இயற்றிய புராணத்திற்கு, கோயிற் புராணம் என்ற பெயர் இருத்தல் இங்கே நினைத்தற்குரியது.]

மாணிக்கவாசகப் பெருமான், தில்லையில் நடனமாடும் கூத்தப்பிரானுடைய திருவடியே பல்லுயிருள்ளும் பயில்கின்றது என்று பாடுகிறார்.

தில்லை மூதூர் ஆடிய திருவடி
பல்லுயிர் எல்லாம் பயின்றன னாகி

என்பது அவர் பாட்டு. சேக்கிழார் பெருமான் அம்பலத்தாடு வானைப் பலபடியாகப் பாராட்டுவார். தேவாரம் மீண்டும் உலகத்தாருக்குக் கிடைத்த இடம் தில்லையே. தேவாரம் பாடுவார் எந்தத் தலத்தின் பதிகத்தைப் பாடினாலும் ‘திருச்சிற்றம்பலம்’ என்று சொல்லித் தொடங்குவதும், ‘திருச்சிற்றம்பலம்’ என்று சொல்லி முடிப்பதும் வழக்கம்.

சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூரில் திருத்தொண்டத் தொகை பாடத் தொடங்கினார். பல ஊர்களில் இருந்த நாயன்மார்களைப் பற்றிப் பாடத் தொடங்கிய பொழுது, இறைவன் திருவருளால் முதற்பகுதி வானொலியாக வந்தது.

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்

என்ற முதல் அடியின் முதற்பகுதியே அது. தில்லையை முதலில் நினைக்கச் செய்த திருவருள் அதன் வாயிலாக அத்தலத்தின் தலைமையையும் எடுத்துக் காட்டியதென்றே கொள்ள வேண்டும்.

சிதம்பரத்திற்குரிய பழம்பெயர் பெரும்பற்றப் புலியூர் என்பது. புலியூர் என்பது அதன் இயற்பெயர். அது உள்ள பகுதி பெரும்பற்று. பல புலியூர் இருத்தலினால் இதனைச் சுட்டிக் காட்டப் பெரும்பற்றப் புலியூர் என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. தில்லை என்னும் மரம் இத்தலத்தில் சிறப் புடையதாதலால் இதற்குத் தில்லை வனம், தில்லை என்ற பெயர்கள் அமைந்தன. மதுரைக்குக் கடம்ப வனம் என்று தலத்துக்குரிய நன்மரத்தால் பெயர் அமைந்தது போன்றது இது.

இங்கே இறைவன் ஆடும் இடம் சிற்றம்பலம். சிவலிங்கப் பெருமான் எழுந்தருளிய இடம் திருமூலட்டானம். நடராசப் பெருமானுடைய சந்நிதியே சிறப்புடையதாதலால் அதனைத் தில்லைச் சிற்றம்பலம் என்று வழங்குவர். திருக்கோயில் முழுவதுக்குமே சிற்றம்பலம் என்ற பெயர் பிறகு அமைந்தது.

பேரம்பலம் என்ற பகுதி ஒன்றும் திருக்கோயிலில் இருப்பதால் இறைவன் ஆடும் இடத்தைச் சிற்றம்பலம் என்று வழங்கினர்.

சிற்றம் பலமும் திருப்பெரும்பே ரம்பலமும்
மற்றும் பல்பல மண்டபமும்

என்று ஒட்டக்கூத்தர் இந்த இரண்டு அம்பலங்களையும் வைத்துப் பாடுகின்றார்.

நாளடைவில் சிற்றம்பலம் சித்தம்பலமாகிப் பின்பு சிதம்பரம் ஆயிற்றென்று தோன்றுகிறது. ‘சித்தாகிய அம்பரம், சிதாகாசம்’ என்று பொருள் விரித்தார்கள். இறைவன் ஞானவெளியில் நடனம் புரிகின்றான் என்ற அற்புதமான உண்மையை நினைப்பூட்டும் வகையில் சிற்றம்பலம் என்ற பெயர் சிதம்பரம் என்று மாறியது. பின்னும் சிறப்பான பொருளைத் தருவதனால் சிதம்பரம் என்ற பெயரே உலக வழக்கில் இப்போது மிகுதியாக வழங்கலாயிற்று. ஆயினும் இலக்கியங்களிலும் சாசனங்களிலும் சிற்றம்பலம் என்ற பெயரே ஆட்சிபெறுகிறது.

தில்லைவாழந்தணர்கள் அக்காலத்தில் மூவாயிரவர் இருந்தனர். இறைவனே அம்மூவாயிரவர்களில் முதல்வன். தில்லைவாழந்தணருக்கு நடராசப் பெருமானை வழிபடுவதை யன்றி வேறு வேலையும் கடமையும் இல்லை. அவர்களுக்கு அதுவே தொழில்; அதுவே பொழுதுபோக்கு; அதுவே அறம்; அதுவே பொருள் தரும் ஆறு; அதுவே இன்பந்தரும் செயல்; அதுவே வீட்டு நெறி. அவர்களுடைய வழிபாட்டை ஏற்று மகிழும் சிற்றம்பலத்துப் பெருமானைத் திருஞானசம்பந்தர் பாடுகிறார்.

அவர் பாடிய தேவாரத்தில் மூன்றாம் திருமுறையில் முதல் திருப்பதிகம் சிற்றம்பலத்தைப் பற்றியது. உயர்ந்தவர்கள் உறைகின்ற தில்லையில், பண்டைக் காலம் முதல் நாளுக்கு நாள் புகழ் ஏறிவருகின்ற சிற்றம்பலத்தில் எழுந்தருளியிருக்கும் ஈசனை, ஊறும் இன்தமிழும் இசையும் கலந்து விளங்க இத்திருப் பதிகத்தைப் பாடியருளினார். [“நாறு பூம்பொழில் நண்ணிய காழியுள் – நான்மறை வல்லஞான சம்பந்தன், ஊறும் இன்தமிழால் உயர்ந்தார் உறைதில்லை தன்னுள்; ஏறு தொல்புகழ் ஏந்து சிற்றம்பலத் – தீசனை இசையாற் சொன்ன பத்திவை, கூறுமாறு வல்லார் உயர்ந்தாரொடுங் கூடுவரே” என்பது திருக்கடைப் காப்பு. ]

இறைவனுக்கு நாள்தோறும் சிற்றம்பலத்தில் பூசை நிகழ்கின்றது. இப்போது சந்திரமௌளீசுவரர் என்று வழங்கும் ஸ்படிகலிங்கப் பெருமானுக்கும் ரத்தினசபாபதி என்ற திருமேனிக்கும் நாள்தோறும் அபிடேகங்கள் உண்டு. நடராசப் பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறுமுறை அபிடேகம் நிகழும்.

சிற்றம்பலத்தில் இறைவனுக்கு நடைபெறும் ஆராதனைக்கு என்ன குறை? அபிடேகத்தின் சிறப்பை எவ்வளவு சொன்னாலும் தகும். இறைவன் நறு நெய்யிலே ஆடுகிறான்; பாலிலே ஆடுகிறான்; தயிரிலே ஆடுகிறான். இவ்வளவு ஆட்டும் நடைபெறுவதற்கு அங்குள்ள மூவாயிரவராகிய அந்தணர்களின் அன்பே காரணம். அவர்கள் என்றும் நடராசமூர்த்தியைப் பிரியாமல் உறைகிறவர்கள். அவர்கள் பிரியாத சிற்றம்பலத்தைச் சிறந்த திருக்கோயிலாகவும் தனக்கு விருப்பமான இடமாகவும் நாடி அங்கே இறைவன் எழுந்தருளியிருக்கிறான். அபிடேகங்கள் ஆனபிறகு அந்தணர் மலரிட்டுப் பூசிக்கிறார்கள். பல வகையான மலரால் அருச்சித்து வழிபடுகிறார்கள். அந்த மலர்களுக்குள்ளே பொன்னிறம் படைத்ததும் நறுமணம் உடையதும் ஓங்காரத்தை நினைப் பூட்டுவதுமாகிய கொன்றை மலரை இறைவன் விரும்பி ஏற்றுக்கொள்கிறான். மற்றவை யாவும் அருச்சனைக்குரிய மலர்களேயானாலும் இறைவனுக்கு அடையாளப் பூவாகவும் கண்ணியாகவும் மாலையாகவும் இருப்பது கொன்றை மலர். அதனால் அந்தப் பூவினிடம் அவனுக்கு நயப்பு மிகுதி.

ஆடி னாய்நறு நெய்யொடு பால்தயிர்;
அந்த ணர்பிரி யாதசிற் றம்பலம்
நாடி னாய்இட மா!நறுங் கொன்றை
நயந்தவனே!

(நறுமணமுடைய பசுவின் நெய்யோடு அதன் பாலினாலும் தயிராலும் அபிடேகங் கொண்டருளினாய்; தில்லை மூவாயிரவராகிய அந்தணர்கள் என்றும் பிரியாமல் வழிபட்டுப் பூசித்து வாழ்கின்ற சிற்றம்பலத்தை உனக்குரிய இடமாக விரும்பி உறைகின்றாய்; நறுமணம் மிக்க கொன்றை மலரை விடுபூவாகவும் கண்ணியாகவும் மாலையாகவும் விரும்பினவனே!

ஆடினாய் – அபிடேகம் கொண்டாய். நாடினாய் – விரும்பினாய். இடமா – இடமாக. நயந்தவனே – விரும்பினவனே.)

திருச்சிற்றம்பலத்திலே வேதகீதமும் இசைப் பாடலும் இடையறாது முழங்கும். இறைவனுக்கு வேதமும் கீதமும் மிக்க விருப்பமானவை. அவன் வேதம் பாடுவாரையும் கீதம் பாடுவாரையும் உடன் வைத்துக் கொள்பவன். அவனே எப்போதும் வேதத்தைப் பாடிக்கொண்டே இருப்பவன். அதனை அருளிச் செய்தவனே அவன்றான். அது மேலும் மேலும் வளரும்படி செய்கிறவனும் அவனே. உலகில் வேறு யாரும் வேதத்தைப் பாடாமல் இருந்துவிட்டாலும் அவன் அதைப் பாடுதல் ஒழியமாட்டான். வேதம் நித்தியமானது என்று சொல்லும் சொல்லைப் பொருளுடையதாக்கும் பிரான் அவன். வேதத்தோடு வேறு பல கீதங்களையும் அவன் பாடுகின்றான்.

பாடி னாய்மறை யோடுபல் கீதமும்.

(மறை – வேதம். கீதம் – வேறு வகையான பாடல்கள். வேதமும் பாடலாதலின் அதனையும் பாடினாய் என்றார்.)

சிறந்த அபிடேகப் பொருள்களால் ஆடுதலை ஏற்றருளி அருச்சனையையும் உவந்தருளி அந்தணர் பிரியாத சிற்றம்பலத்தில் எழுந்தருளிய இறைவன் வேதமும் கீதமும் பாடும் இனியனாக இருக்கிறான். இவ்வளவும் அவனுடைய உயர்வைப் புலப்படுத்துகின்றன. அவனது தொடர்புடைய பொருள்கள் யாவும் சிறந்தவை என்று எண்ணுகிறோம். அவை அவனுடைய பெருமையைப் புலப்படுத்துகின்றன.

ஆனால் அவன் சிரத்திலே பல சடைகள் இருக்கின்றன. அவற்றினிடையே அவன் அணிந்துள்ள சந்திரன் மாத்திரம் மேலே சொன்ன பொருள்களோடு ஒன்றாக வைத்து எண்ணுவதற்கு உரியதாகத் தோன்றவில்லை. அது முழுமதி அன்று; குறைமதி. அழகிய நிறம் உடையதன்று; வெறும் வெண்திங்கள். உள்ளீடு இல்லாத பொருளை வெள்ளை என்று சொல்வது வழக்கம். முழுமையும் உள்ளீடும் இல்லாத பொருளாக இருக்கிறது திங்கள். அதினிடத்திலிருந்து வரும் கதிரோ குளிரை உடையது; பனியைக் காலும் கதிர். அந்தச் சந்திரனுடைய பழங்கதையை நினைத்தாலோ உள்ளம் படபடக்கும். சந்திரன் தன் குருவின் இல்லாளை விரும்பின பாவி; இறைவனை மதிக்காமல் தக்கன் செய்த யாகத்திற்கு உணவிச்சையால் சென்ற குற்றவாளி. பழியும் பாவமும் நிரம்பியவன். பாவஞ் செய்து உடல் குறைந்து உள்ளீடின்றி இருக்கும் அவனை இறைவன் தன் தலையின் மேற் சூடியிருக்கிறான். எந்தத் திருமுடியின் மேல் சிற்றம்பலத்தைப் பிரியாமல் உறைகின்ற அந்தணர்கள் நறுநெய்யும் பாலும் தயிருங் கொண்டு அபிடேகம் செய்கிறார்களோ, எந்தத் திருமுடியின்மேல் இட்டு அருச்சனை செய்கிறார்களோ, எந்தத் திருமுடியின் மேல் இறைவன் நறுங்கொன்றையை நயந்து கண்ணியாகச் சூடியிருக்கிறானோ, அந்தத் திருமுடியில் பாவம் செய்த உள்ளமும் உருக்குலைந்த உடம்பும் வெண்மை நிறமும் பனிகாலும் கதிரும் உடையவன் இருக்கிறான்!

இதற்குக் காரணம் என்ன? இறைவனுடைய கருணை தான். சந்திரனுடைய பாவத்தை மறந்து, புண்ணியம் செய்யும் அந்தணர் ஆட்டும் அபிடேகத்தை அவனும் பெறும்படி திருமுடிமேல் வைத்தான். இன்று தில்லையில் நாள்தோறும் அபிடேகம் செய்யப்பெறும் பெருமானுக்குச் சந்திர மௌளீசுவரர் என்ற திருநாமம் வழங்குதல் நினைவு கொள்வதற்குரியது. இறைவன் திங்களைச் சூடியவன் என்பதை நினைப்பிக்கும் திருநாமம் அல்லவா அது? பொன் நிறமும் பொலிவும் பெற்ற நறுங்கொன்றையை நயந்த முடியில் திங்களை வைத்தான். சந்திரன் இறைவனுடைய திருவடியால் தேய்க்கப் பெற்றான். எப்படியோ அடியின் தொடர்பு உண்டாயினமையின் அவன் தன் பாவமும் பழியும் நீங்கப் பெற்று உயர்ந்த இடத்தில் ஏறிக்கொண்டான். அவனுடைய பழம்பழி நீங்கியது; தொல்வினை தொலைந்தது.

முதலில் மூவாயிரம் அந்தணர் அபிடேகம் செய்து அருச்சிக்கும் இறைவனைக் காணும்போது, ‘இவன் அருள் நமக்குக் கிடைக்குமா?’ என்ற ஏக்கம் உண்டாவது இயல்பு. மறையும் பல்கீதமும் பாடுகின்றான் என்பதை அறிந்தால் நமக்கு அரியன் என்ற எண்ணம் பின்னும் வலிமை பெறுகின்றது. ஆனால் அவன் சந்திரனை ஏற்றுக்கொண்டவன், அவனுடைய தொல்வினை சுருங்க அருளியவன் என்பதை நினைக்கும் போது, அவனுடைய கருணையை எண்ணி வியக்கத் தோன்றுகிறது. ‘நமக்கும் அருள் செய்வான்; பிறவிதோறும் நம்மைத் தொடர்ந்து வரும் பழவினைகள் சுருங்கும்படி அருள்வான்’ என்ற நம்பிக்கையும் உடனே உண்டாகிறது.

பல்ச டைப்பனி கால்கதிர் வெண்திங்கள்
சூடி னாய்; அரு ளாய் சுருங்கஎம்
தொல்வினையே.

(பலவாகிய சடையினிடையே பனியை வெளிப்படுத்துகின்ற கதிரையுடைய வெண்மையாகிய பிறையைச் சூடினாய்; அடியேங்களுடைய பழவினை சுருங்கி நையும்படி அருள்வாயாக.

கால் – வெளிவிடும். கதிர் – கிரணம். திங்கள் – இங்கே பிறை. சுருங்க – குறைந்து அழிய. தொல்வினை – பழவினை.)

சந்திரமௌளீசுவரனுக்கு நடைபெறும் பூசை கண்டு முதலில் அவன் பெருமையை எண்ணினார் சம்பந்தர்; அப்பால் அவன் திருநாமத்தைக் கேட்டு அவன் கருணையை நினைந்தார். மற்ற மக்களுக்கெல்லாம் பிரதிநிதியாக நின்று இறைவனிடம் விண்ணப்பித்துக் கொள்கிறார்; ஆதலால், “சுருங்கஎம் தொல்வினையே” என்றார். தமக்கு ஒரு வினையும் இன்றி ஞானமயமாய் நின்ற திருஞான சம்பந்தர், இறைவன் வெண் திங்கள் சூடியமையை நினைப்பூட்டி அவனது கருணையைக் குறிப்பிடுகிறார். ‘எம் தொல்வினை’ என்று நம்மில் தாமும் ஒருவர்போல வைத்துப் பாடித் தம் கருணையையும் குறிப்பிடுகிறார்.

ஆடி னாய்நறு நெய்யொடு பால்தயிர் அந்த ணர்பிரி யாதசிற் றம்பலம் நாடி னாய்இட மா;நறுங் கொன்றை நயந்தவனே!
பாடி னாய்மறை யோடுபல் கீதமும் பல்ச டைப்பனி கால்கதிர் வெண்திங்கள் சூடி னாய்;அரு ளாய்சு ருங்களம் தொல்வினையே.

(நறுங்கொன்ற நயந்தவனே! நீ ஆடினாய்; நாடினாய்; பாடினாய்; ஆயினும் திங்கள் சூடினாய்; ஆதலின் அருளாய் என்று தொடர்பு படுத்த வேண்டும். ஆடினாய், நாடினாய், பாடினாய், சூடினாய் என்பவற்றையும் விளியாகக் கொண்டு பொருள் உரைப்பதும் பொருத்தமாக இருக்கும்.)