ஏழையடியார் சொல்

சிறந்த பாட்டுக்காரர் அவர். கணீரென்ற தொண்டை. சாரீர சம்பத்து மிகவும் நன்றாக வாய்த்திருக்கிறது. பாட்டுப் பாடினால் சாகித்தியத்தின் உருவம் நன்றாகப் புலப்படும்படி பாடுவார். சங்கீத ஞானத்தில் அவருக்கு இணை அவரே. அற்புதமான கவிகளை அவர் தம்முடைய சாரீரத்திலே இழைத்துப் பண்ணோடு ஓதும் போது கூடியிருக்கும் மக்கள் அத்தனை பேரும் சொக்கிப் போவார்கள். இறைவனைப் பற்றிய அழகிய பாடல்களைப் பொருள் விளங்கும் படியாகப் பலாச் சுளையை ஒடித்துத் தேனில் தோய்த்துக் கொடுப்பது போலப் பாடுவார்.

அவர் ஒரு கோயிலில் பாடப் போயிருந்தார். கோயில் சிறிய குன்றின்மேல் இருந்தது; முப்பது நாற்பது படிகள் ஏறினால் கீழிருந்து கோயிலுக்குப் போய்விடலாம். கீழே மண்டபம் இருந்தது. அங்கேதான் பாட்டுக் கச்சேரி நடைபெற்றது. ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருந்தனர். இறைவன் பெருமையையும் அவனை வணங்க வேண்டிய அவசியத்தையும் அறிவுறுத்தும் பாடல்களைப் பாவத்தோடு பாடினார். கேட்டவர்கள் உருகிப்போனார்கள்.

கச்சேரி முடிந்தது. “சுவாமி தரிசனம் செய்யப் போகலாம் வாருங்கள்” என்று அன்பர்கள் அழைத்தார்கள். “மற்றொரு சமயம் வருகிறேன். இப்போது மிகவும் அவசரமாகப் போகவேண்டியிருக்கிறது” என்று சொல்லி அவர் புறப்பட்டு விட்டார்.

அவருடைய பாட்டைக் கேட்டவர்களெல்லாம் அந்தப் பாட்டிலே ஈடுபட்டு அதனால் இறைவன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்த பிறகே வீடு சென்றார்கள். அவர்களை யெல்லாம் உருக்கிய பாட்டைப் பாடிய அவரோ கோயிலுக்குப் போகவில்லை. பாட்டை அவர் புகழும் பொருளும் ஈட்டும் கருவியாகவே வைத்திருந்தார்.

ஒரு பக்தர் இறைவனிடம் முறுகிய பக்தியுடையவர். அவர் அந்தக் கச்சேரிக்கு வந்திருந்தார். பாட்டிலே தம்மை மறந்து லயித்துப் போனார். ஆனால் பாட்டு முடிந்த பிறகு அந்தப் பாட்டுக்காரர் இறைவனைத் தரிசிக்கவில்லையே என்ற எண்ணம் அவர் நெஞ்சில் உறுத்திக் கொண்டே இருந்தது.

அந்தப் பக்தர் வேறு ஒரு கோயிலுக்குப் போயிருந்தார். அங்கே யாரோ ஒருவர் இறைவன் சந்நிதானத்தில் பாடிக் கொண்டிருந்தார். பாடினாரென்று சொல்லக் கூடாது; பாடுவதாக நினைத்து அவர் கத்திக்கொண்டிருந்தார். ராகம் இழுப்பதைப் போல ஏதோ நடுநடுவே இழுத்தார். சங்கீதந்தான் இப்படி யென்றால் அவர் தொண்டையோ அதை விடப் பிரமாதம். அடிக்கடி தொண்டையில் கரகரப்பு ஏற்படும். கோழை வந்து கட்டும். லொக்கு லொக்கென்று இருமுவார். ஆனாலும் பாடுவதை விடமாட்டார். சங்கீதம், சாரீரம் என்னும் இரண்டும் இப்படி; அவர் பாடின பாட்டு – ? அது பாட்டே அல்ல. ஏதோ சம்போ சங்கரா, அப்பனே, நடராஜா என்று நாமங்களை அடுக்கிச் சொன்னாரே யொழிய அது கவியுமல்ல; கீர்த்தனையுமல்ல. அந்த மனிதரோ தம்முடைய பாட்டை யாராவது கேட்டால் பரிகசிப்பார்களே என்ற நாணமே இல்லாமல் கண்ணை மூடியபடியே பாடிக் கொண்டிருந்தார்.

தரிசனத்துக்கு வந்திருந்த பக்தர் இந்தப் பாட்டையும் கேட்டார். முன்பு சங்கீத வித்துவான் பாடியதை இப்போது நினைந்து பார்த்தார். அந்தப் பாட்டு எங்கே? இந்த உளறல் எங்கே? ஆனாலும் அவர் பக்தராகையால், கோழை மிடற்றோடு வெறும் சொற்களை இசையைப் போலப் பாடுகிற அந்த மனிதரிடம் கொஞ்சம் மதிப்பு உண்டாயிற்று. நாணத்தை விட்டு இறைவன்முன் நின்று பாடுகிறாரே என்ற எண்ணமே அதற்குக் காரணம். முன்னவரிடம் பாட்டு இருந்தது; ஆனால் பக்தி இருந்ததாகத் தெரியவில்லை. பின்னவரிடம் பாட்டு இல்லை; ஆனால் பக்தி இருக்கிறதென்றே தெரிந்தது. இந்த இருவரையும் ஒருங்கே ஒப்பிட்டார். யார் பெரியவர்?

அன்று இரவு அவர் ஒரு கனவு கண்டார். இறைவனுடைய சந்நிதானத்தில் பாட்டு நடைபெறப் போகிறது. “இன்று நம்முடைய முன்னே நடைபெறும் பாட்டுக்கு நாமே வரப்போகிறோம். நீயும் வந்து பார்” என்று பக்தருக்குக் கட்டளை கிடைத்தது. ஆதலின் அவர் போயிருக்கிறார். பாட்டு ஆரம்பமாகி விட்டது. முன்னே சொன்ன சங்கீத வித்துவான் பாடுகிறார். சாரீரம் கணகண வென்றிருக்கிறது; பாட்டுத் தெளிவாக இருக்கிறது; இசையோ உள்ளத்தை அள்ளுகிறது. கூட்டம் கடல் போலப் பரந்திருக்கிறது. இப்போது பக்தருக்குப் பாட்டிலே மனம் ஓடவில்லை. அந்தக் கூட்டத்தில் இறைவன் வருவதாகச் சொல்லியிருக்கிறானே என்று ஆர்வத்தோடு அவனைத் தேடினார். எங்கும் காணவில்லை. மக்களே எங்கும் நிறைந் திருந்தனர்.

திடீரென்று பாட்டு நின்றது. சங்கீத வித்துவானால் பாட முடியவில்லை. அவர் தொண்டை பேசவில்லை. கூட்டம் கலைந்துவிட்டது. அவரும் போய்விட்டார். கோயிலில் யாரும் இல்லை. இறைவன் நேரில் வருவதாக அருளினாரே, வரவில்லையே என்று பக்தர் மன வருத்தத்தோடு ஒரு மூலையில் சோர்வோடு உட்கார்ந்திருந்தார்.

அப்போது ஒருவர் அங்கே வந்தார். அவர் பாடத் தொடங்கினார். பக்தர் நிமிர்ந்து பார்த்தார். கோழை மிடற்றோடு முன்பு பாடினாரே அந்தப் பேர்வழி. அவர் பாடினார். அன்று பாடின மாதிரித்தான் பாடினார். ‘ஐயோ! காக்கைக் குரலே!’ என்று தோன்றியது பக்தருக்கு. வந்தவர் பாடிக்கொண்டிருந்தார்; கண்ணை மூடிக்கொண்டு வெறும் நாமங்களையே பாட்டைப்போல இழுத்துக்கொண்டிருந்தார். அதைக் கேட்கக் கேட்கப் பக்தருக்கு ஏதோ ஒருவித இன்பம் உண்டாயிற்று. அந்த நாமங்களை இருதயத்திலிருந்து அவர் கூறினார்; அதனால்தான் பக்தருக்கு அது சுவையாக இருந்தது. அதற்குள் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. ஏழைக்கு முன்னே சிறிது தூரத்தில் சிவபெருமான் ஒரு பீடத்தின் மேல் எழுந்தருளியிருந்தான்! பக்தருக்குத் திடுக்கிட்டது. இறைவன் தலையை ஆட்டி ஆட்டி மகிழ்ந்து கொண்டிருந்தான். கண்ணை மூடிக்கொண்டு பாடிய ஏழை, இறைவன் அங்கே அமர்ந்திருப்பதை உணரவில்லை. அவர் கண்ணை மூடியபடியே கோழை மிடற்றோடு கவியோ கீர்த்தனமோ இல்லாத வெறுஞ் சொற்களைத் தம் மனம் போனபடி இசை போலப் பாடிக்கொண்டிருந்தார். இறைவன் ஒரு காலைக்கு ஒரு கால் மகிழ்ச்சி மீதூர்ந்து ஆடினான்.

அமர்ந்தபடியே அசைந்தாடியவன் எழுந்திருந்தே ஆனந்த நடனம் ஆடத் தொடங்கி விட்டான்.

திடீரென்று கனவு கலைந்தது. “அடடா! இன்னும் சிறிது நேரம் கனவு காணாமற் போனேனே! இறைவன் திருநடனத்தைத் தரிசித்துக்கொண்டே இருந்திருக்கலாமே!” என்று வருந்தினார் பக்தர்.

இப்போது அவருக்கு, ஈசன் யாருடைய பாட்டில் மகிழ்ச்சி அடைகிறான் என்பது தெளிவாகிவிட்டது. உள்ளத்தில் பக்தியோடு பாடுகிறவர்கள் கோழையால் இருமும் மிடறுடையவர்களாக இருக்கட்டும்; அதனாற் குறையில்லை. ‘அவர்கள் பாடுவது கவியென்று கொள்வதற்குரியதன்று; கவியின் கோட்பாடு அதில் இல்லை’ என்று சொல்லும்படி இருக்கட்டும்; அதனாலும் குற்றமில்லை. அது பாட்டாக இல்லாமல் சொற்களைப் பேசுகிற மாதிரி இருக்கிறது; அப்படி இருப்பினும் தாழ்வு இல்லை. அவர்கள் ஏழை; அதைப்பற்றிக் கொஞ்சங்கூடத் தடையே இல்லை. அவர்கள் அடியார்கள்; ஆதலின் ஈசன் அவர்களுடைய சொல்லிலே மகிழ்கிறான்.

இது கற்பனைக் கதை. ஆனாலும் ஞானசம்பந்தப் பெருமான் அருளிய தேவாரத்தின் கருத்தை வைத்துக் கட்டிய கற்பனை. அந்தத் தேவாரப் பாட்டைப் பார்க்கலாம்.

கோழைமிட றாக, கவி கொளும்இல ஆக, இசை
கூடும்வகையால்
ஏழைஅடி யாரவர்கள் யாவைசொன சொல்மகிழும்
ஈசன் இடமாம்.

[கோழையையுடைய தொண்டையாக இருக்கட்டும், பாடுகிற பாட்டுக்கள் கவியின் உருவத்தைக் கொள்ளுதல் இல்லாதனவாக இருக்கட்டும்; (குற்றம் இல்லை); தம்பால் இயன்ற வகையினாலே இசையோடு ஏழைகளாகிய அடியார்கள் சொன்ன சொற்கள் எவையோ அந்தச் சொற்களைக் கேட்டுத் திருவுள்ளம் மகிழுகின்ற இறைவன் எழுந்தருளியிருக்கும் இடமாகும் வைகாவூர் என்று சொல்ல வருகிறார்.

மிடறு – தொண்டை. ஆக – ஆகட்டும்; வியங்கோள். ஆக என்பதைச் செயவென்ற வாய்பாட்டுப் பெயரெச்சமாகக் கொண்டால் மிடறாகக் கவி என்று வல்லினம் மிகவேண்டும். சந்தம் நோக்கி வந்த செய்யுள் விகாரம் என்று சமாதானம் சொல்லலாம். ஆயினும் ஆக என்று வரும் இரண்டையும் ஆகட்டும் என்ற பொருளுடைய வியங்கோளாகக் கொள்ளுதல் சிறப்பு. கவிகோள் கவியின் உருவத்தைக் கொள்ளுதல். சாரீரம், சங்கீதம், சாகித்தியம் என்னும் மூன்றும் இல்லை என்றபடி. இசை தமக்குக் கூடுகிற வகையினால், சொன்ன சொல் யாவை, அவற்றை மகிழும் பாட்டாக நினைத்து அவர் பாடினும் அவை வெறும் சொற்கள் என்று குறிப்பிக்க, ‘சொன சொல்’ என்றார்.]

இனி அந்த இடம் இன்னதென்று சொல்லப் புகுகிறார் ஞானசம்பந்தப் பிள்ளையார். இயற்கையின் எழிலிலே இறைவனைக் கண்டு அந்த எழிலையும் வாயாரப் பாடும் தமிழ் விரகராதலின் இங்கே வைகாவூர்த் தலத்தின் வளப்பத்தைச் சொற்சித்திரமாகத் தீட்டுகிறார். திருவைகாவூர் என்ற தலம் சோழநாட்டில் கும்பகோணத்துக்கு அருகில் இருப்பது. வைகா, வைகாவில், வைகாவூர் என்று அதன் பெயர் வழங்கும். சம்பந்தர் வைகாவில் என்று குறிக்கிறார். மயிலாப்பூருக்கு மயிலாப்பு, மயிலாப்பில், மயிலாப்பூர் என்று மூன்று வகையில் பெயர் வழங்கும். அதுபோன்றது இது.

வைகாவூர் மருத நிலத்தில் அமைந்திருப்பது. வயல்கள் மிகுதியாக உள்ள தலம் அது. வயலை அடுத்து ஒரு தோட்டம்; அங்கே வாழையும் கமுகும் தென்னையும் நன்றாக வளர்ந்திருக்கின்றன.

முதிர்ந்த தென்ன மரத்தில் நன்றாக முற்றிப் பழுத்த தேங்காய் காற்று வீசும்போது கீழே விழுகிறது. அந்த மரத்தைவிட இள மரம் ஒன்று அதைவிட உயரம் குறைவாக அருகே நிற்கிறது; மேலிருந்து விழுந்த முதிய தேங்காய் இந்தச் சிறிய தென்ன மரத்தின்மேல் விழுந்து தாக்க, அதிலிருக்கின்ற இளநீர் குலையிலிருந்து பிய்ந்து விழுகிறது. முற்றின தேங்காயும் இளநீரும் கீழே விழும்போது தென்னமரத்தைவிடச் சிறிது குட்டையாக இருக்கும் கமுக மரத்தில் விழுகின்றன. அதனால் கமுகங் குலைகள் சிதறுகின்றன. மறுபடி அந்த இளநீரும் முற்றிய தேங்காயும் கமுகுக்கும் குட்டையாக வளர்ந்துள்ள வாழையின் மேல் விழுகின்றன. அந்த வாழை தாறு போட்டுப் பழுத்து நிற்கிறது. வாழைப்பழக் குலையின்மேல் இளநீரும் தேங்காயும் விழுந்து வாழைப் பழத்தை உதிரச் செய்கின்றன. அவை கீழே உள்ள வயல்களில் விழுகின்றன. உயரத்திலிருந்து விழுந்தமையாலும் தேங்காயால் அடிபட்டமையினாலும் வாழைப்பழம் பழமாக இராமல் பஞ்சாமிர்தமாகி விடுகிறது. வயலில் இப்படிப் பலகாலம் பழங்கள் சிதறிச் சிதைந்து ஊறிச் சேறு போல ஆகிவிடுகின்றன. இப்படி ஓர் இயற்கைக் காட்சியைத் திருவைகாவூரிலே வைத்து வருணிக்கிறார் சம்பந்தர்.

தாழைஇள நீர்முதிய காய்கமுகின் வீழநிரை
தாறுசிதறி
வாழையுதிர் வீழ்கனிகள் ஊறிவயல் சேறுசெயும்
வைகாவிலே.

[தென்னையின் இளநீரும் முதிய காயும் கமுக மரத்தில் விழ, அதில் வரிசையாக உள்ள குலைகள் சிதற, அப்பால் அவை விழுந்த வாழை மரத்திலிருந்து உதிர்ந்து வீழ்ந்த கனிகள் ஊறி வயலிலே சேற்றைச் செய்யும் வைகாவில் என்ற தலம். மகிழும் ஈசன் இடம் வைகாவில் என்று கூட்ட வேண்டும்.

தாழை – தென்னை. முதிய காய் விழ, அது மோதியதால் கீழிருக்கும் தென்னையிலிருந்து இளநீரும் வீழ்ந்தது. நிரை- வரிசையாக உள்ள. தாறு- குலை; இங்கே கமுகங்குலை. சிதறி என்பதற்குச் சிதற என்று பொருள் கொள்க; எச்சத் திரிபு. உதிர் வீழ் கனிகள் – உதிர்ந்து வீழ்ந்த கனிகள்; வரிந்து புனைந்த பந்து என்ற பொருளில் வரிப்புனை பந்து என்று வந்தது போன்ற பிரயோகம் இது. சேறு செயும் – சேற்றை உண்டாக்கும். வைகாவில் – திரு வைகாவூர். ஏ: அசை நிலை.]

இங்கே சொன்ன வருணனையோடு ஒருபுடை ஒப்புமை உடையது, பின்வரும் சிந்தாமணிப் பாட்டில் வரும் வருணனை,

“காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் நெற்றிப்
பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து
தேமாங் கனிசி தறிவாழைப் பழங்கள் சிந்தும்
ஏமாங் கதமென் றிசையால் திசைபோய துண்டே.”

நிலவளமும் நீர்வளமும் உள்ள திருவைகாவூரில் எழுந்தருளியிருக்கும் செல்வன் இறைவன். அவன் இருக்கும் இடம் செல்வம் நிறைந்தது. ஆயினும், ஏழைகளாக இருந்தாலும் அடியார்களாயின் அவர்கள் பாட்டு நன்றாக இல்லாவிட்டாலும் அவன் ஏற்றுக்கொள்வான்.

தென்னமரத்தின் இளநீரும் முதிய காயும் கமுகங் குலையும் வாழைக் கனிகளும் வளப்ப முடையனவானாலும் கீழே விழுந்து சிதைந்து சேறாவதுபோல் நல்ல இசையும் சாரீரமும் உடையவராக இருந்தாலும் இறைவனுக்குப் பயன்படாவிட்டால் வீணானதற்கொப்பே என்ற குறிப்பும் இந்த வருணனையாற் பெறப்படும்.

கோழைமிட றாக, கவி கோளும்இல வாகஇசை
கூடும் வகையால்
ஏழைஅடி யார் அவர்கள் யாவைசொன சொல்மகிழும்
ஈசன் இடமாம்
தாழைஇள நீர்முதிய காய்கமுகின் வீழநிறை
தாறு சிதறி
வாழைஉதிர் வீழ்கனிகள் ஊறிவயல் சேறுசெயும்
வைகா விலே.

(பெற்ற வாயைப்போல மணம் வீசும் ஆம்பல் மலர்கள் உங்கள் அகன்ற மருத நிலத்தில் இருக்கின்றனவா?

கூம்பல்-குவிதல். அம்-அழகிய. ஊடு – உள்ளே. குனிக்கும்- ஆடும். பாடலரின்-பாடாதவரைப் போல. தேம்பல்-மெலிதலையுடைய. தேம்பினாலும் அழகுடையதென்று காட்ட, அஞ்சிற்றிடை என்றான். ஈங்கு இவள்-இவள்; இரண்டும் ஒரு சொல்லாக நின்றன. தீங்கனிவாய்-இனிய கனிச்சுவையையுடைய வாய். வாய்போலக் கமழும். போது-இங்கே பூ. அளிகாள்-வண்டுகளே. அகன்பணை-அகன்ற மருதநிலம்.)

திருக்கோவையாரில் 11-ஆம் பாடலாகிய இது ‘நலம் புனைந்து உரைத்தல்’ என்னும் துறையமைந்தது. காதலியின் அழகைக் காதலன் பாராட்டிச் சொல்லுதல் என்பது அதன் பொருள்.

பொங்கிழையைப் புனைநலம் புகழ்ந்து
அங்கதிர் வேலோன் அயர்வு நீங்கியது

என்பது அந்தத் துறையை விளக்கும் கொளு. ‘அழகு மிக்க அணிகளை அணிந்த காதலியின் பாராட்டுதற்குரிய அழகைப் புகழ்ந்து, அழகிய சுடர் வீசும் வேலையுடையவன் தன் தளர்ச்சி நீங்கி இன்புற்றது’ என்பது இதன் பொருள்.

திருக்கோவையாருக்குப் பேராசிரியர் எழுதிய பழைய உரை ஒன்று உண்டு. அதில் கனிவாய் என்பதற்கு, ‘கனிந்த வாய்’ என்று உரை எழுதுகிறார். கூம்பலங்கைத் தலம் என்ற தொடரில் அல், அம் என்ற இரண்டு சாரியை என்று கொண்டு, கூம்பு கைத்தலம் என்று வினைத்தொகையாக்கிப் பொருள் கூறுகிறார். வினைத்தொகையில் சாரியை இவ்வாறு சேர்ந்து வருவது இல்லை. ‘புனைநலம் என்றது புனையப்பட்ட இயற்கை நலத்தை’ என்பர்.

‘இயற்கையன்பினாலும் அவள் குணங்களால் தோன்றிய செயற்கையன்பினாலும் கடாவப்பட்டு நின்ற தலைமகன் தனது அன்பு மிகுதியை உணர்த்துதல் என்பது’ என்று இதற்குரிய துறைப் பொருளை விளக்குவார். அன்பு மிகுதியை அவ ளுடைய அழகைப் பாராட்டும் வாயிலாகப் புலப்படுத்தினான்.

முற்றும்.

★ ★ ★