சோதிக்க வேண்டாம்
விலங்கினங்களைக் காட்டிலும் மனிதன் சிறந்தவன் என்று கூறுவதற்குக் காரணம் மனிதன், “தக்க இன்ன தகாதன இன்ன என்று, ஒக்க உன்னும்” பகுத்தறிவை உடையவனாக இருப்பதுதான். அறிவின் சிறப்பினால் மனிதன் விலங்கினங்களையும் அடக்கியாளுகிறான். ஐம்பெரும் பூதங்களையும் வசப்படுத்திப் பல இயந்திரங்களை இயக்குகிறான். உடம்பினாற் செய்யும் வேலைகளைக் காட்டிலும் அறிவினால் அமையும் வேலைகள் மிகச் சிறந்த பயனை அளிக்கின்றன.
தான் உலக வாழ்க்கையில் பெறும் அநுபவத்தால் அவன் அறிவு பெறுகிறான். முன்னோர்கள் தம்முடைய அநுபவத்தை நூலாக எழுதி வைத்திருத்தலின் அந்நூல்களைப் படித்தும் அறிவு பெறுகிறான். பிறர் தம் அநுபவத்தாலும் கல்வியினாலும் உணர்ந்தவற்றைக் கூறக் கேட்டும் அறிவு பெறுகிறான். கல்வி, கேள்வி, அநுபவம் என்னும் மூன்றினாலும் மனிதனுடைய அறிவு வளம் பெறுகிறது. அந்த அறிவைக் கொண்டு அவன் பல அரிய பெரிய காரியங்களைச் சாதித்துக்கொள்கிறான்.
பலருக்கு விளங்காமல் மயக்கமாக இருக்கும் உண்மைகளை அறிவாளி தன் அறிவினால் தெளிகிறான்; பிறருக்கும் தெளிவுறச் சொல்கிறான். மின்சாரத்தைக் கண்டுபிடித்தது வானொலிக் கருவியைக் கண்டுபிடித்தது, தாமே இயங்கும் ஊர்திகளைக் கண்டுபிடித்தது முதலிய விஞ்ஞான வெற்றிகள் யாவும் மனிதனுடைய அறிவாற்றலின் அற்புத விளைவுக்கு உரிய உதாரணங்கள்.
நுண்ணிய அறிவினால் சோதிக்கச் சோதிக்கப் பல உண்மைகள் அறிவாளிகளுக்கு விளங்குகின்றன. மனிதனைச் சோதித்து அவனுடைய இயல்புகளையும் ஆற்றலையும், விலங்குகளைச் சோதித்து அவற்றின் இயல்புகளையும், மக்கள் சென்று உலாவுவதற்கரிய இடங்களுக்குச் சென்று சோதித்து அங்குள்ள தட்ப வெப்ப நிலையளையும், பஞ்ச பூதங்களைச் சோதித்து அவற்றின் தன்மைகளையும் அறிவாளர்கள் உணர்கிறார்கள். விஞ்ஞான சோதனைகளில் ஈடுபட்டவர் அவ்வப்போது கண்டுபிடித்து அறியும் உண்மைகள் அதிசயிக்கத் தக்கனவாக இருக்கின்றன. விஞ்ஞானிகளுடைய ஆற்றலைப் பார்த்தால் அவர்களுடைய சோதனையால் தெளிவுபடாதனவே இல்லை யென்று தோன்றுகிறது. கடல் ஏன் நீலமாக இருக்கிறது? விஞ்ஞானிகள் ஆராய்ந்து காரணம் கூறுகிறார்கள். காமாலைக் கண்ணனுக்குப் பார்ப்பன வெல்லாம் ஏன் மஞ்சளாகத் தோன்றுகின்றன? விஞ்ஞானிகள் மிக எளிதில் விடை சொல்லி விடுவார்கள். இனித இருதயம் எப்படி இயங்குகிறது? பள்ளிக் கூடத்துப் பிள்ளைகூட விடை சொல்லும்படி விஞ்ஞானிகள் புத்தகம் எழுதியிருக்கிறார்கள்.
ஆனால் இந்தப் பிரபஞ்சங்களுக்கெல்லாம் மூல காரணனாக இருக்கும் இறைவன் எப்படி இருப்பான்? அவனைக் கண்டுபிடித்து அவனுடைய அருளைப் பெறுவது எவ்வாறு?
இந்தக் கேள்விகளுக்கு விஞ்ஞானிகள் விடை சொல்வதில்லை; சொல்லவும் இயலாது. சிறந்த விஞ்ஞானி தன் அறிவாற்றலால் பலவற்றைக் கண்டுபிடித்த பிறகும், இன்னும் தன் அறிவுக்கு எட்டாத பல உண்மைகள் உண்டு என்பதை ஒப்புக்கொள்கிறான். இறைவன் இருக்கிறான் என்பதை அநுமானத்தால் சொல்லத் தெரியுமன்றி அவனுடைய இயல்புகளையோ, செயல்களையே காரணங்களுடன் எடுத்துச் சொல்ல முடிவதில்லை. உதாரணங்களாலும் எடுத்துக்காட்ட முடியாது.
இறைவன் அறிவுக்கு அப்பாற்பட்டவன்; ஆதலினால் அறிவின் சோதனைக்கு உட்படாதவன். அவன் இருக்கிறான் என்பதற்கு மாத்திரம் ஏதுக்களும் எடுத்துக் காட்டுக்களும் சொல்லலாம்.
பிரபஞ்சம் தோன்றியும் வளர்ந்தும் அழிந்தும் தொழிற்படுவதால் அந்தத் தொழிலைச் செய்யும் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று ஏதுவைக் காட்டிச் சொல்லலாம். குடம் இருத்தலால் அதனைச் செய்த குயவன் ஒருவன் இருத்தல் வேண்டும்; அதுபோலப் பிரபஞ்சம் தோன்றுதலால் அதற்கு மூல காரணனாகிய இறைவன் இருத்தல் வேண்டும் என்று உதாரணம் காட்டலாம். இதற்கு மேல், ஏன் இறைவன் பிரபஞ்சத்தைப் படைக்க வேண்டும் என்று கேட்டால் அதற்கு எளிதில் காரணம் கூற இயலாது. உயிர்கள் தனு கரண புவன போகங்களைப் பெற்றுத் தம் வினைகளுக் கீடான இன்ப துன்ப அநுபவங்களைப் பெறும் பொருட்டுப் பிரபஞ்சத்தைச் சிருட்டிக்கிறான் என்று கூறினால், அதற்கு மேலும், “அந்த வினைகள் எவ்வாறு வந்தன? இறைவன் எதற்காக வினைக்கீடாக இன்ப துன்பங்களைக் கொடுக்கவேண்டும்?” என்று கேள்விகளை எழுப்பிக் கொண்டே போனால் விடை காண இயலாது. இப்படி ஏதுக்களாலும் எடுத்துக் காட்டினாலும் ஓரளவு இறைவன் உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு அறிவு பயன்படும். அக்கரையைச் சாரும் வரையில் தோணி பயன்பட்டு அப்பால் பயன்படாதது போல, அறிவும் அதன் திறமாகிய சோதனையும் அதற்குக் கருவிகளாகிய ஏதுவும் எடுத்துக் காட்டும் ஓரளவுதான் பயன்படும். அந்த அளவுக்கு மேற்போனால் பயன்படுவ தில்லை. அப்படிப் போகவேண்டியது அவசியம் அன்று.
இறைவனிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதற்கு ஏதுவும் எடுத்துக்காட்டும் பயன்படும். .அதற்கு மேலும் அறிவை நம்பி வாழ்கிறவன் கரையில் இறங்கிய பிறகும் தோணியை நிலத்திலே செலுத்த முயலுபவனைப் போன்றவனே ஆவான். எனவே, இறைவன்பால் அன்பு செய்வார் அளவுக்கு மேல் சோதனை செய்ய வேண்டுவதில்லை. மிக்குச் சோதித்தலால் பயன் இல்லை.
இதைத் திருஞானசம்பந்தர் சொல்கிறார்.
ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா.
(ஏதுக்களினாலும் அவற்றுக்கேற்ப எடுத்துக்காட்டும் திருஷ்டாந்தங்களாலும் அளவுக்கு மிஞ்சிச் சோதனை செய்ய வேண்டாம்.
ஏது: இதனால் இது ஆயிற்றென்று சொல்லுதல். குடம் இருத்தலால் குயவன் இருப்பான் என்பதில் குடம் இருத்தல் ஏது. எடுத்துக்காட்டு, திருஷ்டாந்தம் இரண்டும் ஒரே பொருளுடையன. மிக்கு – அளவுக்கு மிஞ்சி.)
சோதிக்க வேண்டாம் என்றால் இறைவன் இருக்கிறான் என்ற எண்ணம் மனத்தில் உண்டாக வேண்டாமா?
அந்த எண்ணம் உண்டாவதற்கு மிகமிக நுட்பமாக ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லையே! நாம் தினந்தோறும் காணும் பொருள்களைக் கொண்டே இறைவன் உண்மையை உணர்ந்து கொள்ளலாமே! கண் இருந்தும் இருளிலே அது காண மாட்டாது; கதிரவனோ, சந்திரனே, அக்கினியோ இருந்தால் காணும் ஆற்றலைப் பெறும். அந்தக் கதிரவனிடத்தும் திங்களிடத்தும் தீயினிடத்தும் சுடர் விடுகின்றவன் யார்? முச்சுடர்களும் ஒளி பெறுவதற்கு மூலகாரணமான சோதி இறைவன். விளக்கு எரியும் போது அதை ஏற்றி வைத்தவர் ஒருவர் உண்டு என்று ஏதுவினால் உணர்கிறோம். அப்படியே முச்சுடர்களையும் காணும்போது அவற்றைச் சுடரச் செய்யும் சோதி ஒருவன் இருக்கிறான் என்று உணரலாம். மூன்று சுடர்கள் ஒளி விடுதலாகிய ஏதுவைக் கொண்டு சோதி ஒருவன் இருப்பதை உணரலாம். புற இருளை இந்தச் சுடர்கள் போக்குவதைக் கண்டு அதுபோல அக இருளைப் போக்கும் சோதி ஒருவன் இருக்கிறான் என்று திருஷ்டாந்தம் கொண்டு இறைவனுடைய பெருமையை உணரலாம். ‘இறைவன் இருக்கிறான். மூன்று சுடர்களுக்கும் ஒளி உதவுகின்றவன் அவன்; புற இருளை இச்சுடர்களாலே போக்குவதுபோல அக இருளை ஞான மென்னும் சுடரால் போக்குவான். இவ்வாறு புறத்தும் அகத்தும் சோதியாகிய இறைவன் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறான்’ என்று ஏதுவையும் எடுத்துக்காட்டையும் கொண்டு தெரிந்துகொள்ளலாம். அந்த அளவு போதுமே!
சுடர் விட்டுளன் எங்கள் சோதி.
(புறத்தும் அகத்தும் எங்கள் சோதியாகிய இறைவன் சுடர்விட்டுக்கொண்டிருக்கிறான்.)
இந்த இரண்டு அடிகளுக்கும் பெரிய புராணத்தில் .சேக்கிழார் பொருள் கூறுகிறார்; “சங்கரன் தனக்கு ஒப்பு வேறு இல்லாதவன். அதனால் இன்னான், இத்தகையவன், அவனைப் போன்றவன் இவன் என்று சொல்ல ஒண்ணாது. ஏது, எடுத்துக்காட்டு ஆகிய அவற்றால் அவனை அளக்க முடியாது” என்பது முதல் அடிக்கு அவர் கூறும் பொருள்.
“மன்னும் ஏதுக்க ளாலெனும் வாய்மைதான்
தன்ன தொப்புவே றின்மையிற் சங்கரன்
இன்ன தன்மையை ஏது எடுத்துக்காட்டு
அன்ன வற்றால் அளப்பிலன் என்றதாம்“
அடுத்த அடிக்கு, “அக்கினிக்குரிய புறத்தொளியாகவும் அன்பிலே ஊன்றும்போது அன்பர்களுக்கு அகவிருளைப் போக்க உள்ளே எழுஞ் சோதியாயும் நின்றான் இறைவன். இதனை ஒட்டி உணர்வாருக்கு இது அறிவதற்கரிய பொருளாகும்” என்று உரை கூறுவர், சேக்கிழார்.
“தோன்று காட்சி சுடர்விட் டுளன்என்பது
ஆன்ற அங்கிப் புறத்தொளி யாய்அன்பில்
ஊன்ற உள்எழுஞ் சோதியாய் நின்றனன்
ஏன்று காண்பார்க் கிதுபொருள் என்றதாம்.”
இறைவனுடைய இயல்பு முழுவதையும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பது நம் நோக்கம் அன்று. நம்மால் முற்றும் உணர்ந்துகொள்ள முடிகிறதென்றே வைத்துக்கொள்வோம். அதனால் நமக்கு என்ன பயன்? இங்கே, ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூறிய கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.
ஒரு பழத் தோட்டத்திற்குள் இரண்டு பேர் நுழைந்தார்கள். ஒருவன் அங்குள்ள மரங்களை எல்லாம் கண்டு, எவ்வளவு உயரம் வளர்ந்திருக்கின்றன, எத்தனை பழங்கள் பழுத்திருக்கின்றன என்று ஆராய்ச்சி செய்யத் தலைப்பட்டான். மற்றவனோ நேரே தோட்டக்காரனிடம் சென்று அவனோடு நயமாகப் பேசி அவன் தந்த பழங்களை வாங்கி உண்டான். இந்த இரண்டு பேர்களிலும் பழத்தைப் பெற்று உண்டவனே சிறந்தவன். அப்படியே இறைவனைப் பற்றிய சாத்திரங்களைப் படித்து ஆராய்ச்சி செய்து பொழுது போக்குபவர்களைவிட அவனிடம் பக்தி செய்து அவன் அருளைப் பெறுபவனே சிறந்தவன்.
பழத் தோட்டம் இது என்ற அளவுக்கு ஆராய்ச்சி இருந்தால் போதும். அதற்குமேல் ஆராய வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. பழத்தை நுகர முயல்வதுதான் நாம் செய்வதற்குரியது.
இறைவனுடைய அருளைப் பெறுவதனால் நமக்கு என்ன பயன்? நாம் என்றும் கவலை உடையவர்களாக இருக்கிறோம். வாழ்நாளில் எத்தனையோ வகையான துக்கங்கள் நேர்கின்றன. பசி, பிணி, பகை ஆகிய துன்பங்கள் உண்டாகின்றன. இவற்றிற் கெல்லாம் மேலாகப் பிறப்பு இறப்பு ஆகிய இவை இருக்கின்றன. வாழ்நாளில் கவலை இல்லாமல் ஒருவர் இருப்பது அருமை. அப்படி இருப்பதாக இருந்தாலும் பிறப்பு, இறப்பு என்னும் பெரிய துக்கங்களினின்றும் நீங்கி இருக்க முடியாது. நமக்கு வரும் துன்பங்கள் எல்லாவற்றுக்கும் பெரியவை இவ்விரண்டும். பிறப்பு இறப்பு இரண்டும் இல்லாவிட்டால் வேறு துக்கங்களே இல்லை. ஆதலின் ஒவ்வொரு துன்பமாக நீக்கிக் கொண்டிருப்பதை விடப் பிறப்பு இறப்பை நீக்குவதற்கு முயன்றால் எல்லாத் துன்பங்களையும் போக்க முயன்றதாகும். வளர்ந்த மரத்தின் ஆணி வேரைத் தறித்தால் மரம் முற்றும் வாடி விடுவதைப் போலப் பிறப்பு இறப்புத் துன்பங்களின் மூலம் போனால் எல்லாம் போய் விடும். அந்த மூலந்தான் பாசம் என்பது. அதை நீக்குவதே நம்முடைய நோக்கமாக இருக்கவேண்டும்
பசியைப் போக்க வேண்டுமானால் உணவை உண்ண வேண்டும். நம்முடைய மாதுக்கத்தைப் போக்குவது இறைவனது அருள். பழத்தைத் தரும் தோட்டக்காரனை நண்பனாக்கிக் கொண்டு பழத்தை நுகர்ந்தவனைப் போல, இறைவன்பால் அன்பு பூண்டு அவன் அருளைப் பெற்றுப் பாசத்தைப் போக்கி மாதுக்கம் நீங்க வேண்டும். அதை விட்டுவிட்டு அறிவை நம்பி ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் சோதிக்கப் புகுந்தால், அந்தச் சோதனைக்கு முடிவு இராது; நமக்கும் துக்கம் நீங்காது.
ஆகவே மாதுக்கம் நீங்க விரும்பினவர்கள் இறைவன்பால் அன்பு செய்ய வேண்டும். அன்பு என்பது உள்ளத்தின் கண்ணே உண்டாகும் ஒட்டுறவுணர்ச்சி. மனத்தால் இறைவனைப் பற்றி நிற்றலே அன்பாகும். அப்படிப் பற்றினால் நன்றாக வாழலாம்.
‘இறைவனைச் சோதித்து அறிய ஒண்ணாது; அவன் உண்மையை அறிந்தால் போதும்; அப்படி அறிவது அவனை மனம் பற்றி அன்பு செய்து பெரிய துக்கத்தைப் போக்கிக் கொள்வதன் பொருட்டு. துக்கம் நீங்கினால் இம்மையிலும் மறுமையிலும் நன்கு வாழலாம்” என்று தமிழ் விரகர் பாடுகிறார்.
ஏதுக்க ளாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா; சுடர்விட்டுளன் எங்கள் சோதி;
மாதுக்கம் நீங்க லுறுவீர், மனம்பற்றி வாழ்மின்..
[3-ஆம் அடி உரை; மனத்தினால் இறைவனைப் பற்றி அன்பு செய்து வாழுங்கள்; அதனால் பெரிய துயரங்கள் நீங்கும் நிலையை அடைவீர்கள்.
மா – பெரிய. நீங்கலுறுவீர் – நீங்குதலைப் பெறுவீர்கள்; நீங்குதலை விரும்புகிறவர்களே என்றும் சொல்லலாம். மனம் பற்றி – மனத்தால் பற்றி. வாழ்மின் – வாழுங்கள்.]
மூன்றாம் அடிக்குச் சேக்கிழார், “ஆதிச் சுடர்ச் சோதியினை அன்பினாலே மனத்துக்குள்ளே அழைத்து அவனுடைய அருளாலே போதமடைந்து அதனாற் பெற்ற அக நோக்காகிய ஞானத்தைப் பெற்று அந்த நோக்கம் சிறிதளவும் நீங்காமல் பொருந்தி வாழ்ந்து நம்மைப் பிறப்பு இறப்புக்குள் வேறு படுத்தித் துன்புறுத்தும் பாசத்தால் வரும் பிறப்புக்குரிய அஞ்ஞான நெறியினின்றும் நீங்குங்கள்” என்று பொருள் வகுத்திருக்கிறார்.
“மாதுக்கம் நீங்க லுறுவீர்மனம் பற்றும் என்பது
ஆதிச்சுடர்ச் சோதியை அன்பின் அகத்துள்ளாக்கிப்
போதித்த நோக்குற் றொழியாமற் பொருந்திவாழ்ந்து
பேதித்த பந்தப் பிறப்பின்நெறி பேர்மினென்றாம்.”
இறைவனிடம் அன்பில்லாதவர்களும், நல்ல நெறியில் வாழ வேண்டும் என்ற எண்ணமில்லாதவர்களும் இத்தகைய உபதேசத்தைக் கேட்டுப் பயனடையப் போவதில்லை. அவர்கள் தமக்கு மாதுக்கம் உண்டென்பதையே மறந்தவர்கள். ஆதலின், நன்னெறி பற்றி வாழும் ஆசையுடையவர்களுக்கே இந்த உரை பயன் பெறும். அத்தகைய சாதுக்கள் உலகில் பலர் இருக்கிறார்கள். நல்ல நெறியை அடைய வேண்டும் என்ற விருப்பம் உடையவர்கள், போலி ஞானிகளையும் உலகாயதர்களையும் அணுகி வீண் ஆராய்ச்சியில் புகுவதும் உண்டு. அந்த ஆராய்ச்சியால் தமக்கு ஏதேனும் வழி உண்டாகும் என்ற நம்பிக்கையால் அவ்வாறு செய்வார்கள். அவர்களுக்கு உண்மையை உணர்த்தி, “வீண் ஆராய்ச்சியிலே புகவேண்டாம். சாட்சிக்காரன் காலில் விழுவதை விடச் சண்டைக்காரன் காலில் விழுவதே சாலச் சிறந்தது. ஆராய்ச்சிக் குழுவிலே சேராமல் இறைவனையே சாருங்கள். யார் யாரையோ சார வேண்டாம். இங்கே வாருங்கள்; வந்து சாருங்கள்; இறைவனையே சாருங்கள். சாதுக்களாக உலகத்திலே மிகுதியாக இருக்கும் மக்களே! வாருங்கள்” என்று அழைக்கிறார் அருட்பாலமுதுண்ட தெருட் பாவலர்.
சாதுக்கள் மிக்கீர்! இறையே வந்து சார்மின்களே.
(சாதுக்களாக மிக்கிருக்கின்றவர்களே! பிறரைச் சாராமல் இறைவனையே வந்து அடையுங்கள்.
சாதுக்கள் – நன்னெறி செல்ல விரும்பும் அன்பர்கள். மிக்கீர்- மிகுதியாக உள்ளவர்களே. இறையே – இறைவனையே; ஏகாரம் வேறு இடங்களைச் சாராமல் இவனையே சாருங்கள் என்ற பொருளில் வந்தது: பிரிநிலை. சார்மின்கள் அடையுங்கள். சார்மின் என்றாலே போதும்; கள் விகுதி மேல் விகுதி. ஏ: அசை நிலை.)
இந்த அடிக்குச் சேக்கிழார் பெருமான், “வேண்டுகின்ற வேட்கைக்குரிய பொருள்கள் எல்லாவற்றையும் இறைவனுடைய பாதத்தில் பூண்ட அன்பினாலே பெற்றுப் போற்றுகின்றவர்களே, வந்து அடையுங்கள்” என்று உரையருளினார்.
“ஈண்டு சாதுக்கள் என்றெடுத் தோதிற்று; வேண்டும்
வேட்கைய எல்லாம் விமலர்தாள் பூண்ட அன்பினிற்
போற்றுவீர், சார்மின்கள்என்று ஆண்ட சண்பை
அரசர் அருளினார்.”
நல்ல நெறியிலே செல்ல வேண்டும் என்ற உள்ளம் படைத்த சாதுக்களைப் பார்த்துச் சொல்லுகிறார் சம்பந்தர்; “நீங்கள் ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் வேண்டிய அளவுக்கு மேலே சோதிக்கவேண்டாம். இறைவன் மூலப் பெருஞ் சோதியாகி அகத்தும் புறத்தும் விளங்கி இருள் போக்குகின்றான். இதைத் தெரிந்துகொண்டு உள்ளத்தால் அவனைப் பற்றி அன்பு செய்தால் பெருந்துயரங்களினின்றும் நீங்கலாம். ஆகவே; எம் இறைவனையே வந்து அடையுங்கள்” என்று வழிகாட்டுகிறார்.
ஏதுக்க ளாலும் எடுத்தமொழி யாலு மிக்குச்
சோதிக்க வேண்டா; சுடர்விட்டுளன் எங்கள் சோதி;
மாதுக்கம் நீங்கல் உறுவீர்; மனம்பற்றி வாழ்மின்;
சாதுக்கள் மிக்கீர்! இறையேவந்து சார்மின்களே.
இது திருப்பாசுரம் என்ற திருப்பதிகத்தில் 5ஆம் திருப் பாட்டு. சம்பந்தப் பெருமான் சமணரோடு வாது செய்தபோது இந்தப் பதிகத்தைப் பாடி ஏட்டில் எழுதி, அவ்வேட்டை வையையிலே இட, அது ஆற்றோடு போகாமல் அதனை எதிர்த்துச் சென்றது. சம்பந்தர் புனல் வாதத்தில் வென்றார். அந்த வெற்றி நல்கிய பாசுரங்களாதலின் ‘திருப்பாசுரம்’ என்ற பெயரை இத்திருப்பதிகம் பெற்றது.