திருவைந்தெழுத்து

ஒரு பொருளின்பால் விருப்பம் இருக்குமானால் அந்தப் பொருளினை நன்கு மதிக்கும் இயல்பு மனிதனுக்கு உண்டாகும். ஒருவரிடம் அன்பு இருக்குமாயின் அவருடைய குணங்கள் யாவும் விளக்கமாகத் தெரியும்; குற்றங்கள் யாவும் மங்கிவிடும். நுகர்வதற்குரிய பொருள் ஒன்றை நெடுங்காலம் பெறாமல் முயன்று வாட்டமுற்று இறுதியிற் பெற்று நுகர்ந்தால் அதனால் வரும் இன்பம் பன்மடங்கு அதிகமாகும். பசி உடையவனுக்கு நல்ல உணவில் மிக்க சுவை தோன்றும். பசியில்லாதவனுக்கு அத்துணைச் சுவை தோன்றாது. வயிற்று வலிக்காரனுக்குச் சில சமயங்களில் உணவைக் கண்டால் வெறுப்புக்கூடத் தோன்றிவிடும். அந்த வெறுப்புக்கு உணவின் குறை காரணம் அன்று; அவனுடைய வயிற்று வலியே காரணம்.

இறைவனுடைய புகழும் திருநாமமும் இனிக்கின்றன என்று அருட்பெருஞ் செல்வர்கள் சொல்கிறார்கள். அந்தப் புகழையும் திருநாமத்தையும் நாம் கேட்கும்போது அத்தனை இனிப்பதில்லை. காதலி ஒருத்தி நாலு பேரோடு பேசிக் கொண்டிருக்கும் போது அவளுடைய காதலனைப்பற்றி யாரேனும் புகழ்ந்தால் அவளுக்கு எத்தனை இனிமையாக இருக்கிறது! அவனுடைய பெயர் பத்திரிகையில் வந்தால் அவள் எவ்வளவு முறை பார்த்துப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறாள்! மற்றவர்கள் கண்களில் அந்தப் பெயர் பட்டாலும் அவர்களுக்கு அதுபோன்ற மகிழ்ச்சி உண்டாவதில்லை. அதற்குக் காரணம் என்ன? அந்தப் பெண்ணுக்கு அப் பெயருடையவனிடம் இருக்கும் காதல்தான்.

இந்தக் காதல் இருந்தால் அதனாற் பற்றப் பெற்றவரிடத்தில் ஒருவகை உள்ள நெகிழ்ச்சி உண்டாகும். அவரோடு தொடர்புடைய எல்லாப் பொருளிடத்தும் விருப்பம் அமையும். அந்தப் பொருள்களை நன்றாகப் பயன்படுத்திக் கொள்வர்.

இறைவனுடைய திருவுருவங்களையும் அவற்றை வைத்து வழிபடும் கோயில்களையும் தரிசிக்கும்போது பக்தி உணர்ச்சி மிக்கு அதனால் இன்புறுவார்கள் அன்பர்கள். ஏனையோர் களுக்கு அந்த அநுபவம் இராது. நடராஜத் திருக்கோலத்தைக் கண்ட சுந்தரமூர்த்தி நாயனார் அடைந்த பேரின்ப அநுபவத்தைச் சேக்கிழார் பின்வருமாறு சொல்கிறார்:

ஐந்துபே ரறிவும் கண்களே கொள்ள
அளப்பருங் கரணங்கள் நான்கும்
சிந்தையே யாகக் குணம்ஒரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே ஆக
இந்துவாழ் சடையான் ஆடும்ஆ னந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.”

இந்த அநுபவம் சுந்தரமூர்த்தி நாயனாருடைய திருவுள்ளப் பக்குவத்தின் விளைவாக உண்டாயிற்று. இறைவனிடம் அவருக்கு இருந்த காதல் இந்த இன்பத்தை உண்டாக்கியது. பருவம் வராத பெண்ணுக்கு ஆடவன் இருந்தும் பயன் இல்லை. பருவம் வந்த பெண் ஆடவனால் இன்பத்தை அடைவாள். பெண்ணுக்குப் பருவம் இருப்பினும் ஆடவனின்றி இன்பம் இல்லை. அவ்வாறே இறைவனுடைய திருவுருவம் முதலியன பக்தியுணர்ச்சி உடையாருக்கு இன்பத்தை உண்டாக்குகின்றன; மற்றவர்களுக்கு உண்டாக்குவதில்லை. பக்தி உணர்ச்சியுடையவர்கள் பிற பொருள்களிலே இன்பம் காணாமல் இறைவனுடைய தொடர்பு பெற்ற பொருள்களிலே இன்பம் காணுகிறார்கள்.

மனம் உருவத்தையும் பெயரையும் உடைய பொருள்களைப் பற்றிக் கொள்வது. இறைவனுடைய உருவத்தையும் திருநாமத்தையும் அன்பர்களுடைய உள்ளம் பற்றிக் கொள்ளும். எப்போதும் அவனுடைய திருநாமத்தைச் சொல்வதில் இன்பம் காணும். அதற்கு இறைவன்பால் உள்ள காதலே காரணம். காதல் உண்டானால்தான் இறைவனை நினைக்கும்போது மனம் உருகும். அப்படி உருகும் தன்மை மிகுதியாகும்போது கண்ணீர் மல்கும். உள்ளத்தில் காதல் இருந்தால் பல பல எண்ணங்களினிடையிலும் காதல் செய்யும் பொருளின் எண்ணம் நிகழும்போது மற்றவற்றை விட்டுவிட்டு அதனையே எண்ணி உருகும் செயல் உண்டாகும். உள்ளத்தில் நிகழும் அந்த நெகிழ்ச்சி மிகும்போது, அது உடம்பில் மெய்ப்பாடாக வெளிப்படும். அன்பினால் அகத்தே உண்டான நெகிழ்ச்சியைப் புறத்தே கண்ணிலேயிருந்து தோன்றும் நீரினால் உணரலாம்.

அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்? ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்

என்று வள்ளுவர் கூறினார்.

இறைவனுடைய திருநாமத்தை ஓதுகின்ற அன்பர்களுடைய நெஞ்சத்தில் அவன்பால் ஆராத காதல் இருப்பதால் அவர்கள் உள்ளம் கசிகிறது; கண்ணில் நீர் மல்குகிறது; பிறகு வாயினால் அத்திருநாமத்தை ஓதுகிறார்கள். திருநாமத்தை வாயினால் சொல்வதன்றி உள்ளத்தே தோன்றும் உணர்ச்சியோடு சொல்கிறார்கள். உள்ளத்தே காதல் என்ற நீர் நிரம்பிக் கடல் போல இருக்கிறது; அமைதியான அந்தக் கடலிலே திருநாமத்தின் நினைவாகிய அலை எழுகிறது. அந்த அலை அங்கிருந்து மெல்ல மெல்லக் கண்ணுக்கு வந்து நீர் மல்கச் செய்கிறது. பிறகு நாவுக்கு வந்து நினைப்பளவில் இருந்ததை உரையளவாக்கி ஓதச் செய்கிறது.

அப்படிக் காதலோடும் கசிவோடும் கண்ணீரோடும் ஓதுவதனால் அன்பர்களுக்கு நல்ல பயன் கிட்டுகிறது. நல்ல நெறியிலே அந்தத் திருநாமம் அவர்களைச் செலுத்துகிறது.

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக்கு உய்ப்பது.

(அன்பு மிக்கவராகி நெஞ்சு நெகிழ்ந்து கண்ணீர் பெருகி நாவினால் ஓதுகின்றவர்களை நல்ல நெறியாகிய முத்திக்குச் செலுத்துவது – நமச்சிவாய என்னும் திருநாமம் என்று சொல்ல வருகிறார்.

காதல் – அன்பு. கசிந்து – நெகிழ்ந்து. மல்கி – பெருகி. நன்னெறி – நல்ல வழி; என்றது இங்கே முக்தியை. உய்ப்பது – செலுத்துவது.)

இறைவனுடைய திருநாமங்கள் யாவும் ஓதுவாருக்கு நல்ல பயன் தருவனவே. ஆயினும் அவற்றுள்ளே நாமமாகவும் மந்திரமாகவும் ஓதப் பெறுவது ஒன்று உண்டு. அதுவே நமசிவாய என்ற திருவைந்தெழுத்து. அதனை ஓதினால் முத்தி பெறலாம். மந்திரம் என்ற வட சொல்லுக்குத் தன்னை நினைப்பாரைப் பாசத்தினின்றும் நீக்குவது என்று பொருள் கூறுவர். மந்திரங்கள் பலவானாலும் பஞ்சாட்சர மந்திரம் அவற்றிலெல்லாம் சிறந்தது. வேதங்கள் நான்கு. அவற்றில் அதர்வணமென்றது ஏனைய மூன்று மறைகளிலும் உள்ள மந்திரங்களைத் தொகுத்துச் சொல்வது. மூலமாக உள்ளவை மூன்று வேதங்களே. அதனால் வேதத்துக்கு த்ரயீ என்று ஒரு பெயர் உண்டு.

இந்த மூன்று வேதங்களிலும் நடுவாக இருப்பது யஜுர் வேதம்; அவ் வேதத்தின் ஏழு காண்டங்களுள் நடுவுள்ளதாகிய காண்டம் ஏழு ஸம்ஹிதையை உடையது. அந்த ஏழிலும் நடுவாகிய நான்காம் ஸம்ஹிதையின் நடுவில் ஸ்ரீருத்திரம் விளங்குகின்றது. அதன் நடுவில் நமசிவாய என்ற பஞ்சாட்சரம் சொல்லப் பெறுகிறது. இதனால் வேதத்தின் இருதயத்தில் நிற்பது திருவைந்தெழுத்து என்று சொல்லலாம்.

இந்தப் பஞ்சாட்சரம் ஐந்து வகைப்படும். ஸ்தூல பஞ்சாட்சரம், சூக்ஷ்ம பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம், மகாகாரண பஞ்சாட்சரம், மகாமனு என்பவை அவை. நமசிவாய என்பது ஸ்தூல பஞ்சாட்சரம். சிவாய நம என்பது சூக்ஷ்ம பஞ்சாட்சரம். சிவாய சிவ என்பது காரண பஞ்சாட்சரம். சிவ என்பது மகாகாரண பஞ்சாட்சரம். சி என்பது மகாமனு.

நமசிவாய என்ற மந்திரத்துக்கு, ‘சிவனுக்கு நமஸ்காரம்’ என்று சொற்பொருள் கூறுவர். ஆயினும் அதன் பொருளையும் தத்துவத்தையும் மிக நுட்பமாகவும் விரிவாகவும் ஆகமங்களும், திருமூலர் திருமந்திரமும், சிந்தாந்த சாத்திரங்களும் கூறுகின்றன.

நமசிவாய என்றதை மந்திரமாகக் கொள்வதோடன்றி இறைவன் திருநாமமாகவே கொண்டு வழங்குதல் தமிழ் மரபு.

மந்திரம் நமச்சி வாய வாகநீ றணியப் பெற்றால்

என்ற அதனை மந்திரமாகச் சொன்னார் திருநாவுக்கரசர். ‘சிவனுக்கு வணக்கம்’ என்ற பொருளை நினைந்து.

நமச்சி வாய என் றுன்னடி பணியாப் பேய னாகிலும்

என்று மணிவாசகர் பாடினார்.

இனி இம் மந்திரத்தையே இறைவனுடைய திருநாமமாகக் கொண்டு வழங்குவதைத் தேவாரத்திலும் பிற இடங்களிலும் காணலாம்.

“காதலாகி” என்று தொடங்கும் நமச்சிவாயத் திருப்பதிகத்தில் உள்ள பாடல்கள் அனைத்திலும் நமச்சிவாய என்பதை இறைவன் நாமமாக – ஒரு மொழியாலும் தொடர்மொழியாலும் கூறும் நாமங்களைப் போன்ற நாமமாக ஞானசம்பந்தர் திருவாய் மலர்ந்தருளுகிறார்.

நாதன் நாமம் நமச்சி வாயவே.
நம்பன் நாமம் நமச்சி வாயவே.
நச்சன் நாமம் நமச்சி வாயவே.
நெற்றி, நயனன் நாமம் நமச்சி வாயவே.
நல்லார் நாமம் நமச்சி வாயவே.
நந்தி நாமம் நமச்சி வாயவே.
வரதன் நாமம் நமச்சிவாயவே.
நலங்கொள் நாமம் நமச்சி வாயவே.
ஓதும் நாமம் நமச்சி வாயவே.
நஞ்சுண் கண்டன் நமச்சி வாயவே.
நந்தி நாமம் நமச்சி வாய.

இன்னும்,

நக்கர்தம் நாமம் நமச்சிவா யவ்வென் பார்நல்லரே

என்று ஞானசம்பந்தரும்,

துஞ்சும் போழ்தும்நின் நாமத் திருவெழுத் தஞ்சும் தோன்ற அருளுமை யாறரே?”

ஞானச் சோதிய ராதியர் நாமந்தான் ஆன அஞ்செழுத் தோத

நாமஎழுத் தஞ்சாய நம்பர் போலும்

எந்தையார் திருநாமம் நமச்சி வாய
என்றெழுவார்க் கிருவிசும்பில் இருக்கலாமே

திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில்

என்று திருநாவுக்கரசரும்,

ஆரா அமுதின் திருநாமம் அஞ்செழுத்தும்

என்று நக்கீர தேவரும் திருநாமமென்றும் சொல்லுதலைக் காணலாம். இதனைப் பெயராக வைத்து விளியாக்கி,

போற்றியோ நமச்சி வாய புயங்கனே மயங்கு கின்றேன்”

என்று மணிவாசகர் பாடுகிறார். ‘சிவனுக்கு நமஸ்காரம் என்று சொல்லமைதியாற் பொருள்பெறும் சொற்றொடராக வைத்து, மந்திரமாகக் கொள்ளுதல் எல்லோருக்கும் பொதுவான முறை. ‘நமசிவாய’ என்பதை இறைவனுடைய திருநாமமாக வைத்து அதனைப் பெயர்ச்சொல்லாக வழங்குவது தமிழ் மரபு. இந்த மரபுபற்றியே மக்களுக்கு ‘நமச்சிவாயன்’ என்ற பெயரை இடும் வழக்குத் தமிழ் நாட்டில் அமைந்தது. திருவாவடுதுறையா தீனத்தின் ஆதி குருமூர்த்தியின் திருநாமமாகிய ஸ்ரீ நமசிவாய தேசிகர் என்பது இந்த வழக்கத்தை நன்கு தெளிவுபடுத்தும்.

இறைவனுடைய திருநாமங்களைக் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதும்போது அன்பர்களுக்கு இன்பம் உண்டாகும்; நற்பயனும் உண்டாகும். அந்தத் திருநாமங்களில் ஒன்றாகவும் மந்திரமாகவும் அமைந்திருப்பது நமசிவாய என்னும் திருவைந்தெழுத்து. அது வேதத்தின் நடுவில் உள்ளது. வேதமென்னும் மாளிகைக்கு நடுவிடமாகவும் வேத புருஷனுக்கு இருதயமாகவும் விளங்கும் ஸ்ரீ ருத்ரத்தின் நடுவே ஒளிர்வது இந்தத் திருவைந் தெழுத்து. ஆதலின் வேதத்தின் உயிர்நிலையாகிய இதனை வேதங்களின் முடிந்த முடிவாகிய பொருள் என்று சொல்வதில் தவறு இல்லை. இதனை உணர்ந்தே சம்பந்தப்பிரான்,

வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது

என்று சொல்கிறார். அது மந்திரமாக நினைப்பதற்குரியது. மந்திரத்தை மூவகையில் உச்சரிப்பர். மானஸம், மந்தம், வாசிகம் என்பன அவை. மனத்துக்கண் தியானிக்கும் முறை மானஸம்; மெல்லப் பிறர் காதில் கேளாதபடி நாவைப் புரட்டி உச்சரித்தல் மந்தம்; வாசிகம் என்பது வெளிப்படையாகச் சொல்லுதல். மந்திரங்களை மானஸமாகச் சொல்வது சிறப்பு. ஆயினும் இங்கே இந்த ஸ்தூல பஞ்சாட்சரம் மந்திரமாக அமைந்ததோடன்றித் திருநாம வாய்பாட்டிலும் சொல்லப் பெறுதலின், துதிக்க அமைந்த மற்றத் திருநாமங்களைப் போலவே ஓதினாலும் நன்னெறியைத் தரும் சிறப்புடையது. வேதத்தின் மெய்ப்பொருளாகிய மந்திரமாக விளங்கும் அதுவே அடியார்கள் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவதற்குரிய திருநாமமாகவும் இருக்கிறது.

நாதன் நாமம் நமச்சி வாயவே.

தேவாரம் பாடிய மூவரும் நமச்சிவாய என்ற திருவைந் தெழுத்தை வைத்து ஒவ்வொரு பதிகம் பாடியுள்ளனர். சம்பந்தர் முன்பே ‘பஞ்சாக்கரத் திருப்பதிகம்’ என்ற ஒன்றை அருளி யிருக்கிறார்.

துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும்
நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்
வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்த கூற்று
அஞ்ச உதைத்தன அஞ்செ ழுத்துமே

என்பது அப் பதிகத்தின் முதல் திருப்பாட்டு.

நமச்சிவாயத் திருப்பதிகத்தின் முதல் திருப்பாட்டே இங்கே எடுத்துரைத்த பாசுரம்.

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.

இப்பதிகம் சம்பந்தர் இறுதியாகப் பாடியது. அவர் திருப்பெருமண நல்லூரில் திருமணம் செய்துகொண்ட போது, மேலும் உலகத்தில் வாழ விருப்பமின்றி,

நாதனே நல்லூர் மேவும் பெருமண நம்ப உன்
பாதமெய்ந் நீழல் சேரும் பருவம் ஈது

என்று பாட, இறைவன் ஒரு சோதிப் பிழம்பைக் காட்டினார். அதன்கண் தோன்றிய வாயிலூடே ஞானசம்பந்தரும், அவருடைய ஆணையின்படியே அந்தத் திருமணத்துக்கு வந்த அனைவரும் புகலாயினர். அப்போது இந்த நமச்சிவாயத் திருப்பதிகத்தை ஆளுடைய பிள்ளையார் பாடினர்

ஞானமெய்ந் நெறிதான் யார்க்கும்
நமச்சிவா யச்சொ லாம்என்று
ஆனசீர் நமச்சி வாயத்
திருப்பதி கத்தை அங்கண்
வானமும் நிலமும் கேட்க
அருள்செய்திம் மணத்தில் வந்தோர்
ஈனமாம் பிறவி தீர
யாவரும் புகுக என்ன.”

வருமுறைப் பிறவி வெள்ளம்
வரம்புகா ணாத முந்தி
உருவெனுந் துயரக் கூட்டில்
உணர்வின்றி மயங்கு வார்கள்
திருமணத் துடன்சே வித்து
முன்செலுஞ் சிறப்பினாலே
மருவிய பிறவி நீங்க
மன்னுசோ தியினுட் புக்கார்

என்பது பெரிய புராணம்.

அன்பர்கள் இந்த உடலை விடும் சமயத்தில் திருவைந்தெழுத்தைச் சொல்லி இன்புறுவதை விரும்புவர்.

நாமம் பரவி நமச்சி வாயவென்னு மஞ்செழுத்தும் சாம்அன்று உரைக்கத் தருதிகண்டாய்”

துஞ்சும் போழ்தும் நின் நாமத் திருவெழுத்
தஞ்சும் தோன்ற அருளும்ஐ யாறரே

என்ற அப்பர் வாக்கைக் காண்க. திருஞானசம்பந்தப் பெருமான் உலக வாழ்வை விட்டுச் செல்லும்போது நமச்சிவாயத் திருப்பதிகம் ஓதியது, யாவரும் செய்ய வேண்டியதைத் தம்முடைய செயலால் உணர்த்தியதாயிற்று.