ஆர நல்குபவர்

இறைவனுடைய அன்பர்களுக்கு உலகில் அவனையன்றி வேறு துணை இல்லை என்ற உறுதிப்பாடு இருக்கும். தமக்கு வேண்டிய பொருள் ஏதாயினும் மனிதர் கொடுத்துக் கிடைக்கப் போவதில்லை. எல்லாம் அவனருளால் வரவேண்டும் என்ற உண்மையும் தெரியும். ஆதலின் தங்களுக்கு எது வேண்டுமானாலும் இறைவனை அணுகி விண்ணப்பம் செய்வார்கள். ஆலவாயில் இறைவனை அருச்சித்து வந்த தருமி என்னும் ஆதிசைவர் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று விரும்பினார்; இறைவனிடம் விண்ணப்பித்துக்கொண்டார். அவன் பொற்கிழி வாங்கி அளித்தான். பாண்டிய மன்னர்கள் வேண்டியவற்றை வேண்டியபடியே அப்பெருமான் வழங்கியதைத் திருவிளையாடற் புராணம் விரிவாகப் பேசுகிறது.

மனத்திலே மாசு இல்லாமல் இறைவன்பால் முறுகிய அன்பும், யாம் வேண்டுவனவற்றையெல்லாம் இறைவன் அருள்வான் என்ற நம்பிக்கையும் உடைய தொண்டர்கள் இயல்பாகவே இறைவனை வழிபடுவதோடு, தமக்கு ஒன்று வேண்டுமானால் உணர்ச்சி விஞ்சிப் பின்னும் சிறப்பாக வழிபடுவார்கள். குழந்தை தனக்கு ஏதேனும் வேண்டுமானால் தாயினிடம் அழுது சாதித்துப் பெற்றுக்கொள்வது போன்றது இது. அன்பின் நிலையில் இதுவும் ஒன்று. பலரிடம் கெஞ்சியும் கொஞ்சியும் வழிபட்டும் பொருள் பெறுவது தொழில்; அன்பன்று. தமக்கு ஆதாரமானவன் இவனே என்று உணர்ந்து அவன் தந்தாலும் தராவிடினும் அவனையே நச்சி வேண்டுகை அன்பு.

இறைவனிடம் பக்தி உடையவர்கள் தமக்கு வேண்டி யதை அவனிடம் விண்ணப்பித்துக் கொள்வார்கள். அவன் அருளால் வேண்டியது கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி கொள்வார்கள். கிடைக்காவிடின் வருந்துவார்கள்; ஆனால் இறைவனிடம் உள்ள அன்பிலே தளர்ச்சி உண்டாகாது. கொடுத்தால் விரும்பி அணைதலும், கொடுக்காவிட்டால் விலகுதலும் வாணிக மனப்பான்மை. அதனை அன்பென்று சொல்லுதல் கூடாது.

நினைத்தது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அன்பிலே சிறிதும் தளர்வின்றி நிற்கும் அன்பர்களே மாசு இல்லாத் தொண்டர்கள். அத்தகைய தொண்டர்கள் இறைவன் அருளால் தாம் வேண்டியவற்றைப் பெறாமல் இருப்பது மிக அருமை.

திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார், அன்பர்கள் வேட்கையை அறிந்து இறைவன் நிறைவேற்றும் வண்மையைப் பாராட்டுகிறார். தன் காதலன்பால் ஒரு பொருளைப் பெற எண்ணிய மனைவி இயற்கையாகச் செய்யும் கடமைகளில் தவறாமல் இருப்பதோடு, பின்னும் தன் ஆர்வந் தோன்ற உபசரிப்பது உலகியல்பு. மனித மனத்தின் இயல்பு இது. தொண்டர்கள் எக்காலத்தும் இறைவனுடைய நினைவை மறவாதவர்கள். உலக வாழ்க்கையில் தமக்கு ஒன்று வேண்டுமென்றால், தாம் ஆசைப்பட்ட அப்பொருளைப் பெறும் இடம் இறைவனையன்றி வேறு இல்லை என்று உணர்பவர்கள். ஆகவே அவர்களுக்கு ஏதேனும் வேண்டு மென்று ஆசை உண்டானவுடன் தம் ஆசையை வெளிப்படுத்த நினைக்கிறார்கள். இறைவனுக்குப் பூசை செய்கிறார்கள். வழக்கமாகச் செய்யும் வழிபாட்டைவிடச் சிறப்பாகச் செய்கிறார்கள். அவர்கள் உள்ளத்தில், “இது கிடைக்காவிட்டால் இவனை மறப்போம்” என்ற மாசு இல்லை. இது வேண்டுமென்ற ஆசை எழுந்தவுடன் அதனோடு தொடர்புடைய செயலைப் போல அவர்கள் இறைவனை வழிபடும் வழிபாடும் நிகழ்கிறது. மலர்கொண்டு வணங்குகிறார்கள். அவர்களுடைய பூசையை ஏற்றுக் கொண்டு மகிழ்கிறான் இறைவன். ‘இவர்கள் வேறு புகலிடமின்றி நம்மை வழிபடுகிறார்கள். இவர்களுக்கு வேண்டியவற்றை அளிப்பதற்குத்தானே நாம் இருக்கிறோம்?’ என்று இறைவன் அவர்களுடைய ஆசையெல்லாம் நிரம்பும்படி அருள் செய்கிறான்.

“பரந்துபல் ஆய்மலர் இட்டுமுட்டாதடி யேஇறைஞ்சி
இரந்தவெல் லாம்எமக் கேபெற லாம்என்னும்
அன்பர்உள்ளம்
கரந்துநில் லாக்கள்வனே”

என்று மாணிக்க வாசகர் சொல்கிறார்.

அத் தொண்டர்கள் மாசில்லாதவர்கள் என்பதை உணர்ந்தவன் இறைவன். குழந்தை கொஞ்சிக் கொஞ்சிக் கேட்டால் கொடிய தந்தையும் மனங்குழைந்து அதற்கு வேண்டியதை வாங்கி அளிப்பான். எல்லாருக்கும் நல்ல தந்தையாகிய இறைவன் தன் தொண்டர்களுக்கு வேண்டிய வற்றை அருள்வது வியப்பு அன்றே?

வேண்டத் தக்க தருள்வோய்நீ
வேண்ட முழுதும் தருவோய்நீ

என்பது திருவாசகம்.

மாசில் தொண்டர் மலர்கொண்டு வணங்கிட
ஆசை ஆர அருள்நல்கிய செல்வத்தர்.

[குற்றம் இல்லாத தொண்டர்கள் அருச்சனைக்குரிய மலர்களைத் தேர்ந்து கைக்கொண்டு அருச்சித்து வழிபட, அவர்களுடைய ஆசை நிரம்பும்படியாக அருளை வழங்கும் செல்வத்தை உடையவர்.

மாசு-நலம் பெற்றால் விரும்புவதும், பெறாவிடின் வெறுத்து நீக்குவதுமாகிய இயல்பு. ஆர-நிரம்ப. நல்கிய-கொடுத்த.]

தொண்டர்கள் ஆசையை அவர்கள் சொல்ல வேண்டு மென்பது இல்லை. அவர்கள் சொல்லாமலே. குறிப்பால் அறிந்து கொள்ளும் தன்மையுடையவன் இறைவன். இத்தகைய உபகாரியை எங்கும் காணமுடியாது. தன்பால் உள்ள செல்வத்தைக் குறிப்பறிந்து ஈபவனே உத்தமமான வள்ளல். இறைவன் அத்தகையவன். உலகில் உள்ள செல்வர்களுடைய செல்வம் ஒரு வரையறைக்கு உட்பட்டது. இரப்பவனது குறிப்பறிந்து தரும் வண்மை ஒருவனுக்கு இருக்கலாம். ஆனால் இரப்பவனது ஆசை முழுவதும் நிரப்புவதற்குரிய ஆற்றல் உலகத்துச் செல்வர் யாருக்கும் இல்லை. ஆசை அளவற்றது. அதை நிரப்ப வேண்டுமானால் அளவற்ற செல்வம் உடையவனால்தான் முடியும். இறைவன் குறைவிலாச் செல்வன். அவன் ஒருவனால்தான் ஆசை ஆர நல்க முடியும். தொண்டர் களின் ஆசை ஆரும்படி நல்கிய செல்வத்தன் இறைவன் என்பது எவ்வளவு உண்மையானது!

தொண்டர்களுக்கு வேண்டியவற்றைத் தரும் வள்ளலாகிய இறைவன் எல்லோரிடத்தும் அப்படி இருப்பதில்லை. இன்னாருக்கு இன்னபடி படியளக்க வேண்டும் என்பதை உணர்ந்தவன் அவன். அந்த நியதிதான் அறம். அதனையே அவன் வாகனமாகக் கொண்டிருக்கிறான். தன்னை வழிபடுவாரைத் தாங்கும் அறம் இறைவனுக்குரியது. நல்லோரைத் தாங்குவதும் அல்லாதவரை ஒறுத்தலும் அறத்தின் பகுதிகள். நல்லோரிடத்து நல்லதாக நிகழும் அறமே அல்லாதவரிடம் கொடியதாகத் தோற்றும்.

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்

என்னும் குறள் இதனையே சொல்கிறது.

அறத்தின் உருவமாகிய விடை சில சமயங்களில் சினமுடையதாகத் தோற்றும். கடுமையான கோபம் உடையதாக இருக்கும்; காய் சினத்தை உடைய விடை என்று சொல்லும் படியாக, அன்பில்லார் உணர்வார்கள். இறைவன் நல்லோருக்கு நல்கும் தன்மையினனாக இருப்பதோடு அல்லோர்பால் காய்சினம் காட்டும் விடையை உடையவனாகவும் விளங்குகிறான்.

காய்சி னத்த விடையார்.

திருக்கருகாவூரில் எழுந்தருளியிருக்கும் முல்லைவன நாதரைத் தரிசித்தபோது சம்பந்தப் பெருமானுக்கு இந்த எண்ணங்கள் தோன்றின. இறைவன் இயல்பும் அவன் ஏறும் விடையின் இயல்பும், அவனுடைய தொண்டர்கள் எல்லா நலங்கள் பெறுதலையும் அல்லாதார் துன்புறுதலையும் நினைப்பூட்டின.

இறைவன் பலபல திமருமேனியை உடையவன். அவன் செஞ்சோதிப் பிழம்பாக நிற்பவன். எரியும் நெருப்புப் போன்ற வண்ணமுடையவனாகவும் நிற்பான். எரியும் எரிவண்ணம் ஈசனது வண்ணம் என்பதில் ஓர் உண்மை அடங்கியிருக்கிறது. அவன் சிவந்த திருமேனி படைத்தவன்; நீறு பூசியிருப்பவன், நீறு பூத்த நெருப்புப் போல. எரி தன்னைத் தக்கவண்ணம் பயன்படுத்தும் அறிஞர்களுக்கு உணவு சமைக்கவும், வெந்நீர் வைக்கவும், வேண்டாத அழுக்குப் பொருளைக் கொளுத்தவும், குளிரைப் போக்கிக் கொள்ளவும், இருட்டைப் போக்கவும் துணையாகிறது. அதனால் எரிபட்டு அழிவாரும் உண்டு. அன்பர்கள் இறைவனுடைய அருளாற் பயன் அடைகிறார்கள். அல்லாதார் அவனுடைய அருள் பெறாமல் துன்பம் அடைகிறார்கள்.

கருகா வூர்எம்
ஈசர் வண்ணம்எரி யும்எரி வண்ணமே.

[திருக்கருகாவூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுடைய மேனியின் நிறம் எரிகின்ற தீயைப் போன்ற வண்ணம் ஆகும். வண்ணம்-நிறம்; தன்மை. எரி-நெருப்பு.]

திருக்கருகாவூர் என்பது சோழநாட்டில் உள்ள தலம். பாபநாசம் என்ற ரெயில் வண்டி நிலையத்துக்குத் தெற்கே நான்கு மைல் தூரத்தில் உள்ளது. இப்போது திருக்களாவூர் என்று இதன் பெயர் வழங்குகிறது. வெட்டாறு என்ற ஆற்றின் தென்கரையில் இருக்கிறது. இந்தத் தலத்துக்கு முல்லைவனம் என்ற பெயரும் உண்டு.

கடிகொள் முல்லைகம ழுங்கரு காவூர்

என்றும்,

கைதன் முல்லைகம முங்கரு காவூர்

என்றும்,

கந்த மௌவல்கம ழுங்கரு காவூர்

என்றும் இத்தலத் திருப்பதிகப் பாடல்களில் ஞானசம்பந்தர் குறிப்பிடுகிறார்.

இத் திருத்தலத்திற்கு ஞானசம்பந்தர் திருப்பதிகம் ஒன்றும், திருநாவுக்கரசர் திருப்பதிகம் ஒன்றும் உள்ளன.

மாசில் தொண்டர்மலர் கொண்டு வணங்கிட
ஆசை ஆரஅருள் நல்கிய செல்வத்தர்;
காய்சி னத்தவிடை யார்;கரு காவூர்எம்
ஈசர் வண்ணம்எரி யும்எரி வண்ணமே.

[செல்வத்தர், விடையார், ஈசர் ஆகிய இறைவருடைய வண்ணம் எரிவண்ணம் என்று கூட்ட வேண்டும். எரியும் மெரிவண்ணமே என்று சொல்லவேண்டும்! இது செய்யுள் ஓசை நோக்கி வந்த விரித்தல் விகாரம்.]