அவுணரை அழித்த வேல்
உலகத்தில் தோன்றிய உயிர்களுக் கெல்லாம் உடல், கருவிகள், உலகப் பொருள்கள், இன்ப நுகர்ச்சி ஆகியவற்றைத் தந்து பாதுகாக்கிறான் இறையவன். அநாதி காலமாக அவனுடைய அருளானை இயங்கி வருகிறது. உலகத்தை ஆக்கி அளித்து அழித்து மறைத்து அருளும் செயல்களை இடைவிடாது இயற்றிவரும் இறைவன் உயிர்களின் பக்குவத்துக்கு ஏற்பச் சிறப்பான முறையில் தோற்றுகிறான். உருவமும் பெயரும் கொள்கிறான். உயிர்களின் பக்குவம் உயர்ந்து தன்னை அடையு மட்டும் அவன் அருள் வேகம் காத்து நிற்பதில்லை. அவனும் ஆருயிரை ஆட்கொள்ள இறங்கி வருகிறான்.
இந்தக் கருணையின் விளைவாகப் பக்குவ ஆன்மாக்கள் அவ்வப்போது இறைவனை உருவத்தோடு கண்டு போற்றி வழிபடுகின்றன. சில அடியார் களுக்கு ஆண்டவன் அருள் செய்ய வந்த அவசரம் உலகமெல்லாம் போற்றும்படி நின்று நிலவுகிறது. இவ்வாறு உருவமும் நாமமும் இல்லாத ஆண்டவனுக்குப் பல பல உருவங்களும் நாமங்களும் அமைந்தன. அப்படி அமைந்தது ஆன்மாக்கள் வழிபட்டு உய்யும் பொருட்டே ஆகும்.
ஒருநாமம் ஓருருவம் ஒன்றும்இலார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ
என்று மணிவாசகர் பாடுகிறார்.
சிவபெருமானுடைய அவதாரங்கள் பல. எல்லாம் கடந்து நின்ற அவனே சத்தியாய்ச் சிவமாய் முருகவேளாய் உலகுயிர்களுக்கு அருள் செய்ய வேண்டி இலங்குகிறான். முருகனுடைய திருவவதாரமும் சிவபிரானுடைய அருட்சிறப்பைக் காட்டுவதாகும். அருவமாய் இருந்த கடவுள், உருவங் கொண்டு வந்த நெறியில் அமைந்த சிறந்த அவதாரம் அது. அநாதியாய் ஒன்றாக இருந்த பிரமமே பலவாகவும் நின்றது. அந்தச் சோதிப் பிழம்பு உயிர்கள் தன் கருணைத் திறத்தை மிகுதியாகப் பெறவேண்டு மென்ற அருள் உள்ளத்தால் எடுத்த அவதாரம் அது. ஐந்து திருமுகமும் பத்துத் திருக் கரங்களும் உடைய திருக்கோலம் போதாதென்று ஆறு திருமுகமும் பன்னிரண்டு திருக்கரங்களும் கொண்டு தோன்றினான். கருணை வெள்ளம் பெருகும் கால்வாய்கள் ஐந்தாக இருந்தது போதா தென்று ஆறாகிப் பத்து மடையைப் பன்னிரண்டு மடை ஆக்கினாற்போல அமைந்தது இது.
அருவமும் உருவும் ஆகி
அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப்
பிழம்பதோர் மேனி ஆகிக்
கருணைகூர் முகங்கள் ஆறும்
கரங்கள்பன் னிரண்டும் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங்கு
உதித்தனன் உலகம் உய்ய
என்று கந்தபுராணம் கூறுகிறது. முன்னமே இருந்த கருணை கூர்ந்ததாம். கூர்தல் என்பதற்கு உள்ளது சிறத்தல் என்பது பொருள். முன்பு இருந்த கருணை பின்னும் சிறந்து ஓங்கவே, முன்பு இருந்த முகம் ஐந்தும் ஆறாயின; பத்துக் கரங்கள் பன்னிரண்டாயின. இந்தக் குறிப்பை, “கருணை கூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே” என்ற அடி புலப்படுத்துகிறது. கருணை பெருகிய திருக்கோலத்தோடு ஒரு திருமுருகன் ஆங்கு உதயம் செய்தது, உலகமெலாம் உய்வதற்குத்தான்.
ஆருயிர்களுக்கு வழங்கும் கருணையைப் பின்னும் பெருக வழங்க முருகனாக எழுந்தருள எண்ணினான் சிவபெருமான். அந்த அவதாரத்துக்கு உலகம் உய்வது காரணமாக இருந்தாலும், ஏதேனும் ஒரு தலைக்கீடு கொண்டு தோன்ற எண்ணினான். சூரபதுமனுடைய மறச் செயலால் தேவர் இடுக்கண் அடைந்து முறையிட்டார்கள். அந்த முறையீட்டுக்கு இரங்கி அவர்களுடைய துன்பத்தை நீக்குவதை வியாஜமாக வைத்து, எல்லா உயிர்களுக்கும் அருள் பாலிக்க முருகன் திருவவதாரம் நிகழ்ந்தது.
வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி
ஐந்து முகத்தோ டதோமுகமும் – தந்து
என்று கந்தர் கலிவெண்பாவில் குமரகுருபர முனிவர் பாடுகிறார்.
ஆகவே முருகன் திருவவதாரத்தின் முதல் காரியம் அசுர சங்காரம். இந்தச் சங்காரத்துக்குக் கருவியாக இருப்பது வேல்.
பரிபாடலில் கடுவன் இளவெயினனார் முருகனைப் பாட நினைக்கிறார். அவருக்கு அப்பெருமான் சூரசங்காரம் செய்த வீரத் திருவிளையாட்டு முதலிலே நினைவுக்கு வருகிறது. அவனுடைய திருக்கை வேலும் அவர் உள்ளத்தில் ஒளிவிடுகிறது. முருகனுடைய வாகனமாகிய பிணிமுகம் என்ற யானையையும் நினைக்கிறார்.
சூரன் முருகனோடு போர் செய்தபோது பலபல மாயம் செய்தான். இறுதியில் கடலுக்குள்ளே போய்ப் புகுந்தான். திடீரென்று அங்கே பெரிய மாமரமாக நின்றான். அந்த மாமரத்தின் மேல் வேலை ஏவிப் பிளக்கவே சூரன் மாய்ந்தான். மயிலும் சேவலுமாக உருவெடுத்தான். இது புராணக் கதை.
முருகன் பிணிமுகத்தின் மேல் இவர்ந்து சூர சங்காரத்துக்குப் புறப்பட்டு விட்டான். பெரிய கடற் பரப்புக்கு முன்னால் சென்றான். பரவிய பெரிய குளிர்ந்த கடலிலே பாறைகள் அங்கும் இங்கும் நிற்கின்றன. இன்னும் ஒரு கணத்தில் அவையெல்லாம் தூள்தூளாகப் போகின்றன. முருகன் பிணி முகத்தின் மேல் ஏறித் தேவாசுர யுத்தத்தில் அசுரர்களை உழக்கினான்; அலைத்தான்; கலக்கினான்.
இப்போது தன் திருக்கரத்திலுள்ள வேலைச் சூரனாகிய மாமரத்தின் மேலே ஏவுகிறான். அது வேகமாகத் தீக்கொழுந்துகளைக் கக்கிக் கொண்டு புறப்படுகிறது. சுழலுகிறது. முருகன் கையிலிருந்து புறப்பட்ட அந்த வேல் சூரனை நோக்கிச் செல்கிறது. எதற்கும் அஞ்சாத அவுணனாகிய அவனும் வேலின் கடுமையைக் கண்டு அஞ்சுகிறான். வேல் தன் மேலே படுவதற்கு முன்னாலேயே அந்த அச்சம் அவனைக் கொன்று விடும்போலும்! அச்சத்தால் அவன் நடுங்குகிறான். இதுகாறும் தான் காட்டிய பராக்கிரமம் இனிச் செல்லாதென்பதை அவன் உணர்ந்து கொண்டான். அதனால்தான் அந்த நடுக்கம் ஏற்படுகிறது.
மனத்திலே துயரமாகிய நோய்கொண்டு நுடங்கிய சூரனாகிய மாவின் அடி மரத்திலே பாய்ந்தது வேல்; உலகமே கிடுகிடுக்க அந்தப் பிரமாண்டமான மரம் பிளந்துவிட்டது.
சூரன் அழிந்தான்; அவனுக்கு முன்னாலே போயினர். மற்ற அசுரர்களெல்லாம் ஒழிந்து சூரனோடு அவனுடைய குலமே நாசமாகிவிட்டது. மாய அவுணருடைய குலம் அத்தனையும் வேரும் வேரடி மண்ணும் இல்லாமலே அழிந்துவிட்டது.
அவுணர் அழிவதற்குரியவர். அவர்களுடைய மாயத்தை என்னவென்று சொல்வது! அவர்களுக்குப் புண்ணிய ஜனம் என்ற பெயர் ஒன்று உண்டு. சென்ற இடங்களிலெல்லாம் இதுவரையில் அவர்களுக்கு வெற்றியே கிடைத்து வந்தது. பேராற்ற லும் வெற்றியும் எல்லோருக்கும் கிடைத்து விடுமா.? ஏதோ முற்பிறவியில் புண்ணியம் பண்ணினதாலே தான் கிடைத்திருக்க வேண்டும். ‘பூர்வஜன்மத்தில் புண்ணியம் செய்தவர்கள் இப்போது சுகமாக இருக் கிறார்கள்’ என்றும், “போனஜன்மத்தில் என்ன பாவம் செய்தானோ? இப்போது அநுபவிக்கிறான்” என்றும் நாம் சொல்வதில்லையா? புண்ணிய ஜனம், பாவஜனம் என்று பேசும் இரண்டு பிரிவுகளில் புண்ணிய ஜனம் என்ற பேர் அவுணர்கள் பெற்றார்கள். பேர்மாத்திரம் அது. அவர்கள் செய்த காரியமோ மகா கொடூரம். கொல்வதும் கொன்றதை உண்பதுமே அவர்கள் தொழில். உயிர்களை யெல்லாம் கொன்று தின்பவர்களுக்கு உள்ளத்தில் ஈரம் என்ற பண்பு இருக்கவே இடம் இல்லை. கொடுமைதான் கோயில் கொண்டிருக்கும். கொன்று உண்ணுதலை அஞ்சாமல் செய்யும் கொடிய தொழிலையுடைய அவர்களைக் கொல்வதுதான் தருமம். அவர்கள் கொல்வதற் குரியவர்; கொல்லப்படும் தகுதி பெற்றவர். கோடி கோடி உயிர்களைக் கொன்று உண்பதே தொழிலாக உடையவரை அழித்தால் அவர்களால் இனிக் கொல்லப்பட இருக்கும் உயிர்கள் அத்தனையும் பிழைக்கும். ஆகவே மாய அவுணர்களாகிய அவர்கள் அழிந்தது நியாயமானது. அந்த நியாயமான காரியத்தைச் செய்த வேல் முருகன் கையில் இருக்கிறது.
பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்குச்
சேயுயர் பிணிமுகம் ஊர்ந்து அமர்உழக்கித்
தீஅழல் துவைப்பத் திரியவிட்டு எறிந்து
நோயுடை நுடங்குசூர் மாமுதல் தடிந்து
வென்றியின் மக்களுன் ஒருமையொடு
பெயரிய கொன்றுணல் அஞ்சாக்
கொடுவினைக் கொஃறகை மாய
அவுணர் மருங்குஅறத் தபுத்தவேல்.
[பரவிய பெருங்கடலுள் பாறைகளெல்லாம் பொடியாகும் படியாகப் புகுந்து, மிக உயர்ந்த பிணிமுகம் என்னும் யானையின் மேல் ஏறி வந்து யுத்தம் செய்து தீக்கொழுந்து ஒலிக்கும்படியாகச் சுழலும்படி விட்டு எறிந்து. அச்சத்தை உடைய நடுங்கிய சூரனாகிய மாமரத்தின் அடியைப் பிளந்து, வெற்றியையுடைய மக்களுள் புண்ணியஜனம் பாவஜனம் என்ற இரண்டினுள் ஒன்றாகிய புண் ணிய ஜனம் என்ற பெயரைப் பெற்றவரும், கொன்று உண்ணுத லுக்கு அஞ்சாதவரும், கொடுவினையை உடையவரும், கொல்லுவதற்கு ஏற்றவரும் ஆகிய மாயம் மிக்க அவுணரைக் குலமுழுதும் அற்றுப் போகும்படி அழித்த வேல்.- அந்த வேலையுடைய முருகக் கடவுள் என்று சொல்ல வருகிறார்.
உழக்கி – கலக்கி. அழல் – கொழுந்து. துவைப்ப-ஒலிக்க. நுடங்கு – நடுங்கும். முதல் – அடிமரம். தடிந்து – வெட்டி. ஒருமை யொடு – ஒன்றால். பெயரிய – பெயர்கொண்ட, கொன்றகை – கொல் தகை; கொல்லப்படும் தகுதிபெற்ற. மருங்கு அற – குலம் முழுவ தும் ஒழிய.தபுத்த-கொன்ற.]
வேலின் புகைழப் பாடவந்த புலவர் சூரனை அது அழித்த சிறப்பை முதலில் பாடினார். சூரனைச் சார்ந்த அவுணரை நாசம் செய்த சிறப்பையும் சொன்னார்.
‘அவுணரை மருங்கற மாய்க்குந் தொழில் நியாயமானதா?’ என்ற கேள்விக்கு விடை சொல்பவரைப் போல், அவர்கள் கொல்வதற்கு ஏற்றவர்கள் என்று குறிப்பிடுகிறார். ஏன்? வாழ்வு முழுவதும் பிற உயிரைக் கொன்று தின்னும் தொழிலையே உடைய கொடியவர் அவர்கள். அவர்கள் தாம் வாழப் பிறரை மாய்த்தார்கள். அவர்கள் வாழ வாழப் பிற உயிர்கள் மாய்ந்து கொண்டே இருக்கும். பிற உயிர்கள் வாழ வேண்டுமானால் அவுணர்கள் மாயவேண்டும். இரு வகையினரும் வாழ்வதென்பது இயலாத காரியம். பனியும்வெயிலும், இருளும் ஒளியும் ஒன்றாக இருப்பது இயலுமா? ஆருயிர்களைக் காக்க எடுத்த அவதார மாகையால் முதலில் அவுணரை மாய்த்தான் முருகன். மருத்துவன் நோயாளியின் நோயை முதலில் நீக்கு கிறான்; பிறகுநோயால் மெலிந்தஉடம்பு வளம்படநன் மருந்து தருகிறான். அப்படியே முருகன் ஆருயிரைக் கொன்று தின்னும் அவுணராகிய நோயை மாய்த்துப் பின் அருள் மருந்தை உதவலானான்.
உயிர்களைக் கொன்று தின்னும் இயல்பு அசுர சுபாவம். மக்களுள் அவ்வியல்பு இருத்தல் அடாது. அரக்கரும் அவுணருமே அந்தத் தொழிலை உடையவர்.
தாடகையைச் சங்கரிக்க வேண்டும் என்று ராம பிரானுக்கு அறிவுறுத்தினார் விசுவாமித்திரர். முனிவருடைய ஆசிரமத்தை நோக்கிப் போகும் போது இடையிலே புல்லும் மரமும் இன்றி வெறும் பாலைவனமாக இருந்த நிலப்பரப்பைக் கண்ட காகுத்தன், “இந்த நிலம் இப்படி ஆனதற்குக் காரணம் யாது?’ என்று கேட்கிறான். “தாடகை என்னும் அரக்கியால் இப்படி ஆயிற்று” என்று சொல்லவரும் முனிவர் அவ்வரக்கியின் இயல்பைச் சொல்கிறார்.
…… இன்னுயிர்
கொன்றுழல் வாழ்க்கையள்
என்று சொல்கிறார். தாடகை எதிர்ப்பட்ட போது அவளைக் கொல்ல வேண்டுமென்று கூறுகிறார். அவள் பெண்ணாயிற்றே என்று ராமன் சிறிது எண்ணி நிற்கையில் முனிவர், “இவளைப் பெண் என்று நினைக்கலாமா? பேதைமையுடைய பெண் என்று நினைத்தால் அறிவாகாது. உலகில் நிலை பெற்ற உயிர்களை யெல்லாம் வாரி வாரித் தன் வாயிலே போட்டுக் கொள்கிறவள் இவள். இதைக் காட்டிலும் கொடிய பாவம் வேறு என்ன இருக் கிறது? அந்தப் பாவத்தைச் செய்பவர்களை ஒரு கணம் உலகத்தில் இருக்கும்படி செய்யலாமா? பெண்ணென்று நினைக்கலாமா?” என்று வற்புறுத்துகிறார்.
மன்னும் பல்உயிர் வாரித்தன் வாய்ப்பெய்து
தின்னும் புன்மையில் தீமையது ஏதைய?
பின்னும் தாழ்குழற் பேதைமைப் பெண்
இவள் என்னும் தன்மை எளிமையின் பாலதே!
என்பது கம்பர் பாட்டு. ராமன் இது கேட்டபின் தாடகையைச் சங்கரித்தான்.
இதே நியாயத்தால் வேலானது அவுணர் குல மற அழித்தது. இதைப் புலவர், “கொன்று உணல் அஞ்சாக் கொடுவினைக் கொல்தகை, மாய அவுணர் மருங்கு அறத் தபுத்த வேல்” என்ற அடிகளால் தெளிவாக்குகிறார். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். அவர்கள் மற்ற உயிர்களைக் கொன்றார்கள். அதனால் கொலையுண்டார்கள்.