புகழ் நூல்கள்
முருகப்பிரானுடைய சரிதம் விரிந்தது. சிவ பெருமானுடைய அருள் திருவிளையாடல்களும் வீர விளையாடல்களும் பலவாதல் போல முருகவேளுடைய விளையாடல்களும் பல. அன்றியும் அவனுடைய இளமைத் திருவிளையாடல்கள் பல பல வகையாக இருக்கின்றன.
முருகனுடைய வரலாற்றைக் கூறும் புராணம் ஸ்காந்தம். பதினெண் புராணங்களில் ஒன்றாகிய அதுவே எல்லாப் புராணங்களையும் விடப் பெரியது. அது லக்ஷம் கிரந்தமுடையது. பல பகுதிகளையுடைய அதனுடைய ஒரு பகுதியையே தமிழில் கச்சியப்ப சிவாசாரியார் மொழிபெயர்த்தார்.
“எந்தப் பொருளும் கந்தபுராணத்திலே” என்பது தமிழில் வழங்கும் பழமொழி. அறம், பொருள், இன்பம், வீடு என்ற உறுதிப்பொருள் நான்கோடு, தெய்வங்களின் வரலாறுகளும், தலச் செய்திகளும், வேறு பல விஷயங்களும் அமைந்த பெருங்கடல் வடமொழிக் கந்தபுராணம். அதனால் தான் அந்தப் பழமொழி வழங்குகிறது. கந்தபுராண நூலாசிரியர் இதனையே ஒரு பாட்டில் குறிக்கிறார்.
புதுமயில் ஊர்பரன் புராணத் துற்றிடாக்
கதையிலை; அன்னது கணிதம் இன்றரோ
என்று அவையடக்கத்தில் கூறுகிறார்.
வடமொழிக் கந்த புராணம் சனற்குமார சங்கிதை, சூத சங்கிதை, பிரம்ம சங்கிதை, விஷ்ணு சங்கிதை, சங்கர சங்கிதை, சூர சங்கிதை என்று ஆறு பிரிவாக உள்ளது. அந்த ஆறு பிரிவில் ஒன்றாகிய சங்கர சங்கிதை பன்னிரண்டு பகுதிகளை உடையது. அந்தப் பன்னிரண்டிலும் முதலாவதாக அமைந்தது சிவரகசிய கண்டம் என்பது.அப் பகுதியும் ஏழு காண்டங்களால் அமைந்தது. அந்த ஏழில் முதல் ஆறையும் தமிழ்ப்பாவினால் இயற்றினார் கச்சியப்ப சிவாசாரியார் என்ற புலவர் பெருமான். ஏழாவது காண்டமாகிய உபதேச காண்டத்தைத் தனியே கோனேரியப்ப நாவலர் என்னும் புலவர் பாடியிருக்கிறார்.
தமிழ்நாட்டில் பல அன்பர்கள் கந்தபுராணத்தைப் பாராயணம் செய்து வந்தனர். ஆறு காண் டங்களும், 94 படலங்களும், 10,346 செய்யுட்களும் உடையது தமிழ்க் கந்தபுராணம். அதன் விரிவை நோக்கிய சிலர் முருகவேளுடைய வரலாற்றைச் சுருக்கமாகச் சொல்லும் நூல் ஒன்று வேண்டுமென்று விரும்பினர். திருக்கைலாய பரம்பரைத் ஆதீனத்தைச் சார்ந்த ஸ்ரீ சம்பந்த சரணாலய சுவாமிகள் என்னும் பெரியார் 1049 செய்யுட்களில் கந்தபுராணச் சுருக்கம் என்ற நூலை இயற்றினார். கந்தபுராணத்தில் உள்ள விரிவான வருணனைகளையும், சில உபாக்கியானங்களையும் விலக்கி விட்டு, அதில் விரிவாகச் சொல்லப் பெற்ற வரலாறுகளைச் சுருக்கமாக அமைத்து அந்நூலை அவர் இயற்றினார்.
புராண வகையில் அமைந்த முருகன் வரலாறு இது. இதிகாசமாகிய ராமாயணத்தில் முருகன் வரலாறு சொல்லப் பெறுகிறது. விசுவாமித்திர முனிவர் தம்முடைய வேள்வியைப் பாதுகாக்கும் பொருட்டு, ராமனையும் லக்ஷ்மணனையும் அழைத்துக் கொண்டு செல்லும் வழியில் காமன் இறைவன் திரு நுதற்கண்ணினாற் பட்டு விழுந்த இடத்தைக் காண்கிறார்கள். அதன் வரலாறு யாதென்று கேட்ட ராமனுக்கு விசுவாமித்திரர் காமசங்காரக் கதையையும், முருகன் திருவவதாரக் கதையையும் தெரிவிக்கிறார். மகாபாரதத்திலும் முருகனுடைய வரலாறு வருகிறது.
வடமொழியில் மிகச் சிறந்த கவியாக விளங்கிய காளிதாசன் முருகனுடைய திருவவதாரத்தை ஒரு காவியமாகவே பாடியிருக்கிறான். அதற்குக் குமார சம்பவம் என்று பெயர். சுவை மலிந்த பிழம்பாக விளங்குவது அது.
ஆகமங்களுள் முருகவேள் வழிபாட்டைக் கூறும் தனிச் சிறப்பையுடையது குமார தந்திரம் என்பது.
பிற்காலத்தில் வேலுச்சாமிக் கவிராயர் என்பவர் கந்தபுராணத்தை வெண்பாக்களில் பாடினார். கந்தபுராண வெண்பா என்று அதன் பெயர் வழங்கும்.
முருகவேள் சூரசங்காரம் செய்து, இந்திரன் முதலிய தேவர் வேண்டத் தெய்வயானை அம்மையாரைத் திருமணம் செய்து கொண்ட வரலாற்றை மிக விரிவாக ஒரு புலவர் தமிழ்ச் செய்யுளாகப் பாடி யிருக்கிறார். அதற்குத் தெய்வயானையம்மை புராணம் என்று பெயர்.
அப்படியே வள்ளி நாச்சியார் வரலாற்றை ஒரு புலவர் வள்ளியம்மை புராணம் என்ற பெயரோடு பாடியிருக்கிறார். பிற்காலத்தில் வள்ளியம்மையார் திருமணத்தை நாடகமாகவும், கும்மியாகவும், ஒயிற் கும்மியாகவும் பாடியவர்கள் பலர். திண்ணைதோறும் ஊர்தோறும் அந்தப் பாடல்களை இசையும் தாளமும் பொருந்த யாவருடைய உள்ளத்தையும் கவரும் வண்ணம் பலர் பாடிவருவார்கள்.
இவற்றையன்றித் தமிழிலும் வடமொழியிலும் அமைந்த தலபுராணங்கள் பலவற்றிலும் முருகனுடைய வரலாறுகள் அமைந்து கிடக்கின்றன. ஆறு படைவீடுகளுள் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி என்னும் மூன்றுக்கும் தமிழில் புராணங்கள் உண்டு. குன்றுதோறாடல் பல தலங்களின் தொகுதி. அத்தொகுதியில் அடங்கிய மலைத்தலங்களில் திருத்தணிகை, மயிலம், குன்றக்குடி முதலிய பல தலங்களுக்குத் தனித்தனியே புராணங்கள் இருக்கின்றன. மலையல்லாத வேறு தலங்களிற் சிலவற்றுக்கும் புராணங்கள் உண்டு. இவற்றையன்றிச் சிவ புராணங்களிலும் சிவஸ்தல புராணங்களிலும் இடையிடையே முருகன் அருள் விளையாட்டுச் சிறப்பை விளக்கும் இடங்கள் பல. மதுரைப் புராணமாகிய திருவிளையாடற் புராணத்தில் முருகன் உக்கிர குமார பாண்டியனாகத் திருவவதாரஞ் செய்து நிகழ்த்திய திருவிளையாடல்கள் மிக விரிவாகச் சொல்லப் பெறுகின்றன. இப்படியே பிற புராணங்களில் வெவ் வேறு செய்திகள் வரும்.
தோத்திரவகையில் முருகனுக்கு அமைந்த புகழ் நூல்கள் பலப்பல. சங்ககாலத்து நூல்களிடையே வரும் துதிகள், திருமுருகாற்றுப்படை, உரையாசிரியர்கள் மேற்கோளாகக் காட்டும் பாடல்கள் என்பன பழமையுடையன. சைவத்திருமுறைகளில் ஒன்பதாந் திருமுறையாகிய திருவிசைப்பாவில் சேந்தனார் திருவிசைப்பா முருகனுடைய துதியாக அமைந்தது. பதினோராந்திருமுறையில் திருமுருகாற்றுப்படை சேர்ந்திருக்கிறது.
பிற்காலத்தில் கலம்பகம், கோவை, உலா, அந்தாதி, பிள்ளைத்தமிழ் முதலிய பிரபந்த வகைகள் பல முருகனுடைய புகழை விரித்து ஓதுகின்றன. அருணகிரிநாதப் பெருமான் திருவாய் மலர்ந்தருளிய திருப்புகழ் முதலிய அருமறை நூல்கள் எல்லாவற்றிற்கும் மேலாக மலையொளிர் பெருவிளக்கம் போலத் திகழ்கின்றன. கீர்த்தனங்கள், கண்ணிகள் முதலிய இசைப் பாடல்களிலும் நாடோடிப் பாடல்களிலும் முருகனைப் பற்றியவை பல.
இத்தனை நூல்களிலும் முருகனுடைய பிரபாவம் விரிகடல் போலப் பெருகி உள்ளது.
அவனுடைய அவதாரம், விளையாடல் முதலிய கதைகள் வருகின்றன. கந்தபுராணத்திற் காணாத பல சரித் திரங்களை வேறு நூல்கள் கூறுகின்றன. பழைய காலத்து நூல்கள் முருகனுடைய செய்திகள் பலவற்றைச் சொல்கின்றன. அவற்றைப் பிற்கால நூல்களிலே காண முடியவில்லை.
காலந்தோறும் அன்பர்கள் முருகனைப் பலபடியாகத் தியானித்து, பலபடியாகப் புகழ்பேசி, பலபல முறையில் வழிபட்டு, பலபல துதிகள் கூறிப் போற்றினார்கள். முருகனுடைய வழிபாடு பழமைக்குப் பழமையாய்ப் புதுமைக்குப் புதுமையாய் நிலவுகிறது.