கல் உருகும்
என்றும் இளையவனும் இணையில்லா அழகனு மாகிய முருகனை நாம் எப்போது காணப் போகிறோம்! அவன் திருமேனி அழகு முழுவதும் காணும் திறமை, உடம்பெல்லாம் கண்ணாகப் படைத்தாலும் உண்டாகாது. அவன் பாதத்தைக் கண்டாலே போதும். மனக் கவலையெல்லாம் போக்கி விடலாம். தனக்கு உவமை இல்லாத முருகனுடைய தாளை மனசினாலே தியானித்தால் கவலை தீரும்.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறாரல்லவா?
ஆதலின் மனசிலே முருகனுடைய பாத தாமரையைப் பதித்து விட்டால் எல்லாவிதமான கவலைகளும் போய்விடும். அது சரிதான்; ஆனால் அவனுடைய பாத தாமரை மனசிலே பதியுமா? அது தாமரை ஆயிற்றே. அலங்காரமும் அழகும் பொருந்திய அரவிந்த மலரல்லவா அவள் தாள்? நம் மனசோ கல்; திண்ணிதான கல்; கனமான கல். தாமரை நீரில் அல்லவா மலரும்? கல்லிலே மலருமா? அட கடவுளே! தாமரையைக் கல்லிலே முளைக்க ஒரு வழி வைத்திருக்கக் கூடாதா? நீரிலேதான் அது மலர வேண்டும் என்ற நியதியை ஏன் வைக்க வேண்டும்?
தாமரை கல்லில் மலர வேண்டாமே! நெஞ்சு கல்லாக இருக்கிறதே, அதை மாற்றி நீர்ப் பொய்கையாகச் செய்துவிட்டால் என்ன?
தாமரை மலராத கல்லை வைத்துக் கொண்டு என்ன செய்வது?
திணியான மனோசிலை மீதுனதாள்
அணியார விந்தம் அரும்புமதோ
என்று அருணகிரிநாதரே ஏங்கிப்போனாரே. கல்லுக்குள்ளே வலிய கல்லாகிற நெஞ்சத்திலே அணி யார்ந்த சரணாரவிந்தம் அரும்புமா? இந்தக் கவலையை நீக்குவார் யார் ?
ஆம், நெஞ்சு கல்லாக இருப்பது மாறவேண்டும். நீராக மாறிவிடவேண்டும். கல்லைப் போலக் கட்டியாக இருக்கிற பனிக்கட்டி நீராக உருகவில்லையா ? பனிக்கட்டியாக இருக்கும் போது அது கட்டிப் பொருள்; உருகி விட்டால் நீர்ப்பொருள். அது மாதிரி நெஞ்சு திண்ணியதாக இருந்தால் கல். உருகிவிட்டால், நீராளமாக உருகிவிட்டால், முருக னுடைய அருணதள பாத பத்மம் மலரும் இடமாகி விடலாமே. ஆகவே பாத தாமரையைக் கல்லிலே பதிக்கும் வித்தையைத் தேடி அலைவதைவிட இந்தக் கல்லை உருக்கும் வித்தையை நாடலாமே !
“நெஞ்சக் கன கல்லும் நெகிழ்ந்துருக” என்று அருணகிரிப் பெருமான் வழிகாட்டி யிருக்கிறாரே. நெஞ்சமாகிய கனத்த கல்லும் நெகிழ்ந்து உருக வழி இருக்கிறது போல் இருக்கிறதே. சந்திரகாந்தக் கல் உருகுவதாகக் கேட்டிருக்கிறோம். சந்திரன் கடன் வாங்கும் தேசுடையவன். சூரியனிடத் திலிருந்து ஒளியை வாங்கிக் கொண்டு உதவுகின்றவன். அவனுடைய சின்னஞ் சிறிய ஒளியே ஒரு கல்லை உருக்குமானால் சோதியிற் பெரிய சோதியாகிய முருகனுடைய தேசு கல்லை உருக்காதா? நிச்சயமாக இந்த மனசாகிய கல் உருக வழி உண்டு. அப்படி உருகுவதற்குரிய தந்திரத்தை யார் சொல்லியிருக்கிறார்கள்? அருணகிரிப் பெருமானையே கேட்கலாமே.
‘இந்த மனசாகிய கல் திண்ணியது. ஆண்டவன் பாதமோ தாமரை. தாமரை கல்லில் அரும்பாது’ என்று அவர் சொன்னபோது பயந்து போனோம். ஆனால், ‘நெஞ்சக் கன கல்லும் நெகிழ்ந்துருகும்’ என்று கருணையோடு அவர் சொன்னதைப் படித்த போது கொஞ்சம் நம்பிக்கை உண்டாயிற்று.
‘நெஞ்சு உருகுமா? பாத தாமரை மலரும்படி நீரா குமா?’ என்று கேள்வி மேல் கேள்வி போட்டுப் பார்க்கலாம். ‘கருணைக்கு அருணகிரி’ என்று சொல்லுவார்களே; அவர் கருணை மிகுதியினால் நமக்கு ஒரு வழி காட்டட்டுமே !
ஓஹோஹோ ! முன்பே வழி காட்டியிருக்கி றாரே. அதை நாம் கவனிக்கவில்லையே! உருகுவதற்கு வழியைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அதற்காகத் தானம் கொடுக்க வேண்டாம். தவம் செய்ய வேண்டாம். காசு செலவு செய்ய வேண்டாம். “முருகன், குமரன், குகன்” என்று மொழிந்து கொண்டே இருந்தால் போதும். அந்தத் திருநாமங்களில் உள்ளத்தை ஈடுபடுத்தி வாயினால் மொழிந்தால் மனம் நெக்குவிடும். நெக்குவிட்டு உருகும். நெஞ்சு உருகினால் ஆண்டவன் அருள் செய்வான். அவன் பாத தாமரை நெஞ்சில் வந்து நிற்கும். அதாவது, அவனே உள்ளத் திருக்கோயிலில் வெளிப் பட்டு விளங்குவான்.
முருகன் குமரன் குகன் என்று மொழிந்து உருகும்
செயல்தந்து உணர்வுஎன்று அருள்வாய்
என்று அருணகிரி மாமுனிவர் முருகனைக் கேட்கிறார். முருகன், குமரன் குகன் என்று விடாமல் அன்போடு மொழிந்தால் உள்ளம் உருகும்; அப்போது நெஞ்சத்தின் கனம் நீங்கும்; திண்மை ஒழியும்; அது கல்லின் தன்மையை இழந்து நீரின் தன்மையை அடையும். அன்பினால் உருகிய உள்ளத் தடாகத்திலே இள முருகன் பாத தாமரை மலரும்; தாளாகிய அணியார் அரவிந்தம் அலரும்.
அதனால்தான் நம்முடைய பெரியோர்கள் இறைவன் திருநாமத்தை வாயாரப் பாடச் சொன்னார்கள். அவன் திருப்புகழை வாயாரப் பாடி ஆடச் சொன்னார்கள். “வாயாரத் தன்னடியே பாடும் தொண்டர் இனத்தகத்தான்” என்றும்,
“பற்பாவும் வாயாரப் பாடி ஆடிப் பணிந்தெழுந்து
குறைந்தடைந்தார் பாவம் போக்க கிற்பானை”
என்றும் அப்பர் சுவாமி கள் அருளிச் செய்திருக்கிறார். ஆகவே அவர்கள் காட்டிய வழியில் போனால் கல்லையும் கனிவிக்கும் வித்தையில் வல்லவராகி விடுவோம்.
முற்றும்.
★ ★ ★