மணியும் துகிரும்
உலக வழக்கில் சில பொருள்களைச் சேர்த்துச் சொல்லும் பொழுது இனம் பற்றிச் சேர்ப்பார்கள். சில பொருள்களைச் சேர்த்தே வழங்குவார்கள். பூவும் பிஞ்சும், காயும் கனியும், நெல்லும் புல்லும், வெற்றிலையும் பாக்கும், நீரும் நிழலும், உடையும் உணவும் என்பன போலப் பல தொடர்கள் உண்டு. அப்படி வரும் தொடர்களுள் முத்தும் பவளமும் என்பது ஒன்று.
முத்தும் பவளமும் கடலிலே உண்டாகும் பொருள்கள்; நவமணிகளில் சேர்ந்தவை. இந்த இரண்டையும் கோத்து அணியும் வழக்கம் உண்டு. அந்தக் கோவைக்கு இரட்டை மணி மாலையென்று பெயர். தமிழ்ப் பிரபந்த வகை ஒன்றுக்குக் கூட அப்பெயர் வழங்கும். முத்தும் பவளமும் கலந்தது போல ஒருவகை நடைக்கு “மணிப்பிரவானம் என்ற பெயர் உண்டு. திவ்யப் பிரபந்த வியாக்கியானங்களிலும், ஜைன நூல்கள் சிலவற்றிலும் இந்த மணிப் பிரவாள நடையைக் காணலாம். தமிழில் ‘மணிமிடை பவளம்’ என்று இந்தக் கூட்டுறவைச் சொல்லுவார்கள். அகநானூறு என்ற பழந்தமிழ் நூலின் ஒரு பகுதிக்கு ‘மணிமிடை பவளம்’ என்ற பெயரை அமைத்திருக் கிறார்கள். சில சமயங்களில் மணி என்பது வேறு மணியையும் குறிப்பதுண்டு.
பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய ஆயினும் தொடைபுணர்ந்து
அருவிலை நன்கலம் அமைக்குங் காலை
ஒருவழித் தோன் றியாங்கு
என்பது புறநானூற்றில் வரும் பாட்டு. “பொன், பவளம், முத்து, மாணிக்கம் ஆகியவை தூரத்திலே பிறப்பன ஆனாலும் ஆபரணம் செய்கையில் ஒன்றுபடுவது போல” என்று சொல்கிறார் புலவர். இங்கே துகிரும் முத்தும் சேர்ந்து வருகின்றன.
தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினதன் பருளால்
ஆசா நிகளம் துகளா யினபின்
பேசா அநுபூ திபிறந் ததுவே
என்பது கந்தர் அநுபூதியில் வரும் பாட்டு. இதில் முதல் அடியில் வள்ளியெம் பெருமாட்டியைச் சொல்கிறார் அருணகிரி நாதர்.
இப்போதுள்ளபடியே வைத்துப் பொருள் செய்தால், “ஆடையாக மணியையும் துகிலையும் புனைபவள் ” என்று முதலடிக்கு அர்த்தம் கொள்ள வேண்டும். தூசு, துகில் என்பன ஆடை விசேடங்கள். ஆடையாக மணியைக் கொள்வதென்பது வாழ்விலுள்ள வளப்பத்தைக் காட்டும். அன்றியும் தலைவியைக் காண வரும் தலைவன் தழை யாடையையும் மணி யாடையையும் கொடுப்பதாகப் புலவர்கள் பாடியும் இருக்கிறார்கள். ஆனால் துகிலைத் தூசாகப் புனைவாளென்பதில் சிறப்போ நயமோ இல்லை.
இதைக் கவனித்த சிலர் தூசா என்பதற்கு, ‘தூசு போக்காத’ என்று பொருள் செய்து, ‘சாணை யிடப்படாத மணியையும் துகிலையும் புனைவாள், என்று உரை எழுதினர்.
ஒரு பாடலைப் பலர் பாடஞ் செய்து சொல்வதனாலும், ஒன்றைப் பார்த்து மற்றொரு பிரதி செய்வதனாலும் பாட பேதங்கள் பல உண்டாகின்றன என்பது ஏடுகளைப் பற்றிய ஆராய்ச்சியுடையாருக்குத் தெரியும். படித்தவன் பாட்டைக் கெடுத்தான்; எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்” என்ற பழ மொழி, சில பாடபேதங்களால் மூலம் உருக்குலை வதை நோக்கி எழுந்தது.
“இந்தப் பாட்டின் முதலடி தவான பாட முடையதாகத் தோற்றுகிறது. மணியும் அதனோடு இனமொத்த துகிரும் சேர்ந்து வழங்குவதை இலக் கியத்தில் காண்கிறோம். இங்கும் தூசா மணியும் துகிரும் புனைவாள்” என்று இருப்பது பொருத்தமாகத் தோன்றுகிறது. இனமொத்த பொருளாக இருக்கும் பொருத்தம் ஒன்று. “யாவரும் ஆடை வேறு அணி வேறாக அணிவார்கள்; மணியும் பவளமும் அருமையாகக் கிடைப்பதனால் அவற்றை ஆபரணமாக அணிவார்கள். இப்பிராட்டிக்கு அவை எளிதிற் கிடைப்பன ஆதலால் அவற்றையே கோத்து ஆடையாக அணிகிறாள்” என்று வளப்ப மிகுதியைக் குறிக்கும் பொருட்சிறப்பும் இதனாற் கிடைக்கிறது. ஆகவே, ‘தூசா மணியும் துகிரும் புனைவாள்’ என்ற பாடமே பழைய பாடமாக இருந்திருக்க வேண்டுமென்று தோற்றுகிறது.