பழம் பழனி
கலியுக வரதனாகிய முருகவேள் இன்றும் அடியார்களிடத்தில் தன் அதிசய அற்புதத் திருவருளைக் காட்டி ஆட்கொள்ளும் நிகழ்ச்சிகள் பல உண்டு. அப்பெருமான் எழுந்தருளியுள்ள தலங்களில் பல அற்புத நிகழ்ச்சிகளைக் காணலாம். பழனித் தலத்தில் அடிக்கடி இத்தகைய நிகழ்ச்சிகள் நடை பெறுவதுண்டு. “அதிசயம் அநேகம் உற்ற பழநி மலை மீதில் நிற்கும் அழக” என்பது அருணகிரி நாதர் வாக்கு.
பழனியில் மலைமேல் தண்டாயுதபாணியின் திருக்கோயிலும், ஊருக்குள் தேவியருடன் உள்ள குமரன் ஆலயமும் இருக்கின்றன. மலையைப் பழனி யென்றும், ஊரிலுள்ள திருக்கோயிலை ஆவினன் குடியென்றும் வழங்குகின்றனர். இத் தலத்தில் வையாபுரி என்ற பெரிய தீர்த்தம் ஒன்று இருக்கிறது.
பழனியென்பது பழம் நீ என்பதன் திரிபென்று பழனித்தல புராணம் கூறுகிறது. நாரதர் கொடுத்த பழத்தைத் தனக்குச் சிவபெருமான் வழங்காமையால் சினங்கொண்ட செவ்வேள் இம்மலையில் வந்து நின்றான்; சிவபிரானும் தேவியும் இங்கே எழுந் தருளி, “பழம் நீ ஆக இருக்கையில் உனக்கு வேறு பழம் எதற்கு?” என்று கூறி அன்பு பாராட்டினர்; அவர்கள் கூறிய, “பழம் நீ ” என்ற தொடரே இதற்குப் பெயராகிப் பின்பு அது குறுகிப் பழநி என்று ஆயிற்று. இது பழனித் தலபுராணக் கதை.
திருவாகிய லக்ஷ்மியும் ஆவாகிய காமதேனுவும் இனனாகிய சூரியனும் பூசித்தமையால் திருவாவினன் குடி என்ற பெயர் வந்ததாகப் புராணம் கூறுகிறது.
பழனிக்குச் சித்தன் வாழ்வு என்ற பெயர் உண் டென்று, திருமுருகாற்றுப் படைக்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையினால் தெரியவருகிறது. சித்தன் என்பது முருகக் கடவுளுடைய பெயர்களுள் ஒன்று.”சித்தன் வாழ்வு, இல்லந் தொறுமூன் றெரி யுடைத்து” என்று, ஒளவையார் பாடிய பாட் டொன்றில் வருகிறது. அதனால் அங்கே அந்தணர் அதிகமாக முற்காலத்தில் இருந்தனரென்று தெரிய வருகின்றது. இவை பிற்காலத்தில் புராண வாயிலாகவும் பிறவாறும் வழங்கிவரும் செய்திகள்.
தமிழில் உள்ள பழைய நூல்களால் இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்பும் முருகனுடைய வழிபாடு மிகச் சிறப்பான நிலையில் தமிழ்நாட்டில் நிகழ்ந்து வந்தது என்று தெரிந்து கொள்ளலாம். நக்கீரர் தாம் பாடிய திருமுருகாற்றுப் படையில், முருகன் எழுந்தருளியிருக்கும் இடங்களையெல்லாம் எடுத்துச் சொல்கிறார். அவர் கூறிய தலங்களே ஆறுபடை வீடுகள் என்று பிற்காலத்தில் வரையறை யாக வழங்கலாயின. திருப்பரங்குன்றம், திருச்சீரலை வாய், திருவாவினன்குடி, திருவேரகம், குன்று தோறாடல், பழமுதிர்சோலை மலை என்ற வரிசையில் அந்த ஆறு படைவீடுகளையும் பெயரிட்டு வழங்குவர். இவற்றில் மூன்றாவதாக வருவது ஆவினன் குடி.
2
அக்காலத்தில் சேரசோழ பாண்டியர்கள் செங்கோல் செலுத்தி வந்தனர். அவர்களை அன்றி அங்கங்கே சிற்றரசர்கள் பலர் சிறு சிறு நாடுகளை ஆண்டுவந்தனர். வேளிர், குறுநில மன்னர் என்று அவர்களை வழங்குவர். அவர்களுக்குள் பேகன் என்பவன் ஒருவன். தம்பால் வந்தவர்களுக்கு அளவில்லாமல் பொருளை வழங்கும் வள்ளல்களில் ஏழு பேர் மிக்க புகழ் உடையவர்கள். அவர்களைக் கடையெழு வள்ளல்கள் என்று பிற்காலத்தில் வழங்கினார்கள். அந்த ஏழு பேர்களில் பேகனும் ஒருவன். மாரிக் காலத்தில் ஒரு மயில் தோகையை விரித்து ஆடும் போது சற்று உடல் சிலிர்க்கவும், அது குளிரால் நடுங்கியதென்று கருதித் தன் மேல் போர்த்திருந்த விலையுயர்ந்த போர்வையை அதன் மேலே போர்த்தின அருளாளன். அவன் மயிலுக்குப் போர்வை அளித்த இந்தச் செய்தியைப் புலவர்கள் பலபடப் பாராட்டியிருக்கிறார்கள்.
இந்தப் பேகனுடைய முழுப்பெயர் வையாவிக் கோப்பெரும் பேகன் என்பது. ஆவியர் என்னும் குலத்திலே பிறந்தவன் அவன். அந்த ஆவியர் குலத் தினர் தமக்குத் தலைநகராகக் கொண்ட ஊரே ஆவினன்குடி. ஆவிக்கு நல்ல ஊராக இருப்பது என்பது அதன் பொருள். ஆவிநன்குடி என்பதே ஆவினன் குடி ஆகிவிட்டது. ஆய் என்ற வள்ளல் இருந்த ஊருக்கு ஆய்குடி என்ற பெயர் வந்ததைப் போன் றது இது.
ஆவி வைகும் இடம் ஆதலின் வைகாவியூர் என்ற பெயரும் இதற்கு அமைந்தது. அதுவே நாள் டைவில் வைகாவூர் என்றும், வையாவிபுரி என்றும், வையாபுரி என்றும், வையாவி என்றும் மாறி வழங்கியது. வையாவிக்குத் தலைவன் பேகன்; ஆகவே அவனை வையாவிக் கோ எனப் புலவர் கூறினர். ஆவியர் குலத்தில் வந்தவனாதலின் ஆவியர் கோமான் என்று பாராட்டினர்.
ஆவினன் குடியாகிய வையாபுரியைத் தலைநகராக உடைய நாட்டுக்கு வையாபுரி நாடு என்று பெயர். கொங்கு நாட்டைச் சேர்ந்த பல சிறு நாடு களில் வையாபுரி நாடும் ஒன்று; அதனை ஆவினன் குடி நாடு என்றும் சொல்வதுண்டு.
“வல்லமை செறிந்ததிரு வாவினன் குடிநாடு” என்பது கொங்குமண்டல ஊர்த்தொகை என்னும் நூலில் வரும் பகுதி.
சேரர் கொங்குவை காவூர் நன் னாடதில்
ஆவி னன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே
என்ற அருணகிரி நாதர் திருவாக்கில் இந்த நாடு வைகாவூர் நாடு என்று குறிப்பிடப் பெற்றிருக்கிறது. கொங்கு மண்டல சதகம், பேகன் இருந்து அரசாண்ட இடம் வையாபுரி என்று சொல்லும்.
கையாரக் கான மயிலுக் கிரங்கிக் கலிங்கம் அருள்
செய்ஆண் டகைகரு ணைக்குவைப் பாகத் திகழ்தரும் அவ்
வையாவிக் கோப்பெரும் பேகனெனும்பெருவள்ளல்
தங்கு வையா புரியெனும் கோ நக ருங்கொங்கு மண்டலமே.
ஆவினன்குடி முருகனது படை வீடுகளுள் ஒன்று. அந்த ஊரைத் தன் தலைநகராகக் கொண்ட பேகனுக்கு முருகவேளிடத்தில் சிறந்த பக்தி இருப்பது இயல்பே. ஆவியர் குடிக்கெல்லாம் குலதெய்வமாக முருகன் விளங்கினான் என்று கொள்வதிலும் தவறு இல்லை. பக்தர்களுக்குத் தம்முடைய வழிபடு கடவுளோடு தொடர்புடைய பொருள்களிடத்திலெல்லாம் அதிக அன்பு இருப்பது இயற்கை. முருகன் அடியார்களுக்கு வேல், மயில் என்ற இரண்டினிடத்தி லும் அளவற்ற அன்பு உண்டு. ‘வேலும் மயிலும் ‘ என்பதையே மந்திரம் போல உச்சரித்து இன்புறுவார் பலர்.
மலைச்சாரலில் வானம் சிறு துளி துளிப்பதைக் கண்டு தோகை விரித்து ஆடியது மயில். அதன் அழகிய தோற்றத்திலே ஈடுபட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான் பேகன். முருகனுக்கு ஊர்தியாக விளங்கும் மயிலினது நடனம் அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. மயில் தோகையை விரித்து நிற்கும் போது, அடிக்கடி சலார் சலார் என்ற ஒலி தோன்றச் சிலிர்க்கும். இது அந்தப் பறவைக்கு இயல்பு. பேகனும் அந்தச் சிலிர்ப்பைக் கண்டான். அதைக் கண்டு குளிரினால் நடுங்குகிறதோ என்ற ஐயம் அவனுக்கு உண்டாயிற்று. மழைத் துளி துளிப்பதனால் அந்த எண்ணம் உண்டாயிற்று. ஆண்டவனது வாகனமாக உள்ள மயில் நடுங்குவது தகுமோ என்று அவன் உள்ளம் எண்ணியது. கருணையும் முருகனது அன்பும் இடம்பெற்ற உள்ளம் அது. உடனே தன்மேல் போர்த்திருந்த விலையுயர்ந்த போர்வையை எடுத்து மயிலுக்குப் போர்த்து விட்டான். ‘இந்த மயில் இதை உடுத்துக் கொள்ளுமா? போர்த்துக் கொள்ளுமா?’ என்று அவன் யோசிக்கவில்லை. அது அதனைப் பயன்படுத்திக் கொள்ளாது என்பதை அவன் பிறகு உணர்ந்திருப்பான். ஆயினும் அந்தக் கணத்திலே பக்திபரவசத்தால் போர்வையை அளித்தான்.
உடாஅ போரா ஆகுதல் அறிந்தும்
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்
என்று அவனைப் பரணர் என்ற புலவர் பாராட்டுகிறார்.
3
பழனி என்பது மலையின் பெயர். அதன் பழம் பெயர் பொதினி. பொதினியே மாறிப் பழனி என்று ஆகி யிருக்கலாம். முடிமன்னர்களையும், குறுநில மன்னர்களையும் புலவர்கள் பாராட்டிப் பாடும்போது அவர்களுக்குரிய சிறப்பையும், அவர் நாட்டுக்குள்ள சிறப்பையும் சொல்வார்கள். ஊர், மலை, ஆறு என்னும் இவற்றைச் சார்த்தியும் பாராட்டியும் புகழ்பாடுவார்கள். அப்படிப் பாடும் வகையில் ஆவியர்குடிக்கு உரியது பொதினி என்னும் மலை என்று தெரியவருகிறது.
நெடுவேள் ஆவி
அறுகோட் டியானைப் பொதினி,
முழவுறழ் திணிதோள் நெடுவேள் ஆவி
பொன்னுடை நெடுநகர்ப் பெர்தினி
என்று மாமூலனார் என்னும் புலவர் பொதினியை ஆவிக்குரிய மலையாகப் பாராட்டுகிறார். வேறு சில இடங்களில் பேகனைப் ‘பெருங்கல் நாடன் பேகன்’ என்று புலவர்கள் குறித்துச் செல்கின்றனர். ‘பெரிய மலையையுடைய நாட்டுக்குத் தலைவன் பேகன்’ என்பது அதன் பொருள். பெருங்கல் என்பது. பொதினி மலையைக் குறிப்ப தென்றே கொள்ளலாம்.
ஆவினன் குடியாகிய ஊரும், பொதினியாகிய மலையும் பேகனுக்கும் அவன் குலத்தினருக்கும் உரியன. பேகனை, முருகனைப்போலப் போர்புரியும் திறலுடையவன் என்று பாராட்டுகிறார் ஒரு புலவர்.
ஆவினன்குடியில் முருகன் திருக்கோயில் பழங்கால முதலே இருக்கிறதென்பதற்குத் திருமுருகாற்றுப்படை முதலிய நூல்கள் சான்று பகர்கின்றன. ஆனால் பொதினியாகிய பழனிமலையில் முருகனுக்கு ஆலயம் இருந்ததா? அதைப்பற்றிய குறிப்பு ஏதாவது பழைய நூல்களில் உண்டா?-இத்தகைய கேள்விகளுக்கு விடையளிப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். சில ஆராய்ச்சிக்காரர்கள் பழனி மலைக் கோயில் பிற்காலத்த தென்றும், திருவாவினன்குடியே பழங்காலத்தில் இருந்ததென்றும் சொல்வதுண்டு. ஆவினன் குடியைப் போலவே பொதினியாகிய பெருங்கல்லிலும் முருகன் இருந்து மக்களைப் பாதுகாத்தான் என்பதற்குரிய குறிப்புக் கள் சங்க காலத்து நூல்களில் இருக்கின்றன. அவற்றைப் பார்க்கலாம்.
பெருஞ்சித்திரனார் என்ற புலவர் பாடிய செய்யுள் ஒன்றில் பாரி முதலிய ஏழு வள்ளல்களைப்பற்றி அவர் சொல்கிறார். சிறப்புடைய மலையை யார் பெற்றிருக்கிறார்களோ, அவர்களைப் பற்றிச் சொல்லுகையில் அந்த மலையையும் சொல்கிறார். பாரியின் பறம்பு மலையையும், ஓரியின் கொல்லி மலையையும், எழினியின் குதிரை மலையையும் சொல்லியிருக்கிறார். பேகனைப் பற்றிச் சொல்லும் போதும் பெரிய மலையை யுடைய நாடன் என்கிறார். மலையின் பெயரைச் சொல்லவில்லை. ஆனால் அந்த மலையைப் பற்றிச் சில செய்திகள் சொல்கிறார்.
ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கும் நளிமுழை
அருந்திறற் கடவுள் காக்கும் உயர்சிமைப்
பெருங்கல் நாடன் பேகனும்
என்று பேகனைப் பற்றிச் சொல்கிறார். “மிகக் குளிர்ந்த மலைப்பக்கத்தில் இருள் செறிந்த பெரிய குகைகளையுடையதும், பிறரால் வெல்லுவதற் கரிய திறலையுடைய தெய்வம் காக்கும் உயர்ந்த உச்சியை யுடையதும் ஆகிய பெரிய மலைக்கு உரிய நாடனாகிய பேகனும்” என்பது இதன் பொருள்.
அவனுடைய மலை தனி மலை; மலைத்தொடர் அன்று; சிறு குன்றும் அன்று. ஆகவே அதைப் பெருங்கல் என்றார். அதன் உச்சியிலே தெய்வம் நின்று காக்கிறது என்றும் சொல்கிறார். அருந் திறற் கடவுள் என்று அக்கடவுளைப் பாராட்டுகிறார்.
சிறுபாணாற்றுப்படையில், “அருந்திறல் அணங் கின் ஆவியர் பெருமகன், பெருங்கல் நாடன் பேக னும்” என்று பேகன் பாராட்டப் பெறுகிறான்.
“அரிய திறல்பெற்ற தெய்வத்தை உடைய ஆவியர் பெருமகன்” என்று அவனுடைய குலதெய்வம் குறிக்கப்பெறுகிறது. அருந்திறற் கடவுளும் அருந்திறல் அணங்கும் ஒருவரே.
அந்தக் கடவுள் யார்? மலைமேல் இருக்கும் கடவுள், ஆவியர் குல தெய்வம் ஆகிய முருகன்தான். பெருங்கல்லாகிய பொதினியில் நின்று அந்த மலை யையும், அது உள்ள வைகாவூர் நாட்டையும், அதனை யுடைய ஆவியர் குலத்தையும் காப்பாற்றி அருள் செய்பவன் முருகன் என்று அறிந்துகொண்டோம். ஆகவே பொதினி யாண்டவனாகிய பழனியாண்டவன் புதியவன் அல்ல, பழையவனே என்றுதானே முடிவு கட்டவேண்டும்?
கபிலர் என்னும் புலவர் பேகனை ஒருபாட்டில் (புறநானூறு, 143) பாராட்டுகிறார். அவனையும் அவன் மலையையும் பாடினதாகச் சொல்கிறார். “நின்னும் நின் மலையும் பாட” என்று கூறுகிறார். அவன் மலை யாகிய பொதினியைப் பாடுவதில்
புலவருக்கு ஆனந்தம். அந்த மலையில் நிகழும் அதிசயத்தை அந்தப் பாட்டிலே சொல்கிறார்.
குறிஞ்சிநிலத் தெய்வம் முருகன். அந்த நிலத்து மக்கள் குறவர். பேகனது நாட்டிலுள்ள குறவர், மழை இல்லையெனில் உடனே பொதினி ஆண்டவனுக்குப் பூசை போடுவார்கள். மலர் தூவி வணங்குவார்கள். ஆண்டவன் கருணையால் மழை பொழியும்; என்பதில் வருணனை அணங்கென்று புலவர் சொல்கிறார்
அதிகமாகப் பொழியும். அளவுக்கு மிஞ்சி மழை பொழிந்தாலும் கெடுதல் தானே? ஆகவே முன்பு மழைவேண்டுமென்று பூசைபோட்ட அந்தக் குறவர் மாக்களே இப்போது, மழை நிற்கட்டும் என்று பொதினி ஆண்டவனைப் போற்றி வழிபடுகிறார்கள். மழை நின்று விட்டது. அதனால் மிக்க மகிழ்ச்சியை அடைந்த அக்குறவர் புனத்திலே விளைந்த தினையைப் பொங்கி விருந்து அயர்கிறார்கள்.
மலைவான் கொள்கென உயர்பலி தூஉய்
மாரி ஆன்று மழைமேக்கு உயர்கெனக்
கடவுட் பேணிய குறவர் மாக்கள்
பெயல்கண் மாறிய உவகையர், சாரல்
புனத்தினை அயிலும் நாட.
[வான்கொள்க-மழையைப் பெறுக. பலி – பூசைக்குரிய பண்டங்கள். ஆன்று-நின்று. மழை -மேகம். மேக்கு – மேலே. பெயல் கண் மாறிய-மழை வேறிடத்துக்குச் சென்றதனால் உண்டான. அயிலும் – உண்ணும்.]
குறவர் மாக்கள் வணங்கும் கடவுள் முருகன் தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?
பொதினி ஆண்டவனுக்குக் கோயிலும் அக் காலத்தில் இருந்தது. பொன்பொதிந்த திருக்கோயி லென்றுகூடத் தோன்றுகிறது.
ஆவி, பொன்னுடை நெடுநகர்ப் பொதினி
என்ற அகநானூற்றுப் பாட்டில் (61) ஆவிக்குரிய பொதினியில் ‘பொன்னுடைய உயர்ந்த கோயில்’ இருந்ததை மாமூலர் சொல்கிறார். நெடுநகர் என்பது உயர்ந்த கோயில் என்ற பொருளை உடையது,
முக்கட் செல்வர் நகர் (புறநானூறு)
பூமுடி நாகர் நகர் (பரிபாடல்)
என்று கோயிலை நகர் என்ற சொல்லாலே பழங் காலத்துப் புலவர்கள் குறித்தார்கள். ஆவியினது பொதினி, பொன்னுடை நெடுநகரையுடைய பொதினி என்று கூட்டி அர்த்தம் செய்யவேண்டும். பொன் என்பது தங்கத்தையே குறிக்கவேண்டும் என்பது இல்லை. எல்லா வகை உலோகங்களையும் பொன் என்று குறிப்பது தமிழ் மரபு.
இங்கே, பொதினியில் ஒரு கோயில் இருந்த தென்பது குறிக்கப்படுகிறது. அந்தக் கோயில் முருகவேளுடைய கோயிலே என்று முன்னே சொன்ன செய்திகளைக் கொண்டு முடிவு கட்டலாம்.
ஆகவே, பழனியாண்டவனும் பழம்புலவர் களாற் பாராட்டப் பெற்றவனென்பதும், அற்புத நிகழ்ச்சிகளை அருளால் நடக்கச் செய்கிறவன் என்பதும், அவனுக்கு ஒரு கோயில் பொதினியின் உச்சியில் இன்று போலவே அன்றும் இருந்தது என்பதும், ஆவியர் குடிக்கெல்லாம் குலதெய்வமாக ஆண்டவன் விளங்கினானென்பதும், கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய பேகன் முருகன் அடியானென்பதும் பழைய நூல்களில் உள்ள குறிப்புக்களால் தெரிந்து கொள்ளலாம்.