வடநாட்டு முருகன்
புனாவில்
புனாவில் உள்ள கலைக்கழகத்தார் நடத்திய தமிழ் விழாவுக்குப் போயிருந்தேன். ஐந்தாறு நாட்களுக்குமேல் தங்கியதால், அருகில் உள்ள காட்சிகளைக் காண எண்ணினேன். முக்கியமாகத் தலங்கள் எவையேனும் இருந்தால் பார்க்கவேண்டுமென்று விரும்பினேன். புனாவை அடுத்து ஒரு மலை இருக் கிறதென்றும்,அங்கே சிவபெருமான் திருக்கோயில் ஒன்று இருக்கிறதென்றும் சொன்னார்கள். அன் பர்களுடன் அந்த மலையைத் தரிசிக்கப் போனேன்.
மலையின் பெயர் ‘பார்வதி மலை’ என்பது. பர்வதம் என்று இருந்து, அது மகாராஷ்டிரத்தில் பர்வத் என்றாகி அதனோடு பர்வத்மலை என்று ஆயிற்றாம்; அதுவே பார்வதி மலை என இப்போது மாறி வழங்கு கிறதென்றார்கள். நம்முடைய நாட்டிலும் நீலகிரி மலை என்று கிரியையும் மலையையும் சேர்த்துச் சிலர் வழங்குகிறார்களே, அப்படிப் பர்வதத்தையும் மலையையும் ஒற்றிக்கு இரட்டியாகச் சேர்த்து வழங்கு கிறார்கள்.
மலையின்மேல் ஏறினோம். பத்துப் படிக்கட்டுகளுக்கு ஒரு முறை படி அகலமாக இருக்கிறது. மகாராஷ்டிர அரசர்கள் ஆண்ட காலத்தில் அவர் கள் குதிரைமீது ஏறியபடியே இந்த மலையின்மேல் ஏறுவார்களாம். குதிரை ஏறுவதற்காகவே இப்படி இடையிடையே படி அகலமாக இருக்கிறதாம். மலை யின்மேல் உள்ள கோவிலுக்குத் தேவதேவேசன் கோயில் என்று பெயர். அந்தத் திருநாமத்தைக் கேட்டதும் எனக்குத் திருவாசகத்தில் உள்ள, தேவர்கள் அறியாத தேவ தேவன், திருப்பெயராகவும் என்ற அடிகள் நினைவுக்கு வந்தன.
மலையின்மேல் ஏறினோம். அங்கே விநாயகர், சூரியன், அம்பிகை, திருமால், சிவபெருமான் ஆகியவர்களுக்குத் தனித்தனியே கோயில்கள் இருந்தன. சிவபெருமான் லிங்கத் திருமேனியோடு இருந்தார். கோயிலில் யார் வேண்டுமானாலும் உட்சென்று இறைவனைத் தீண்டிப் பூசை செய்யலாம். அந்த ஊருக்கு வழக்கமான கொட்டு முழக்குகள் இருந்தன. கோயிலோ, விக்கிரகமோ கொட்டு முழக்கோ எதுவும் எங்கள் உள்ளத்தைக் கவரவில்லை. வான ளாவிய கோபுரமும் சிற்பவேலைப்பாடும் உள்ள தமிழ்நாட்டுக் கோயில்களைக் கண்ட கண்களுக்கு வடநாட்டுக் கோயில்களைக் கண்டால் மதிப்பே உண்டாகாது. விக்கிரகங்களும் அத்தகையனவே.
அங்கே முருகன் திருக்கோயிலும் உண்டென்று சொன்னார்கள். முருகனை வடநாட்டார் கார்த்திகேயர் என்ற பெயராலேயே வழங்குவார்கள். ‘கார்த்திக்’ கோயிலுக்கு ஆர்வத்தோடு போனேன். மயில்மீது எழுந்தருளிய திருக்கோலத்தில் ஆறுமுக மூர்த்தியாகக் கார்த்திகேயர் எழுந்தருளியிருந்தார். பளிங்கினால் அமைந்த திருவுருவம். தரிசனம் பண்ணிக் கொண்டிருந்தபோது, என்னுடன் வந்த நண்பர், இங்கெல்லாம் முருகன் கோயிலில் ஒரு விசேஷம் உண்டு; தெரியுமா?” என்று கேட்டார்.
”தெரியாதே!” என்றேன்.
“நம்முடைய நாட்டில் பாமரர்கள் பிள்ளையாரைப் பற்றி ஒரு கதை சொல்வார்களே; அதுபோல இங்கே கார்த்திகேயரைப் பற்றி ஒரு கதை சொல் கிறார்கள். பிள்ளையார் பிரம்மசாரியென்றும், தம்முடைய அம்மாவைப் போன்ற அழகுடைய பெண் யாராவது கிடைத்தால் கல்யாணம் பண்ணிக்கொள் வாரென்றும், அப்படி ஒரு பெண்ணைப் பார்க்கத் தான் தீர்த்தக்கரைகளிலும் மரத்தடியிலும் அவர் எழுந்தருளி யிருக்கிறாரென்றும் நம் நாட்டில் ஒரு கதை வழங்குகிறது. இங்கேயோ கார்த்திகேயர் பிரம்மசாரி. அவருக்கு இன்னும் கல்யாணமே ஆக வில்லையாம். யாராவது பெண் அவரைத் தரிசனம் செய்தால் உடனே அவளை அவர் பற்றிக்கொள்வாராம். ஆகையினால் கார்த்திகேயரைப் பெண்கள்வந்து தரிசிப்பதே இல்லை” என்று நண்பர் சொன்னார்.
“முருகனையா பெண்கள் தரிசிப்பதில்லை ?” என்று வியப்புடன் கேட்டேன்.
”ஆம்; இங்கே மாத்திரம் அல்ல; வடநாட்டில் பல இடங்களில் அப்படித்தான்” என்று அவர் சொன்னார்.
அப்போது என் கற்பனை வேலை செய்தது. “தமிழ்நாட்டு வள்ளிநாயகியைக் கண்ட கண்களால் இந்த நாட்டு மடந்தையரைப் பார்க்க விரும்ப வில்லையோ?” என்ற வினாவை என் உள்ளம் எழுப்பியது. இக் கருத்தை அமைத்து ஒரு பாடல் பாடினேன்.
புண்ணியமா நகர்தன்னில் ஓங்கும் குன்றில்
பொலிகின்ற தேவதே வேசன் கோயில்
நண்ணியொளிர் ஆறுமுகத் தேவே மஞ்ஞை
நற்பரிமீ தமர்ந்தருளும் கார்த்தி கேயா
பெண்ணினத்தில் தமிழ்நாட்டு வள்ளி தன்னைப்
பெட்புற்றுப் பார்த்ததிரு விழியால் ஈங்கே
அண்ணுமடந்தையர்தம்மைப் பாரே னென்னும்
அதனாலோ அவர்பாராத் தெய்வம் ஆனாய்?
என்ன காரணத்தால் பெண்கள் முருகனைத் தரிசிப்பதில்லையோ, யான் அறியேன். ஆனால் நான் இந்தப் பாட்டைப் பாடினவுடன் என் நண்பர்களாகிய தமிழர்கள், “மிகவும் பொருத்தமாக இருக்கிறது” என்றார்கள். பொருத்தமோ, பொருத்தம் இல்லையோ, அவர்கள் கட்டிவிட்ட கதைக்கு என் கற்பனை தாழ்ந்தது அன்று என்றே சொல்வேன்.
பம்பாயில்
புண்ணியமா நகரமாகிய புனாவிலிருந்து பம்பாய்க்குச் சென்றேன். அங்கே தமிழர்கள் ஆயிரக் கணக்கில் இருக்கிறார்கள். முன்பு ஒரு முறை போயிருந்தபோது யுத்தகால மாகையால், அந்நகரில் இருந்த மியூஸியத்தை மூடியிருந்தார்கள். இம்முறை அதைத் திறந்திருந்தார்கள். பல அருமையான பண் டங்களைத் தொகுத்துவைத்திருக்கும் இடமாகையால் போய்ப் பார்க்கவேண்டும் என்ற அவா உண்டா யிற்று. அன்பர்களுடன் சென்றேன். சிந்துவெளியில் மொகெஞ்சதடோவிலிருந்து அகழ்ந்தெடுத்த பொருள்கள் சிலவற்றை அங்கே கண்டேன். ஓவியப் பகுதி, மரவகை, விலங்கினம் ஆகிய பகுதிகளைப் பார்த்துவிட்டுச் சிற்பப்பகுதிக்கு வந்தேன். உலோக விக்கிரகங்கள் உள்ள பகுதிக்கு வந்து ஒவ்வொரு விக்கிரகமாகப் பார்த்தேன்.
ஒரு விக்கிரகத்தின் மேல் ‘விஷ்ணு’ என்ற பெயரை ஒட்டியிருந்தார்கள். இருமருங்கும் தேவியர் உடன் வீற்றிருக்க நடுவே கடவுள் அமர்ந்திருந்தார். நான் கூர்ந்து கவனித்தேன். திருக்கரங்களில் சங்கில்லை, சக்கரம் இல்லை; ஆனால் வச்சிராயுதம் இருந்தது. “இது முருகன் திருவுருவம்” என்று சொன்னேன்.
“அது எப்படிச் சொல்லலாம்? இந்தத் துறையில் பழக்க முள்ளவர்கள் இதைப் பார்த் தறிந்து விஷ்ணு என்றல்லவா எழுதியிருக்கி றார்கள்?” என்று அன்பர்கள் கேட்டனர்.
இது திருமால் உருவம் அன்று என்பது நிச் சயம். முருகன் பிரம்மசாரி என்ற நினைவில் ஊறிப் போயிருக்கும் வடநாட்டாருக்கு, இரு மனைவியருடன் இருக்கும் கடவுள் திருமாலையன்றி வேறு இல்லை என்ற நினைவுதான் இருக்கும். இரு தேவியரைக் கண்டவுடனே மற்றவற்றை ஆராயாமல் மகா விஷ்ணு என்று போட்டுவிட்டார்கள் என்று சொல்லிக் கொண்டே வந்தேன்.
என் கண்கள் அந்த விக்கிரகத்தின் மேலும் கீழும் சென்றன. திடீரென்று, “இதோ, இதோ! எனக்குத் தக்க சாட்சி கிடைத்துவிட்டது” என்றேன்.
அன்பர்கள் ஆவலோடு பார்த்தார்கள். அந்த மூர்த்தி எழுந்தருளியிருக்கும் பீடத்தில் மயிலின் உருவம் பொறித்திருந்தது. “மயில்வாகனத்தின் மீது எழுந்தருளியிருப்பதாகப் பாவம்; மயில் வாகனக் கடவுள் முருகனா? திருமாலா?” என்று வெற்றி மிடுக்குடன் நான் கேட்டேன். அந்த வாகனத்தைக் கருடன் என்று சொல்ல இடமில்லை; மயிலின் தோகை நீளமாக இருந்தது; ஆதலின் மயில் என்று தெளிவாகத் தெரிந்தது.
வடநாட்டுக் கார்த்திகேயராக இருந்தால் மியூஸியத்து அதிகாரிகள் தெரிந்து குறித்திருப்பார்கள். இதுவோ இரண்டு தேவிமாருடன் அமர்ந்த முருகனாக இருத்தலின் அவர்களுக்குத் தெரியவில்லை.
வங்காளத்தில்
ராமகிருஷ்ண பரமஹம்சருடைய உபதேசங் களைப் படித்துக் கொண்டிருந்தேன். அந்த மெய்ஞ் ஞானி அரிய விஷயங்களை யெல்லாம் இனிய உப மானக் கதைகளைக் கூறி விளக்குகிறார். பல புராணக் கதைகளையும் எடுத்துரைக்கிறார். அப்படி அவர் கூறியுள்ள கதைகளில் கார்த்திகேயரைப் பற்றிய கதையும் ஒன்று.
‘நான் எல்லாப் பெண்களையும் பராசக்தியாகவே பாவிக்கிறேன். ஒரு சமயம் கார்த்திகேயர் ஒரு பெண் பூனையோடு விளையாடிக் கொண்டிருந்தார். அதன்மேல் அவர் கை நகம் பட்டுக் காயமாகிவிட் டது. பிறகு அவர் தம் அன்னையைத் தரிசித்தார். அன்னையின் திருமேனியில் நகத்தால் கீறிய காயம் இருப்பதைக் கண்டார். “இது என்ன?” என்று கேட்ட போது. “நீ விளையாட்டில் கீறின காயம்” என்று பராசக்தி உரைத்தாள். அதைக் கேட்டவுடன் கார்த்திகேயருக்கு வருத்தம் உண்டாகி விட்டது. ”பெண் இனம் முழுதும் என் அன்னையின் உருவம் என்பதை இதுவரையிலும் அறிய வில்லையே! நான் யாரையும் மணம் செய்துகொள்ளப் போவதில்லை. உலகத்துப் பெண்கள் யாவரும் என் அன்னையின் ஸ்வரூபமாக இருக்கும்போது, எனக்கு மனைவி எங்கே அகப்படுவாள்?” என்று எண்ணிப் பிரம்மசாரியாகவே இருந்துவிட்டார்.’
இவ்வாறு பரமஹம்ஸர் ஒரு கதை சொல்லு கிறார். இதனால், வங்காளத்திலும் கார்த்திகேயரைப் பிரம்மசாரியாகவே எண்ணுகிறார்கள் என்ற செய்தி தெரிய வருகிறது.
“நீலச்சிகண்டியில் ஏறும் பிரான், எந்த நேரத்திலும் கோலக் குறத்தியுடன் வருவான்”” என்று அருணகிரிநாதப் பெருமான் பாடுகிறார். வடநாட்டுக் குப் போகும்போது மாத்திரம் தனியாக, பிரம்மசாரி யாகப் போவான் போலும்!
காலத்துக்குக் காலம் முருகனைப் பற்றிய வரலாறுகள் வேறுபடுவது போலவே, இடத்துக்கு இடங்கூட வேறுபடுகின்றது.