எது சரி?

முருகக் கடவுளைப் பாடிய புலவர்களில் பலரை நாம் மறந்து விட்டோம். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று: அவர்கள் பாடிய பாடல்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து வழங்கவில்லை.

இடைக் காலத்தில் அவர்கள் பாடிய பாடல்களைக் கவனிப் பாரே இல்லாமற் போயினர். கடைச் சங்க காலத்து நூல்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்பவற்றில் அப் பாடல்கள் உள்ளன. அவற்றைப் படியாமல் பாடஞ்சொல்லாமல் இடையிலே சில காலம் தூங்கிக் கொண்டிருந்தார்கள். இறைவன் திருவருளால் மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் தோன்றிச் சங்க நூல்களை மீட்டும் உருவாக்கித் தமிழுலகத்துக்கு வழங்கினார்கள். அவர்களுடைய பெரு முயற்சியால் அந்தப் பழம் பாடல்களைத் தமிழ்நாடு முழுவதும் இன்று படித்து இன்புறுகிறது.

அந்தப் பாடல்களின் நடைக்கும் பிற்காலக் கவிகளின் நடைக்கும் மிக்க வேறுபாடு உண்டு. மரபு தெரியாமல் பழக்கம் இல்லாமல் படிக்கத் தொடங்கினால் அவை மயக்கத்தை உண்டாக்கும். அதனால் அவற்றை யாவரும் படித்துப் பாராட்ட இயலாமற் போயிற்று.

இரண்டாவது காரணம்: முருகனது புகழை அமுததாரை போன்ற கவித்துவத்தைப் பெற்ற அருணகிரிநாதர் மிக விரிவாகப் பாடியருளினார்.

அவருடைய சரளமான வாக்கில் ஈடுபட்ட பிறகு, கடினமான பிற பாடல்களை ஆராய எல்லோ ருக்கும் உள்ளம் செல்வதில்லை. அப்படியே எடுத்து விழுங்கும் அல்வா எளிதிலே கிடைக்கும்போது, பல்லை உடைக்கும் பொரிவிளங்காய் உருண்டையைக் கடித்துக் கொண்டிருக்க விரும்புபவர் யார்?

ஆயினும், முருகனுடைய பெருமையையும், தமிழ் நாட்டார் பண்டைப் பழங்கால முதலே அப்பெருமானை வழிபட்டு வரும் சிறப்பையும், அவர்கள் வழிபட்டு வந்த முறைகளையும் நன்றாக உணரவேண்டுமானால், அந்தப் பழம் பாடல்களைப் படித்துத் தெளிய வேண்டும். முருகனைத் தமிழ்த் தெய்வ மென்று கொண்டாடுகின்றோம். ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? மற்ற நாட்டினருக்கெல்லாம் அவன் தெய்வம் அல்லவா? இத்தகைய கேள்விக்குத் தக்க விடைகள் வேண்டுமாயின், அந்தப் பழைய நூல்களில் உள்ள செய்திகளை ஆராயவேண்டும்.

திருமுருகாற்றுப் படை இன்றும் முருகன் அடியார்களால் பாராயணம் செய்யப்பெற்று வருகின்றது. பழைய பாடல்களில் அது ஒன்றுதான் நடுவில் மறைந்து போகாமல் தமிழ் நாட்டில் உலாவி வருகின்றது. சங்கநூல்கள் அத்தனையும் மறைந்து போயிருந்தாலும், திருமுருகாற்றுப்படை ஒன்று மாத்திரம் நின்றிருக்கும். பனையேட்டில் எழுதிய தோடு நில்லாமல், பக்தர்கள் அதனைத் தங்கள் மன ஏட்டில் எழுதிப் பாராயணம் செய்து பாதுகாத்துவந் தார்கள். முருகனுடைய சிறப்பை மிக விரிவாகச் சொல்லும் இயல்பினால் அந்த நூல் மறையாமல் மங்காமல் நின்று ஒளிர்கிறது. அந்த நூலை இயற்றிய சிறப்பினால், நக்கீரரையும் தமிழுலகம் மறக்கவில்லை. அருணகிரிநாதர் மிக அருமையாக அப்பெரும்புலவரைப் பாராட்டியிருக்கிறார்.

இத்தகைய சிறப்புப் பெற்ற திருமுருகாற்றுப் படையும் எளிதில் விளங்கும் நூலாகப் பலருக்குத் தோன்றவில்லை. அதுவும் பண்டைப் பழைய நூல்களில் ஒன்றாக இருப்பதுதான் காரணம். இக்காலத்தில் வழங்காத பல சொற்கள் அந்நூலில் உள்ளன. இக்காலத்தில் வழங்காத வழக்கங்களை அதில் இக்காலத்தினருக்கு முரண்பாடாகத் தோற்றும் சில செய்திகளைக்கூட அதில் காணலாம். காலந்தோறும் மனிதனுடைய பேச்சில் சில மாற்றங்கள் உண்டாகின்றன; செய்கையில் சிறு வேறுபாடுகள் அமைகின்றன; எண்ணங்களிலும் கொள்கைகளிலும் சில மாறுபாடுகளைப் பார்க்கலாம். இந்த வேறுபாடுகளைப் பண்டை நூல்களைப் படித்து உணரலாம். முருக வழிபாட்டிலும், முருகனைப் பற்றிய வரலாறுகளிலும் இப்படியே சில வேறுபாடுகள் இருப்பதைக் காணலாம்.

திருமுருகாற்றுப்படையில் உள்ள சில செய்திகள் பிற்காலத்து நூல்களால் விளங்கா. நக்கீரர் காலத்திலும் அதற்கு முற்பட்ட காலத்திலும் எழுந்த நூல்களைக் கொண்டே அச்செய்திகளைத் தெளிந்து கொள்ளவேண்டும். பரிபாடலில் உள்ள முருகனைப் பற்றிய பாடல்களும், பிற சங்கநூலில் வரும் பாடல்களும் இந்த விளக்கத்தைப் பெற உதவும். ஆகவே அந்தப் பாடல்களின் கருத்தைத் தெரிந்துகொள்வதனால் நம்முடைய கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. பழைய வழக்கமே மீண்டும் வரவேண்டும் என்ற வற்புறுத்தலும் இல்லை. சங்க காலத்துக்குப் பின் எழுந்த நூல்களில் கூட இந்த வேறுபாடுகளைக் காணலாம்.

ஒரு சிறிய உதாரணத்தைப் பார்க்கலாம். திரு. ஞான சம்பந்தமூர்த்தி நாயனார் முருகனுடைய திரு அவதாரம் என்பது ஒரு சாரார் கொள்கை; சேக்கிழார் காலத்தில் வாழ்ந்த ஒட்டக்கூத்தர், திருஞான சம்பந்தரை முருகவேளின் அவதாரமாகவே சொல்கிறார்.

அவர் இயற்றிய தக்கயாகப் பரணி என்னும் நூலில் திருஞானசம்பந்தர் சமணர்களை வாதில் வென்ற கதை வருகிறது. தேவி அந்தக் கதையைச் சொல்லும்படி ஏவ, கலைமகள் கதையைச் சொல்கிறாள். தேவி ஏவுவதாக உள்ள பாட்டு வருமாறு:

வருகதை, தெய்வமகளென் மருமகள் வள்ளிவதுவை
மனமகிழ் பிள்ளைமுருகன் மதுரையில் வெல்லும்
இனிய தொருகதை சொல்லு, தவள ஒளிவிரி
செவ்விமுளரி ஒளிதிகழ் அல்லி கமழும் ஒருமனை வல்லி எனவே.

‘வெள்ளிய ஒளி விரிகின்ற செவ்வியை யுடைய தாமரையின் அகவிதழ் மணம் வீசுகின்ற இடத்தையே மனையாகக் கொண்ட கலைமகளே, நீ இப்போது ஒரு கதையைச் சொல்வாயாக; தெய்வப் பெண்ணும் எனக்கு மருமகளுமாகிய வள்ளியை மணம் செய்து மனமகிழ்ந்த பிள்ளையாகிய முருகன் மதுரையில் வெற்றி பெற்ற அந்த இனிய கதையைச் ‘சொல்’ என்று தேவி கேட்கிறாள்.

இங்கே தெளிவாக, ‘முருகன் மதுரையில் வெல்லும் இனியதொரு கதை’ என்று ஞானசம்பந்தரை முருகனாகவே அம்பிகை சொல்கிறாள்.

பிற்காலத்தில் வந்த பல புலவர்கள் ஞானசம்பந்தரை முருகன் திருவவதாரமாகவே பாடுகின்றார்கள். அருணகிரி நாதர் பல இடங்களில் ஞானசம் பந்தர் முருகன் திருவவதாரம் என்பதைப் பலவகையிலே சொல்லுகிறார்.

ஆனால் சேக்கிழார் பெரிய புராணத்தில் முருகனுடைய திருவவதாரமே ஆளுடைய பிள்ளையார் என்று கூறவில்லை. சுந்தரமூர்த்தி நாயனார் ஆலால சுந்தரரின் திருவவதாரம் என்று பாடிய அவர் சம்பந்தப் பெருமானை முருகன் திருவவதார மென்று சொல்லவில்லை. அப்பெருமான் உமாதேவியாருடைய திருமுலைப்பாலை உண்டமையாலும், இறைவனைச் சற்புத்திர மார்க்கத்தில் வழிபட்டமையாலும் ஆளுடைய பிள்ளையார் என்ற திருநாமம் பெற்றார். பிள்ளையார், ஆளுடைய பிள்ளையார், இறைவர் திருமகனார் என்று வரும் இடங்களில் எல்லாம் முருகன் அவதாரம் என்று கொள்வார் சிலர்.

அது சேக்கிழார் கொள்கை அன்று. அவ்வாறாயின் வெளிப் படையாகவே அவர் எங்கேனும் ஓரிடத்தில் சொல்லி யிருப்பார்.

சேக்கிழாருக்கு முன் திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளைப் பாடினவர் நம்பியாண்டார் நம்பி. சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய திருத்தொண்டத் தொகையைச் சற்று விரித்துத் திருத்தொண்டர்

திருவந்தாதி பாடியவர் அப்பெரியார். சேக்கிழார் தம்முடைய பெரிய புராணத்துக்கு மூலமாகத் திருத் தொண்டத் தொகையையும், திருத்தொண்டர் திருவந்தாதியையும் வைத்துக்கொண்டார்.

நம்பியாண்டார் நம்பி பாடிய ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் என்னும் நூலில் ஒரு பாட்டு வருகிறது. அங்கே சம்பந்தப்பெருமான் முருக வேளுடைய அவதாரம் என்று நினைப்பதற்குரிய குறிப்பு ஒன்று இருக்கிறது. பாட்டு அகத்துறையில் அமைந்தது. தோழி தலைவனைப் பார்த்துச் சொல் கிறாள். “அயலாரெல்லாம் நின் காதலியை மணம் பேசுவதற்காக வரப்போகிறார்கள். அதற்கு முன் நீ இவளை மணந்து கொள்ளவோ, அழைத்துச் செல்லவோ வேண்டும்” என்று அறிவுறுத்துகிறாள்.

சரதம், மணமலி பரிசம் வருவன.
தளர்வில் புகலியர் அதிபன், நதிதரு வரதன்,

அணிதமிழ் விரகன், மிகுபுகழ் மருவு சுருதிநன்
மலையின் அமர்தரு விரதம் உடையை நின் இடையி
னவள்மனம் விரைசெய் குழலியை அணைவ
தரிதென இரதம் அழிதர வருதல் முனம் இனி
எளிய தொருவகை கருது மலையனே

என்பது 23-ஆவது பாட்டு. தலைவனைப்பற்றிச் சொல்கையில், ‘நீ ஞானசம்பந்தப் பெருமானுக்குரிய சுருதி மலையில் தங்குகின்ற விரதம் உடையாய்’ என்று பாட்டுடைத் தலைவராகிய சம்பந்தப் பெருமான் செய்தி வருகிறது. அங்கே, அப்பெருமானை நம்பியாண்டார் நம்பிகள் வருணிக்கிறார். தளர்வில் புகலியர் அதிபன், நதி தரு வரதன், அணிதமிழ் விரகன் என மூன்று தொடர்கள் வருகின்றன. சீகாழிப் பெருமான், தமிழ் விரகன் என்பன யாவரும் தெளிந்து கொள்ளக் கூடியனவே. நதி தரு வரதன் என்ற தொடரை மாத்திரம் சற்று ஆய்ந்து சிந்திக்க வேண்டும். நதியைத் தரும் வரதன் என்றோ, நதியால் தரப்பெற்ற வரதன் என்றோ அதற்குப் பொருள் கொள்ளலாம். சம்பந்தர் எந்த நதியையும் உண்டாக்கியதாக வரலாறு இல்லை. ஆகவே, நதியால் தரப்பெற்ற வரதன் என்பதுதான் பொருத்தமாக இருக்கவேண்டும். ஞானசம்பந்தர் எந்த நதியால் தரப்பெற்றவர்? சம்பந்தர் வரலாற்றில் அந்தச் செய்தியையும் காண முடியாது. ஆனால் சம்பந்தர் முருகனுடைய திருவவதாரம் என்ற நினைவோடு பார்த்தால் இத் தொடருக்குப் பொருள் விளங்கிவிடும். கங்கா நதியால் தரப்பெற்ற வரதனல்லவா முருகன்? காங்கேயன் என்ற திருநாமம் அதனால் அன்றோ அமைந்தது?

ஆயிர முகத்து நதி பாலனும்,நதிபுத்திர

என்று நதிதரு வரதனைப் பாடுகின்றார் அருண கிரிநாதர்.

ஆதலின் நம்பியாண்டார் நம்பிகளுக்கும் திருஞானசம்பந்தர் முருகன் திருவவதாரம் என்பது உடம்பாடே என்று கொள்ளலாம்.

இவ்வாறு இருக்க, ஒரு சாரார் இந்தக் கொள்கையை மறுப்பதற்குக் காரணம் என்ன? தக்க காரணம் இருக்கிறது. ‘ஞானசம்பந்தப் பெருமான் ஒரு தந்தைக்கும் தாய்க்கும் புதல்வராகத் தோன்றினார். இவ்வாறு பிறத்தல் இறைவனுக்கு ஏற்புடையதன்று. ஆதலின் முருகனுடைய அவதாரமாகக் கூறுதல் பொருந்தாது’ என்பதே இந்த அன்பர்களின் எண்ணம்.

அருணகிரிநாதர்,

பெம்மான் முருகன் பிறவான் இறவான்

என்று பாடினார். அவரே ஞானசம்பந்தப் பெருமானை முருகனாகப் பாடிப் போற்றினார். இந்த இரண்டிற்கும் முரண்பாடு இருப்பதுபோலத் தோற்றினும், உண்மையில் முரண்பாடில்லை. முருகனுடைய அமிசாவதாரம் என்று கொண்டு சமாதா னம் செய்யலாம். ‘அந்தச் சமாதானத்துக்கே இட மில்லாமல் இருக்கட்டுமே’ என்பது முருகன் அவதார மன்றென்பார் எண்ணம். மகாகவி மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுக்கு ஞானசம்பந்தர் முருகன் அவதாரம் என்று சொல்வது உடம்பாடன்று.

இந்தச் சிக்கலை ஒரு புலவர் வேறொரு விதத்தில் தீர்த்து விட்டதாகக் கேள்வியுற்றிருக்கிறேன். ‘ஞானசம்பந்தர் தாய் வயிற்றிலே பிறக்கவில்லை. சிவபாத இருதயருக்குப் பொய்கையின்கண் தாமரைப் பூவில் கிடைத்தார்’ என்று அவர் பாடியிருக்கிறாராம்.

எப்படி ஆனாலும் இந்த இருவகைக் கொள்கைகளும் நூல் வழக்காற்றில் நிலைத்துப்போய்விட்டன. ஒரே காலத்தில் இருவகைக் கொள்கைளும் தமிழ் நாட்டில் உலவுகின்றன. இருவகையினரும் முருகனிடத்தில் சிறந்த பக்தி உடையவர்களே. யார் சொல்வது தவறு என்று கூறுவது? எது சரி என்று நிர்த்தாரணம் செய்வது?

இவ்வாறு ஒரே காலத்தில் கொள்கை வேறுபாடுகள் இருக்கும்போது, நாளடைவில் வேறுபாடு அமைவது வியப்பன்று. அதைக் கண்டு நம் கொள் கைக்கு ஊறுபாடு நேர வழி இல்லை. முருகவேள் திருவடி மலர்களில் வைக்கும் அன்பு குறையுமென்ற அச்சத்துக்கும் இடமில்லை. முருகன் மாறவில்லை. அவனைப் பற்றிய நினைவு, பேச்சு இவையே மாறுகின்றன. இந்தச் சிறிய மாற்றங்களை உணர்வதில் தவறு ஏதும் இல்லை. உணர்ந்து மகிழவும் இடம் உண்டு. பழைய நூல்களைப் படித்துணர்ந்தால் இந்த நிலையில் நிற்க வழி பிறக்கும்.