திரு அவதாரக் கதை
அப்பனே, முருகா, பூசாரியின் பாட்டிலே திருவுளம் மகிழ்ந்து குறிஞ்சி நிலத்தினருக்கு வேண்டியவற்றை வேண்டியபடி நல்கும் கடவுளே, உன்னுடைய தத்துவம் உணர்வதற்கு அரியதாக இருக்கிறதே! வேலனாகிய பூசாரி உன்னைத் தங்கள் காரியங் களுக்கெல்லாம் துணையாக அன்றோ நினைக்கிறான்? அவனுக்கும் பிறருக்கும் இனியவனாகவும் எளியனாக வும் வரும் உன் இயல்பை எவ்வாறு வரையறை செய்வோம்! இழிதொழிலும் இழிந்த வாழ்க்கைப் போக்கையும் உடையவர்களென்று மக்கள் போற்றும் கூட்டத்தில் நீ பிரசன்னமாகிறாயே! நீயும் இழிந்த நிலையை விரும்புகிறவனா?……ஆம், நீ வைத்தது சட்டம். உன் ஆணைப்படி நடப்பது உலகம். நீ எது செய்கிறாயோ அதற்கு மிஞ்சியது ஒன்றும் இல்லை. உன்னையன்றி வேறு எல்லையை இல்லாதது இந்த உலகம்; உன்னையே வரம்பாக, தெய்வமாக, பாதுகாக்கும் அரணாக உடையது. ஆகவே உன் திருவுள்ளம் எப்படியோ அப்படியெல்லாம் இருக்கும் உரிமை உனக்கு உண்டு.
இயற்கையாகப் பல்வகைச் சிறப்புக்களையும் உடைய நீ, ஏழைகளுக்கு அருள்பாலிக்க வேண்டுமானால், அந்தச் சிறப்பையெல்லாம் ஒரு பக்கம் மூட்டை கட்டி வைத்துவிட்டு வருவாய். நீயாக இறங்கி வருகின்ற எளிமை அது. யாரும் உன்னை அப்படி இழிந்து வா என்று வற்புறுத்த இயலாது. என்றும் குன்றாத சிறப்பை உடையவனே, உன்னையே வரம்பாக உடையது உலகம். அப்படி இருக்க, நீ உனக்கு உரிய சிறப்பை யெல்லாம் நீக்கிவிட்டு வந்தால் அது உன் திருவுள்ளம்.
சிறந்த காரியங்களைச் செய்யும்போது அவற்றால் பிறருக்குக் கிடைக்காத உயர்வு உண்டாவதும், இழி தொழிலும் அறியாமையையும் உடைய பிறவியிலே புகுந்தமையால் இழிவு நேர்வதும் மற்றவர்கள் திறத்தில் நியதியானவை. சிறந்த தொழிலைச் செய்தாலும், இழிந்ததாகத் தோற்றும் நிலையில் இருந்தாலும் உன் சிறப்பு உன்னை விட்டு என்றும் ஒழியாது. சிறப்பினையுடைய செயல்கள் பலவற்றுள்ளே சில செயல்களைப் புரிந்தமையால் சிறப்பு அமைதலும், பிறவிப் பிணிப்பட்டு இழி வடைதலும் ஏனோருடைய இயல்புகள்; அந்த ஏற்பாடு உன்னுடைய அருளாணையால் நிகழ்வது.
சிறந்து நிற்கவும், இழிந்து நிற்கவும் செய்யும் வலியாணை உடையவன் நீ; ஆனால் நீ சிறந்து நின்றவன்போல் தோன்றினாலும், சிறப்பின்றிப் பெயரும் நிலையுள்ளவனைப் போலத் தோன்றினாலும் உனக் குப் புதிதாக வரும் உயர்வு தாழ்வு யாதும் இல்லை. நீ என்றும் சிறப்பை உடையவன்; தலைமையை உடை யவன்; வெற்றியை உடையவன். அந்த வெற்றியி னாலே பிறர் சிறப்பையும் சிறப்பின்மையாகிய இழிவையும் அடைகிறார்கள்.
நீயே வரம்பிற்றுஇவ் வுலகம்,ஆதலின்,
சிறப்போய், சிறப்பின்றிப் பெயர்குவை
சிறப்பினுள் உயர்பு ஆகலும்
பிறப்பினுள் இழிபு ஆகலும்
ஏனோர், நின் வலத்தினதே.
[இவ்வுலகம் உன்னையே எல்லையாக உடையது; ஆகையால் பெருஞ் சிறப்பை உடையவனே, நீ நின் திருவுள்ளத்தில் எண்ணினால் உனக்குரிய சிறப்புக்கள் இல்லாமல் இழி நிலைமையை உடையவனைப்போல் வருவாய்; சிறந்த செய்கையால் உயர்வு உண்டாதலும், பிறப்பில் செய்கை காரணமாக இழிவு அமைதலும் பிறர் மாட்டு நடக்கும் நியதி; ஆனால் அந்த நியதி உன் வலமாகிய ஆணைக்கு உட்பட்டது. உயர்பு – உயர்வு. இழிபு -இழிவு. ஏனோர்- உன்னை யல்லாத பிறர். வலம் – வெற்றி; இங்கே ஆணை.]
‘பூசாரியின் தோத்திரத்தை உண்மையாக்கி முருகன் வருகிறானே!’ என்று ஆச்சரியப்பட்டுப் போன புலவர் முருகனை இப்படிப் பாராட்டுகிறார். பூசாரியின் வழிபாட்டுக்கு இரங்கி, தன் நிலையினின் றும் இறங்கி வருகிறான் முருகன். அதற்குப் புலவர் சமாதானம் சொல்கிறார். அவன் வைத்தது சட்டம் என்கிறார். ஆனால் இதைக்காட்டிலும் இன்னும் பெரிய செய்தி நினைவுக்கு வருகிறது. பிறவிப் பிணிக்கு மருந்தாகும் திருவருளை ஆருயிர்களுக்கு வழங்கும் முருகனே பிறந்தா னென்ற கதை ஞாப கத்துக்கு வருகிறது.
முருகனுடைய திருவவதாரக் கதை பல பல வேறுபாடுகளோடு வழங்கும். காலத்துக்குக் காலம் அந்தக் கதையில் மாற்றம் அமைந்திருக்கிறது. ஏனையோர் இதிலிருந்தே முருகனுடைய அவதாரம் பிறவிபோன்றது அன்றென்பது வெளியாகும்.
சங்க காலத்து நூலாகிய பரிபாடலில் வரும் இந்தப் பாட்டில் கடுவன் இளஎயினனார் கூறும் திருவவதாரக்கதை, கந்தபுராணக்கதைக்குப் பலவகையில் வேறுபட்டது. சங்ககாலத்தில். முருகன் திருவவ தாரத்தைப் பற்றிய இந்த வரலாறே வழங்கிவந்தது என்று நாம் கொள்ளவேண்டும்.
இனி, திருவவதாரக் கதையைக் கவனிப்போம்.
சிவபெருமான் உமாதேவியோடு காமத்தை நுகர்கின்ற திருமணம் புரிந்து கொண்டான். அத் தேவியோடு அளவளாவி நெடுங்காலம் இருந்த பிறகு, அமைதி உற்ற சமயத்தில் இமையாநாட்டத்தை உடைய அப்பெருமானிடத்திலே இந்திரன் வந்தான்.”அப்பனே, ஒரு வரம் வேண்டும்” என்று கேட்டுக்கொண்டான். “கேள்; தருகிறோம்” என்றான் இறைவன். “உமாதேவியோடு அளவளாவியது போதும்; அதன் விளைவாக உண்டாகிய கருவைச் சேதித்தருள வேண்டும்” என்றான். சத்தியமே உருவாகிய எம்பெருமான் இந்திரனுக்குக் கொடுத்த வரத்தை மாற்றாமல், அதனைத் தன்னுடைய மழுவா யுதத்தைக் கொண்டு பல கண்டமாகச் சேதித்தான்.
அதனை இந்திரன் கொண்டு சென்ற பொழுது ஏழு முனிவர்களும் அதனைக் கண்டனர். “இது அரு வாகிய இறைவன் உருப்பெற்று உயிர்களுக்கு இன்பம் நல்கும் குழந்தையாவதற் குரியது” என்று ஞானத்தால் உணர்ந்தனர். ஆகவே, அதனை இந்திரனிடம் பெற்றுக் கொண்டனர். தம் மனைவியர் வாயிலாக இறைவனுடைய அமிசம் உருப்பெற வேண்டும் என்று எண்ணிய முனிவர், அதனை அம் மகளிர் தாங்கமாட்டார்கள் என்பதை உணர்ந்து, வேள்வி செய்து அதன் கண்ணே அதனைப் பெய்தனர். பிறகு வேள்விப் பிரசாதமாக நின்ற அதனை அருந்ததி ஒழிந்த ஆறு மகளிருக்கும் பகிர்ந்து கொடுத்தனர். ஆறு முனிவருடைய மகளிரும் கார்த்திகை நட்சத்திரமாக விளங்குபவர்கள். கார்த்திகை மாதராகிய அந்த ஆறு பேரும் வேள்விப் பிரசாதத்தை நுகர்ந்தவுடன், சூல் பெற்றனர். தம்முடைய கணவன் மாருடைய விருப்பப்படி அயின்ற ‘மறுவறு கற்பினை’ உடைய அவர்கள் கருப்பத்தில் இறைவன் அமிசம் வளர்ந்தது. பிறகு இமாசலத்தின் சார்பிலே தருப்பை வளர்ந்தோங்கிய சரவணப் பொய்கையில் தாமரை மலரில் அம்மகளிர் அறுவரும் கருவுயிர்த்தார்கள்.
இவ்வாறு முருகன் திருவவதாரம் நிகழ்ந்த தென்று அக்காலத்துப் பௌராணிகர் சொல்லி வந்தார்களாம்.
இந்தக் கதையைச் சொல்லவந்த புலவர் முதலில் சிவபெருமானைப் பற்றிப் பேசுகின்றார். அப் பெருமான் திரிபுர சங்காரம் செய்த வீரச் செயலைச் சொல்கிறார். திரிபுரசங்காரக்கதை முன்பும் வழங்கி வந்த தென்று இதனால் தெரிய வருகிறது.
முப்புரத்தை இறைவன் அழிக்கப் புறப்பட்ட காலத்தில் ஆதி அந்தணனாகிய பிரமதேன் சாரதியாக இருந்தான். அவன் எப்படி எப்படிக் குதிரைகளை வேகம் அறிந்து விடவேண்டுமோ அப்படி விட்டான்; குதிரைகளின் நடையைத் தன் பிடிப்பிலே வைத்துக் கொண்டான். வேதமாகிய குதிரைகளைப் பூண்ட பூமியாகிய தேர் அது. அதன்மேல் ஊர்ந்து சென்றான் இறைவன். நாகத்தை நாண் கயிறாகவும் மலையை வில்லாகவும் கைக்கொண்டு திரிபுர சங்காரத்துக்குப் புறப்பட்டான்.
அந்த முப்புரங்களும் மூவகை மதில்களை உடையவை. வெள்ளி, பொன், இரும்பு என்ற மூன்றினாலும் அமைந்தவை. அவற்றை ஓர் அழலம்பினாலே எரியும்படி செய்தான். புரங்கள் மூன்றும் எரியும் போது அந்த வெப்பத்தால் திசைகளெல்லாம் அழன்றன.
ஆதி அந்தணன் அறிந்து பரிகொளுவ
வேத மாபூண் வையத்தேர் ஊர்ந்து
நாகம் நாணா ம மலைவில் ஆக
மூவகை, ஆரெயில் ஓர்அழல் அம்பின்
முளிய மாதிரம் அழல எய்து.
[பிரம தேவன் ஓட்டும் முறையை அறிந்து குதிரைகளின் வேகத்தைத் தன் கையிலே அடக்கி வைக்க, வேதமாகிய குதிரை யைப் பூண்ட பூமியாகிய தேரில் ஏறிச் சென்று, ஆதிசேடனாகிய பாம்பு நாணாகவும் மேருமலை வில்லாகவும் கொண்டு, மூன்று வகையான வெல்லுதற்கரிய மதில்களை ஒரு தீயை மூட்டும் அம்பினால் அழியும்படியும் திசைகளெல்லாம் எரியும்படியும் எய்து. பரி-நடை. கொளுவ-கைக் கொண்டு நடத்த. மா-குதிரை. வையத்தேர் – பூமியாகிய தேர். முளிய-எரிய, மாதிரம்-திசை.)
இவ்வாறு எய்த பெருமானை அந்தணர் வேள்வியாலே போற்றுகின்றனர். வேள்வியின் தலைவனாக இருப்பவன் சிவபெருமான். அமரர் பலரையும் எண்ணி வேள்வியில் அவியுணவைக் கொடுத்தாலும் சிவபெருமான் அருளின்றி அது நிகழாது. ஆகவே அப்பெருமான் அவியேற்றல் இன்றியமையாதது. அமரருக்கு விருந்தாக வேள்வி செய்து அவி யுணவை அந்தணர் வழங்கும்போது சிவபெருமான் தலைமை தாங்கி நின்று அந்த அவியுணவை ஏற்று மகிழ்வான். அப் பெருமானையும் அந்தண னென்றும், முனிவனென்றும், பார்ப்பா னென்றும் நூல்கள் கூறும்.
திரிபுரம் எய்த செய்தியையும், வேள்வியில் அவிர்ப்பாகம் ஏற்கும் செய்தியையும் இணைத்துச் சொல்கிறார் புலவர்.
அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங்கட் பார்ப்பான்.
[தேவரை எண்ணிச் செய்யும் வேள்வியில் அவிர்ப் பாகத்தை ஏற்றருளிய கருணை பொழியும் திருவிழிகளையுடைய அந்தணன். வேள்விப்பாகம்-அவிர்ப்பாகம், பைங்கண்-பசியகண்; கோபத்தாற் பசிய கண் என்று பரிமேலழகர் உரை எழுதுவர்; அருளாற் குளிர்ந்த கண் என்று கொள்வது சிறப்பு.]
இறைவன் உமாதேவியை மணம் செய்து கொண்டான். அப் பெருமாட்டியோடு நெடுங்காலம் இன்பம் நுகர்ந்தான். தேவர்களெல்லாம் தங்களுக்கு வந்த இடுக்கண் தீர வேண்டுமென்று ஏங்கி நின்றனர். இறைவனே உமாதேவியோடு ஒன்றி நின்றனன். இந்த நிலையில் சிவபெருமானுடைய கவனத்தைத் தங்கள் பால் திருப்புவதற்கு இந்திரன் புறப்பட்டான். சிவபெருமானிடம் சென்று, “இப் புணர்ச்சியைத் தவிர்ந்தருள வேண்டும்” எனக் கேட்க இறைவனும் அவ்வாறே வரம் ஈந்தான்.
உமையொடு புணர்ந்த காம வதுவையுள்
அமையாப் புணர்ச்சி அமைய, நெற்றி
இமையா நாட்டத்து ஒருவரம் கொண்டு
விலங்கென, விண்ணோர் வேள்வி முதல்வன்.
[உமாதேவியோடு இறைவன் இன்புற்ற திருமணத்தில் அமையாமல் நிகழ்ந்த புணர்ச்சி அமையுமாறு, நெற்றியிலே இமையாத நாட்டத்தையுடைய அப்பெருமானிடத்திலே, விண்ணோர் முதல்வனும் வேள்வி முதல்வனுமாகிய இந்திரன் ஒரு வரத்தைப் பெற்றுக் கொண்டு, “இந்தச் செயலினின்றும் தவிர்ந்தருள்வாயாக!” என்று வேண்டிக்கொள்ள. காம வதுவை – இச்சையாற் செய்த திரு மணம். இமையா நாட்டம்-இமையாத நாட்டத்தையுடைய இறைவன்; அன்மொழித்தொகை, விலங்கு-தவிர்க.]
இந்திரனுடைய வேண்டுகோளுக்கு இரங்கினான் இறைவன். அப்போது வெளியான கரு, உலகமெல்லாம் தாங்கற்கரிய உக்கிரம் கொண்டு நின்றது. இந்திரனுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்ற வேண்டி அக் கருவைத் தன் மழுவாயுதத்தால் சேதித்தான். அதுகண்டு இவ்வுலகேழும் வியந்தது. “மாற்றாத வாய்மையை உடையவன்” என்று பாராட்டியது.
விரிகதிர் மணிப்பூண் அவற்குத்தான் ஈத்தது
அரிதென மாற்றான், வாய்மையன் ஆதலின்;
எரிகனன்று ஆனாக் குடாரிகொண் டதன்உருவு
திரித்திட்டோன்இவ் வுலகுஏழும் மருள.
[விரிந்த கதிரையுடைய மணிகளாலாகிய பூணை அணிந்த அந்த இந்திரனுக்குத் தான் கொடுத்த வரம் நிறைவேற்றற்கு அரி தென்று சொல்லி வாக்கு மாறுதல் இல்லாத சத்தியத்தை உடையவன் ஆதலால், இறைவன் நெருப்புக் கனன்று அமையாத மழுவாயுதத்தைக் கொண்டு அந்தக் கருவின் உருவத்தை இவ்வுலக மெல்லாம் வியக்கும்படி |சேதித்தான், குடாரி-மழு. திரித்தல் சிதைத்தல்.]
இறைவனது அமிசமாகிய அக் கருவானது சிதைக்கப் பெற்றாலும், அதன் வன்மை மாறா தென்ற எண்ணத்தோடு இந்திரன் அதைக் கைக்கொண்டு சென்றான். அவன் செல்லும் பொழுது ஆங்கிருந்த ஏழு முனிவர்களும் கண்டார்கள். சமாதியினால் அவர்கள் உண்மையை உணர்ந்தார்கள். அது சேயாகவேண்டிய கரு வென்பதை அறிந்து கொண்டார்கள். அதனை இந்திரனிட மிருந்து அம் முனிவர்கள் வாங்கிக் கொண்டனர்.
கருப்பெற்றுக் கொண்டோர், கழிந்தசேய் யாக்கை
நொசிப்பின் ஏழுறு முனிவர் நனி உணர்ந்து.
[எழுவராகிய முனிவர் தம்முடைய சமாதி யோகத்தினால், சேயாக வேண்டிய யாக்கை கழிந்த உருவம் அது என்று நன்றாக உணர்ந்து அந்தக் கருவைப் பெற்றுக் கொண்டார்கள். நொசிப்பு.யோகம்.]
இறைவன் சேதித்த கருவை நல்ல வண்ணம் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று எண்ணினர் முனிவர். அந்தக் கருவின் பகுதியைத் தனித் தனியே தம் மனைவியர்பால் கொடுத்து நுகரச் செய்தால், இறைவன் திருவருளின் விளைவு நன்மையை உண்டாக்கும் என்று நினைத்தனர். ஆனால் அடுத்த படி மற்றொரு நினைவு அவர்களுக்கு உண்டாயிற்று. ‘இறைவனிடமிருந்து வந்த இது மிக்க திறல் உடை யது. இதனை நம் மனைவியர் ஆற்றுவார்களோ ? இருந்தவாறே நுகர்வதைவிட அக்கினியினிடம் வேள்வி மூலம் வழங்கிப் பின் வேள்விப் பிரசாதத்தைக் கொடுத்து நுகரச் செய்யலாமே!’ என்ற சிந்தனை உண்டாயிற்று. ஆகவே அழலை வேட்டு அதன்கண் அவியாக அந்தக் கருவைப் பெய்தார்கள்.
வசித்ததைக் கண்டம் ஆக மாதவர்
மனைவியர் நிறைவயின் வசிதடி சமைப்பிற்
சாலார், தானே தரிக்கென அவர் அவி
உடன்பெய் தோரே, அழல் வேட்டு.
[இறைவன் சிதைத்ததைச் சிறு சிறு கண்டமாக முனிவர் தம் மனைவியர் நுகர்ந்தால் அது நிறைவு பெறும்போது அக்கண்டம் உருப் பெறுகையில் அதனைத் தாங்கும் வன்மையைப் பெற மாட்டார்கள், ஆதலின் அக்கினியே தாங்குவானாக என்று எண்ணி, அம்முனிவர் அழல் வேட்டு அந்தக் கருவாகிய அவியை ஒருங்கே இட்டனர். வசித்ததை-சிதைத்த கருவை. வசி தடி- சேதித்த கருப் பகுதி. சமைப்பின்-உருப்பெற்றால். சாலார்-தாங்கும் தகுதியைப் பெற மாட்டார்.)
அப்படி வேள்வி செய்தபோது யாக குண்டத் தில் எழுந்த முத்தீயில் போற்றியிட்ட அவியில், அழலிலே சென்றது போக எஞ்சிய பகுதியாகிய பிரசாதத்தை முனிவர் தம் மனைவியருக்கு வழங்கினர். வடக்கே கிருத்திகை நட்சத்திரமாக ஆறு மகளிர் விளங்குகின்றனர். ஏழு முனிவர்களுடைய கூட்டமாகிய சப்தரிஷி நட்சத்திரம் என்ற ஒரு தொகுதியும் உண்டு. அதன் அருகே அருந்ததி நட்சத்திரத்தை வானிலே காணலாம்.
முனிவர் இந்தப் பிரசாதத்தை வழங்கியபோது அருந்ததி ஒழிந்த ஆறு மகளிரும் நுகர்ந்தனர். அந்த ஆறு பேரும் கிருத்திகைக் கூட்டத்தைச் சேர்ந்தவர். கிருத்திகைக்கு ஆரல் என்று ஒரு பெயர். அது ஆல் என்றும் சிதைந்து வழங்கும்.
தெய்வத் தன்மை பெற்ற ஒரு மீனாகிய சாலினி யென்னும் பெயர் பெற்ற அருந்ததி மட்டும் யாக சேஷத்தை உண்ணவில்லை. தலைக்கற்புடையவ ளாதலின், அவ்வாறு செய்யும்படி முனிவரும் பணிக்கவில்லை.
தடவு நிமிர் முத்தீப் பேணிய மன்எச்சில் வடவயின்
விளங்குஆல் உறைஎழு மகளிருள் கடவுள் ஒருமீன்
சாலினி ஒழிய அறுவர் மற்றையோரும்
அந்நிலை அயின்றனர்.
[யாககுண்டத்திலே பொங்கி எழுந்த முத்தீயிலே போற்றி யிட்ட அந்த அவியின் சேடமாகிய புரோடாசத்தை, வானத்தில் வடதிசைக்கண் விளங்குகின்ற ஏழு முனிபத்தினிகளுள் தெய் வத்தன்மை பொருந்தியமைந்த ஒப்பற்ற நட்சத்திரமாகிய அருந்ததி நிற்க, கிருத்திகை நட்சத்திரமாக உறைகின்ற மற்ற ஆறு பேர்களும், யாக சேஷமாக நின்ற அந்த நிலையில் அக் கருவை நுகர்ந்தனர். தடவு-யாககுண்டம். மன்: அசை. ஆல்- ஆரல்; கிருத்திகை. சாலினி-அருந்ததி. அறுவர் மற்றை யோரும் என்பதை மற்றையோர் அறுவரும் என்று கொள்ளவேண்டும்.]
அப்படி உண்ட கிருத்திகை மாதர் அறுவரும் கருப்பம் அடைந்தார்கள். இறைவன்பால் தோன்றிய கருவாதலின், வேள்வித் தீயில் இட்ட பிறகும் ஆற்றலுடையதாக அமைந்தது; அதனைத் தம்முடைய கணவருடைய கட்டளைக்கு இணங்க உண்டமையின் அம் மகளிர் மறுவில்லாத கற்பை உடையவரானார்கள். தம்முடைய நிறைக்கு யாதொரு குறையும் நேராமல் முருகனைச் சூலாகக் கொண்டார்கள். முருகன் இறைவனுடைய அமிசமாகக் கார்த்திகை மாதர் கருவிலே தங்கியிருந்தான்.
மறுவறு கற்பின் மாதவர் மனைவியர்
நிறைவயின் வழாஅது நிற்சூ லினரே.
[குற்றமற்ற கற்பினை உடைய முனிவருடைய மனைவிமார் ஆறு பேரும் தமக்குரிய நிறையினின்றும் தவறாமல், உன்னை வயிறு வாய்க்கப் பெற்றார்கள். நிறை – இங்கே கற்பு. சூலினர்- சூல் கொண்டனர்.]
வேள்விப் பிரசாதத்தை உண்டமையால் வந்தது கரு; தம் கணவர் கட்டளைக்கு இணங்கி அவ்வாறு செய்தனர். ஆதலின் புலவர் அவர்களை, “மறுவறு கற்பின் மாதவர் மனைவியர்” என்று சொல்கிறார். ‘அயின்றும் தம் கணவர் வேண்ட அயின்ற புரோ டாசம் ஆதலால் மறுவற்ற கற்பினையுடைய அம் மாதவர் மனைவியர், நிறையுடைமையின் நீங்காதே நின்னைச் சூல் கொண்டார்’ என்று பரிமேலழகர் இந்தப் பகுதிக்கு உரை எழுதியிருக்கின்றார்
இவ்வாறு ஆறு மகளிரும் கொண்ட கருப்பம் முதிர்ந்தது. இமாசலத்தின் ஒருசார் தருப்பை படர்ந்த நீலப்பைஞ் சுனையாகிய சரவண மென்னும் பூம்பொய்கையில் அவர்கள் குழந்தையைப் பெற்றார் கள். மெத்தென்ற தாமரை மலர்களில் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு குழந்தையைப் பெற்றனர்.
நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைஞ்சுனைப்
பயந்தோர் என்ப, பதுமத்துப் பாயல்.
[உயர்ந்து வளர்ந்த இமாசலத்தில் நீலப்பைஞ்சுனையில் தாமரையாகிய படுக்கையில் உன்னைப் பெற்றார்கள் என்று சொல்லுவார்கள். நீலம்-நீலநிறமுடைய தர்ப்பை; அதற்குச் சரம் என்று வடமொழியிலே பெயர் உண்டு. சரவணம் என்பது தருப்பை நிறைந்த இடம் என்ற பொருளை உடையது. நீலப் பைஞ்சுனை என்று சரவணத்தையே குறித்தார். “நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை” என்று திருமுருகாற்றுப்படை யிலும் நக்கீரர் நீலப்பைஞ்சுனை என்றே சொல்கிறார்.]
முருகன் சரவணப் பூம்பொய்கையில் திருவவ தாரம் செய்தானென்ற வரலாற்றை யாவரும் அறிவர். ஆனால் சரவணப் பொய்கையை அடையு மட்டும் முருகனைப் பற்றிய கதை வெவ்வேறு காலத் தில் வெவ்வேறாக வழங்கி வந்தது. இறைவனிடத்திலே தோன்றிய கருவை அக்கினி பெற்றுச் சென்று வாயுவினிடம் கொடுக்க வாயு கங்கையிலே விடக் கங்கை சரவணப் பொய்கையிலே விட்டாள் என்பது ஒரு கதை. இறைவன் விழியில் உண்டான அழற்பொறிகள் இவ்வாறு சென்று சரவணப் பொய்கையில் தங்கிக் குழந்தையாயின என்பது ஒரு வரலாறு. கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்தனர் என்று கந்தபுராணம் முதலிய நூல்கள் கூறும்.
பரிபாடலில் வரும் கதை பழங்காலத்தில் வழங்கியதென்று தெரிகிறது. “என்ப” என்று புலவர் சொல்கிறார். ‘என்று சொல்வார்கள்’ என்பது பொருள். ‘பௌராணிகர் சொல்லுவர்’ என்று பரிமேலழகர் உரை கூறினர். அவ்வாறு வழங்கின துண்டென்று வால்மீகி ராமாயணம், குமாரசம்பவம் முதலிய வடமொழி நூல்களாலும் தெரியவரும்.
காலத்துக்குக் காலம் மனிதருடைய மனோபாவம் மாறி வரும். ஒரு காலத்தில் பொய்யை எந்தக் காரியத்துக்கும் சொல்லக்கூடாதென்ற நியதி இருக்கும்; பிறகு சில காரியங்களுக்குப் பொய் சொல்லலாம் என்று மாறுதல் உண்டாகும். ஒழுக்க வகைகளிலும் இத்தகைய மாறுபாடுகளை நாம் பார்க் கின்றோம். தெய்வத்தைப் பற்றிய கதைகளில் நாம் விரும்பத்தகாத செய்திகள் இருந்தால் அவற்றை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று தோன்றுவது இயல்பு. ஆகையினால்தான் முருகன் திருவவதாரக் கதை இவ்வாறு வெவ்வேறு விதமாக வழங்குகிறது. இதுமாத்திரமன்று; புராணக் கதைகளே அந்த அந்தக் காலத்துக்கு ஏற்ப மாறி வழங்குகின்றன. பெரிய இதிகாசமாகிய ராமாயணத்தில் வரும் கதை எந்தக் காலத்திலும் ஒரே மாதிரி வழங்குவதில்லை. தேசத்துக்குத் தேசம், காலத்துக்குக் காலம், பாஷைக்குப் பாஷை வேறுபட்டு வழங்கும். எல்லாவற்றிலும் உட்கருத்தாக அமைந்த தத்துவத்தை நாம் உணர வேண்டுமே ஒழிய அதனை அப்படியே சரித்திரமாக, ஒவ்வொரு செய்தியும் அப்படி அப்படியே நிகழ்ந்த தென்று கொள்ளக்கூடாது.
முருகனுடைய திருவவதாரக் கதையிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவேண்டிய உண்மை ஒன்று. சிவபெருமானது அமிசமாக முருகன் தோன்றினான். அவனுடைய அவதாரம் ஏனைய குழந்தைகள் பிறக்கும் முறையில் அமைந்தது அன்று. இறைவனுடைய முதன்மையும் அவனுடைய அருள் உரமும் முனிவருடைய ஞானமும் மகளிருடைய கற்பும் வேள்வியின் தியாகமும் கலந்து அமைந்த தெய்வப் பிழம்பு முருகன். இதையே கதையாக்கிப் புராணமாக்கிக் கவியாக்கி விரித்தனர் பழங்கால மக்கள்.
கதையில் உள்ளபடியே நிகழ்ச்சிகள் நடந்திருந்தால் அந்தக் கதை உண்மை வரலாறாகிவிடும். உண்மை எப்போதும் ஒன்றுதான். கதை பலவா றாக வழங்குவதனாலே அது அப்படியே நடந்த உண்மை அன்று என்பது புலப்படும். ஆயினும் இவற்றினூடே பொதுவாக உள்ள கருத்தை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
இன்ப நிலையமாகிய பரசிவம் வேறு, முருகன் வேறு அல்ல; அருளுருவாகிய பராசக்தியின் தொடர்பு முருகனுக்கு உண்டு; ஞானம் படைத்த முனிவர் முயற்சியாலே தோன்றுவான்; கற்புடை மகளிர் கற்பு விரதத்தின் பயனாக வருவான். இவ்வாறு பலபடியாக இந்தக் கதைக்குப் பொருள் கூறலாம்.
முருகன் என்ற தெய்வத் திருவுருவத்தைப் பற்றித் தமிழர் நெடுங்காலமாகச் சிந்தித்து வந்தித்து வந்திருக்கிறார்கள். அவனைப் பற்றிக் கதை பேசிக் களித்திருக்கிறார்கள் என்பதையும் நாம் உணர்ந்து கொள்கிறோம்.