
பெரும் பெயர் முருகன்
கி. வா. ஜகந்நாதன்
தமிழர்கள் எப்போதுமே கடவுள் அன்பில் தலைசிறந்தவர்கள். தங்களுடைய வாழ்க்கையில் கடவுளை நினைப்பதற்கும், கடவுள் புகழைப் பேசுவதற்கும், கடவுளை வழிபடுவதற்கும் பல சந்தர்ப்பங்களை அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். தனித் தனியே வழிபடுவதோடு பலர் கூடி வழிபடுவதற்கு ஏற்ற இடங்களாகிய கோயில்களும், ஏற்ற காலங்களாகிய திருவிழாக்களும் அமைந்து தமிழர் உள்ளத்தில் மேன்மேலும் தெய்வபக்தியை வளர்க்கும் சாதனங்களாக விளங்குகின்றன.
‘இருப்பவல் திருப்புகழ்’ என்ற தொடருக்கு இப்போது சிலர் கூறும் உரை பொருத்தமற்ற தென்பதைக் காட்டி, இன்னவாறு கொள்ளுதல் சிறப்பு என்று விளக்குவது ‘இருப்பவல்’ என்னும் கட்டுரை. கந்தர் அலங்காரப் பாட்டு ஒன்றுக்குச் சிறுகதை உருவத்தில் தரும் விளக்கம் ‘இரட்டை விலங்கு.’ ‘நாகாசல வேலவன் ‘ என்ற அநுபூதித் தொடரைப் பற்றிய சிறிய ஆராய்ச்சி, அந்தத் தலைப்பைப் பெற்ற கட்டுரையாக உள்ளது. ‘ மணியும் துகிரும் ‘ என்பது ஓர் அநுபூதிப் பாட்டிற்கு இன்ன பாடம் இருந்தால் நல்ல தென்பதைக் காட்டுவது. ‘கல் உருகும்’ என்பது அநுபூதிப் பாடல் சிலவற்றைக் கொண்டு அமைத்த கட்டுரை.
இந்த இருபத்தொரு கட்டுரைகளும் முருகனுடைய தொடர் புடையன ஆகையால் ஒன்றாகத் தொகுத்து வெளியிடப் பெறுகின்றன. ஆராய்ச்சி, விளக்கம், வருணனை, அநுபவம் என்று பல வகையில் இந்தக் கட்டுரைகள் அமைந்திருந்தாலும் முருகனைப் பற்றிய நினைவோடு தோன்றியவை. ஆதலின் படிப்பவர்களுக்கும் அந்த நினைவை உண்டாக்கும் என்றே எண்ணுகிறேன்.