சீவகன் துறவு

சிந்தாமணியில் ஒரு கதை. சீவகன் பொழிலுக்குச் சென்று அங்குள்ள காட்சிகளைக் கண்டிருந்தான். அங்கே ஒரு பலாமரம் இருந்தது. மரத்தில் இரண்டு குரங்குகள் இருந்தன. ஒன்று ஆண்; மற்றொன்று பெண். பெண் குரங்குக்கு ஆணின் மேல் கோபம். அதைப் போக்க அந்த ஆண் குரங்கு பலாப்பழம் ஒன்றைப் பறித்து அதைக் கீறிச் சுளைகளைப் பெண் குரங்குக்குக் கொடுத்துக் கொண்டிருந்தது. தோட்டக்காரன் அங்கே வந்து அந்தப் பழத்தைப் பிடுங்கிக் கொண்டு இரண்டு குரங்குகளையும் ஒட்டிவிட்டான். இதைக் கண்ட சீவகனுக்கு ஒருநினைவு தோன்றியது. ‘அடடா! கட்டி யங்காரனிடமிருந்து நான் அரசைக் கொண்டேன். நான் வலி யவனாதலால் இதனை அடைந்தேன். என்னை விட வலியவன் வந்தால் என்னிடமிருந்து இதைப் பற்றிக்கொள்வான். இந்தச் செல்வம் யார் பலசாலியோ அவனால் வலிந்து பற்றிக் கொள்வதற்குரியது. நிலையுடையதன்று’ என்று எண்ணினான். உடனே அவன் துறவியாகிவிட்டான். சின்னச் சம்பவந்தான் அது. இருந்தாலும் அவன் உள்ளத்தில் அது பெரிய மாறுதலை உண்டாக்கிவிட்டது.

சித்தார்த்தர் துறவு

நம்மைப்போலவேதான். இந்த உலகத்தில் சித்தார்த்தர் வாழ்ந்தார். அரசராக இருந்து அரண்மனையில் இன்ப போகத்தில் திளைத்தார். அழகான மனைவியும் அருமையான குழந்தையும் அவருக்கு இருந்தார்கள். ஒருநாள் வீதியில் போகும் பிணத்தைக் கண்டார். எத்தனையோ பிணங்களை நாம் தினமும் பார்க்கிறோம். நமக்கு ஒரு விதமான உணர்ச்சியும் ஏற்படுவதில்லை. அதுவே சித்தார்த்தருக்கு அவரது வாழ்க்கையின் பெரிய திருப்பமாக அமைந்துவிட்டது; உலகம் உய்ய வழிகாட்டும் கௌதம புத்தராக விளங்க அவருடைய வாழ்க்கைப் பாதையைத் திருப்பிவிட்டது; அரண்மனையைத் துறந்து, மனைவியைத் துறந்து, மகனைத் துறந்து, இன்ப போகத்தை எல்லாம் துறந்து, இரவுக்கு இரவாகவே அவரைப் போதி மரத்தடிக்கு ஓடும்படியாகச் செய்து. விட்டது.

மாஷ வைராக்கியம்

யாரோ உளுந்து உடைத்துக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்தார் ஒரு ஜைனர். “இத்தனை நாளும் தோலும் பருப்புமாக ஒட்டி வாழ்ந்த உளுந்து, உடைக்கும் போது தோல் வேறு பருப்பு வேறாகப் போய் விட்டதே! அப்படி உடம்பும் உயிரும் ஒட்டியே இருந்தாலும் யமன் வந்தால் உயிர் வேறாக, உடம்பு வேறாக அல்லவா போகப் போகின்றன?” என்கிற ஞானம் பிறக்கவே, துறவியாக மாறிவிட்டார். இதை ‘மாஷ வைராக்கியம்’ என்பர்.

இப்படி ஞானப்பசியுடைய உள்ளத்திலும் கவிஞனுடைய உள்ளத்திலும் எந்தச் சிறிய சம்பவமாக இருந்தாலும் பெரிய கிளர்ச்சியை உண்டாக்கிவிடும். அவர்களுடைய உள்ளம் மெழுகுபோல் எதைக் கண்டாலும் உருகும் தன்மை உடையது. அதில் எந்தப் பொருளை வைத்தாலும் அது பதிவை உண்டாக்கிவிடுகிறது; ஒட்டிக் கொண்டுவிடுகிறது.

பொன்னின் உருக்கம்

நாமும் நம்முடைய துன்பத்தைக் கண்டும், பிறருடைய பெருமையைக் கண்டும் உருகுகிறோம்; இரங்குகிறோம். இப்படிப்பட்ட உருக்கமும் உருக்கந்தான். அது பயன் இல்லாத உருக்கம். களிமண்ணில் நீரைக் கொட்டி மிதித்தாலும் அது இளகுகிறது; உருகுகிறது. அதில் வைரத்தைப் பதிக்க முடியுமா? இரும்பை உலையில் இட்டால் அதுவும் உருகுகிறது.

அதில் வைரக்கல்லைப் பதிப்பார்களா? மண்ணின் உருக்கமோ இரும்பின் உருக்கமோ வைரத்தைப் பதிக்கப் பயன்படாது. பொன்னின் உருக்கந்தான் பயன்படும். எத்தனையோ பேர் எத்தனையோ விதமான விஷயங்களை நினைந்து உருகினாலும் இறைவனை நினைந்து உருகுகின்ற பக்தர்களுடைய உருக்கத்தில் தான் எம்பெருமானாகிய மாணிக்கம் பதிகிறது. அவர்கள் மனம் பொன் போன்றது. இந்த உருக்கத்தான் வேண்டுமென்று சொல்கிறார் அருண கிரியார்.

உருக்கம் உண்டாகும் வழி

இந்த உருக்கம் எப்படி வரும்? யார் உருகிப் பாடுகிறார் களோ அவர்களுடைய பாட்டைக் கேட்டால் வரும். “வேல் முருகா! வேல் முருகா!” என்று ஒருவர் வெறும் நாமாவளிதான் போடுகிறார்; என்றாலும் கண்ணை மூடிக் கொண்டு அந்த நாத ஒலிக்குக் காதைக் கொடுத்துவிட்டால் சிறிது நேரத்தில் நமக்கு ஒருவித உணர்ச்சி உண்டாகிறது. பாட்டு முடிந்துவிட்டாலும் நாம் அப்படியே செயலற்றுப் போய் நிற்கிறோம். உள்ளம் உருகிப் போய்விடுவதனால் பாட்டு முடிந்தது கூடத் தெரியாது போகிறது. அந்த உருக்கம் ஆரம்பத்திலேயே வந்துவிட்டால் பாடுகிறவர் இன்னார் என்பதுகூடத் தெரியாமல் போய்விடுகிறது. சிலருக்கு ஆவேச உணர்ச்சி பொங்கிவிடுகிறது.

கவிஞன் உருக்கம்

மாபெருங் கவிஞனுடைய பாடல்கள் இப்படித்தான் எந்தக் காலத்திலோ, எந்த இடத்திலோ, அவனுக்கு உண்டாக்கிய உருக்கத்தை, வேறு வேறு காலத்தில், வேறு வேறு இடத்தில், வேறு வேறு அநுபவத்தை உடைய மக்களிடத்தில் உண்டாக்குகின்றன என்பர். உணர்ச்சியின் இடமாற்றந்தான் கலையின் தத்துவம் என்பார்கள். இறைவனை நினைந்து உருகிப் பாடின பெரியவர்கள் பாட்டை எப்பொழுதானாலும் திரும்பத் திரும்பப் படிக்கிறவர்களுக்கு அதே உருக்கம் உண்டாகும்.

‘திருவாசகத்திற்கு உருகார் ஒரு
வாசகத்திற்கும் உருகார்!’

என்று ஒரு பழமொழி உண்டு. அதற்கு ஏன் உருகுகிறார்கள்? திருவாசகம் பாடியவர் உருகி உருகிப் பாடினார். அவரது உள் உருக்கத்திலிருந்து வெளிப்பட்ட பாடல்கள் நம்மையும் உருக வைக்கின்றன.

நல்ல நிலத்திலே வித்து விழுந்தால் உடனே அது முளைத்து மரமாகும். அந்த மரத்தில் மறுபடியும் ஆயிரம் ஆயிரம் வித்துக்கள் உண்டாகும். அப்படி உருக்கமாகிய ஆதி வித்து மாணிக்கவாசகரின் உள்ளமாகிய நல்ல நிலத்தில் விழுந்தது. அந்த வித்தில் தோன்றியது மரமாகிய திருவாசகம். அந்தத் திருவாசக மரத்தில் மீட்டும் ஆயிரம் ஆயிரம் வித்தாகிய உருக்கமே விளைகிறது. ஒருவருடைய உருக்கம் பலரிடம் உருக்கத்தை உண்டாக்குகிறது. முதலில் உருகிப் பாடியவர் ஒருவர். அவர் பாட்டைப் படிக்கிறவர் கள் எல்லாரும் பின்னால் உருகுகிறார்கள்.

கலைஞன் மனோபாவம்

நான் ஒரு தலத்தில் உள்ள முருகன் கோயிலுக்குச் சில நண்பர்களுடன் சென்றிருந்தேன். கோயிலின் மேல் விதானத்தில் ஒரு சித்திரக்காரர் அழகான வண்ணங்களை எல்லாம் குழைத்துக் கந்தபுராணக் கதையை ஓவியமாகத் தீட்டியிருக்கிறார்; ஆறு படை வீட்டையும் எழுதியிருக்கிறார். சித்திரத்தைப் பார்த்துக் கொண்டே வரும்போது என்னுடன் வந்தவர்களில் ஒருவர், “சித்திரம் எப்படி இருக்கிறது? எப்படி இருக்கிறது?” என்று கேட்டுக் கொண்டே வந்தார். நான் விடை ஒன்றும் சொல்லாமல் அண்ணாந்து பார்த்துச் கொண்டே சென்றேன். எங்களுக்கு முன்னால் வேறு சிலரும் அந்தப் படங்களைப் பார்த்துச் சென்றார்கள். அவர்களிலே ஒருவன் வள்ளியெம்பெருமாட்டியின் படத்தைப் பார்த்து விட்டு, “இது இன்னவள் மாதிரி இல்லையா?” என்று ஒரு சினிமா நடிகையின் பெயரைச் சொன்னான். அப்படியே மற்றப் படங்களையும் பார்த்துக் கூறினான். உடனே நான் பக்கத்தில் இருந்தவர்களிடம், “படம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொண்டீர்களா?” என்று சொன்னேன். அவர்கள் விழித்தார்கள்.

இறைவனை நினைந்து நினைந்து உருகி அப்படத்தை ஓவியன் தீட்டியிருந்தால் அந்தப் படத்தைப் பார்க்கும் போது பார்க்கிறவர்களுக்கு இறைவனின் நினைப்பு உண் டாகும். ‘ஆறுமுகக் கடவுளின் படம் போட்டிருக்கிறேன்’ என்று எதையோ நினைத்துக்கொண்டு ஆறுமுகங்களுடைய ஓர் உருவத்தைத் தீட்டிவிட்டால், அந்தச் சித்திரம் ஆறுமுக நாதனை நினைக்கச் செய்துவிடாது. உள்ளத்தில் பல காலம் நினைந்து நினைந்து உருகினால் அன்றி எழுத வராது. வெறும் பழக்கத்தினால் எழுத வராது. எம்பெருமானுடைய மூர்த்தத்தைக் கண்ணால் காண வேண்டும்; கருத்தைச் செலுத்தி உள்ளம் உருக வேண்டும். உருகி உருகிக் கண்ணை மூடிக்கொண்டு உள்ளக்கிழியில் அவன் திருவுருவத்தை முதலில் எழுதிக்கொள்ள வேண்டும். அப்படி எழுதிக் கொண்டு உருகுகிறவனுக்கு உடம்பெல்லாம் கிளுகிளுக்கும் ; புளகம் போர்க்கும்; அப்புறம் அவன் எழுத ஆரம்பித்தால் அதே உருக்கத்தை, அதே கிளர்ச்சியை, பார்க்கிறவளிடம் உண்டாகும்படி வண்ண ஓவியம் அமைக்கலாம்.

கவிஞன் எழுதுகிற பாடல்களும் அத்தகையனவே. காணுகிற காட்சியினால் அவன் உள்ளத்தில் கிளர்ச்சி மிகும்போது. உணர்ச்சி பொங்கும்போது, பாடல்கள் தாம் உண்மையான கவிகள்.

உளம் கொண்டு தெள்ளித்
பாடுகின்ற
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை
சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே!”

என்று சகல கலாவல்லியாகிய வாணியைத் துதிக்கிறார் குமரகுருபரர். அவள் கருணையை உள்ளத்தில் கொண்டு, உணர்ச்சிகளை உள்ளத்தில் கொண்டு, நினைந்து நினைந்து பார்த்து, உருகுகின்றவர்களுக்கு அதன் வெளியீடாகப் பாட்டுப் பிறக்கிறது. அப்படி இறைவனை நினைந்து நினைந்து உருகிப் பாடிய கவியைப் படித்தால் நம் மனம் உருகும். “அத்தகைய மனத்தை உருக்குகின்ற கவியைக் கேட்டு இருப்பீர்” என்று நமக்கு உபதேசம் செய்கிறார் அருணகிரியார்.