மனோலயமும் மனோநாசமும்

“இறைவன் நாமத்தைக் கேட்பதனாலே, கவியைக் கேட்டு உருகுவதனாலே, எப்படி ஐயா யமனை வெல்ல முடியும்?” என்பது ஒரு கேள்வி. இறைவன் கவியைக் கேட்கும்போது காற்றைப் போலச் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிற மனம் ஒருமைப்பாடு அடைகிறது. உலகத்திலுள்ள எல்லா மதங்களும் இறைவனுடைய தத்துவத்தைப் பற்றி எப்படிச் சொன்னாலும், மோட்சத்தைப்பற்றிய இலக்கணத்தை எப்படிச் சொன்னாலும், மனத்தை அடக்கி ஒருமைப்பாடு அடைவது அவசியம் என்பதில் வேறுபடவில்லை. இதைப்பற்றி வற்புறுத்திச் சொல்லாத ஞானிகள் உலகத்தில் எங்குமே இல்லை.

மனம் ஒருமைப்பட்டுச் செத்துப் போவதுதான் சமாதி நிலை. குறிப்பிட்ட சமயத்தில், குறிப்பிட்ட வேளையில் மனம் அடங்கிக் கட்டுப்பட்ட நிலையில் இருப்பது மனோ லயம். இப்படி மனம் அடங்கி நிற்கவேண்டுமானால் அடுத் தடுத்துத் தியானம் பண்ணவேண்டும். தியானம் பண்ணிப் பண்ணி மனம் ஒன்றை நினைத்து நிலைபெற்று நிற்கும்போது மனோலயம் உண்டாகிறது. அந்த மனோலயம் நீடிக்கும் போதுதான் கருவிகரணங்கள் சுழன்று சமாதி நிலை உண்டாகும். சிலருக்கு அந்நிலை கோழித் தூக்கம் போல் இருக்கலாம். அது சவிகற்ப சமாதி. சிலருக்குக் காடாந்த காரத் தூக்கமாக இருக்கும். அது நிர்விகற்ப சமாதி. சகஜ சமாதி என்பது தூக்கமே இல்லாத நிலை. விழித்துக் கொண்டுள்ள போதே தாமரை இலைத் தண்ணீர்போல ஒட்டாமல் இருப்பது அது. நம்மைப்போலவே அவர்களும் நடந்து கொண்டும், உட்கார்ந்து கொண்டும் இருப்பார்கள். ஆனால் மனம் செயல்படாது; அது நாசமாகிவிடும். நமக்கு அந்த நிலை வரவேண்டுமென்றால் முதலில் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிற மனத்தை நிறுத்தப் பழக வேண்டும்.

நிற்பதாவது, பலவற்றை எண்ணுகின்ற எண்ணம் மாறி, ஒன்றையே எண்ணி ஒருமைப்படுதல். ஒன்றையே எண்ணுகின்ற நிலை வரவேண்டுமானால் இறைவனைப் பற்றி நினைக்க வேண்டும். அவன் திருவடியை நினைந்து தியானம் செய்ய வேண்டும். எங்கெங்கோ அலைந்து திரிந்து கொண்டிருக்கிற மனம் ஒன்றைப் பற்றியே நினைக்கும் போது நிற்கிறது. நெடுநேரம் நிற்கும்போது தூங்குகிறது. தூங்கிப் பழகினால் கடைசியில் செத்துப் போகிறது. அதை மனோ நாசம் என்பார்கள். அது படிப்படியாக வரவேண்டும். மனோலயம் இன்றி மனோநாசம் உண்டாகாது.

நம் கையில் அகப்படாமல் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிற மனத்தை அடக்கி நிற்கவைத்துப் பிறகு தூங்கப் பண்ண வழி என்ன?

பொந்தும் பறவையும்

ஒரு மரப் பொந்துக்குள் பறவை ஒன்று இருக்கிறது. அதைப் பிடிக்க வேண்டுமென்றால் பறவை பறந்து போகாத படி பொந்துக்குள் கையை விட்டு அப்படியே அமுக்கிப் பிடிக்கவேண்டும். இந்த மரமாகிய உடம்பிலோ ஐந்து பொந்துகள் இருக்கின்றன. இதற்குள் மனமாகிய பறவை ஒளிந்து கொண்டிருக்கிறது. ஒரு பொந்தின் வழியாகக் கையை விட்டுப் பிடிக்கப் போனால் வேறு ஒரு பொந்தின் வழியாக வெளியே ஓடிவிடுகிறது. இந்த ஐந்து பொந்துகளுள் ஒன்றின் வழியாகத்தான் அதைப் பிடித்தாக வேண்டும். வேறு பொந்துகள் இல்லை. என்ன செய்வது?

கண்ணாகிய பொந்தை அடைத்துப் பிடிக்கலாம் என்று கோயிலுக்குச் சென்று, இறைவன் திருவுருவத்தைப் பார்த்துக் கண்ணை மூடிக்கொண்டால் அவன் திருவுருவம் மனத்தில் வரமாட்டேன் என்கிறது. வாயாகிய பொந்தை அடைக்க அயில்வேலன் கவியைப் பிழையறக் கற்றுச் சொல்லலாம் என்றால், அதுவும் நம்மால் முடியவில்லை. வாய் சொல்லிக் கொண்டே இருக்கிறது; மனம் எங்கோ ஓடிவிடுகிறது. “ஐயோ! எங்களுக்கு வேறு வழி கிடையாதா?” என்று அழுகிற மக்களை இரக்கத்தோடு பார்த்துச் சொல்கிறார் அருணை முனிவர்.

“ஆண்டவன் உங்களுக்குக் காது கொடுத்திருக்கிறான் அல்லவா? அந்தக் காதின் வழியாக மனத்தைப் பிடித்து அடக்க உபாயம் சொல்கிறேன்” என்று மற்றொரு வழி காட்டுகிறார்.

கவி கேட்டு உருகுதல்

அன்பினால் இளகாத மனத்தைக் கல் என்பர். செறிவோடு இருக்கிற நமது நெஞ்சக் கன கல் நெக வேண்டும்; உருக வேண்டும். கல்லாலான மலையையே, கிரௌஞ்ச கிரியையே, கிழித்து எறிந்த பெருமான் யாரோ அவனுடைய புகழைக் கேட்டால் நமது வன்மனப் பாறை நெக்குவிட்டுக் கிழிந்துபோகும்.

கிழியும்படி அடல்குன்று எறிந்தோன் கவிகேட்டு
உருகி…… இருப்பீர்!

நாம் உருகி இருக்க வேண்டும். கேட்டு உருகி இருக்க வேண்டும். எதைக் கேட்டு உருகி இருக்க வேண்டும்? கவி கேட்டு உருகி இருக்கவேண்டும். யாருடைய கவியை? கிழியும்படி அடல் குன்று எறிந்தோன் கவியைக் கேட்டு உருகி இருக்கவேண்டும் என்கிறார் அருணகிரியார். இது முதல் பயிற்சி.

கவிஞர் உள்ளம்

கவியைக் கேட்டால் உருக்கம் உண்டாகுமா? உருக்கத்தை உண்டாக்குவதற்கு அதில் என்ன இருக்கிறது?

கவி உண்மையான கவிஞனிடத்தில் பிறக்கிறது. கவிஞனுடைய மனப்பண்போ மலரினுடைய மென்மை, தண்மை, மணம் முதலியவை போன்றது. கடினமான பொருளினிடம் மணம் இராது. மலர் அரும்பாக இருக்கும்போது கடினமாக இருக்கிறது. முனை குவிந்து இருக்கிறது. அப்போது வாசனை இல்லை. அதுவே மலரும்போது தண்மை உடையதாக, மென்மை உடையதாக, மணம் உடையதாக ஆகிவிடுகிறது,

பக்குவம் அடையாதபோது நம்முடைய உள்ளம் கடினமாகக் குவிந்திருக்கிறது. நல்ல பக்குவம் அடைந்துள்ள கவிஞர்களுடைய உள்ளமோ சிறிய காற்று அடித்தாலும் அசைந்தாடுகிற மென்மை உடையதாகி விடுகிறது. அவர்கள் உள்ளம் விரிந்து கிடப்பதனாலே அவர்கள் காணுகின்ற சின்னஞ்சிறிய சம்பவங்களும் அதில் ஆயிரம் ஆயிரம் உணர்ச்சி அலைகளை எழுப்புகிறது.

கலைமகள் தாமரையில் இருக்கிறாள் என்று சொல்வார் கள். வெண்மையான தாமரை அது; மென்மையான தாமரை; மணமுள்ள இதழ்களை உடைய தாமரை; அதில் கலைமகள் வீற்றிருக்கிறாள். வெண்டாமரையைப் போன்ற பண்புகளையுடைய உள்ளத்தில் உண்மையான கவி மணம், கலை மணம் கமழ்கிறது என்பது இதன் பொருள். கவிஞனுடைய உள்ளம் விருப்பு வெறுப்பு இல்லாத தூய வெள்ளைத் தன்மை உடையதாக இருக்கும்.

வேதாந்தியும் கவிஞனும் உள்ளதை உள்ளபடியே பார்க்கிறார்கள். வேதாந்தி பார்க்கிறான்; சொல்வது இல்லை. கவிஞன் பார்க்கிறான்; அழகாகச் சொல்லி விடுகிறான். இவர்களுடைய உள்ளங்கள் வெண்மையாக, தண்மையாக, விரி வாக, மணமுள்ளனவாக இருக்கின்றன.

ஒரு குழந்தை அழுதாலும் போதும்; அந்தச் சத்தத்தை வைத்துக்கொண்டு நூறு பாடல்களைப் பாடிவிடுவான் கவிஞன். அவன் உள்ளம் அத்தனை மென்மையானது; நுட்பமானது; சிறு சம்பவங்களையும் பிரதிபலிக்கிற ஆற்றல் அதற்கு உண்டு. கோபமாக இருக்கலாம்; தாபமாக இருக்கலாம்; அவன் உள்ளத்தின் வழியே புகுந்து வரும்போது அதுவே பெரிய காப்பியம் எழக் காரணமாகி விடுகிறது. வாழ்க்கையில் துன்பம் அளிப்பன எல்லாம் அவன் காவியத்தில் இன்பமாக இருக்கும்

வாழ்க்கையும் கலையும்

வாழ்க்கைக்கும் வாழ்க்கையை ஓவியமாக்கும் காவியத்துக்கும் உள்ள வேறுபாட்டைப் பாருங்கள். வாழ்க்கையில் இருப்பது நிகழ்ச்சி; காவியத்தில் இருப்பது கற்பனை. வாழ்க்கையில் உண்டாவன சுகதுக்கங்கள்; காவியத்தில் உண்டாவது சுவை. பக்கத்து வீட்டு அம்மாளுடைய குழந்தை இறந்து போய் விட்டது. பிணத்தை வைத்துக்கொண்டு அவள் அலறுகிறாள். அங்கே சென்றால் நாமும் அழுகிறோம். அந்தத் துயரம் யாருக்கும் வர வேண்டாம் என்று நினைக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் சோக உணர்ச்சி உண்டாகிறது. மயான பூமியில் தன் பிள்ளை லோகிதாசனைப் போட்டுக்கொண்டு சந்திரமதி அலறுகிறாள். இந்தக் கட்டத்தை அநுபவிக்க வேண்டுமென்று போட்டி போட்டுக் கொண்டு அரிச்சந்திர நாடகத்திற்கு ஒடுபவர்கள் எத்தனையோ பேர்கள். இது நிகழ்ச்சியன்று; கலையில் ஒரு கற்பனை. இங்கே உண்டாவது சோக நிகழ்ச்சி அன்று ; சோக ரசம், அவலச் சுவை. குஷ்ட வெறுத்து ரோகியைத் தொடமாட்டோம்; பார்க்கவே அப்பால் போய்விடுவோம். குஷ்டரோகி வேஷம்போட்டுப் பாட்டுப் பாடி ஒருவன் நடிக்கிறான். அந்த இடத்திற்கு ஐந்து ரூபாய் டிக்கெட் என்றாலும் வாங்கிக்கொண்டு போவோம். காரணம், அங்கே குஷ்டரோகி போல நடிப்புக் காட்டி உயர்ந்த தத்துவத்தைப் புலப்படுத்துவதால், ரசமாக அந்தக் காட்சி அமைந்திருப்பதுதான்.

வாழ்க்கையிலுள்ள இப்படிப்பட்ட பல விதமான உணர்ச்சிகளைக் கொண்டு ரசத்தை எடுத்துக் கொடுப்பவர்கள் கவிஞர்கள். கவி பாடுவதற்கு முன்பு அவர்கள் உள்ளம் மெழுகாக அந்த அந்த உணர்ச்சிகளைக் கற்பனை செய்து நெகிழ்ந்து நெகிழ்ந்து உருகுகிறது. பின்புதான் அவ்வுணர்ச்சிகளைச் சுவையாக்கிக் காப்பியமாக வடித்தெடுத்து நம்மையும் உருகச் செய்கிறார்கள்.

கவிஞனுடைய உள்ளத்திலும் ஞானப்பசியுள்ளவனுடைய உள்ளத்திலும் பார்த்தவுடன் எந்தக் காட்சியும், எந்த உணர்ச்சியும் பதிவதைப்போல வேறு யாருக்கும் பதிவது இல்லை.