இருவகைக் கவிகள்
மனிதன் தான் வாழ்கிற பிரபஞ்சத்தைச் சில நயம் கருதி வெவ்வேறாகச் சொல்வது வழக்கம். தொழிலாளர் உலகம், அரசியல் உலகம், புலவர் உலகம் என்று வெவ்வேறு கூட்டத்தையே வெவ்வேறு உலகமாகப் பிரித்துச் சொல்வதைப் பார்க்கிறோம். பழங்காலத்திலும் அப்படித்தான் பிரித்தார்கள். அந்தப் பிரிவுக்குள் மிகவும் முக்கியமானவை இரண்டு. அவை சப்தப் பிரசஞ்சம், அர்த்தப் பிரபஞ்சம், என்பன. சப்தம் மாத்திரமாக இருக்கிற உலகம் ஒன்று. பொருளாக இருக்கிற, பண்டமாக இருக்கிற, உலகம் ஒன்று. இவற்றை ஒலி உலகம், பொருள் உலகம் என்று தமிழிலே சொல்லலாம்.
ஒலி உலகம்
காதாலே கேட்பது ஒலி. ஏனைய இந்திரியங்களினால் நுகர்வது பொருள். ஒலி உலகம் என்று சொல்கிற சப்தப் பிரபஞ்சம் நாதத்தின் கூறுபாடு. நாம் பேசுகிற பேச்சு ஒலி உருவாக வருகிறது. இந்த ஒலியானது பஞ்ச பூதங்களுள் ஒன்றான ஆகாசத்தின் சம்பந்தம் உடையது. ஒலியோடு சம்பந்தமுள்ள வெளியே – ஆகாசமே -பஞ்சபூதங்களில் முதலில் தோன்றியது; முதலில் தோன்றும் தத்துவம் நாதந்தான்.
வாயும் காதும்
மனிதனுடைய அவயவ அமைப்பில் பார்த்தாலும் வாய் சிறப்பாக அமைந்திருக்கிறது. வாய் மாத்திரம் இருந்தால் போதாது. வாயினால் சொல்வதைக் கேட்கக் காதும் வேண்டும். காதும், வாயும் சேர்ந்தால் தான் முழுப்பயனும் உண்டாகும். முன்பு டெலிபோன் அமைப்பு ஒருவகையாக இருந்தது. அதாவது இரண்டு கருவிகள் இருக்கும்; ஒன்று பேசுவதற்கும், மற்றொன்று கேட்பதற்குமாக அமைந்திருந்தன, அதில் ஒன்று பழுதுபட்டாலும் மற்றொன்றினால் பயன் இராது. இப்போதோ ஒரே கருவியின் ஒரு தலைப்பில் பேசுகிறோம். மற்றொரு தலைப்பைக் காதில் வைத்துக் கொண்டு கேட்கிறோம். இதைப் பார்க்கும்போது எனக்கு மனிதனது வாயும், காதுமே நினைப்பு வருகின்றன. ‘வாயுடையவன் பேசுகிறான். காது உடையவன் கேட்கிறான்’ உடையவன் பேசும் போதே என்று இல்லாமல் வாய் அவனும் காது உடையவன் ஆதலால் எதிராளி பேசுவதைக் கேட்கவும் முடிகிறது. பேசவும் பேசுகிறான்; கேட்கவும் கேட்கிறான்.
பேசுவது அதிகம் வேண்டுமா? கேட்பது அதிகம் வேண்டுமா? ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். பேச்சை வெள்ளி என்றும், மௌனத்தைத் தங்கம் என்றும் சொல்வர். (Speech is silver and silence is golden) வெள்ளி உயர்வா, தங்கம் உயர்வா என்று நான சொல்ல வேண்டும்? பேசுவதைவிடக் கேட்பது உயர்வுதான். இதை மற்றொரு வகையாலும் தெரிந்து கொள்ளலாம்.
பேசுகிற கருவியாகிய வாய் இறைவனுடைய படைப்பிலே ஒன்றுதான். கேட்பதற்குரிய கருவியாகிய காதோ இரண்டு உள்ளன. ஆகவே, “ஒரு பங்கு பேசு; இரண்டு பங்கு கேள்” என்று ஆண்டவனே இவ்வகை அமைப்பினால் தெரிவித்திருக்கிறான்.
எப்பொழுதும் கேட்பது அதிகமாகவும், பேசுவது குறைவாகவும் இருக்கவேண்டும். இதற்கு இறைவனுடைய படைப்பே அநுகூலமாக இருக்கிறது. நாம் எப்போது பார்த்தாலும் வாயைத் திறந்துகொண்டிருப்பது இல்லை. பேசும் போது ஒலிகளைச் சரியாக வெளிப்படுத்துவதற்குப் பயன்படு கிற உதடுகள், பேசாதபோது வாயை மூடிக் கொள்ளவும் பயன்படுகின்றன. அப்படியே கண்ணை மூடிக்கொள்ளக் கண்ணோடு ஒட்டியிருக்கும் இமைகள் உதவுகின்றன. ஆனால் காதை மூடிக்கொள்ளக் காதுடன் இணைந்த உறுப்பு எதுவும் இல்லை. வேண்டுமென்றால் கையால் தான் மூடிக்கொள்ள வேண்டும். இல்லையானால் விமானப் பிரயாணத்தின்போது பஞ்சை வைத்துக் காதை அடைத்துக் கொள்ளுவதுபோல் எதையாவது வைத்து அடைத்துக் கொள்ளவேண்டும்.
பிறர் சொல்வதைக் கேட்டுக் கொண்டே இரு என்பது போல ஆண்டவன், கதவு வைக்காத திறந்த வாசலுடையனவாகக் காதுகளை வைத்திருக்கிறான். இந்தக் காதுகளை நன்றாகப் பயன்படுத்திக் கொள்வது நம்முடைய வேலை.
பேச வேண்டுமானால் கற்றுத் தெளிந்து பேச வேண்டும். யோசனை பண்ணிப் பேச வேண்டும். நல்ல பேச்சைப் பேச வேண்டும் என்று வரையறை இருப்பதுபோலக் கேட்பதற்கு இல்லையா? உண்டு. ‘நல்லவற்றை விரும்பிக் காதால் கேட்க வேண்டும்; அப்படிக் கேட்டால் காலனை வென்றுவிடலாம்’ என்ற உறுதியை அருணகிரியார் இந்தப் பாட்டில் நமக்கு உண்டாக்குகிறார்.
உயர்ந்தவருக்கு உபதேசம்
சென்ற பாட்டில்தான் காலனை வெல்வதற்குரிய வழியை அழாக எடுத்துச் சொன்னார். ‘ஆங்காரம் அடங்க வேண்டும்; ஒடுங்க வேண்டும்; பரமானந்தத்தே தேங்கவேண்டும். நினைப்பும் மறப்பும் அறவேண்டும்; தினைப்போதளவாவது- ஓங்காரத்து உள் ஒளிக்குள்ளே முருகன் உருவம் கண்டு தூங்க வேண்டும்; தொழும்பு செய்யவேண்டும்’ என்று சொன்னார். அவர் சொன்ன அந்த விஷயங்களைக் கொள்ளலாம் என்றால் அவற்றுக்கும் நமக்கும் நெடுந்தூரம் என்று தோன்றுகிறது. அவற்றைப் பின்பற்றி உய்வுபெற வேண்டுமானால் பல பிறவி வேண்டியிருக்கும் போல மலைப்புத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட சாதனைகளைப் புரியும் ஆற்றல் உடையவர் களுக்கு, மனப்பக்குவம் உடையவர்களுக்கு, அந்தப் பாட்டு மிக உயர்ந்த வழிகாட்டியாக இருக்கலாம். ஆனால் நம்முடைய நிலையில் இருப்பவர்கள்தாம் மிக அதிகமானவர்கள். படித்தவர்களை விடப் படிக்காதவர்கள் நம் நாட்டில் அதிகம் அல்லவா?
மற்றவர்களுக்கு உபதேசம்
பி.ஏ. படித்துத்தேர்ச்சிபெற்றவன் ஒருவனைப் பார்த்து. “மாநிலக் கல்லூரியில் எம். ஏ. வகுப்பில் சேர்ந்து விடப்பா” என்று சொல்கிறோம். வேறு ஒருவன் பள்ளிக் கூடம் போகாமலேயே இருக்கிறான். “அப்பா, சும்மா இராதே. ஆரம்பப் பாடசாலையிலாவது போய்ச் சேர்” என்று சொல்கிறோம். இருவரையும் படி என்று தான் சொல்கிறோம். இரண்டும் வேறு வேறாகத் தொடர்பு இல்லாதனவாகத் தோன்றுகின்றன. ஆரம்பப் பாடசாலையில் சேர்ந்து படிப்பவன் தொடர்ந்து படித்தால் மாநிலக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் தகுதியை அடைவான். பி.ஏ.யில் தேர்ச்சி பெற்றவன் ஆரம்பப் பாடசாலையில் படிக்காமலா அந்த நிலைக்கு வந்துவிட்டான்?
உத்தியோகம் பெற வேண்டுமென்றால் என்ன செய்வது? பள்ளிக்குப் போய்ப் படித்துத் தேர்ச்சிபெற வேண்டும். அப்படி நாளைக்கு யமன் வந்தால் என்ன செய்வது? ஆங்காரம் அடங்கி,ஒடுங்கத் தெரியவேண்டும். ஓங்காரத்துள்ளொளிக் குள்ளே முருகன் உருவம் கண்டு தூங்கத் தெரிய வேண்டும். தொழும்பு செய்யத் தெரியவேண்டும்.
இவற்றில் ஒன்றும் நமக்குத் தெரியாது. யமனை வென்று விட வேண்டுமென்ற ஆசை மட்டும் இருக்கிறது. மேலே சொன்னவற்றையெல்லாம் வரிசையாகச் சாதகம் செய்யலாமே என்றால், அவற்றைக் கேட்கும்போதே பயமாக இருக்கிறது. அப்படிப் பயப்படும் நமக்குத் தைரியம் அளிப்பாரைப் போன்று, “யமனை வெல்வதற்கு மற்றொரு வழி சொல்கிறேன். இது மிகவும் எளிதான வழி. நீ பெரிய யோகம் எதுவும் பண்ணவேண்டாம். இந்திரிய நிக்கிரகம் பண்ணி யோகம் பண்ணுகிறவர்கள் எல்லாரும் கடைசியில் அடைகிற இன்பம், சமாதி நிலைதான். உனக்கு அந்த இன்பத்தை அடைவதற்குரிய மற்றொரு வழியைச் சொல்லிச் தருகிறேன்” என்று மார்க்கதரிசியாகிய கருணாமூர்த்தி அருணகிரியார் இந்தப் பாட்டை அருளுகிறார்.
செய்யத் தக்கதும் செய்யத் தகாததும்
கிழியும்படி அடல் குன்று எறிந்தோன் கவி கேட்டு
உருகி
இழியும் கவி சுற்றிடாது இருப்பீர்!
‘இன்னதைச் செய்யுங்கள்; இன்னதைச் செய்யாதீர்கள்’ என்று வழி சொல்கிறார். எதைச் செய்ய வேண்டும்? அழகான கவியைக் கேட்கவேண்டும். எதைச் செய்யக் கூடாது? அல்லாத கவியை, இழியும் கவியைக் கேட்கக் கூடாது; கற்கக்கூடாது. இப்படிச் செய்தால் பயன் என்ன? யம பயம் ஏற்படாது.
தேர்தலில் எத்தனை பேர்களைப் பார்த்தோம்! “ஐயா, காதுப் பெட்டியில் வோட்டுப் போடுங்கள். கண்ட பெட்டியில் போடாதீர்கள். உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள்” என்று நம்மிடம் வந்து வோட்டுக் கேட்கிறார்கள். “கடன் வாங்கிச் செலவு பண்ணிவிடப் போகிறான் ஐயா. நாளைக்குக் கடன்காரன் வழக்குப் போடுவானே! வாரண்டு கொண்டு வந்து நீட்டுவானே! ஜப்திக்கு அமீனா வந்துவிடுவானே! இவற்றை எல்லாம் மறந்து கடன் வாங்கிக் கொண்டிருக்கிற அவனிடம் இப்படியெல்லாம் வரும் என்று சொல்லக் கூடாதா?” என்று சிலர் சொல்கிறார்கள். இந்த மாதிரியாக அருணகிரியார் இப்போது பேசுகிறார்.
“நாளைக்கு யமதூதன் வந்துவிடுவானே! அவன் நம்மை இழுத்துக் கொண்டு போகிற வழியும், கொண்டு போய்த் தள்ளுகிற குழியும் சொல்ல முடியாத துன்பத்தை அளிக்குமே! எரி வாய் நரகக் குழியும் கூற்றுவன் ஊர்க்குச் செல்லும் வழியும் மிக்க துயரமாக இருக்குமே! இவற்றையெல்லாம் மறந்துவிட்ட உங்கள் நண்பர்களுக்கு இவற்றைக் கொஞ்சம் எடுத்துச் செல்லுங்கள், சொல்லுங்கள்’ என்று நம்மைப் பார்த்து முறையிட்டுக் கொள்கிறார்.
போன பாட்டிலே, “இவற்றையெல்லாம் செய்யார் என் செய்வார் யமதூதருக்கே?” என்று இரங்கி எதிர்மறை முகத்தால், “இவற்றையெல்லாம் செய்வார் யமதூதருக்கு அஞ்சார்” என்கிற உண்மையைப் புலப்படுத்தினார். இந்தப் பாட்டிலோ, “இறைவன் கவியைப் கேளுங்கள். அல்லாத கவியைக் கேளாதீர்கள். இதை மறந்தவர்களுக்கு நாளைக்கு வரப்போகிற யம பயம். நரக வாதனை இவற்றையெல்லாம் எடுத்துப் பகரீர், பகரீர்” என்று சொல்வதன் மூலம், “இழிந்த கவியைக் கற்றிடாமல், இறைவன் கவியைக் கேட் பவர்களுக்கு யம பயம் இல்லை; நரக வாதனை இல்லை” என்கிற உண்மையைப் பெற வைக்கிறார்.