தன்னை மறத்தல்
தம்மை மறந்த நிலை வேண்டுமென்றுதான் சிலபேர் உயர்ந்த சாராய வகைகளைச் சாப்பிடுகிறார்கள். சாராயம் குடித்த அவர்கள் தம்மை மறக்கிறார்கள். தம்மை மறந்தாலும் அவர்களுடைய பொறி புலன்கள் எல்லாம் வேலை செய்கின்றன. உடம்பு கட்டை மாதிரி கிடக்கவில்லை, அப்போது அவர்களுக்கு இருக்கிற சுகம் எவ்வளவு தெரியுமா? அதற்காகத்தானே திரும்பக் குடிக்கிறார்கள்? நமக்கு அப்படிச் சுகம் வரவேண்டாம். சாராயம் குடித்தவன் அடைகிற இன்பம் மறுபடியும் புத்தி தெளியும்போது இருப்பதில்லை.தெளிந்த நிலையில் அவனுக்குத் துன்பம் விளைகிறது. அவன் இருட்டில் இருக்கிறவன். ஜீவன் முக்தர்களும் ஒரு வகையில் அவனைப் போன்றே இன்பநிலை எய்துகிறார்கள் என்றாலும் அவர்கள் ஒளியில் சுகம் அனுபவிப்பவர்கள்.
தூங்குதல்
முருகன் உருவம் கண்டு தூங்கும் தூக்கம் நாம் தூங்கும் தூக்கம் போன்றது அல்ல; நாம் விழித்திருக்கும் விழிப்பும் அல்ல. அந்த நிலையில் இருப்பவர்களின் பொறிபுலன்கள் எல்லாம் செயல்படுவன போன்று தோன்றினாலும் அது தூக்கந்தான். நான் என்பது இல்லாமையினால் அது தூக்கம் ஆகிறது.
இந்த நிலையை மக்கள் அடையவில்லையே என்று அருண கிரிநாதர் இரங்குகிறார். “ஆங்காரம் அடங்கி, ஒடுங்கி, பரமானந்தத்தே தேங்கி, நினைப்பும் மறப்பும் அற்றுப் போகலேண்டும். இந்தத் தலை நிலையை அடைவதற்கு ஆரம்ப நிலையாகிய ஓங்காரத்து உள்ளொளிக்குள்ளே முருகன் உருவம் கண்டு தூங்கக் கூடாதா?” என்கிறார்.
தினைப்போதளவு
ஓங்காரத்துள்ளொளிக்குள்ளே முருகன் உருவம் கண்டு ஒருநாள் முழுவதும் தூங்கவேண்டாம். ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி, ஒரு மணிக்கு அறுபது நொடிகள். என்றெல்லாம் பாகுபாடு பண்ணிக்கொண்டு செயல் செய்து வருகிற நாம், முருகன் உருவத்தைப் பிரணவ ஒளி வட்டத்திற்குள் கண்டு தியானம் செய்ய ஒரு தினைப்போதளவாவது முயற்சி செய்யக்கூடாதா என்கிறார்.
தினைப்போதளவும்
ஓங்காரத்து உள்ளொளிக்குள்ளே முருகன் உருவம்
கண்டு தூங்கார்.
கொஞ்ச நேரம் தியானம் செய்யக்கூடாதா என்று சொல்ல வருகிறார் அருணகிரியார். கொஞ்ச நேரத்தைக் குறிக்க, “தினைப் போதளவு” என்று சொல்கிறார். கடுகளவு காலம் என்று சொல்லியிருக்கலாம். எள்ளளவு நேரம் என்றும் கூறியிருக்கலாம்.
அவர் எப்போதும் முருகனையும் வள்ளியெம் பெருமாட்டியையும் நினைந்து வாழ்ந்து கொண்டிருந்தவர். வள்ளியெம் பெருமாட்டியிடத்தில் முருகன் காதல் கொண்டு அவளை ஆட்கொண்ட போது அவள் அவனுக்குத் தேனும் தினை மாவும் தந்தாள். வள்ளி தினையைக் கொடுத்து முருகனை அடைந்தாள். நாமும் தினைப்போதளவு காலத்தில் நெஞ்சைக் கொடுத்து அவன் திருவருளைப் பெற முடியாதா என்ற நினைப்பு அவருக்கு வருகிறது. பின்னே முடிவாக வரும் மிகமிக உயர்ந்த தூக்கத்தைச் சொல்கிறார். முன்னே சிறிய அளவு சொல்லவேண்டிய அவசியம் வந்தவுடன், அதுவும் இறைவன் சம்பந்தமான நினைப்பாக, தினையாக வந்து நிற்கிறது.
தினைப்போதளவும் ஓங்காரத்து உள்ளொளிக்குள்ளே
முருகன் உருவம் கண்டு தூங்கார்.
தொழும்பு செய்தல்
இறைவன் திருவருளில் ஈடுபட்டு, தியானத்தில் புகுந்து ஓங்கார ஒளி வட்டத்திற்குள் முருகனது திருவுருவத்தைக் கண்டு தூங்கினால் போதுமா? உலகத்திற்குத் தொழும்பு செய்ய வேண்டும்.
தொழும்பு செய்யார்.
தொழும்பாவது, தொண்டு. எம்பெருமான் திருவருளினால் பலவிதமான குண நலன்களைப் பெற்று அகங்கார மமகாரம் அற்றுப்போய்த் தொண்டு செய்கின்ற நெறி எளிதில் வராது. உல்கத்தில் உள்ள உயிர்களுக்குத் தொண்டு செய்பவன் இறைவனுக்குத் தொழும்பு செய்தவன் ஆகிறான்.
கால ஜயம்
அப்படி வந்துவிட்டால்,
“தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கி உன்னைத்
திண்டாட வெட்டி விழவிடுவேன்“
என்று அருணகிரியாரைப் போலச் சொல்லலாம். அவர் அவ்வாறு என்ன தைரியத்தில் சொல்கிறார் என்பதை முன்பே பார்த்தோம். காலனைப் பார்த்து,
“செந்தில் வேலனுக்குத்
தொண்டாகிய என் அவிரோத ஞானச் சுடர்வடிவாள் கண்டாயடா அந்தா வந்துபார் சற்றுஎன் கைக்கெட்டவே“
என்று மார்தட்டி நின்றார். அப்படித் தொழும்பு அல்லது தொண்டு செய்ய வேண்டும் என்றால் அது எப்படி வரும்?
ஓங்காரத்து உள்ளொளிக்குள்ளே முருகன் உருவம் கண்டு தூங்கவேண்டும். அப்படித் தூங்கிச் சுகம் பெறுபவர்கள் இறைவனுக்கும், இறைவனுடைய குழந்தைகளாகிய ஆருயிர்களுக்கும் தொண்டு செய்வார்கள். தொழும்பு செய்வதால் தொண்டாகிய அவிரோத ஞானச் சுடர்வடிவாள் கிடைக்கும். அந்த வாளைப் பெற்று, “அந்தகா வந்துபார், என் கைக்கு எட்டவே” என்று அருணகிரியாரைப் போலக் கால ஜயம் உண்டாகும்படி பேசலாம். “அப்படிச் செய்யாதவர்கள் யமதூதர்கள் வரும்போது என்ன செய்வார்கள்?” என்று கேட்கிறார் அருணகிரியார்.
என்செய்வார் யமதூதருக்கே?
அருணகிரியாருடைய இந்தப் பாட்டு நமக்கு மிகவும் முக்கியமான உபதேசமாகும். பாட்டு மிகச் சுருக்கமாக இருந்தாலும் பல வகையான பெருக்கத்திற்கும் இடமாக இருக்கிறது. சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற பல படிகளில் உள்ள தத்துவங்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. ஆங்காரம் அடங்கி ஒடுங்கி, பரமானந்தத்தே தேங்கி, நினைப்பும் மறப்பும் அற்று, ஓங்காரத்து உள் ளொளிக்குள்ளே முருகன் உருவம் கண்டு தூங்கி, தொழும்பு செய்து காலனை ஐயம் பண்ணுவதற்கு நமக்கு வழிகாட்டி யாக இருக்கும் அருமையான பாட்டு.
ஆங்கா ரமும் அடங் கார்; ஒடுங்
கார்;பர மானந்தத்தே
தேங்கார்; நினைப்பும் மறப்பும்
அறார்; தினைப் போதளவும்
ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே
முருகன் உருவம்கண்டு
தூங்கார் தொழும்புசெய் யார்என்செய்
வார்யம தூதருக்கே?
[கோபம் அடங்கமாட்டார்; பொறிகளை அடக்கி ஒடுங்கமாட்டார்; பரமானந்தக் கடலில் செயல் இழந்து தேங்கி நில்லார்; சகல கேவல அவஸ்தைகளை நீங்கார்; தினையளவு போதாவது ஓங்காரமாகிய பிரண வத்தினுள் இருக்கும் ஒளிக்குள்ளே முருகன் உருவம் கண்டு தூங்கார்” தொண்டு செய்யார்; இத்தகையவர்கள் வாழ்நாள் இறுதியில் யமதூதர் வந்தால் அவர்களால் வரும் துன்பத்துக்கு மாற்றாக அப்போது என்ன செய்வார்கள்?
நினைப்பு – ஜாக்கிரமாகிய சகலாவஸ்தை. மறப்பு – தூக்கமாகிய கேவலாவஸ்தை. தொழும்பு-தொண்டு. யமதூதருக்கு – யமதூதரால் வரும் துன்பத்துக்கு; ஆகுபெயர். பசிக்கு மருந்து என்பதுபோலத் துன்பத்தை நீக்க என் செய்வார் என்று பொருள்கொள்ள வேண்டும்.]
இது கந்தர் அலங்காரத்தின் ஐம்பத்தைந்தாம் திருப் பாடல்.