பரமானந்தத்தே தேங்குதல்

ஆங்காரம் அடங்குதல் ஐந்து கர்மேந்திரியங்களின் செயல் குறைவதனால் உண்டாகும். ஒடுங்குதல்- ஐந்து ஞானேந்திரியங்களின் நுகர்ச்சி மெல்ல மெல்லக் குறைதல். செயல் குறைந்தால்தான் அநுபவம் குறையும். நான், எனது என எண்ணிச் செயல்படுகிற மனிதன், “ஆண்டவன், ஆண்டவனது” என்று! எண்ணினால் அந்த எண்ணம் குறையும். எல்லாம் ஆண்டவன் செய்கிறான் என்கிற நினைப்பினாலே தன் செயல் இழந்து, எல்லாப் பொருளும் ஆண்டவனுடையவை என்கிற நினைப்பினாலே தன் நுகர்ச்சியும் குறைந்து போகும். இதன் பயன் என்ன? பரமானந்தத்தே தேங்கலாம். ஆங்காரம் அடங்காதவர்கள், ஒடுங்காதவர்கள்,

பரமானந்தத்தே தேங்கார்.

பள்ளம் கண்ட இடத்தை நோக்கி நீர் ஓடுவதுபோல இன்பம் கண்ட இடத்தை நோக்கி நம்முடைய இந்திரியங்கள் எல்லாம் ஓடிவிடுகின்றன; இன்பம் எங்கே கிடைக்கும் எனத் தேடுகின்றன.

கொஞ்சம் சுகமாகத் தூங்கவேண்டும் என்றால் ஓடுகிற வண்டியில் ஏறிப் படுத்தால் தூங்க முடியுமா? ரெயில்வே நிலையத்தில் வேலை செய்கிற ஊழியர்கள் நன்றாகத் தூங்க வேண்டுமென்றால் ரெயில் வண்டியில்தான் படுத்துக் கொள்வார்கள். ஓடும் வண்டியில் படுக்கமாட்டார்கள். கவர்னர், உயர்தர அதிகாரி இவர்களுக்குத் தனியாக எங்கோ மூலையில் கிடக்கும் வண்டியில் ஏறிப் படுத்துக் கொள்வார்கள். அவர்களைப் போல நமக்கும் ஓடாத வண்டியில் ஏறிப் படுத்துக் கொண்டு தூங்கத் தெரியவில்லை. ஓடுகிற வண்டியிலேயே தூங்கப் பார்க்கிறோம்.

உடம்பாகிய வண்டி ஓடிக்கொண்டே இருக்கிறது. மனம், வாக்கு, காயம் எல்லாம் ஓடிக் கொண்டே இருக்கும் போது தூங்க முடியுமா? உலகத்தில் நாம் தூங்குகிற தூக்கம் தூக்கமே அல்ல. கருவி கரணங்கள் எல்லாம் ஓடி ஓடிக் களைப்படைந்து தளர்ந்து போய் இளைப்பாறுவதை நாம் தூக்கம் என்கிறோம். கொஞ்சம் இளைப்புத் தணிந்தவுடன் மறுபடியும் அவை ஓட ஆரம்பித்து விடுகின்றன. கருவி கரணங்கள் களைப்படையாமல் பலத்தோடு இருக்கும் போதே மனத்தை அடக்கி, வாக்கை அடக்கி, செயலை அடக்கி அவற்றின் ஒட்டத்தைத் தடுத்து நிறுத்தித் தூங்கு கிற தூக்கந்தான் உண்மையிலேயே இன்பமான தூக்கம். நாம் தூங்குகிற தூக்கத்தில் கருவி கரணங்கள் ஓய்ந்து போய் நிற்கின்றன. ஞானிகள் தூங்குகிற தூக்கத்தில் கருவி கரணங்கள் ஒழிந்து போய் நிற்கின்றன.

தூக்கம் என்பதே இன்ப அநுபவத்திற்குப் பின்தான் ஏற்படும். சிற்றின்பம் அநுபவித்த பின் அயர்ந்த தூக்கம் விளைகிறது. நல்ல விருந்து சாப்பிடுகிறான். உடனே அப்பாடி என்று படுத்துக் கொண்டு குறட்டைவிட ஆரம்பித்து விடுகிறான். அது நாக்கினால் விளைந்த இன்பம். சங்கீதம் கேட்கும் போதுதான் ஆனந்தம் என்று நினைக்கிறோம். உயர்ந்த சங்கீதமானால் கேட்கிற போது ஆனந்தம் விளைவது மாத்திரம் அல்ல; கேட்டு விட்டு வீட்டிற்கு வந்தால் சாப்பிடக்கூடப் போகாமல் உட்கார்ந்து கொண்டு கேட்டு வந்த இன்னிசையை மனத்தாலே எண்ணித் தூங்கத் தோன்றும்.

குற்றாலத்து அருவி மலையிலிருந்து பளார் பளார் என்று அலைமோதிக் கொண்டு வேகமாகக் கீழே விழுகிறது. அப்படி அடித்துக் கொண்டு வேகமாக வருகிற அருவி சம பூமிக்கு வந்தவுடனே மெல்ல ஓடுகிறது. வாய்க்கால்களிலே பாய்ந்து பாய்ந்து அதன் வேகம் மிகவும் குறைந்து போகிறது. கடைசியில் சமுத்திரத்தோடு கலந்தவுடனே தேக்கமாகி விடுகிறது. அப்படி மிக வேகமாகச் சுற்றிச் சுழன்று கொண்டு போகிற நம்முடைய பொறிகள் எல்லாம் மெல்ல மெல்ல வேகம் தணிந்து, ஒட்டம் குறைந்து, இறைவன் திருவருட் சமுத்திரத்திலே, பேரானந்த சாகரத்திலே, கலந்து விடும்போது தேக்கம் உண்டாகிறது.

பத்தித் திருமுகம் ஆறுடன் பன்னிரு
தோள்களுமாய்த்
தித்தித் திருக்கும் அமுதுகண் டேன்செயல்
மாண்டடங்கப்
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுர ளும்பர மானந்த சாகரத்தே

என்று அருணகிரியார் முன்பு பாடியுள்ளார். அந்தப் பரமானந்த சாகரத்தில் கலந்துவிட்டால் ஓட்டம் அடங்கி விடும்; தேக்கம் உண்டாகும். அடித்துச் சுருட்டிக் கொண்டு வருகிற நதி தேங்கிக் கிடக்கிற கடலோடு கலந்து விட்டால் தானும் தேங்கி விடுவதுபோல, ஆங்காரம் அடங்கி, ஒடுங்கி ஐம்புலன்களைச் சுட்டறுத்துப் பரமானந்த சாகரத்தே கலந்துவிட்டால் தேக்கம் உண்டாகும்.

நினைப்பும் மறப்பும் அறுதல்

தேக்கமாவது செயலும், அநுபவங்களும் அற்று நின்று, இன்பத்தின் உறைப்பாய் நிற்கிற நிலை. அதற்கு அப்புறம் என்ன? நினைப்பு இல்லை, மறப்பு இல்லை. இப்படி ஆங்காரம் அடங்கி, ஒடுங்கிப் பரமானந்தத்தே தேங்காதவர்கள்,

நினைப்பும் மறப்பும் அறார்

என்கிறார் அருணகிரியார்.

நாம் ஆழ்ந்து தூங்குகிறோம். தூக்கத்திலே தட்டி எழுப்பினால் எழுந்திருக்கும் போதே, “நாம் இன்னார்” என்ற அப்படியின்றி எழுந் நினைவுடனே எழுந்திருக்கிறோம். திருந்து, “நான் யார்? எங்கே இருக்கிறேன்? நீங்கள் எனக்கு என்ன வேண்டும்?” என்று யாராவது கேட்பதுண்டா? எவ்வளவு நன்றாகத் தூங்கினாலும் எழுந்தவுடனேயே, “நான் இந்த இடத்தில் இருக்கிறேன்; நான் இன்னார்” என்ற நினைவுடனே எழுந்திருப்போம்.

இந்த வாரம் ஒரு தொடர் கதையைப் படிக்கிறோம். அடுத்த வாரம் தொடர் கதையை எடுத்தவுடன் ஒரு வார இடையீட்டினால் எப்படிப் பழைய கதையை நாம் மறக்காமல் மேலே படிக்கிறோமோ அப்படித்தான், தூங்கும் போது நான் இன்னான் என்ற நினைவு இல்லாமல் அயர்ந்து தூங்கினாலும் எழுந்திருக்கும்போதே அந்த நினைவுடன் எழுந்திருக்கிறோம். இது இருட்டுத் தூக்கம். தூங்கும்போது மறக்கிறோம்; விழிக்கும்போது நினைக்கிறோம். இந்தத் தூக்கத்தைக் கேவலாவஸ்தை என்றும், இந்த விழிப்பைச் சகலாவஸ்தை என்றும் சொல்வார்கள். ஞானிகளோ கருவி கரணங்கள் தளர்ந்து போகாமல் சுறுசுறுப்பாக இருந்தாலும் அவற்றைத் தாமாகவே செயலற்றுப் போகும்படி செய்து தூங்குவார்கள். அப்போது விழிப்பும் இராது; தூக்கமும் இராது. அதுவே ஞானத் தூக்கம்.

நினைத்தேன் என்று சொன்னால் முன்பு மறந்திருந்தேன் என்பது சொல்லாமலே புலனாகிறது. மறத்தலும், நினைத்தலும் இல்லாத நிலை ஒன்று உண்டு. நாம் உலகில் வாழும் போது நம்மை மறக்கிறது இல்லை. நன்றாக மறந்து தூங்கினாலும்கூட, நம்மையும் அறியாமல், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று செயல்படுகிற மனத்தின் நான்கு பகுதிகளில் அகங்காரத்தின் விளைவாக நான் என்ற நினைவு எப் போதும் அந்தக்கரணத்தில் இருக்கிறது. அதையும் மறந்து விடுகிற ஒரு நிலைதான் இறைவனிடத்தில் ஒன்றுகின்ற சமாதி நிலை என்பர் பெரியோர். உலகத்து இருள் அகற்றி எம்பெருமானின் ஞான ஒளியோடு கலக்கிற நிலை அது.

உலகத்து ஒளி எல்லாம் நிழல் தருகிற ஒளி. விளக்கின் ஒளிக்கும் சூரியனின் ஒளிக்கும் வேறுபாடு உண்டு. விளக்குப் பிற இடத்திலே ஒளியைக் கொடுக்கிறது; தன்னிடத்திலே தன் நிழலையே பெரிதாகக் காட்டுகிறது. சூரியன் தன்னுடைய நிழலைக் கொடுக்காமல் எங்கே பார்த்தாலும் ஒளியைப் பரப்புகிறான். அவன் ஒளியிலும் நிழல் விழுகிறதே என்றால் அவன் ஒளிக்கு முன்னால் இருக்கும் கட்டிடங்கள், மரங்கள் முதலியவற்றின் நிழல்களே விழுகின்றன. ஒளிக்கு முன்னால் ஒளியைத் தடைப்படுத்துகிற பொருள் இருந்தால் நிச்சயம் நிழலும் இருக்கும்.

ஆண்டவன் அருள் ஒளிக்கு முன்னால் நான் எனது என்கிற அகங்கார மமகாரம் இருப்பதனால் மயக்கம் ஆகிய நிழல் பற்றுகிறது; நிழல் இருள் இரண்டும் இனந்தானே? பொருள் இல்லாவிட்டால் ஒளிக்கு முன்னால் நிழல் இல்லை. நிழல் விழச் செய்யும் பொருளாகிய நான் எனது என்கிற பற்று ஒழிந்து, ஜீவபோதம் போய்விட்டால், பரமானந் தத்தே தேங்கி, இரவும் பகலும் இல்லா நிலையில், நிழல் இல்லாப் பேரொளியில், நினைப்பும் மறப்பும் அற்றுத் தூங்கலாம்.

‘இந்த நிலையை ஒருவரும் அடையவில்லையே! இறைவன் திருவருளினால் காலஜயம் பண்ணவேண்டுமென்று கருதி அகங்கார மமகாரத்தை ஒழிக்கவில்லையே! கர்மேந்திரியங் களின் செயல் அடங்கி, ஞானேந்திரியங்களின் அநுபவம் ஒடுங்கவில்லையே! ஆங்காரம் அடங்கி ஒடுங்கினால் பரமானந் தத்தே தேங்கலாம்; அப்படித் தேங்கவும் இல்லையே! நினைப்பு மறப்பு அறவும் இல்லையே! இப்படி இருக்கிறார்களே!’ என்று ஏங்குகிறார் அருணகிரியார்.

ஆங்காரமும் அடங்கார் ஒடுங்கார் பரமானந்தத்தே
தேங்கார் நினைப்பும் மறப்பும் அறார்.

இந்நிலை எல்லாராலும் எய்துதற்கு ஒண்ணாதது. இருந் தாலும் இதுவே நம்முடைய லட்சியமாக இருக்க வேண்டும். இந்த லட்சியத்தை எய்துவதற்குரிய வழி ஒன்று வேண்டும் அல்லவா? “நான் முன்னே சொன்ன அத்தனையும் இந்த ஒரு வழியைப் பின்பற்றினால் போதும்; தானே வந்துவிடும்” என்று சொல்கிற அளவு மிகக் குறைந்ததான நிலையை, எல்லோரும் பின்பற்றி உய்வுபெறும் வழியை, அருணகிரியார் இப்போது சொல்கிறார்.

ஓங்காரத்து உள்ளொளிக்குள்ளே முருகன் உருவம்
உண்டு.
தூங்கார், தொழும்பு செய்யார்.
ஓங்காரத்து ஒளி

ஓங்காரத்து உள்ளொளிக்குள்ளே முருகன் உருவம் கண்டு தூங்குவது உயர்ந்த அநுபவம். தியானத்தில் ஈடுபட்டுச் சமாதி நிலை எய்த விரும்புகிறவர்களுக்கு மிகச் சிறந்த வழியாகும்.

நாம் கோயிலுக்குப் போகிறோம். எத்தனை பெரிய கோயில் ஆனாலும், பிராகாரத்தால் பெரியதாக இருக்குமே தவிரக் கடைசியில் மூல விக்கிரகம் இருக்கும் கர்ப்பக்கிருகம் சிறியதாகத்தான் இருக்கும். “அந்தக் காலத்தில் விஷயம் ஒன்றும் தெரியாமல் மூல மூர்த்தியை ஒரே இருட்டு அடைந்த குகை போன்ற இடத்தில், காற்று வெளிச்சம் எதுவும் இல்லாத இடத்தில் வைத்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் இடித்துவிட்டு நல்ல வெளிச்சம் உள்ள இடத்தில் வைக்கக்கூடாதா?” என்று சிலர் நினைக்கிறார்கள். வேண்டு மென்றேதான் நம்முடைய முன்னோர்கள் இருதயம் போன்று சன்னல் இல்லாத ஓர் இடத்தில் ஆண்டவனை வைத்தார்கள். கோயிலுக்குப் போய்க் கர்ப்பக்கிருகத்தில் இருக்கும் ஆண்டவனை ஒருகணம் பார்த்தால் இருட்டில் தெரியாது. அப்புறம் மெல்லக் குனிந்து, கண்ணைக் கூர்ந்து பார்த்தால்தான் தெரியும். குருக்கள் தீபாராதனை காட்டும்போது மிக்க பிரகாசமாக, விளக்கமாகத் தெரியும்.

அவர்கள் தீபாராதனை காட்டும்போது தீபத்தால் ஓங்கார எழுத்தை எழுதுவது போல, ஓம் என்கிற சுழிப்பாகக் கையைச் சுற்றிக் காட்டுவார்கள். இந்த ஓங்கார ஒளி வட்டத்திற்குள் நாம் இறைவனது உருவத்தைக் காண வேண்டும். அப்படிப் பார்க்கும் போதே அதை நாம் அடுத் தடுத்துப் பார்க்கக்கூடிய தியானப் பொருளாக வைக்க வேண்டும். ஓங்கார ஒளி வட்டத்திற்குள் நாம் காணுகின்ற சொரூபத்தை மனத்திலும் வைத்துப் பார்க்க வேண்டும்.

ஓம் என்ற மந்திரம் ஒலி உடையது என்று உணர்ந்திருக் கிறோம். தியான யோகத்தில் ஈடுபட்டவர்களுக்கு அதுவே ஒளியாகவும் தோன்றும். ஒலி, ஒளி இரண்டும் கலந்த ஒன்று தான் பிரணவ மந்திரம்.

புறத்தே ஒலியே இல்லாத மௌனம் ஒருவகை. புற ஒலி இருக்கையில் மௌனம் நிலவுவது ஒருவகை. ஒலியில்லாத மௌனத்தைப் பயிலுதல் நம்மால் இயலாது. ஒலி இல்லாத மௌனத் தியானத்தில் ஈடுபடும் போது புறத்திலிருந்து சிறிய ஒலி வந்தாலும் தியானம் கலைந்துவிடும். புறச் சத்தம் காதில் விழுந்து தியானம் கலையாதவாறு நாமே ஓங்கார சத்தத்தை உள்ளே எழுப்பிக் கொண்டிருந்தால் அந்த ஒலி இதில் கலந்து அழிந்துவிடும்.

இதற்காகவே ஆராதனைக் காலங்களில் நம்முடைய தேவாலயங்களில் அழகான ஒரு பழக்கத்தை ஏற்படுத்தி யிருக்கிறார்கள், கிறிஸ்துவர்களைப் போல நம்முடைய கோயில்களிலும் மௌனமாக எல்லோரும் நின்று வழிபடுவது சிறந்தது தான். என்றாலும் எல்லோரும் ஒரே சமயத்தில் ஒரேவிதமான பாட்டைத்தான் சொல்லி வழிபட வேண்டும் என்கிற பழக்கம் நம் நாட்டில் இல்லை. ஒருவர் திருப்புகழ் சொல்வார். மற்றொருவர் அநுபூதி சொல்வார். கந்தர் அலங்காரத்தை மனம் உருகிப் பாடி நிற்பாரும் உண்டு. இவற்றில் ஒன்றுமே சொல்லாமல், “ஆண்டவனே, எனக்கு உன்னுடைய அருளைத் தர மாட்டாயா?அல்லல்பட்டு அவதி யுற்று எத்தனை காலம் இவ்வுலகில் துன்புறுவேன் அப்பா!” என்று மனம் நைந்து இறைஞ்சுபவர்களும் இருப்பார்கள். இத்தனை குரல்களும் எழுந்தால் கோயில் எப்படி இருக்கும்? இந்த எல்லாச் சத்தமும் தீபாராதனை சமயத்தில் கேட்காமல் இருக்க வேண்டுமென்றால் இவற்றையெல்லாம் தன்னுள் அடக்கிக் கொண்டுவிடுகிற வேறு ஒரு பெரிய இசைநாத வெள்ளம் ஓடவேண்டும். இதற்காகத்தான் நாகஸ்வரம் என்னும் அருமையான ஊதுகுழலைக் கண்டுபிடித்தார்கள் நம் நாட்டவர்கள். நாகஸ்வர வாத்திய இன்னிசை எல்லா ஒலிகளையும் தன்னுள் அடக்கிக்கொண்டு எழும்பும்போது நாம் அதன் சுருதியோடு கலந்து லயித்து விடுகிறோம்.

ஓங்கார தியானம் சுலபமாகச் சித்திப்பதற்காக நாதத்தைச் சுருதியோடு உள்ளே எழுப்பிக்கொண்டு லயித்தால் புற ஒலி நம் அளவில் அடங்கும். புறச்சத்தம் எதுவும் காதில் விழாதவாறு காது குப்பென்று அடைக்கிற மாதிரி இருக்கும் என்று ஒருவகை அநுபவத்தைச் சிலர் சொல்வார்கள்.

முதலில் நாம் கண்ணை மூடிக்கொண்டால் ஒரே இருளாகத்தான் இருக்கும். ஆண்டவன் திருக்கரத்திலுள்ள வேலை மெள்ளக் நன்றாகப் பார்க்கவேண்டும். பார்த்த வேலை கண்ணை மூடிக்கொண்டு மனத் திரையில் வைத்துப் பார்க்க வேண்டும். கொஞ்சம் வேல் நிற்கும். அப்புறம் அதே வேல் ஜோதிமயமாக நிற்கும். இப்படியே, நாதவடிவாகிய ஓங்காரம் ஒளி எழுத்து வடிவமாக, பிறகு ஜோதிமயமாக இருக்கும். நம்முடைய குருநாதர் அருணகிரியார் அப்படிச் சொல்கிறார்.

ஓம் என்பது எல்லா மந்திரங்களுக்கும் மூலமானது. எல்லா மந்திரங்களும் முடிந்த இடம் அது. உலகத்திற்கு மூலமாக இருப்பது கடல். கடல் நீர் மேகமாகி, மழையாகி, ஆறுகளாகிப் பூமியை வளப்படுத்துகின்றது. கடைசியில் அந்நீர் கடலில் வந்து விழுகின்றது. கடல் மூலமாகவும்,. முடிந்த முடிவாகவும் இருக்கிறது. அதுபோன்றது ஓம்.

எல்லாமே ஒரு லயத்தோடு சேர்ந்து வேகமாகச் சுற்றும் போது ஒரு திரட்சியை அடைகிறது. பஞ்சாய்ப் பறக்கிறான் என்று சொல்கிறோம். சிறிய பொருள் பஞ்சு. அது சர்க்காவின் வேகத்திற்கு உட்படும்போது, முறுக்கு ஏறி உருண்டு திரட்சி பெற்று நூலாகிறது. பஞ்சு படாத பாடுபடும் தன்மை உடையது மனம். ஓம் என்ற பிரணவ மந்திரத்தைக் கருவியாகக் கொண்டு வேகமாக ஒரு லயத்தோடு (Rhythm) சேர்ந்து ஜபிக்க ஜபிக்க மனத்திலே அந்த ஓம் என்கிற ஒலியே திரட்சி பெற்று உருவம் எடுத்து ஜோதிமயமாக ஆகி விடும்.

எல்லா மந்திரங்களையும் தன்னுள் அடக்கிக்கொண்டு விளங்கும் பிரணவ மந்திரத்தை முதலில் வாய்விட்டு ஜபிக்கப் பழகவேண்டும். இரண்டாவது நிலையில் நாக்கு அசைவு மாத்திரம் இருக்கும்; ஒலி வெளிப்படாது. மூன்றாவது நாக்குக்கூட அசையாது; சுவாசம் போல உள்ளத்திற்குள் ஒலி நிற்கும். அதனுடன் கருவிகரணங்கள் எல்லாம் லயிக்க வேண்டும். அப்போது ஓம் என்பதன் உருவம் மனக் கண்ணில் ஒளிமயமாகப் பிரகாசிக்கும். அதற்குள் முருகன் உருவத்தை நிலைநிறுத்திக் காண முடிந்தால் அதற்குப்பின் தான் அநுபவம் தொடங்குகிறது. ஓங்காரத்தின் ஒளிக் குள்ளேயே முருகன் உருவம் கண்டு அப்படியே தூங்கலாம்.

“ஆங்கார மும்மடக்கி ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம்பெறுவ தெக்காலம்”

என்று பத்திரகிரியார் பாடுகிறார்.

நம்மைப் பார்த்து ஒருவன் முட்டாள் என்றால், “நீ தான் முட்டாள். உங்கள் அப்பாதான் முட்டாள்” என்று அவனை வாயினால் வைது கொண்டே கையை நீட்டி அடிக்கக் கூடப் போகிறோம். நன்றாகத் தூங்குகிறோம். அப்போது நம் பக்கத்தில் ஒருவன் நின்று, “இவன் முட்டாள்” என்று திட்டுகிறான். நாம் எழுந்து அவனை அடிக்கப் போவதில்லை.

காரணம்: உறுப்புகள் எல்லாம் இருந்தாலும் தூங்குகிறோம். அப்போது பொறிகள் உணராமல் இருக்கின்றன. மனமும் இயங்காமல் போகிறது. விழித்துக் கொண்டிருக்கும் போது. இப்படி நம்மால் இருக்க முடிகிறதா? விழித்துக் கொண்டிருக்கும் போதும் இந்நிலை வரவேண்டுமானால் யான் எனது என் னும் அகந்தையை ஒழித்து, ஐம்புலன்களையும் சுட்டறுத்து, ஓங்கார ஒளிக்குள்ளே முருகன் உருவம் கண்டு சமைந்து போனால் இருக்கலாம். அதுவே தூங்காத தூக்கம்.

இதுபோன்ற ஒரு நிலை நமக்குச் சில சமயங்களில், அதுவும் கணநேரம் வருவது உண்டு. மிகுந்த துக்கத்தோடு உட்கார்ந்திருக்கிறோம். அப்போது வீட்டிற்குள் என்ன நடந்தாலும் கவலைப்படுவதில்லை. கதவைத் திறந்து கொண்டு தோட்டத்திற்குள் மாடு புகுந்துவிட்டது என்றாலும் விரட்டுவதில்லை. மிகுதியான இன்பம் வரும்போதும் இப்படித்தான் எல்லாவற்றையும் மறக்கிற நிலை வரும். எல்லாவற்றையும் மறந்து தூங்குகிற தூக்கம் சுகமாகத் தூங்குகிற தூக்கம். ஆனால் சுகமாகத் தூங்கினேன் என்று சொல்கிறானே, அப்போது அந்தத் தூக்கத்தை அநுபவித்துச் சொல்வது எது? மனம் அன்று. கைகால்கள் எதுவும் அப்போது வேலை செய்யவில்லை. கண்கள் மூடி இருந்தமையால் எதையும் பார்க்கவில்லை. நாக்குச் சுவை உணரவில்லை. காதும் செயல்படவில்லை. இருந்தும், சுகமாகத் தூங்கினேன் என்றால் சுகத்தை நுகர்ந்தது யார்? அதுதான். ‘நான்’

வாழ்க்கை இந்திரியங்களுடைய அநுபவம்: சொப்பனம் மனத்தின் அநுபவம். கனவில்லாத சுஷுப்தி ஆத்மாவின் அநுபவம். பொறிபுலன்கள் எல்லாம் தொழில்படும் போதே நாம் எதையும் மறந்து தூங்கினால் எவ்வளவு சுகமாக இருக்கும்!