மூன்று பகுதிகள்
இதில் மூன்று பகுதிகள் உள்ளன.
ஆங்காரமும் அடங்கார் ஒடுங்கார் பரமானந் தத்தே
தேங்கார் நினைப்பும் மறப்பும் அறார்.
என்பது வரையில் ஒரு பகுதி.
தினைப்போதளவும்
ஓங்காரத்து உள்ஒளிக்குள்ளே முருகன் உருவம்
கண்டு
தூங்கார்; தொழும்பு செய்யார்
என்பது அடுத்த பகுதி. இந்த இரண்டு பகுதியிலே சொல்லும் கருத்துக்களில் வேறுபாடு உண்டு.
தலையளவும் கடையளவும்
ஒரு தகப்பனார், தம் குழந்தை ஆங்கிலத்தில் நல்ல புலமை பெறவேண்டுமென்று விரும்புகிறார். அவனோ படிப்ப தில்லை. அவனைப் பார்த்து, “அடே, ஆங்கிலத்தில் நல்ல
அறிவு வேண்டுமென்றால் ஷேக்ஸ்பியர் படிக்க வேண்டும்; மில்ட்டன் படிக்கவேண்டும். ஒன்றும் படிக்கவில்லை: ஆங்கிலப் பத்திரிகையின் தலையங்கமாவது படிக்கக் கூடாதா?” என்று, சொல்லுகிறார். ஷேக்ஸ்பியர், மில்ட்டன் போன்ற கவிஞர்களின் நூல்களைப் படிப்பது சிறந்த நிலை. அது முடியவில்லை. என்றால் குறைந்த பட்சம், ஆங்கிலப் பத்திரிகையின் தலையங்கம் படிப்பது. இது இருந்தால் நாளடைவில் அது வரும்.
அப்படி, ஆங்காரம் அடங்கி ஒடுங்கி, பரமானந்தத்தே தேங்கி, நினைப்பும் மறப்பும் அறுவது தலை நிலை; இது மேலளவு (Maximum). இது வரவேண்டுமானால் இதற்குப் பல வழிகள் உண்டு. இறைவன் திருவருள் அநுபவம் கிடைத்துவிடும் என்று தெரிந்து கொள்வதற்கு அறிகுறி ஒரு கணமாவது ஓங்காரத்து உள்ளொளிக்குள்ளே முருகன் உருவம் கண்டு தூங்க வேண்டும்; இறைவனுக்குத் தொண்டு செய்யவேண்டும். இது மிகக் குறைந்த நிலை; தாழ்ந்த அளவு (Minimum) இந்த இரண்டு அளவுகளையும் அநுபவத்தில் கண்டால் என்ன பயன்? “யமதூதரைக் கண்டு அஞ்சாமல் வாழ லாம். மரணம் இல்லாத பெருவாழ்வு எய்தலாம்” என்று அந்தப் பயனைக் கடைசிப் பகுதியில் வைத்துச் சொல்கிறார் அருணகிரியார்.
இனி ஒவ்வொரு பகுதியாகப் பார்க்கலாம்.
ஆங்காரம் அடங்கல்
ஆங்காரமும் அடங்கார்; ஒடுங்கார்.
ஆங்காரம் என்ற சொல் அகங்காரம் என்பதன் திரிபு. ஆங்காரம் என்று சொல்லும்போது நாம் அகங்காரத்தைக் குறிப்பதில்லை. ஆங்காரம் உடையவன் என்றால் கோபம் உடையவன் என்கிற நினைப்புத்தான் வருகிறது. அகங்காரத்திற்கும் கோபத்திற்கும் தொடர்பு உண்டு. நான் என்ற நினைவு வரும்போது பற்று உண்டாகிறது. தன்னால் பற்றப் படுகிற பொருளை வேறு ஒருவன் பற்றினால் கோபம் உண்டாகிறது. நான் என்ற நினைவும், எனது என்ற பற்றும் வந்தால் கோபம் உண்டாகிறது. ஆங்காரம் என்ற சொல்லுக்கே கோபம் என்ற அர்த்தம் வழக்கில் வந்து விட்டது. ஆங்காரமாகிய கோபம் அடங்க அகங்காரம் என்ற செருக்கு அடங்க வேண்டும்.
“காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்”
என்று சொல்கிற வள்ளுவர் வெகுளி என்பதை நடுவில் வைத்தார். வெகுளி என்பது கோபம்; உள்ளத்திலுள்ள ஆசாபாசங்களின் வெளியீடு. மனம் உடைய எல்லோருக்கும் வரும். சாதனம் பண்ணுகிறவர்களுக்குங் கூடக் கோபம் வரும்.
கோபம் வராமல் இருப்பது வேறு; வருகிற கோபத்தை அடக்குவது வேறு. மனத்தில் கோபம் வராமல் இருக்கிற வர்கள் யாரும் இல்லை. அதனால்தான் ஒளவைப் பாட்டி, “அறுப்பது சினம்'” என்று சொல்லவில்லை ; ‘”ஆறுவது சினம்” என்று சொன்னாள். சினம் உண்டாவது மனத்தின் இயல்பு. இயல்பான ஒன்றை அறுக்க முடியாது. மனிதனுக்குக் கோபம் வருவது இயற்கையாதலால், வருகிற கோபத்தை உடனே அறிவினால் அடக்கிவிட முயல் வேண்டும்.
“உள்ளங் கவர்ந்தெழுந் தோங்கு சினம்காத்துக்
கொள்ளும் குணமே குணம்என்க”
என்று சிவப்பிரகாச சுவாமிகள் சொல்கிறார்.
ஒருவன் நல்லவனாக இருப்பான். மற்றவர்களிடத்தில் நயமாகப் பேசிக் கொண்டிருப்பான். அவன் உள்ளத்தைக் கவர்ந்து கொண்டு சினம் எழுந்துவிட்டால் அவனுக்குக் கண் தெரியாமல் போய்விடும். அவனது சுமுகமான குணம் மூர்க்கத்தனமாகிவிடும். அவனால் மிகவும் மதிக்கப்படுகிறவர்கள் குறுக்கே சமாதானம் பண்ணி வைக்க வந்தாலும் அவர்களுக்கு மரியாதை கொடுக்காமல் கத்துவான். பகைவன்மேல் விழவேண்டிய அடி சமாதானம் பண்ண வந்தவர் மேல் விழுந்தாலும் விழும். அதை அவன் உணரமாட்டான். கோபம் அவனது அகக்கண்ணையும் மறைத்து, புறக்கண்ணையும் மறைத்துவிடும். இப்படி உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கும் சினத்தைக் காத்துக் கொள்ளும் குணமே குணம்.
சினம் வராமலேயே இருப்பது உயர்ந்ததுதான். அந்த நிலை முதிர்ந்த ஞானிகளிடந்தான் காணலாம். வீடு தீப்பற்றிக் கொள்ளாமல் பாதுகாப்போடு இருப்பது உயர்வு தான். பற்றிக் கொண்டுவிட்டால் வீடு முழுவதும் தீப்பரவாதவாறு தீயை அணைக்கிறோம். முழுவதும் பரவிவிட்டால் பக்கத்து வீடுகள் பற்றிக்கொள்ளும் முன்னே அணைக்கப் பார்க்கிறோம். பக்கத்து வீடுகளும் பற்றிக் கொண்டுவிட் டால் ஊர் முழுவதும் நாசமாகாதவாறு அணைக்க முற்படு வது இல்லையா? கோபம் உண்டாகும் போல் இருந்தால் உடனே அதை அடக்க முயலவேண்டும். உண்டாகிவிட் டால் அதன் விளைவு மற்றவர்களிடத்திலும் பரவாதவாறு உடனே தடுத்துக் கொள்வதற்கு முயலவேண்டும். இதுதான் அறிவுக்கு அழகு.
ஒருவன்மேல் கோபம் உண்டானால், அந்தக் கோபம் வெளிப்படும் முன், ‘அவன்மேல் எதற்காகப் கோபம் வந்தது? அவன் என்ன தவறு செய்தான்? அந்தப் பிழையை அவன் செய்யும்படி நாம் என்ன செய்தோம்?’ என்று கொஞ்சம் சிந்தனை செய்ய முற்பட்டால் போதும்; கோபம் தணிந்துவிடும். அதற்காகவே சிலர், கோபம் வரும்போது பத்து வரை எண்ணச் சொல்வார்கள். அதையும்விட நம்முடைய இன்பப் பொருளாக மதிக்கிற மனையாட்டியை நினைத்துக் கொண்டால் கோபம் போய் விடும் என்பர். மனையாட்டியிடத்திலே கோபம் வந்து விட்டால் ஆண்டவன் தான் அடக்கவேண்டும்.
அகங்கார மமகாரங்கள்
ஆண்டவனுடைய நினைப்பு இருந்தால் போதும்; யாரிடத்திலே கோபம் வந்தாலும் அது வெளிப்பாடு இல்லாமல் அவிந்துவிடும். இறைவன்பால் பக்தி உரம் பெறப் பெற அகங்கார மமகாரங்கள் மங்கி வரும். அதனால் கோபம் ஒழியும்.
“யான்என தென்னும் செருக்கறுப்பான்
வானோர்க்
குயர்ந்த உலகம் புகும்”
என்பார் வள்ளுவர்.
அவற்றை அறுப்பது எப்படி? நம் நாட்டில் உள்ளவர்கள் பல நல்ல பழக்கங்களை உண்டாக்கி வைத்தார்கள். ஒருவர் வீடு கட்டினார். கிருகப் பிரவேசம் நடைபெற்றது. அன்றைக்கு வந்திருந்த நண்பர் ஒருவர் வீட்டுக்காரரைப் பார்த்து, “வீட்டை நன்றாகக் கட்டிவிட்டீர்களே!” என்று பாராட்டினார். “உம், நானா கட்டி முடித்தேன்? ஆண்டவன் திருவருளால் முடிந்தது” என்று வீட்டுக்காரர் சொன்னார். இது அகங்காரத்தை மாற்றும் பழக்கம்.
தம் பெண்ணுக்கு ஒருவர் கல்யாணம் பண்ணினார். “பெண்ணுக்குச் சிறப்பாகச் கல்யாணம் பண்ணி விட்டீர்கள்” என்று சொன்னால், “ஆம், நன்றாகப் பண்ணினேன்” என்று அவர் சொல்லிக்கொள்வாரா? “ஆண்டவன் திருவருளினால் திருமணம் இனிது முடிந்தது” என்று சொல்வார். இப்படி வாக்கினாலே நான் செய்கிறேன் என்று கூறுவதை மாற்றி, அவன் செய்கிறான் என்ற பேச்சையும் நினைப்பையும் உண்டாக்கிக் கொண்டால் நம்மையும் அறியாமல் அவ் வுணர்ச்சி மெல்ல மெல்ல ஆழமாக நெஞ்சிலேயும் பாய்ந்து விடும். “ஆண்டவனே, என்னுடையது என்று இவ்வுலகில் என்ன இருக்கிறது? எல்லாம் உன்னுடையன. நான் நான்? என்று எண்ணி மயங்கினேனே! நான் எங்கே இருக்கிறேன் எங்கும் நீதான் இருக்கிறாய்” என்கிற உணர்வு உள்ளத்தில் உறைத்துவிடும்.
நம் நாட்டுப் பெரியவர்கள் நான் என்று சொல்வது இல்லை. “நாம்” என்று சொல்வது வழக்கம். நான் தனி அல்ல. “நான் என்பது ஒரு சமஷ்டியில் கலந்துள்ள ஒன்று: ஒரு பெரிய சமுதாயத்தில் சேர்ந்த ஒன்று” என்று நினைத்து சில அகங்காரிகளுங்கூட. நாம் என்று சொல்வார்கள். அதைப் பார்த்து, “நாம்” என்று சொல்லிக் கொள்வ துண்டு. நாம் என்பது அவர்களிடம் அகந்தையை ஒழித்துக் கொள்ளப் பயன்படுவதில்லை; அகங்காரத்தை மிகுவிக்கிறது ஆற்றிலே குளித்து அழுக்கைப் போக்கிக் கொள்ளப் போய்ச் சேற்றைப் பூசிக்கொண்ட கதைதான் அது.
மனத்தின் தீய நினைப்பு மாறி, “நான் செய்யவில்லை. எல்லாம் ஆண்டவன் செய்கிறான். எனது என்று ஒன்றும் இல்லை. எல்லாம் ஆண்டவனுடையவை” என்கிற உண்மையான ஞானம் ஒருவனுக்கு உண்டானால் அவனுக்குப் பிறரிடத்தில் கோபமே உண்டாகாது. அகங்காரம் அடங்கி விடும். இல்லாதவர்கள்,
ஆங்காரமும் அடங்கார்; ஒடுங்கார்.
ஒடுக்கம்
ஒடுக்கம் என்பது வெளிப்பாட்டின் குறைவு. வெளிப்படு தலாவது யாது? நம்முடைய திரிகரணங்களின் செயல் வெளிப்பாடு. மாறுபட நினைப்பது மனத்தின் செயல். மாறு படப் பேசுவது வாக்கின் செயல். மாறுபடச் செய்வது உடம்பின் செயல். இந்த மூன்று வகையான செயல்களும் அடங்கினால், பொறி வழியே உண்டாகும் ஐந்து வகையான அநுபவங்களும் ஒடுங்கும்.
வாக்கினாலே பேசுகிறோம். அது செயல். ஒரு பொருளை வாயிலே போட்டுச் சுவைக்கிறோம். அது அநுபவம். செயலுக்குக் காரணமாகக் கர்மேந்திரியங்கள் ஐந்து இருக் கின்றன. அநுபவத்திற்குக் காரணமாக ஞானேந்திரியங்கள் ஐந்து இருக்கின்றன. வாக்கு, உடம்பு ஆகிய இரண்டினுள்ளும் ஐந்து கர்மேந்திரியங்களும் அடங்கும். மற்றொன்று மனம். மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்று கரணங்களினாலும் நாம் செயல் செய்கிறோம். கண் காது மூக்கு முதலிய ஞானேந்திரியங்களினாலே அநுபவிக்கிறோம். செயல்படுகிற மூன்று கரணங்களையும் அடக்கினால் அவற்றால் உண்டாகிற அநுபவங்கள் ஒடுங்கும்.
திரிகரணங்களின் செயல் அடங்கி, ஐந்து பொறிகளின் நுகர்ச்சியும் ஒடுங்கினால் அதை ஒடுக்கம் என்று சொல்வர். சைவ மடங்களில் ஒடுக்கம் என்று ஓர் இடம் இருக்கும். அங்கேதான் மடாதிபதி இருப்பார். கர்மேந்திரியங்கள் ஐந்தும் அடங்கி, ஞானேந்திரியங்கள் ஐந்தும் ஒடுங்கித்தவம் செய்கிற இடம் எதுவோ அதற்கு ஒடுக்கம் என்று பெயர். மடாதிபதியோடு உடன் இருந்து தொண்டு புரியும் அணுக்கத் தொண்டருக்கு ஒடுக்கத் தம்பிரான் என்று பெயர். பெரும்பாலும் அடுத்த தலைவராக அவரே வந்து விடுவதுண்டு. ஒடுக்கத் தம்பிரான் என்றால் பிறரைத் தம்முடைய அதிகாரத்தினாலே மடத்தில் ஒடுக்குகிற தம்பிரான் என்று பொருள் கொள்ளக்கூடாது. புலன்கள் ஒடுங்கி இருக்கும் தம்பிரான் என்று பொருள்.
“ஒழிவில் ஒடுக்கம்’ என்பது ஒரு நூல். ஒழிந்தால் ஒடுக்கம் வருமாம். செய்கிற காரியங்களிலிருந்து ஒழிந்து நிற்றல் உண்மையான ஒழிவாகும்; அதுவே உண்மைத் துறவு. துறவற நெறியை மேற்கொள்வதுதான் துறவு என்று எண்ணக்கூடாது. செய்யத்தகாத காரியங்களைச் செய்யாமல் இருப்பதும் ஒரு வகையில் துறவுதான். கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய செயல்களை அடக்கிக்கொண்டு வந்தால், தேவைகளைத் துறந்து கொண்டு வந்தால், பூர்ணமரன துறவு தானே சித்திக்கும். நம்முடைய அநாவசியத் தேவைகளைத் துறத்தல் முதல் நிலை. மிக அவசியமான பொருள்களில் ஒரு பங்கைத் துறத்தல் அடுத்த நிலை. மிக அவசியமானவற்றையும் துறந்துவிடுவது கடைசி நிலை. இப்படிப் படிப்படியாகத் துறக்கும்போது கர்மேந்திரியங்களுடைய செயலும் படிப்படியாக அடங்கும்; ஞானேந்திரியங்களுடைடய அநுபவ நுகர்ச்சியும் ஒடுங்கும்.
இப்படி அடங்கி ஒடுங்குவதற்கு இந்த உலகியல் வாழ்வில் இருந்துகொண்டே, ஆசாபாசங்களுக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்கும்போதே, முயற்சி செய்யவேண்டும். இவை எல்லாம் ஒழிந்தபின் முயலலாம் என்று இருப்பவன் கடல் அலை ஓய்ந்தவுடன் நீராடலாம் என்று இருப்பவனைப் போன்றவன். அநுபவப் பொருள்கள். இருக்கும்போது எதையும் அநுபவிக்காமல் துறந்து இருப்பதுதான் துறவு.
“இளையான் அடக்கமே அடக்கம்”
என்பர். உடம்பினால் தளர்ந்து முதிர்ந்து போன பெண் ஒருத்தி, “நான் கற்புடையவளாக இப்போது வாழ்கிறேன்” என்று சொல்லிக்கொண்டால் எப்படி இருக்கும்? “வ்ருத்தா நாரீ பதிவ்ரதா” என்று வடமொழியில் சொல்வார்கள். பொருள் இருக்கவேண்டும்; அதை அநுபவிக்காமல் மனத்தை அடக்கவேண்டும். உடல் வலிவுடைய கட்டிளம் காளையாக இருக்கவேண்டும்; பிரம்மசரிய ஒழுக்கத்தை மீறாமல் மனத்தை அடக்கி, இந்திரியங்களை அடக்கி வாழவேண்டும். இதுதான் உண்மையான அடக்கம்; ஒடுக்கம். இது உள்ளத் துறவினால் வருவது.
“அறந்தான் இயற்றும் அவனிலுங் கோடி
அதிகம் இல்லம்
துறந்தான்; அவனிற் சதகோடி உள்ளத்
துறவுடையோன்“
‘இல்லறத்தில் இருந்து பலவிதமான தர்மங்களைச் செய்கிற வனைவிட இல்லம் துறந்தவன் ஒரு கோடி உயர்வானவன். அதைவிட நூறு கோடி அதிகமானவன் உள்ளத் துறவு ‘உடையோன்’ என்கிறார் பட்டினத்தடிகள். உள்ளத் துறவு, செயலும் அநுபவமும் மெல்ல மெல்லக் குறையும்போது தான் உண்டாகும்.
உடம்பிலிருந்து உள்ளம் என்பதையே தனியாக அறுத்து விட முடியாதா? விறகில் தீப் பற்றிக்கொண்டு கொழுந்து விட்டெரிகிறது. விறகிலிருந்து தீச்சுடரைத் தனியாகப் பிரிக்க முடியுமா? அப்படியே உடம்பினுள் இருக்கிற மனத்தைப் பிரிக்க முடியாது. வாசனா பலத்தினாலே நிலை பெறுவது மனம். செயலால் உண்டாகிற வாசனையைச் சார்ந்து மனம் நிற்கும். வினைகளை அறுத்தால் வாசனை மடியும். வாசனை மடிந்தால் மனம் மடியும். செயலும் அநுபவமும் குறையும்போது யான், எனது என்னும் செருக்கு, மாயும்.
ஆங்காரமும் அடங்கார் ஒடுங்கார்.