இறைவன் திருவருள் நெறியில் புகுந்து சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு சோபானங்களில் சென்று, எம்பெருமான் திருவருளால் இன்ப நலம் துய்த்த பெருமக்கள் பலர் இந்த நாட்டில் இருந்திருக்கிறார்கள். அவர்களுக் குள்ளேயும் இறைவன் திருவருள் நெறியில் ஒன்றியிருந்து தியான சமாதி கைவரப்பெற்ற அநுபூதிமான்கள் பாடுகிற பாட்டின் சுவையே தனிச் சிறப்புடன் இருக்கும். இவர்களுள் தலைசிறந்து விளங்கும் அருணகிரியார் நல்ல பல வகையான உபதேசங்கள் அடங்கிய பாடல்கள் பலவற்றை நமக்கு அருளியிருக்கிறார்.
அநுபவ வேட்கை
‘ஆண்டவன் கோயிலுக்குப் போகவேண்டும்; அவன் திருவுருவத்தை மனத்தில் பதித்துக்கொள்ள வேண்டும்; அவன் திருநாமத்தைச் சொல்ல வேண்டும்; தியானம் பண்ணவேண்டும்’ என்று அவர் அறிவுறுத்தியுள்ள பலவகையான பழக்கங்களை நாம் செய்து கொண்டு வந்தாலும், அவற்றோடு நாம் நின்றுவிடக்கூடாது. பொழுதைப் பிற செயல்களிலே கழிக்கும் மக்களைக் காட்டிலும் இறைவன் திருவருளைப் பெறவேண்டுமென்ற ஆசையோடு அவன் திருநாமத்தை ஓதி, பஜனை செய்து வாழ்வது சிறந்ததுதான். ஆனாலும் ஒரு வேளை சாப்பிட்டாலும், ‘பட்டினி கிடந்தவனைக் காட்டிலும் நாம் சிறந்திருக்கிறோம்’ என்று யாரும் திருப்தி அடைவதில்லை. ‘இரண்டு வேளை சாப்பிடவேண்டும். மறுநாளும் சாப்பிடவேண்டும். என்றைக்கும் நன்றாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்க வேண்டும்’ என்றுதான் விரும்புவான். இறைவன் அருள் நெறித் திருக்கூட்டத்தில் கலந்து அவன் திருநாமத்தைச் சொல்லி, திருப்புகழைப் பாடி, வாழ்கிற வாழ்வு நல்ல வாழ்வுதான். அதோடு நின்றுவிட்டால் ஒரு வேளை சாப்பிட்டவன் கதிதான் கிடைக்கும். அப்படி எம்பெருமான் அருளால் இல்லாமல் அதற்கும் மேலே மனத்தில் அமைதி காணுகின்ற நிலையைப் பெற வேண்டும். அந்த நிலையைப் பெறுவதற்கு வழி இன்னது என்று நூல் ஆராய்ச்சியினாலே தெரிந்துகொண்டு சொல்வது ஒருவகை. அதைவிடச் சிறந்தது சொந்த அநுபவத்தின் மூலம் வழி காட்டுவது.
அருணகிரியார் சொல்லும் முறை
அநுபூதிமானாகிய அருணகிரிநாதர், எதிர்மறை முகத்தால், ‘இப்படி எல்லாம் மக்கள் செய்யாமல் இருக்கிறார்களே!’ என்று இரங்கும் வாயிலாக, இன்னது செய்ய வேண்டும் என்பதை நமக்கு ஒரு பாட்டின் மூலம் அறிவிக்கிறார். இந்தப் பாட்டு அவரைப் போன்ற நல்ல அநுபூதிமான் ஒருவரால்தான் சொல்ல முடியும்.
”ஐயா, இந்தக் குழந்தை இந்த மருந்து சாப்பிட மாட்டேன் என்கிறானே! எங்கே பார்த்தாலும் விஷ சுரம் பரவிக்கொண்டிருக்கிறதே! இந்த மருந்தைச் சாப்பிடா விட்டால் அந்த நோய் வந்தால் என்ன செய்வேன்?” என்று ஒருவர் இரங்குகிறார். அவர் அப்படிச் சொல்வதிலிருந்தே அந்த மருந்து சாப்பிடுகிறவர்களுக்கு விஷ சுரம் வராது என்பது நமக்குத் தெரியவில்லையா? இந்த மருந்தை உட் கொள் என்பதற்கும் அதற்கும் அதிக வேறுபாடு இல்லை.
தந்தையின் இயல்பு
எப்போதும் ஒரு குடும்பத்திலுள்ள தாய்க்கும் தகப்பனுக்கும் அன்பின் வெளிப்பாட்டிலே வேறுபாடு உண்டு. அவர்களுடைய குழந்தை பரீட்சையில் தேர்ச்சி பெறுகிறான். அதைப்பற்றித் தாய் மிகவும் மகிழ்ச்சி அடைவாள். “என் குழந்தை பரீட்சையில் தேறிவிட்டான்” என்று ஊரிலுள்ளவர்களிடம் எல்லாம் பெருமையாகச் சொல்லி மகிழ்வாள். தந்தைக்கும் மகிழ்ச்சி இராதா? இருந்தாலும், “பெரிதாகத் தேறிவிட்டானாக்கும்! அடுத்த தெரு முருகன் ராஜ்யத்திற்கே முதல்வனாகத் தேறியிருக்கிறான். இவன் நன்றாகப் படிந்திருந்தால் தானே அப்படித் தேர்ச்சி பெற?” என்று வெளிப்படையாகப் பேசுவார். தம்முடைய பிள்ளை குறை சிறிதுமின்றி, நிரம்பி வரவேண்டுமென்ற எண்ணத்திலே அப்படிச் சொல்வார். தம் பையன் தேர்ச்சி பெற்றது பற்றி அவருக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி இருக்கத்தான் இருக்கும்.
குழந்தையிடத்தில் அன்புடைய தகப்பனாரைப் போன்று, உலகிலுள்ள எல்லா மக்களுக்கும் தகப்பனார் நிலையில் இருப்பவர் அருணகிரியார். உலகில் நல்ல வழியில் போகிறவர்கள் எத்தனை பேர்கள் இருந்தாலும் அவர்களைப் பார்த்து வெளிப்படையாக மகிழ்ச்சி அடையமாட்டார். அவர் அப்படி மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்ளா விட்டாலும் அவர்கள் நல்ல நெறியிலேதான் நிற்பார்கள்; யார் நல்ல நெறியில் போய்க் ரெண்டிருக்கவில்லையோ அவர்களைப் பார்த்து இரங்கினால் அவர்கள் திருந்தக்கூடும் என்ற பேரன்பினாலே இறைவன் திருவருளை மறந்து, அவன் அருளைப் பெறுவதற் குரிய சாதனங்களைச் செய்யாமல், இந்திரியங்களின் வசப் பட்டுத் துன்பத்தை அடைகிறார்களே!” என்று அத்தகைய வர்களைக் குறித்துத் தம்முடைய இரக்கத்தைப் புலப்படுத்துகிறார்.
ஆங்கா ரமும் அடங்கார் ஒடுங் கார்பர மானந்தத்தே
தேங்கார் நினைப்பும் மறப்பும் அறார்தினைப்
போதளவும்
ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருகன்
உருவங்கண்டு
தூங்கார் தொழும்புசெய்யார்
என்கிறவரைக்கும் இவை செய்யவில்லையே என்று சுட்டிக் காட்டுகிறார்.
தன் தந்தையைப் பார்த்து, “நான் படிக்காவிட்டால் உங்களுக்கு என்ன?” என்று முரட்டுப் பிள்ளை கேட்கிறான். ”எனக்கு என்னடா? நான்தான் நீ பின்னாலே படப் போகிற துன்பங்களை எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கப் போகி றேனா? இப்போது படிக்காவிட்டால், நாளைக்குக் கல்யாணம் பண்ணிக்கொண்டு, குழந்தை குட்டிகளைப் பெற்று அவர் களைக் காப்பாற்றத் திண்டாடுவாயே! அப்போது என்ன செய்வாய்?” என்று சொல்கிற தந்தையைப் போல, அருண கிரியார் தாம் சொல்லியவற்றைச் செய்யாமையினால் என்ன உண்டாகும் என்பதைக் கடைசியில் சொல்கிறார்
என் செய்வார் யமதூதருக்கே?
“இப்போது வருகிற இடையூறுகளை எல்லாம் தம்முடைய அறிவினாலே, வாய்ப் பலத்தினாலே, உடம்பின் ஆற்றலினாலே போக்கிக்கொள்ளலாம். இவற்றினாலே போக்கிக்கொள்ள முடியாமல், நான் சொல்கிற இந்த வழிகளில் சென்றால் அன்றி மாய்க்க முடியாத துக்கம் ஒன்று இருக்கிறது. அந்தத் துக்கத்தை உண்டுபண்ணுவதற்காகவே வருகிறவர்கள் யம தூதர்கள். அப்போது அவர்களை எதிர்த்து நிற்க இவர்கள் என்ன செய்வார்கள்?” என்று இரங்குகிறார்.
அறுவடைக் காலத்தில் மட்டும் அரிவாளை எடுத்துக் கொண்டு போனால் அறுக்கக் கதிர் இராது. விதைக்கும் காலத்தில் விதைவிதைத்து. உரமிடும் காலத்தில் உரமிட்டு களை எடுக்கும் காலத்தில் அவைகளை எடுத்துப் பயிரை வளர்த்தால்தான், அறுவடைக் காலத்தில் அரிவாள் எடுத்துச் சென்றால் கதிர் அறுக்கலாம். அப்படி யம தூதரைக் கண்டு அஞ்சாமல் இருக்கவேண்டுமென்றால் ஆங்காரம் அடங்க வேண்டும்; பரமானந்தத்தே தேங்க வேண்டும்; நினைப்பும் மறப்பும் அறவேண்டும். ஒரு கணமாவது ஓங்காரத்து உள்ளொளிக்குள்ளே முருகன் உருவம் கண்டு தூங்க வேண்டும்; தொழும்பு செய்ய வேண்டும். “இப்படிச் செய் யாதவர்கள் யம தூதர் வந்தால் அவர்களுக்கு எதிரே என்ன- செய்வார்கள்?” என்று கேட்கிறார் அருணகிரிநாதர்.
“ஆங்காரம் அடங்காதவர்கள், ஒடுங்காதவர்கள் யம தூதருக்கு அஞ்சுவார்கள். ஆங்காரம் அடங்குபவர் அஞ்சார்; ஒடுங்குவோர் அஞ்சார். பரமானந்தத்தே தேங்காதவர்கள் அஞ்சுவார்கள்; தேங்குபவர்கள் அஞ்சமாட்டார்கள். நினைப்பும் மறப்பும் அறாதவர்கள் அஞ்சுபவர்கள்; நினைப்பும் மறப்பும் அறுபவர்கள் அஞ்சாதவர்கள். தினைப் போது அளவும் ஓங்காரத்து உள்ளொளிக்குள்ளே முருகன் உருவம் கண்டு தூங்காதவர் அஞ்சுபவர்கள்; தூங்குபவர்கள் அஞ்சார்.தொழும்பு செய்யார் அஞ்சுவார்;தொழும்பு செய்வார் அஞ்சார்” என்று இந்தப் பாட்டில் அருணகிரியார் எதிர்மறையில் சொன்னவற்றை எல்லாம் உடம்பாடாக அமைத்துப் பார்த்தால் நாம் உய்வு பெறும் நெறி தெரிகிறது.