இறைவன் நினைவும் இடுதலும்

இப்படிக் கடைசிப் பொருள் உள்ளவரைக்கும் ஏற்பவர்க்கு இடுகிற உத்தமர்கள் உலகில் இருக்கிறார்கள். பொருள் இருந்தாலும் கொடுக்க மனம் இல்லாத லோபி களும் இருக்கிறார்கள். அறம் செய்வதற்குப் பொருள் வேண்டும் என்பது அல்ல; மனம் வேண்டும். இதை இளையான்குடி மாறனாரிடத்தில் பார்த்தோம். இறைவன் திருவருளை உணர்ந்தவர்கள், அவன் அருள் எப்படிக் கிடைக்கும் என்று ஏங்கி, தம்மிடமுள்ள பொருள்களைத் தர்மம் செய்வார்கள். இறைவன் அருளை நினைத்தால்தான் அல்வாறு கொடுக்கத் தோன்றும்.

இறைவன் அருளை மனத்தில் வைக்காதவர்களுக்குத் தங்கமாகவும், வீடாகவும் பொருளைச் சேர்த்துக் கொள்ளத் தெரியும். மடந்தையர்களுக்காகப் பொருளை அழிக்கத் தெரியும். அவர்களுடைய வீடும் மடந்தையருமா உயிர் போம் தனி வழிக்குத் துணையாக வருவார்கள்? அத்தகைய வர்களைப் பார்த்து இடித்துரைக்கிறார் அருணகிரியார்.

“நீங்கள் எவற்றை வாழ்க்கைக்கு நலம் செய்யும் என்று சேர்த்து வைக்கிறீர்களோ அவை பிறகு உதவ வருவதில்லை, ஏற்பவர்களுக்கு இட்டது தான் வரும். அது எப்போது எப்படி வரும் என்று உங்களுக்குத் தெரியாது. எப்படியும் எங்கேனும் வரும். முத்துக்களையுடைய கடலில் வேலை விட்டவனுடைய அருள் போல எங்காயினும் வந்து உதவும். இது சத்தியம்” என்று அருளையும், பொருளையும். இணைத்து ஓர் அறிவுரைப் பாடலை அருள்கிறார் அருணை முனிவர்.

பொங்கார வேலையில் வேலைவிட்
டோன்அருள் போல்உதவ
எங்கா யினும்வரும், ஏற்பவர்க்கு இட்டது;
இடாமல்வைத்த வங்கா ரமும்உங்கள் சிங்கார
வீடும் மடந்தையரும் சங்காத மோகெடு வீர்! உயிர்
போம்அத் தனிவழிக்கே!

[கெடுமதியாளர்களே! பொங்குகின்ற முத்துக்களை உடைய கடலில் வேலாயுதத்தை விட்ட முருகனுடைய அருள் அவனுடைய அன்பர்களுக்கு எங்காயினும் வந்து உதவுவது போல, உங்களிடம் வந்து குறையிரந்தவர்களுக்கு இட்ட புண்ணியத்தின் விளைவு எங்காயினும் உதவி புரிய வந்து சேரும்; அப்படி இரந்தவர்களுக்குக் கொடுக்காமல் பாதுகாத்து வைத்த தங்கமும், உங்கள் அழகிய வீடும், அழகிய மனைவிமாரும் உயிர் உடம்பை விட்டுச் செல்லும் அந்தத் தனி வழிக்குத் துணை ஆவார்களோ?

பொங்கு வேலை, ஆர வேலை என்று கூட்டவேண்டும். ஆரம்- முத்து. வேலை-கடல். ஏற்பவர் – இரப்பவர். இட்டது -அளித்தது, வங்காரம் -பான்; உபலட்சணத்தால் எல்லா வகையான பொருள் களையும் குறித்தது சிங்காரம்-அழகு; சிங்கார மடந்தையர் என்று சேர்த்துப் பொருள் கொள்ளவேண்டும். “சிங்கார மடந்தையர் தீநெறி போய்” என்பது கந்தர் அநுபூதி. சங்காதம்-உறவு; இங்கே துணை. கெடுவீர் என்பது இரக்கத்தால் வரும் ஒரு சொல்; கெடுவாய் என்பதும் அது; ”கெடுவாய் மனனே கதிகேள்” என்று கந்தர் அநுபூதியில் வரும். தனி வழி-உயிர் உடம்பை விட்டு, மறுமையை நோக்கிச் செல்லும் வழி. அது: உலகறி சுட்டு. இட்டது வரும், இடாதது வராது என்பது கருத்து,

ஆசைகள் மூன்று என்று சொல்வார்கள். பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை என்பவை அவை. இந்தக் காலத்தில் மண்ணாசை என்பதற்குப் பொருளே வேறாகி விட்டது. நாடு பிடிக்க ஆசைப்படுவது மண்ணாசை. விரிவான நிலங்களை வாங்கிச் சொந்தமாக்கிக் கொள்வதும் மண்ணாசையே. தனக்கென்று வாழும் இடம் ஒன்று பெற விரும்புவதும் மண்ணாசைக்கு இனமென்றே கொள்ளலாம். அப்படி வைத்துக் கொண்டால் இங்கே அருணகிரியார் மூவகை ஆசைக்கும் உரிய பொருள்களைச் சொல்கிறார் என்று கூறலாம். வங்காரத்தில் உள்ள விருப்பம் பொன்னாசை; சிங்கார வீட்டில் மேலுள்ள ஆசை மண்ணாசை: சிங்கார மடந்தைபால் உள்ள பற்றே பெண்ணாசை. இப்படியே மூன்று ஆசைகளைச் சொல்லும் போது மண்ணாசையாக இல்லத்தின் மேலுள்ள ஆசையைச் சர்த்துச் சொல்வது அருணகிரியாருக்கு இயல்பு அகமாடை மடந்தையர் என்று அயரும், சாமாயை” என்று கந்தர் அநுபூதியில் பாடுகிறார். அங்கே, அகம்- வீடு; மாடை-பொன்; மடந்தையர்-பென்கள். இங்கே வங்காரம் என்பதை அங்கே மாடை என்றார்; சிங்கார வீடு என்பதை அகம் என்றார்.]

இது கந்தர் அலங்காரத்தில் 59-வது திருப்பாடல்.

முற்றும்.

★ ★ ★