திருமூலர் சொல்வது
திருமூலர் நமக்கு ஒரு காட்சியைக் காட்டுகிறார்.
ஒரு செட்டியார்: அவருக்கு நாக்குச் சுவை அதிகம். அதற்கு ஏற்றபடி அவருடைய மனைவியும் நன்றாகச் சமைத்துப் போடும் ஆற்றல் படைத்திருந்தாள். தினமும் அவரே பையை எடுத்துக் கொண்டு காய்கறிக் கடைக்குப் போய்ப் பிஞ்சுக் கத்திரிக்காய், பிஞ்சு வெண்டைக்காய் முதலியன வாங்கி வருவார். அவருக்குப் புடலங்காய் என்றால் உயிர். ஒருநாள் அவர் கடைக்குப்போயிருந்தார். நல்ல பிஞ்சுப் புடலங்காய் கட்டுக் கட்டாக வந்திருந்தது. அவருக்கு நாக்கிலே நீர் சுரந்தது. உடனே இரண்டு புடலங்காயை வாங்கி ஒடித்துப் பைபில் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் கொடுத்து அடிசில் பண்ணச் சொன்னார். அந்த அம்மாளும் சுருள் சுருளாக நறுக்கிச் சுவைப்படச் சமையல் பண்ணினாள். அதை நன்றாகச் சப்புக்கொட்டிச் சாப்பிட்டார் செட்டியார்; உள்ளே போய் இளைப்பாறினார்.
மனைவி வந்தவுடன், “இன்றைக்கு நீ புடலங்காய்க் கறி பண்ணியிருந்தாயே, மிக அருமை, அருமை!” என்று மிகவும் இரகசியமாகப் பேசினார். அதற்குப் பின்பு, “என்னவோ இடப்பக்கமாக வலிக்கிலதே!’ என்று சொல்லிப் படுத்தார். படுத்தவர் படுத்தவர்தாம்; எழுந்திருக்கவே இல்லை.
“அடப்பண்ணி வைத்தார்; அடிசிலும்
உண்டார்;
மடக்கொடி யாரொடு மந்தணம் கொண்டார்;
இடப்பக்கமே இறை நொந்ததே என்றார்;
கிடக்கப் படுத்தார்; கிடந்தொழிந் தாரே!”
அத்தனை அன்புடைய மனைவி அவருடன் போகவில்லை. அவர் செல்வமும் போகவில்லை. யாவும் இந்த உடம்பு வாழும் வரைக்கும் இங்கே தொடர்புடையவைபோல இருக்கும்.
எதுவரை வரும்?
“அத்தமும் வாழ்வும் அசுத்துமட்டே”
என்பார் பட்டினத்தார். பணம், உத்தியோகம், வீடு எல்லாம் வீட்டில் இருக்கிறவரைக்குந்தான். உயிர் இருக்கிற வரைக்கும் அனுபவிக்கலாம். உயிர் போம் காலத்தில் அவை பயன்படுமா? கூட வருமா? வரா. அவை வீட்டோடு சரி. அன்புடைய மடந்தையராவது கூட வருவார்களா?
“விழி அம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே.”
கிராமங்களில் பெண்கள் சுடுகாட்டுக்குப் போகும் வழக்கம் இல்லை. பிணத்தை எடுத்துக்கொண்டு போகும் போது தெருமுனை வரையில் வருவார்கள். சுடுகாட்டுப் பக்கம் திரும்பியவுடனேயே அவர்கள் ஆற்றுக்குப் போய்விடுவார்கள். ஆகவே பெண்களும் வீடுமட்டுந்தான் வருவார்கள்.
அப்பா அப்பா என்று விம்மி விம்மி அலறி அழுகின்ற மைந்தர்களாவது கூட வருவார்களா? அவர்களும் சுடு காட்டோடு நின்று விடுவார்கள்;
“விம்மிவிம்மி இரு
கைத்தல மேல்வைத் தழுமைந் தருஞ்சுடு
காடுமட்டே.”
அப்போது நம்மைத் தொடர்ந்து வருவன எவை?
“பற்றித்தொடரும் இருவினைப் புண்ணிய
பாவமுமே.”
நாம் செய்கின்ற புண்ணிய பாவ வினைகளே நம்மைத் தொடர்ந்து வரும் என்கிறார் பட்டினத்தார்.
“அத்தமும் வாழ்வும் அகத்துமட் டே;விழி
அம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட் டே விம்மி விம்மிஇரு
எங்காயினும் வரும்
கைத்தலம் மேல்வைத் தழுமைந் தரும்சுடு
காடுமட்டே;
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய
பாவமுமே”.
இரு வினை
புண்ணிய பாவ வினை என்பன உலகிலுள்ள மக்களின் கண்ணுக்குத் தெரியாதவை. அவை உண்டென்று அவற்றின் விளைவாக இன்ப துன்பங்களை அநுபவிக்கும்போது உணர்ந்து கொள்ள முடிகிறது.
இரண்டு கம்பிகள் ஒரே மாதிரியாகத்தான் ஓடுகின்றன. இரண்டுக்கும் வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை.
ஒரு கம்பியைத் தொடுகிறான்; ஒன்றும் தெரியவில்லை. மற்றொரு கம்பியைத் தொடுகிறான்; டக்கென்று ‘ஷாக்’ அடிக்கிறது. இந்த விளைவைக் கொண்டே இது மின்சாரக் கம்பி, தொடக் கூடாது என்று உணர்கிறான். சாதாரண கம்பிக்கும் மின்சாரக் கம்பிக்கும் வித்தியாசம் கண்ணுக்குத் தெரிகிறதா? இருவினைகளும் இப்படியே அநுபவமாக வந்து தாக்கும் போதுதான் உண்மை தெரியும்.
ஒரு தகப்பனாருக்கு இரண்டு பிள்ளைகள், இரட்டைக் குழந்தைகளாகப் பிறக்கிறார்கள். இரண்டு பேரையும் படிக்க வைக்கிறார். ஒருவனுடைய முயற்சி எல்லாம் பயன் அளித்து வருகிறது. மற்றொருவன் தொட்டது எல்லாம் தோல்வியாக முடிகிறது. முன்னவன் எம். ஏ. தேர்ச்சிபெற்று, விட்டு நல்ல உத்தியோகத்தில் இருக்கிறான்; இவன் எஸ்.எஸ். எல்.ஸி. கூடப் படிக்காமல் வீட்டில் இருக்கிறான். இதற்குக் காரணம் என்ன? இரண்டு கம்பியும் ஒன்றாகத் தோன்றினா லும் ஒரு கம்பியைத் தொடும்போது ‘ஷாக்கு’ அடிப்பதனால் அது மின்சாரக் கம்பி என்று தெரிந்து கொள்வது போல, இரண்டு பிள்ளைகளும் ஒரே தகப்பனாருக்கு, ஒரே சமயத்தில் பிறந்து, ஒரே வீட்டில் வளர்ந்து வந்தாலும் அவனுடைய புண்ணிய வினையால் அவனுக்கு எல்லாக் காரியங்களும் அனுகூலமாகின்றன; இவனுடைய பாவம் இவன் முயற்சி எல்லாம் தோல்வி அடையும் படியாகச் செய்கிறது. இப்படி உணர்ந்து கொள்ளாமல் வேறு எப்படி உணர்ந்து கொள்வது? இந்தப் பிறப்பில் அவர்கள் எவ்விதமான பாவ புண்ணியங் களையும் செய்யவில்லையாதலால் அவர்கள் முன் பிறப்பில் செய்தவை தொடர்ந்து வருகின்றன என்று கொள்ள வேண்டும்.
ஆகவே, ஒருவன் இறக்கும்போது அவன் உயிர் செல்கின்ற தனி வழியே வீடு தொடர்ந்து வருவது இல்லை. அவன் சேர்த்து வைத்திருந்த தங்கம், அவனுடைய மனைவி, மைந்தர்கள் யாரும் தொடர்ந்து வருவது இல்லை. புண்ணிய பாவமே தொடரும்.
உயிர் போம் வழி
உயிர் போகின்ற கடைசி வழி எப்படிப்பட்டது? தனி வழி அது. யாரும் உடன் வர முடியாத தனி வழி. உடம்போடு போகத் துணை உண்டு; உயிரோடு போகத்துணை இல்லை.
“பயந்த தனிவழி“
என்று ஓர் இடத்தில் அருணகிரியார் சொல்சிறார்.
“நும்மை நேடிவரும் தொலையா வழி“
என்று முன்பு சொல்லியிருக்கிறார். “நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தானாகவே உங்களைத் தேடி வருகிற தொலையா வழி அது. அதில் நீங்கள் யாத்திரை செல்லும் போது துணை வேண்டுமென்றால். மலை ஆறு கூறுகளாகப் போகும்படி வேலை விடுத்த வேலாயுதனை வணங்கி, ஏற்றவர்களுக்குக் கீரை இருந்தாலும், வெந்தது எது இருந்தாலும் பகிர்ந்து கொடுக்கும் நிலையான மாதவத்தைச் செய்யுங்கள் அந்தத் தர்மந்தான் தொலையா வழிக்குப் பொதி சோறும் உற்ற துணையுமாக உங்களுக்கு வந்து உதவும்” என்று முன்பு எல்லோரையும் பார்த்துச் சொன்னார்.
ஒரு நாள் இரண்டு நாள் போகக் கூடிய வழியாக இருந் தாலே, “துணையோடல்லது நெடுவழி போகேல்” என்று சொல்வார்கள். உயிர் எத்தனை பிறவிகள் யாத்திரை செய்யப் போகிறதோ தெரியாது. அது போகிற வழியும் தொலையா வழி; நெடு வழி; அதுவும் யாரும் துணைக்கு வர இயலாத தனி வழி, பொன், பொருள், மனைவி, மக்கள் எல்லாம் உயிர் போகின்ற அந்தத் தனி வழிக்குத் துணையாக வரமுடியாதே! அவற்றைச் சங்காதம், துணை என்று எண்ணிக் கொண்டிருந்தால் கெட்டுப்போக வேண்டி வரும். உயிரைத் தொடர்ந்து வருவது புண்ணிய பாவ வினைகள் தாம். நம்மிடம் உள்ள பொருள்களை ஏற்பவர்களுக்கு இட்டுப் புண்ணியத்தைத் தேடிக்கொள்ள வேண்டும். பொங்கார வேலையில் வேலைவிட்டோன் அருள் போல, அது எங்காயினும் உதவ வரும்.
இறைவனுடைய அருளைப் பொருளாக நினைக்கிறவர் களுக்குத் தங்கள் கையிலுள்ள பொருள் எதுவும் பொருளாகத் தோன்றாது. இறைவன் அருளிடத்தில் நம்பிக்கை உடையவர்களுக்குப் பொருளிலே பற்று இராது. இறைவன் அருள் உதவி செய்ய வந்தால் பொருள் அறமாக மாறி விடும்.
இளையான்குடி மாற நாயனார்
இளையான்குடி மாறனார் என்கிற வேளாளர் ஒருவர். காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்தார். அவருக்குப் பண்ணை நிலங்கள் மிகுதியாக இருந்தன. விளைச்சல் முழுவதையும் சிவனடியார்களுக்கே அமுது படைப்பதில் செலவிட்டுக் கொண்டிருந்தார்.
“எத்தனைஅன்பு! எத்தனை தர்மம் செய்கிறார்!” என்று சிலர் அவரைப் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். எல்லோரும் அப்படிப் பாராட்டுவார்களா? “என்னிடம் பணம் இருந்தால் நானும் அப்படித் தர்மம் செய்வேன்” என்று சொல்கிறவர்கள் எத்தனை பேர்? பணம் படைத்தவர் கள் எல்லோரும் தர்மம் செய்கிறார்களா? ரூபாய்க்கு ரூபாய் வட்டி சேர்த்து வாங்கிச் சேமித்து வைக்கிறவர்கள் இல்லையா? நம்மால் தர்மம் செய்யமுடியா விட்டாலும், ‘அவன் தர்மவான். அளவற்ற தர்மங்களைச் செய்து வருகிறான்’ என்று சொல்வது நல்லது. “அவன் பண்ணு கிறானே, நீ பண்ணவில்லையே!” என்று யாராவது சுட்டிக் காட்டப் போகிறார்களே என்பதற்காக இவர்களே “எனக்கும் பணம் இருந்தால் தர்மம் செய்வேன்” என்று சொல்லிக் கொண்டு விடுகிறார்கள்.
இளையான்குடி மாறனார் செய்த தர்மத்தைப் பார்த்தும் இப்படித்தான் பேசினார்கள். “அவனுக்கு இருக்கிறது; தர்மம் செய்கிறான். அந்த மாதிரி நமக்கு இல்லையே, தர்மம் செய்ய” என்று பொறாமைப்பட்டுக் கொண்டிருந்த பாவிகளுக்குப் புத்தி புகட்ட வேண்டுமென்று இறைவன் கருதினான். மாறனாருக்கு வறுமை உண்டாயிற்று. கையில் இருந்த கொஞ்ச நஞ்சம் பொருளையும் அவர் தர்மம் செய்து வந்தார். நிலங்களை எல்லாம் விற்றுத் தர்மம் செய்து விட்டார். ஒரே ஒரு வயல்தான் எஞ்சியிருந்தது. அதில் விளைகிற நெல்லைக் கொண்டு தொடர்ந்து அடியார்களுக்கு அமுது இடவேண்டுமென்று அவருக்கு ஆசை.
வீட்டில் வைத்திருந்த நெல்லைக் கொண்டுபோய் அன்று காலையில் தான் விதைத்து விட்டு வந்தார். மாலையிலே இடி மின்னலுடன் மழை வந்துவிட்டது. “ஐயோ வயலில் விதை மிதக்குமே” என்று கவலைப்பட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கும் போது, இரவு பத்து மணிக்கு ஒருவர், “ஐயா, ஏதாவது கொடுங்கள் புசிக்க; மிகவும் பசிக்கிறது” என்று கேட்டுக் கொண்டு வந்தார்.
எத்தனை தர்ம நினைவுடையவர்களாக இருந்தாலும் நாமாக இருந்தால் என்ன சொல்வோம்? “போ ஐயா. போ. இராத்திரி பத்து மணிக்குத்தான் பிச்சை கேட்க வருகிறதோ? காலையில் வா” என்று விரட்டுவோம்.
“அவர் என்ன நினைத்தார் தெரியுமா? கொட்டுகிற மழை யில் இரவு பத்து மணிக்குப் பிச்சை கேட்க அவன் வந்தான். ஆகையால், “ஐயோ பாவம்! எத்தனை நாளாகப் பட்டினி யாக இருக்கிறாரோ! எவ்வளவு பசியோ!” என்று நினைத்து இரங்கினார். வருத்தம் உண்டாயிற்று. உள்ளே போனால் சாப்பாடு இல்லை. சமைக்கலாம் என்றால் அரிசி இல்லை. விறகு இல்லை. உள்ளே அத்தனை வறுமை!
அவருடைய வேதனையை ஒரே விநாடியில் உணர்ந்து கொண்டாள் அவருடைய மனைவி. அவள் அறம் வளர்க்கும் பெருமாட்டி. “நீங்கள் ஏன் வருந்துகிறீர்கள்? காலையிலே விதைத்த நெல் இந்த மழையில் நிச்சயம் மேலாகத்தான் மிதக்கும். அதுவும் ஒரு பக்கமாக ஒதுங்கிக் கிடக்கும். வயலுக்குப் போய் அதை அரித்துக்கொண்டு வந்து விடுங்கள். நான் அதைக் குத்தி அரிசியாக்கி விரைவில் சமைத்து விடுகிறேன்” என்று ஆறுதல் கூறினாள். அவரும் அப்படியே கொட்டுகிற மழையில் கூடையை எடுத்துக் கொண்டு போய் நெல்லை அரித்து வந்தார். விறகு இல்லை. வீட்டின் மேல் இருந்த கூரையிலுள்ள கம்புகளைப் பிரித்துக் கொடுத்துச் சமைக்கச் சொன்னார். காய்கறி ஒன்றும் இல்லை. புறக்கடை யில் இளம் பயிராகக் குழியில் ஏதோ இருந்தது. அதை அப்படியே அவசர அவசரமாக அரிந்து கொண்டு வந்தார்
அவர் குழியிலுள்ள பயிரையா அரிந்தார்? தம்முடைய பாசத்தின் அடிவேரையே அரிந்தார். இதைச் சேக்கிழார் அழகாகச் சொல்கிறார்.
“குழிநிரம் பாத புன்செய்க்
குறும்பயிர் தடவிப் பாசப்
பழிமுதல் பறிப்பார் போலப்
பறித்தவை கறிக்கு நல்க”
என்கிறார்.
சமையல் செய்துவிட்டுத் திண்ணையில் வந்து பார்த்தால் அடியாரைக் காணவில்லை. சிவபிரான் காட்சியளித்து, ”நானே உன்னைச் சோதனை செய்தேன்” என்று அருளி இன்ப வாழ்வளித்தான்.