அருள் வரும் வழி
இறைவனுடைய திருவருள் எப்படிக் காப்பாற்றும் என்று சொல்ல முடியுமா? ஒரு பாலைவனத்திலே போய் நிற்பான். தாகத்திற்குத் தண்ணீர் கிடைக்கவில்லையே என்று அவன் துன்பப்பட்டுக் கொண்டிருப்பான். அவ் வழியே போகிறவன் தனக்காக எடுத்துச் செல்லும் இளநீரை இவனுக்குக் கொடுத்துவிடுவான். ஆண்டவன் திருவருள் இவன் தாகத்திற்கு இளநீராக வரும். எம்பெருமானின் அருள் எங்கு வரும், எப்படி வரும் என்று சொல்ல முடியாது; எங்காயினும் வரும்.
இவன் வாழ்க்கையில் மிகவும் அல்லற்பட்டவனாக இருப்பான்; இவனை வைத்துத் தாங்கும் சிறந்த பிள்ளையாக வரும்; அடுத்த பிறவியில் இவனைப் பெரிய பணக்காரன் என்று எல்லோரும் போற்றக்கூடிய செல்வமாக வரும். அதைப்போலவே யாசிப்பவர்களுக்கு இடுவதும் வீணாகப் போகாது. எங்காயினும் வரும் என்று சொல்கிறார் அருணகிரியார்.
பொங்கார வேலையில் வேலைவிட்டோன் அருள்போல்
உதவ
எங்காயினும் வரும் ஏற்பவர்க்கு இட்டது.
[வேலை – சமுத்திரம். பொங்கு ஆர வேலையில்-முத்துக் களையுடைய பொங்கும் சமுத்திரத்தில்.]
முத்துக்கள் உண்டாகும் சமுத்திரத்தில் வேலை ஏவிய வனுடைய அருள் போல, ஏற்பவர்க்கு இட்டது எங்காயி னும் வரும் என்கிறார். “இறைவன் அருள் இன்ன இடத்தில் இப்படி வரும், இப்படி உபகாரம் செய்யும் என்று சொல்ல முடியாமல் எங்காயினும் வந்து உதவி செய்வது போலவே இரப்பவர்களுக்குத் தர்மம் செய்கிற பொருளும் வந்து, உதவும். இந்த உலகத்தில் மாத்திரம் அல்ல; வேறு உலகத் தில் வேறு பிறவியிலும் வந்து சாரும். வேளாண்மை செய் தால் விளைவு உண்டு என்பது போலவே பிறருக்குக் கொடுத்தால் அதற்கும் விளைவு உண்டு” என்கிறார் அருணகிரியார்.
கடல் சுவற வேல் விட்டவன்
சூரபன்மனுக்கும் முருகப்பெருமானுக்கும் போர் நடந்தது. என்ன என்ன உருவங்களையோ எடுத்துக் கொண்டு சூரன் எதிர்த்தான். எல்லாவற்றையும் முருகன் அழித்துக் கொண்டே வந்தான். இனி அப் பெருமானிடத்திலிருந்து தப்ப வழி இல்லையே என்று அஞ்சி அவன் மாமரமாக உருவெடுத்துக் கடலுக்குள் போய் ஒளிந்து கொண்டான். மிக மிகப் பாவியாகிய அவனுக்குக் கடல் ஒளிய இடம் கொடுத்தது. ஆறுமுகநாதன் தன் திருக்கரத்தில் இருந்த வேலைக் கடலுக்குள் விட்டான். அது சுவறிப் போக அதற்குள் கிடந்த முத்துக்களும், மணிகளும் பளிச்கப் பளிச்சு என்று ஒளிவிட்டன. சூரபன்மன் தலைகீழாக ஒரு மாமரமாய் இருப்பதும் தெரிந்தது. தன் வேலினால் மாமரத்தைப் பிளந்து, அதற்குள் இருந்த சூரனும் மாளச் சங்காரம் பண்ணினான் எம்பெருமான். சேவற்கொடியாகவும், மயில்வாகனமாகவும் அவனை ஆக்கிக் கொண்டான்.
கடல் முத்துக்களை மாத்திரம் வைத்துக் கொண்டிருந்த போது அதனிடம் முருகனுக்குச் சினம் இல்லை. பிறருக்குத் தீங்கு பண்ணிக்கொண்டிருந்த, பிறருடைய இன்ப வாழ்வைக் குலைத்துக் கொண்டிருந்த, சூரனுக்கு ஒளிய இடம் கொடுத்தபோதுதான் அதனிடத்தில் அவனுக்குக் கோபம் வந்தது. தண்ணீர் சுவறிப் போகும்படியாக வேலை விட்டான்.
கெட்டவனை உள்ளே கொண்ட கடலைச் சுவறிப் போகும்படி வேலை விட்ட முருகவேள் நல்லவர்களுக்கு நல்லவன். நம் மனத்தில் கெட்ட எண்ணங்கள் ஒளிய இடம் கொடுக்காமல் அற நினைவுகளை வைத்துக்கொண்டு அவனிடத்தில் பக்திசெய்து வாழ்ந்தால் அவனுடைய அருள் எங்கா யினும் வந்து உதவும். அப்படியே யாசிப்பவர்களுக்கு நாம் இடுவதும் வீண்போகாமல் எங்காயினும் வந்து உதவும்.
இது தெரிந்தும், ஆண்டவனிடம் பக்தி கொள்ளாமல் பொருளை ஈட்டி, அதைப் பிறருக்குக் கொடுக்காமல் தமக்கே பயன்பட வேண்டும் என்று பலர் சேமித்து வைத்துக் கொள்ளுகிறார்களே, அவர்களைப் பார்த்து அருணகிரியார் ஒன்று சொல்ல வருகிறார்.
வங்காரமும் உங்கள் சிங்கார வீடும்
மடந்தையரும்
சங்காதமோ கெடுவீர்! உயிர் போம்அத்
தனி வழிக்கே?
தனி வழி
தம்மிடம் உள்ள பொருளை யாசிப்பவர்களுக்கு இடாமல் வைத்துக் கொண்டிருப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள்? தம்மிடமுள்ள பொருள், தங்கம், தாங்கள் கட்டிக் கொண்ட அழகான வீடு, இரண்டு லட்சம் பெறுமான அளவில் கட்டப்பட்டிருக்கும் சிங்கார பங்களா, மனைவி இவைகள் எல்லாம் தங்களுக்கு எப்போதும் துணையென நினைக்கிறார்கள். வங்காரம் -தங்கம்; தெலுங்கில் பங்காரு என்பார்கள். அருணகிரியார் சொல்லுகிறார். “நீங்கள் தனியாகப் பிரயாணம் செய்யவேண்டிய நெடும்பாதை ஒன்று இருக்கிறதே, மரணத்தின் பின்; உயிர் பிரயாணம் செய்யப்போகிற அந்தத் தனி வழியில் இவை எல்லாம் துணை செய்யுமா? துணை செய்யும் என்று பிறருக்குக் கொடுக்காமல் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே! கெடுபவர்களே!” என்று இடித்துச் சொல்கிறார்.
பொன்னும் வீடும் மடந்தையரும்
ஒருவன் தன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் தங்கமாக மாற்றி வைத்துக் கொள்கிறான். தங்கத்தின் மதிப்பு என்றைக்கும் நிலையானது என்று நினைக்கிறான் எப்போதும் அது துணையாக இருக்கும் என்று நினைக்கிறான்.
பெரிய பங்களாக் கட்டிக் கொள்கிறான். அதில் எத்தனை அறைகள் இருக்கின்றன தெரியுமா? மாடு கட்டும் கொட்டகையே மிகப் பெரியதாக, மிக அழகாக இருக்கிறது. சாப்பாட்டுக்கூடம், படுக்கை அறை முதலிய பல அறைகளைச் சித்திர வேலைப்பாட்டோடு கட்டியிருக்கிறான். இரண்டு லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டிருக்கும் அந்த மாளிகையில் ஆண்டவனுக்கு ஓர் இடம் இல்லை. மனத்தில் இருந்தால் அல்லவா அங்கே இருக்கும்? இறைவனை மறந்து சிங்காரமாகக் கட்டிய வீடு அது. அந்த வீட்டைத் தன்னுடைய மனைவியின் திருவுள்ளப்படி கட்டியிருக்கிறான். அவள் இன்ன வசதி சமையலறையில் வேண்டும் என்றாளோ அவற்றை யெல்லாம் அமைத்திருக்கிறான். அவள் விருப்பப்படியே நல்ல காற்று வரும் இடத்தில் படுக்கை அறையை வகுத்திருக்கிறான். சிங்கார வீட்டில் அந்தச் சிங்கார மடந்தையுடன் வாழ்கிறான். தன்னுடைய கைப்பொருளை மனைவிக்கே எத்தனை பேர்கள் கொடுத்து விடுகிறார்கள்? காரணம் அவளால் இன்பம் கிடைக்கிறது என்ற நினைவுதான்.
இப்படித் தம்மிடம் இருக்கும் பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல், யாசிப்பவர்களுக்கு இடாமல், தங்கமாக வைத்துக் கொண்டிருப்பவர்களும். வீடாக வைத்திருப்பவர் களும், மடந்தையரோடு வாழும் வாழ்வாக வைத்திருப்பவர் களும் கடைசியில் செத்துத்தான் போகிறார்கள். அவற்றை யெல்லாம் வைத்துக்கொண்டு திட்டமாக இத்தனை காலம் வாழலாம் என்ற வரையறையாவது உண்டா?
“நெருநல் உளன் ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு “
என்கிறார் வள்ளுவர்.